Search This Blog

Sunday, April 19, 2020

மன(த்)தி - வடிவரசு

''மன(த்)தி!”
**
'பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரும் உம்முளே!'
- சிவவாக்கியர்
**
மனிதரின் மலமானது கீழ்மையிலும் கீழ்மையாகப் பார்க்கப்படுகிறது. அதனால் தான், அதனை அள்ளும் மனிதர்களை மனிதர் என்றுக் கூடப் பாராமல் தொடர்ந்து ஒதுக்கி வருகிறோம். இது கீழ்மையிலும் கீழ்மையாகப் பார்க்கப்படும் மனித மலத்தை விட படுக் கீழ்மையான செயல் என்பதை நம்மில் அதிகமானோர் உணர்வதில்லை. காரணம், நம் சமூகச் சூழல் நம்மை அப்படி காலங்காலமாக பழக்கி வந்திருக்கிறது.
உண்மையில் மனித மலம் என்பது கீழ்மையான ஒன்றுதானா? எனில் இல்லை என்பதுதான் பதில். அப்படி ஆமாம் என இருப்பின், அதை உற்பத்தி செய்யும் மனித உடலும் கீழ்மையிலும் கீழ்மையானது என்பது தானே பொருள்?
இயற்கையின் படைப்பில் அனைத்து சீவராசிகளும் பசிக்காக எதையேனும் உண்ணக்கூடியது. அப்படி உண்ணும் உணவானது உடலுக்குள் சென்று செரிமானமாகி மலமாக வெளியேறும். இது இயல்பான, இயற்கையான ஒன்றுதான் என்றபோதும், அதனை நாம் இந்தளவுக்கு இழிவான ஒன்றாகப் பார்க்க வேண்டியதும், நினைக்கவேண்டியதும் அவசியம் தானா என்றக் கேள்விதான் எழுகிறது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மனிதன் மட்டும்தான், தன் மலத்தை இத்தனைக் கேவலமாகப் பார்க்கிறான். ஆடு, மாடு, கோழி போன்ற சீவராசிகள் அப்படிப் பார்ப்பதில்லை. கேட்டால், மனிதன் ஆறறிவு படைத்தவன், அது இது என பெருமையாகச் சொல்லலாம். ஆனால், அதே ஆறறிவு படைத்தவன் எப்படி இன்னொரு சக மனிதனை கீழ்மையாக நடத்தலாம் என்றால் பதில் வராது.
இது ஏதோ இன்றைக்கு மட்டும் அரங்கேறும் ஒன்றல்ல. காலங்காலமாக தொடர்ந்துவரும் மாறாத அவலம். இதோ, இன்றைய தொழில்நுட்ப உலகம் வரைக்கும் அப்படியே தொடர்ந்து வந்திருக்கிறது.
ஒரு மனிதன் சக மனிதனை அவன் செய்யும் தொழில் காரணமாக ஒதுக்குவதும், ஏற்றத்தாழ்வுகள் வகுத்து குறிப்பிட்டவர்கள் தான் இந்தத் தொழிலை செய்ய வேண்டும் என நிர்பந்திப்பதும் எவ்விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இன்னொரு பக்கம் எதையும் பிரித்துப் பார்க்கும் சுயநல புத்தியின் பிடியில் ஏன் இந்த மனிதர்கள் காலந்தோறும் சிக்கி சீரழிந்துவருகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
அதிலும், தன் வீடும், தன் இடமும் மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென நினைத்து, குப்பையை வாரி தெருவில் கொட்டுவதும், தன் வீட்டுக் கழிவறையை அக்கறையோடு பயன்படுத்திவிட்டு, பொது இடமென வரும்போது கடமைக்கு பயன்படுத்திவிட்டு வருவதும் என்ன வகையான மனநிலை எனத் தெரியவில்லை.
மனிதர்களில் மட்டும் ஏன் இத்தனைப் பிரிவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளதென்றும், ஏன் ஒரு சாரார் மட்டும் குப்பையை விட, மலத்தை விட கேவலமாக நடத்தப்பட வேண்டும் என்றும் யோசிக்க யோசிக்க கோவமாக வரும்.
