சிறு வயதிலேயே வாழ்வில் இக்கட்டான தருணங்களை சந்தித்து விட்டு அற்புதம் நிகழ காத்திருப்பவர் விஜு பிரசாத். இளம் வயதில் தாயை இழக்கும் விஜு தன் தம்பியுடன் கன்னியாக்குமரியின் கடலோர பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டே பகுதி நேர பேச்சாளராகவும் இருக்கிறார்.
எதிர்பாராமல் நடக்கும் ஒரு சோக சம்பவம் விஜுவின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருக்கும் விஜுவுக்கு சாலமன் மற்றும் ஐசக் என்ற இருவரின் மூலம் புது வாழ்க்கை கிடைக்கிறது. சாதாரண பேச்சாளராக இருந்த விஜு மிகப்பெரிய மதபோதகராக மாறுகிறார். தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணிக்கும் விஜுவின் வாழ்வில் திடீர் திருப்பம் ஒன்று நிகழ்கிறது. இதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார். அந்த திடீர் சறுக்கலிலிருந்து விஜுவால் மீள முடிந்ததா? என்பதே ‘ட்ரான்ஸ்’ படத்தின் மீதிக் கதை.
டிரான்ஸ் -மதங்களை பண்டமாக மாற்றும் கார்ப்பரேட்டுகள் பற்றிய கதை. அதில் குறிப்பாக கிறித்துவத்தின் சில பிரிவை யதார்த்தம் என்ற பாணியில் காட்டியுள்ளார்கள். மதம் என்பது 17-ஆம் நூற்றாண்டு முதலாளியத்திற்கு முந்தைய கருத்தாக்கம். இப்போ நம்மிடம் இருப்பது மதங்கள் அல்ல முலாளியத்திற்கு ஏற்ப உருமாறிய மானிட மயக்க போதை மருந்துகள். மார்க்ஸ் சொன்ன அபினி. கடவுள் சந்தை என்ற மீரா நந்தாவின் நூலையும், ஆனந்த் டெல்டும்டேவின் சாதியின் குடியரசு நூலையும் வாசித்தால் இந்தியாவில் தாராளவாத முதலாளியம் எப்படி இந்துமதத்தை சந்தைப் பண்டமாக மாற்றியது என்பதை புரிந்து கொள்ளலாம். கிறித்துவம் அமேரிக்காவில் உருவாக்கப்பட்ட Fundamentalls என்கிற கோடட்பாட்டோடு முற்றிலும் ஒரு முதலாளிய சேவை மடமாகி, உலகின் அனைத்து மதங்களும் அதை பின்பற்றி முதலாளிய சேவை மடங்களாக மாறிவிட்டது. பணமே கடவுள். பங்குசந்தையே கோவில், அதன் சந்தையே வழிபாட்டு தலம். இத்திரைப்படம் வழக்கமான வணிகப்படம் என்றாலும், கார்ப்பரெட் கடவுள் சந்தை விரிவாக்கத்தை எப்படி நிகழ்த்துகிறது என்பதை காட்சிப்படுத்துகிறது. ஆனாலும் இந்துத்துவ மதவாத சக்திகள் இதை பயன்படுத்தவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
விமர்சனம் 2 (Barathi Thambi)
.டிரான்ஸ்… மிகுந்த பாசாங்கும், போலித்தனமும் நிறைந்த சினிமா.
இப்படி சிலர் நிறுவனம் போல பாதிரிமார்களை உருவாக்கி பயிற்சி கொடுத்து பணம் பறிக்கிறார்கள் என்பதே அபத்தம். இந்து சாமியார்களை இப்படி யாராவது நிறுவனம் போல நடத்தி உருவாக்குகிறார்களா என்ன? அப்படி உருவாக்குவது தனிநபர்கள் நடத்தும் நிறுவனம் அல்ல; மதம் என்ற நிறுவனம். அதை கேள்விக்கு உட்படுத்தாமல், தனி நபர்களை வில்லன்களாக்கி, ஒரு அப்பாவியின் கையில் அரிவாளைக் கொடுத்து கழுத்தை அறுத்து முடித்துக்கொள்கிறது படம்.
ஏற்கெனவே கிறிஸ்டியானிட்டி மீது பொது மனதில் இருக்கும் எதிர்மறை சித்திரத்தின் மீது ஒரு காட்சித் தொகுப்பை அடுக்கியிருக்கிறார் இயக்குனர். அப்படி பொத்தாம் பொதுவாக கிறிஸ்தவத்தின் மீது விமர்சனம் செய்ய வேண்டுமாயின், அதன் நேர்மறை பகுதிகளையும் இணைத்துப் பேசியிருக்க வேண்டும். இப்படம் இந்து கூட்டு மனசாட்சியின் சிறுபான்மை எதிர்ப்பு எண்ணவோட்டத்தை நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. இதை எடுப்பதற்கு துணிச்சல் தேவை இல்லை. அய்யப்பன் கோயில் பின்னணியில் இப்படி ஒரு படம் எடுக்கத்தான் துணிச்சல் தேவை.
சில காலம் முன்பு நாகர்கோயிலை சேர்ந்த ஒரு பாதிரியார், கிறிஸ்டியானிட்டியை கிண்டல் செய்து பேசிய ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. சுய விமர்சனமாக அவர் பேசிய அம்சங்களில் ஓர் அடிப்படை நேர்மை இருந்தது. இந்தப் படத்தில் அது இல்லை. மாறாக, இது ‘இந்த கிறிஸ்டினே இப்படித்தான் எஜமான்’ என்ற கருந்து கொண்டோரை இலக்கு வைக்கிறது.
