இலங்கை வானொலி சேவையை தொடங்கிய நாள் டிசம்பர் 16 ,1925
இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்ட சேவை.
ஆரம்பம்
1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார்.
இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது.
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது.
இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931,மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள்
இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா இன்னும் பலர்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவை
1950 செப்டம்பர் 30இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் கேட்டார்கள். கிளிஃபோர்டு டோட் (Clifford Dodd) எனும் ஆஸ்திரேலியர் இவ்வர்த்தக சேவையின் இயக்குநராக இருந்தார்.
அகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களுக்கு 1952 இல் இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த பி.வி.கேசகர் (B.V.Kesakar) விதித்திருந்த தடை தமிழ் சினிமாத் துறையினர் தங்கள் திரைப்படம் வெளியாகும் சமயம் இலங்கை வானொலியை விளம்பரத்திற்கு முற்றாகச் சார்ந்திருக்க வைத்தது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஏற்படுத்திய தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ’விவித் பாரதி’ வர்த்தக ஒலிபரப்பை 1957 ஆம் வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பித்தது.
பின்னர் அரசியல் நிலைமையாலும் தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களாலும் இலங்கை வானொலி செலுத்திய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் இழந்தது.
இசைத் தட்டுகள்
உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகள் இலங்கை வானொலி கொண்டுள்ளது. 1920-30 ஆண்டுகளில் வெளிவந்த மிக அரிதான 78RPM இசைத் தட்டுகளும் (அசல்) உள்ளன.
சிற்றி எப்எம், தென்றல், ஆங்கில சேவை என்பன 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் செய்திமதி தொழில்நுட்பத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.
சிற்றி எப்எம், தென்றல், ஆங்கில சேவை என்பன 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் செய்திமதி தொழில்நுட்பத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.
Thanks Batti Express
No comments:
Post a Comment