அதிலும் எங்காவது குப்பை வாருபவர்களையும், மலம் அள்ளுபவர்களையும் பார்க்க நேரும்போது, இக்கேள்விகள் இன்னும் அதிகமாக எழுவதை பலதடவை வேதனையோடும் கோவத்தோடும் உணர்ந்திருக்கிறேன். ஆம்!
அன்றைய தினம் அதிகாலை சீக்கிரமாக எழுந்து, நான் தங்கியிருந்த போரூர் கார்டன் அறையிலிருந்து போரூர் சிக்னல் வரைக்கும் நடந்து சென்று, அங்குள்ள தேனீர்க்கடை ஒன்றில் தேனீர் பருகிவிட்டு, அங்கிருந்து திருவான்மியூர் செல்லும் பேருந்திலேறி சன்னலோரம் உட்கார்ந்து பாடல்கள் கேட்டவாறு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுத்தத்தில் போய் இறங்கினேன்.
பின் அங்கிருந்து தோழி ஒருவருடன் நகர்பேசியில் பேசியபடி எதிரில் வருபவர்கள் முகங்களையும், சாலையோரம் உள்ள மரங்களையும், அவ்வழியாக இறங்கும் விமானங்களையும் பார்த்து ரசித்தவாறு அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்பு சென்றடைந்தேன்.
அங்கிருக்கும் உணவகம் ஒன்றில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு, நூலகத்தின் பின்னால் உள்ள மரத்தடியில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் நகர்பேசியில் எதையோப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒன்பது மணி வாக்கில் நூலகம் திறந்ததும் இரண்டாவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவுக்குப் போய் உட்கார்ந்து கவிதை நூல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரிடமிருந்தோ அழைப்பு வர, உடனே எழுந்து வேகமாக வெளியில் சென்று, கழிவறை அருகில் உள்ள காலி இடத்தின் ஓரமாக கண்ணாடி சுவரருகில் நின்று பேசிக்கொண்டிருந்தேன்.
அவ்விடம் எனக்கு மிகப் பிடித்த இடம். ஞாயிறுதோறும் நூலகம் செல்லும்போதெல்லாம் அங்கு நின்றுதான் பெரும்பாலும் போன் பேசுவேன். அத்தோடு நடுவில் சிறுநீர் கழிக்கப் போகும்போதும், அங்கு சென்று சில நிமிடங்களாவது நின்று வெளியில் தெரியும் மரங்களையும், அருகிலிருக்கும் அரங்கத்தின் முகப்புக் காட்சியையும் பார்த்து ரசிப்பேன்.
சரியாக நான் பேசி முடிக்க யாரோ ஒருவர் முனகும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும் என கொஞ்சம் முன்னால் வந்துத் திரும்பிப் பார்க்க, ஆண்கள் கழிவறையில் 50 வயதான அம்மா ஒருவர் முடியாமல் உட்கார்ந்து கண்களை மூடியவாறு,
“ஆ.. ஹா.. ‘’ என முனகிக் கொண்டிருந்தார்.
அவர் சொல்லாமலேயே, கழிவறை சுத்தம் செய்ய வந்தவர் என்பதை, ஆண்கள் கழிவறைக்குள் இருப்பதை வைத்தும், கழிவறை சுத்தம் செய்யும்போது யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக வெளியில் வைத்திருக்கும் அறிவிப்புப் பலகை வைத்தும் எளிதில் தெரிந்துகொண்டேன்.
அவர் உட்கார்ந்திருந்தக் காட்சியும், அவரது முனகல் சத்தமும், என்னை ஒருவாறு உலுக்கியது என்று தான் சொல்லவேண்டும்.
உடனே அவரருகில் சென்று, ''அம்மா... அம்மா..’’ என்றழைத்தேன்.
நான் அழைப்பது கேட்டும் பதில் சொல்ல முடியாதவராய் இருந்தார்.
திரும்பவும், ''அம்மா.. என்னாச்சுமா..? என்றேன், அவர் தோள்மீது லேசாகத் தொட்டு.
லேசாக கண் திறந்து, ''தண்ணி… தண்ணி..'' என்றார்.