கிறிஸ்டியானிட்டியில் திளைத்த பாதிரிமார்கள் மக்களை அரசியல் ரீதியாக காயடிக்கிறார்கள். ஒக்கி புயல் சமயத்தில் நாகர்கோயில் பகுதி கிறிஸ்தவ கிராமங்களில் சில நாட்கள் சுற்றியபோது, பாதிரிமார்களின் செல்வாக்கை கண்டும், மக்கள் அவர்களின் சொல்லுக்கு எவ்வளவு தூரம் அஞ்சி கட்டுப்படுகிறார்கள் என்பது கண்டும் ஆச்சர்யம் அடைந்தேன். புயலில் சாகும் மக்களுக்கு இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லையே என்று மக்கள் ஆத்திரப்படும் வேலையில் எல்லாம் ஒரு திருப்பலி கூட்டத்தை நடத்தி, மெழுகுவர்த்தி ஊர்வலம் விட்டு, அதை சாந்தப்படுத்தினார்கள்.
மற்றபடி காணிக்கை எல்லாம் அவர்கள் கேட்கவே வேண்டாம். அதற்குரிய மனநிலையை தயார் செய்துவிட்டால், மக்களாகவே அள்ளிக்கொண்டுபோய் கொட்டுவார்கள். சமூக நிலையில் வைத்துப் பார்த்தால், மக்களை பொதுத்தன்மை அற்றவர்களாக மாற்றுவதே கிறிஸ்தவ பாதிரிமார்கள் செய்யும் முதன்மை சமூகக் கேடு.
கத்தோலிக்கம், சி.எஸ்.ஐ., பெந்தகொஸ்தே என இருக்கும் பல்வேறு கிறிஸ்தவ மதங்களில் இந்தப் படம் பெரும்பான்மையாக பெந்தகொஸ்தேவை குறிவைக்கிறது. சில இடங்களில் ரோமன் கத்தோலிக் அடையாளங்களும் குழப்பமாக கையாளப்பட்டுள்ளன. பொதுவில் இதைப் பார்க்கும் ஒரு கிறிஸ்தவர் அவர் சி.எஸ்.ஐ.-ஆக இருந்தால், ‘நம்மளை சொல்லலை.. பெந்தகொஸ்தே காரங்களைதான் சொல்லியிருக்காங்க’ என்று போய்விடுவார். பெந்தகொஸ்தே குரூப்போ, சினிமாவே பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் ‘இந்த கெட்ட ஆவிகளை ஏசு பார்த்துக்குவார்’ என்று போய்விடுவார்கள்.
இதே படத்தை ஒரு ஆர்.சி. பேக்ரவுண்டில், அல்லது சி.எஸ்.ஐ. பேக்ரவுண்டில் எடுத்திருந்தால் இவ்வளவு அமைதியுடன் இப்படம் எதிர்கொள்ளப் பட்டிருக்காது. பெந்தகொஸ்தே என்பது கிறிஸ்டியானிட்டியிலேயே ஒரு கோமாளி கும்பல் என்பதுடன், இதர கிறிஸ்தவர்களே அவர்களை ஏளனத்துடன் பார்க்கிறார்கள். பலவீனமான டார்கெட். ஏற்கெனவே ஊரில் லூஸாக சுத்தும் ஒருவனை திரும்பவும் ஒருமுறை லூஸு என்று சொல்வதற்கு பெரிய துணிச்சல் எல்லாம் தேவை இல்லை.
அப்புறம், நாயகன் மேடையில் பிரசங்கம் செய்வதற்கு அவருக்கு போதை மாத்திரை எல்லாம் தருகிறார்கள். இங்கு போதை என்பது மதம்தான். அதை சொல்வதற்கு பதிலாக, மதத்தில் இருந்து மாத்திரைக்குத் தாவுகிறார் இயக்குனர்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் விழாவில் அதன் தயாரிப்பாளரோ யாரோ, ஏதோ கிறிஸ்தவ வார்த்தை ஒன்றை உச்சரித்தார் என்பதற்காக அவரை கலாய்த்தார்கள். தமிழ் சினிமா பூஜையில் இருந்து ரிலீஸ் வரைக்கும் அனைத்தும் இந்து மத பூஜை வழிபாட்டின்படிதான் நடக்கிறது. நடிகர், இயக்குனர் என முக்கியமான கலைஞர்கள் இதர மதத்தினராக இருந்தாலும் இந்து மத பூஜை செய்துதான் தொடங்கப்படுகிறது. அது நம் கண்களை உறுத்தாமல் ஒரே ஒருமுறை ஒருவர் கிறிஸ்துவ வார்த்தை ஒன்றை சொல்லிவிட்டார் என்று அவரை கலாய்க்கிறோம் என்றால், அதே மனதுதான் இப்போது டிரான்ஸ் படத்தையும் கொண்டாட வைக்கிறது.
டிரான்ஸ் படம் ஆபத்தானது இல்லை. ஆனால், அது பார்வையாளர்களுடன் வினையாற்றும்போது, ஏற்கெனவே அவர்களின் மனதில் இருக்கும் சிறுபான்மை எதிர்ப்புணர்வுடன் வினைபுரிந்து ஆபத்தானதாக மாற்றம் கொள்கிறது.
No comments:
Post a Comment