உடனே அவரது கையைப் பிடித்து, ''அம்மா.. எந்திரிங்கம்மா. அங்க வந்து வெளில ஒக்காருங்க. நான் போய் தண்ணி எடுத்துட்டு வர்றன்..’’
எனச் சொல்லி அவரைப் பிடித்து எழுந்து நடக்க வைத்து, கழிவறைக்கு வெளியிலுள்ள இடத்தில் சுவரில் சாய்த்து உட்காரவைத்துவிட்டு ஓடிப்போய் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் குடிதண்ணீரை அங்குள்ள கிளாஸில் பிடித்துக்கொண்டு வந்து தந்தேன்.
வேகவேகமாக மேலெல்லாம் சிந்தியவாறு குடித்தார். அவர் அப்படிக் குடித்ததைப் பார்த்ததுமே, சாப்பிடாமல் பசியோடு இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். உடனே அவரிடம்,
''காலயில சாப்டீங்களாம்மா?’’ என்றேன்.
இல்லை என்பதுபோல் தலையாட்டினார்.
’’என்ன சாப்பட்றீங்கன்னு சொல்லுங்கம்மா. நான் வேணாப் போய்ட்டு வாங்கிட்டு வர்றன்..’’ என்றேன்.
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
''நீங்க இங்கயே இருங்க. நான் வெளிலப் போய்ட்டு வாங்கிட்டு வர்றன்..’’ எனச் சொல்லிவிட்டு, இறங்கி வெளியில் சென்று நான்கு இட்லியும், ஒரு வடையும் வாங்கி வந்தேன்.
நூலகத்தின் உள்ளே உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால், விடவில்லை. பின் அவர்களிடம் எவ்வளவோக் கேட்டு, இதுபோல் மேலே வேலை செய்யும் அம்மாவுக்கு எனச் சொல்லி ஒருவழியாக எடுத்துவந்தேன்.
வந்து பார்த்ததும் அவரங்கே இல்லை. எங்கே போயிருப்பார் என்று உணவை அங்குள்ள கண்ணாடிச் சுவரருகிலுள்ள திட்டின் மீது வைத்துவிட்டுப் போய்ப் பார்க்க, அவர் கழிவறைக்குள் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
''அம்மா..'' என்றழைத்ததும் எட்டிப் பார்த்தவர்,
''தோ வர்றன்யா..’’ என்றார்.
சரியாக பத்து நிமிடம் கழித்து, கை காலெல்லாம் நன்கு கழுவிவிட்டு வந்தவரிடம், வாங்கி வந்த உணவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னேன்.
அங்கேயே ஓரமாக கீழே உட்கார்ந்து, பிரித்து சாப்பிட ஆரம்பித்தார். நானும் அவர் அருகில் உள்ள திட்டின் மீது உட்கார்ந்துகொண்டு,
''இப்போ ஒடம்பு பரவால்லயாம்மா?’’ என்றேன்.
எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தார். அப்புன்னகை, புன்னகை தாண்டிய வலி என்பதை மட்டும் அப்போது சொல்லாமல் சொன்னது.
சில நிமிடம் அமைதியாக சாப்பிட்டவர்,
''பத்துப் பேரு வேல செய்யற எடத்துல ரெண்டுப் பேர செய்ய சொல்றனுவ. படிக்கிறப் பசவ தானன்னுப் பாத்தா, நாய விடக் கேவலம் பண்ணிட்டுப் போறானுவ..’’ என்றார்.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
”பெர்ய ஆபீசர்க்குப் படிக்கறானுவலாம். பீப் பேன்ட்டு, தண்ணி ஊத்தாதவன்லாம் என்ன ஆபீசராயிப் புடுங்கப் போறானுவத் தெர்ல..’’
தினந்தோறும் நூலகத்திற்கு வந்து போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களைத் தான் அவர் சொல்கிறார் என்பது புரிந்தது.
அதற்குள் சாப்பிட்டு முடித்தவர், சாப்பிட்டக் காகிதத்தை கையில் மடித்து வைத்துக்கொண்டு,
''அவன்அவன் பேல்ரத அவன்அவன் என்னிக்கி வாரிக்கொட்றானுவளோ அன்னிக்கிதான் அத்தோட வலிய ஒனருவானுவ.
”நாமதான இங்கனப் படிக்க வர்றம், நாமதானப் பேல்ரம், நாமதான மூத்தரம் வுட்ரோன்னு ஒரு நாயாது யோசிக்கிதுவலா. எவளோ வந்து வாருவா தொடப்பான்னு அததுங்க இஷ்டத்துக்கு பீப் பேன்ட்டு, மூத்தரம் வுட்டுப் போறதுவ.
”ஒருத்தனாவது அத சுத்தம் பண்றவெங்களும் மனுசன்தாம்னு நெனக்கிறானுவலா.
”இந்தக் கையால (தன் இரு கைகளைக் காட்டினார்) எவ்ளோக் குப்பய வாரிக்கொட்டிருப்பன். எவ்ளோப் பீ மூத்தரத்த கய்விருப்பன். இங்கன வந்து கெய்வர்துனா மட்டும் ஒவ்வ மாட்டுது.
”என்ன செய்யறது, வவுத்துப் பொய்ப்புக்கு எங்கனக் கூப்டாலும் போய் பீ மூத்தரத்த வாரித்தான ஆவணும்.
"ஆயிரஆயிரமா வந்து சும்மாக்குனு ஒக்காந்து பென்ச்ச தேச்சிட்டு ஊர்க்கதப் பேசிட்டுப் போறவனுவலுக்கு கொடுக்குறானுவ. உசர கய்லபுடிச்சி எவன் எவனோப் பேனப் பீ மூத்தரத்த கய்வித் தொடச்சிட்டுப் போற எங்குளுக்கு பத்து ரூவாத் தர்ற மேலக்கிம் கீலக்கிம் நாலுவாட்டிப் பாப்பானுவ.
"கேட்டா ஆபீசர்ரு மயிரானுவலாம்..’’
அவர் சொல்லச் சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
”கக்கூஸ்ல தண்ணி வர்ல, அது இதுன்னு எது சொன்னாலும் காதுல வாங்க மாட்டானுவ. ஆனா ஈ’ன்னு இளிக்கியிற மாரி கய்வித் தர்னும்பானுவ.
"பெனாயிலுப் பத்தல பிலிசீங்கிப் பவுடரு இல்லன்னு சொன்னா, வாய்கிய்ய நோனாவட்டுப் பேசுறனுவ வாயயும் சூத்தயும் மூடிட்டி இருப்பானுவ..’’
என்றவர் மெல்ல தரையில் கையூன்றி எழுந்து நின்றார். எதையோ யோசித்தவராய்,
''அவனுவ செய்ற வேலய தெர்ல போற நாய்ங்க கூட செய்யும். அந்த நாய்ங்கள ஒர்நா வந்து நான்ங்க செய்ற வேலயவ செய்ய சொல்லுன்ங்க பாப்பம்..’’ என்றார்.
அவரது ஆதங்கத்தையும் மனவேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
"பளப்பளன்னு கய்வி வக்கறம். வர்றவன்லாம் அவன்அவன் ஒலுங்கா தண்ணி ஊத்திட்டுப் போனானுவன்னா, பேனப் பீயும் மூத்தரமும் அப்டியே நிக்குமா?
”எவன் பேன்டா நமுக்கென்ன, யார் வாரிக் கொட்னா நமுக்கென்னன்னு நெனுச்சா யாருவதான் என்னப் பண்ணமுடியும்?
”தலயெழ்த்து எங்கப் பொய்ப்புன்னு சகிசிட்டு எல்லாத்தியும் வாரிக்கொடிட்ருக்கம். எவ்ளோ நாளிக்கி கொட்டுவம்?
”வவுருலாம் எரிது, எவனோப் பேன்டப் பீ மூத்தரத்த வாரி ஏன்டா சாவனும் நெனச்சியாக்கா. என்னிக்கிதான் இதுக்கிலாம் ஒரு தீர்வ்வு வர்மோ, அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்யம்.”
இன்னும் பேசினார். அங்கே பலபேர் செய்யும் வேலையை ஒருவரையே செய்யச்சொல்லும் அவலம் குறித்தும், அதற்கெனத் தரும் சொற்பச் சம்பளம் குறித்தும், படிக்க வருபவர்கள் கழிவறையில் செய்துவிட்டுப் போகும் அநியாயங்கள் குறித்தும் எவ்வளவோப் பேசினார்.
ஒருபக்கம் ஏன் இப்படி இருக்கிறோம்? என கோபமாக வந்தது. இன்னொரு பக்கம் அவர் மீது பரிதாபமாக இருந்தது.
இத்தனைக்கும் அவரிடம் நான் எதையும் கேட்கவில்லை. எல்லாம் அவராகவே சொன்னார். அவரது பலநாள் ஆதங்கம், சொல்ல ஒருவரும் கிடைக்காத ஏக்கம், விரக்தி, கோபம், இயலாமை, இன்னும் இன்னும்.
''என் புருசன் அன்னிக்கே சொன்னாவ. இந்த சாவுபுடிச்ச வேல நமக்கு வேணாம்டின்னு. அவன் போயி சேந்தும் வுட முடில.
”புள்ளயும் கைல ஒரு பச்ச ரிச்வக் கொர்த்துட்டுப் போயி சேந்துட்டா. அதயும், இந்த வவுத்தயும் வச்சிட்டு என்னப் பண்ணுவன்?
”எங்கன போனாவும் சுத்தினு சுத்தினு அடிக்கிற சனியக்கார வேல இது. விட்டாப்போதுன்னு ஒதுங்கனாலும் விடுமாட்றானுவ. வேற வக்கில்ல. அதான் பீ மூத்தரத்தோடவே தெனந்தெனம் செத்துவுட்ருக்கன்..’’
திடீரெனப் பேச்சை நிறுத்தினார். சில நொடிகள் எதுவும் பேசாமல் வழிப்பக்கம் யாராவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தார்.
உடனே நான், ‘’வேற யாரும் இப்ப ஒங்களுக்குன்னு இல்லயாம்மா..’’ என்றேன்.
‘’பேத்தி இப்பன எட்டாவதுப் படிக்கிறா. அவளும் நானுந்தன். தெனக்கியும் தெருக் குப்பய வாருவன். வாரத்துக்கு ரண்டு நாளிக்கி இங்கன கூப்டுவானுவ வருவன். இந்த ஈனக்கெட்ட பொயப்புலாம் என்னோட முடின்ஞ்சி போவுனுன்னு என் பேத்திய பீ நாத்தம் காட்டாம வளக்கிறன்..’’ என்றவர்,
நான் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்ததுக்கு நன்றி சொன்னார்.
‘’மேலப் போய்க் கய்வனும். நான் வர்றன்யா, ஒனக்குப் புண்ணியம்..’’ எனச் சொல்லி புறப்பட்டவரிடம், பாக்கெட்டிலிருந்து 50 ரூபாயை எடுத்து,
“இந்தாங்கம்மா, இத வச்சிக்கோங்க..’’ என்றேன்.
''அய்யே, அது எதுக்கு எனுக்கு?’’ என்றார்.
என்ன சொன்னால் வாங்கிக் கொள்வார் என யோசித்து,
“ஒங்கப் பேத்திக்கு ஒரு நல்லப் பேனா வாங்கித் தாங்கம்மா..’’ என்றேன்.
புன்னகைத்துவிட்டு வாங்கிப் போனார்.
குப்பை தானே என கண்ட இடத்தில் கண்டபடி வீசுகிறோம். அதை இன்னொருவர் கூட்டுகிறார், பொறுக்குகிறார் என யோசிப்பதில்லை.
அதேபோல், கழிவறை தானே என இஷ்டத்துக்கு சிறுநீர் கழிக்கிறோம், மலம் கழிக்கிறோம். அதை இன்னொரு மனிதர்தான் கழுவுகிறார் என சிந்திப்பதில்லை.
ஒருவேளை யோசித்திருந்தால் குப்பையை சரியாக குப்பைத்தொட்டியில் கொண்டுபோய் போட்டுவிட்டு வருவோம். கழிவறையில் சிறுநீரும், மலமும் கழித்தப்பின் சரிவர தண்ணீர் ஊற்றி, கழிப்பதற்கு முன்பிருந்ததுபோல் சுத்தமாக வைத்துவிட்டு வருவோம்.
ஆனால், நம்மில் பாதிக்கும் அதிகமானோர் அப்படி செய்வதில்லை.
காரணம், நம் மனம். இன்னொரு மனிதர் அதையெல்லாம் வாருகிறார், கூட்டுகிறார், கழுவுகிறார என்று சிந்திக்காத கீழ்மை மனம். ஆம்!
தெருவுக்கு நான்கு குப்பைத் தொட்டிகள் வைத்தும், அதில் குப்பையை கொட்டாமல் ஆங்கங்கே இஷ்டத்துக்குக் கொட்டும் கோர புத்தி.
அதிலும் உச்சமாக, வீட்டிலுள்ள கழிவறையை அக்கறையோடு பயன்படுத்தும் பலர், பொது இடங்களில் உள்ள கழிவறையை ஏனோதானோவென்று பயன்படுத்திவிட்டுவரும் நடத்தைக் கோளாறு.
இப்படி இன்னும் இன்னும் இன்னும்.
ஐம்பது வயதான அம்மா, பார்க்கவே பாவமாக இருப்பவர், கடந்த 30 வருடத்துக்கும் மேலாக குப்பைகள் வாரியும் கழிவறைகள் சுத்தம் செய்தும் வருபவர், லட்சக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரும் நூலகத்தில், தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து படித்துவிட்டு செல்லுமிடத்தில், உள்ள கழிவறையின் அவலநிலை தாங்காமல் மயங்கி விழுகிறார் என்றால்,
லட்சக்கணக்கான நூல்கள் அங்கிருந்தும், எத்தனைப் பெரிய கட்டிடம் கட்டிப் பெருமை பேசியும், அத்தனைப் பேர்கள் வந்து படித்துச் சென்றும் என்ன பயன்?
நானே பல தடவை பார்த்திருக்கிறேன். மலம் கழித்துவிட்டும், சிறுநீர் கழித்துவிட்டும் தண்ணீர் ஊற்றாமல் பலர் சென்றிருப்பதை. அதிலும் சிலர், மென்று தின்ற மெல்கோந்தை சரியாகக் கொண்டு வந்து சிறுநீர் கழிக்குமிடத்திலும், முகம் கைகள் கழுவுமிடத்திலும் துப்பிவிட்டுப் போயிருப்பார்கள். அதனால் அடைத்துக்கொண்டு சிறுநீரும், தண்ணீரும் செல்லாமல் நிறைந்து வழியும்.
படிக்க வருபவர்கள் இப்படியென்றால், நூலக நிர்வாகம் அதற்கும் பல படி மேல். வருடக்கணக்காக திறக்காமல் பூட்டிக்கிடக்கும் சில கழிவறைகள், உடைந்துபோன பழுப்புகள், தண்ணீர் வராத குழாய்கள் எதைப்பற்றியும் சிறு அக்கறையும் கொள்ளமாட்டார்கள்.
இந்த லட்சனத்தில் இந்தியாவின் மிகப்பெரிய, பிரமாண்ட, அனைத்து வசதிகலும் கொண்ட நூலகம் என்ற பெருமை வேறு.
அவர் சென்று வெகு நேரமாகியும், சொல்லிப்போன ஒன்று மட்டும் திரும்பத் திரும்பக் காதில் கேட்டது.
"அவன்அவன் பேனப் பீயயும், பெஞ்ச மூத்தரத்தயும், துப்பன எச்சியயும், அவனுவளே என்னிக்கி கய்வி வாரி சுத்தம் பண்றானுவளோ அன்னிக்கிதான் இந்தக் கொடுமிக்கிலாம் ஒரு முடுவு வரும்..’’
ஆம்! அவர் கேள்விகள் நியாயமானது. அவரது ஆதங்கமும், கோபமும் நியாயமானது. அத்தோடவர் சொல்லிப்போன இவ்வார்த்தைகளும் மிகச் சரியானது என்றேப் பட்டது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகு மட்டுமல்ல… அவரகத்திலுள்ள கேள்விகள், கோபங்கள், ஆதங்கம், இயலாமை, வலிகள், போராட்டங்கள் என அனைத்தும் எனக்கவர் முகத்தில் தெரிந்தது.
ஆம்! ஆம்! ஆம்!
- வடிவரசு,
18.04.2020

No comments:

Post a Comment