“நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அதுவரையான, தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம்! வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது” –
சி. மோகன்
ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.1959 ஆம் ஆண்டு இவரும் ஆனந்தா என்பவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனந்தா தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
அரசியல் ஈடுபாடு
இவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரி கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.
அதன் பிறகு மதுரைக்கு திரும்பி தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸிய கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார்.
படைப்புகள்
இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்
நாவல்கள்[தொகு]
• நாளை மற்றும் ஒரு நாளே,
• குறத்தி முடுக்கு.
சிறுகதைகள்[தொகு]
• எங்கள் ஊர்
• டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
• யாரோ முட்டாள் சொன்ன கதை
• தீராக் குறை
• சம்பாத்தியம்
• பூர்வாசிரமம்
• அக்கினிப் பிரவேசம்
• நான் புரிந்த நற்செயல்கள்
• கிழவனின் வருகை
• பூவும் சந்தனமும்
• ஜீரம்
• போலியும் அசலும்
• துக்க விசாரனை
• மனிதன்
• இலட்சியம்
• ஓடிய கால்கள்
• நிமிஷக் கதைகள்
இறுதி
கம்யூனிசக் கொள்கைகளில் ஏமாற்றம் அடைந்த காலகட்டத்தில் இவருக்குப் போதைப் பழக்கம் ஏற்பட்டது. கடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.
ஜி.நாகராஜன்-விளிம்புகளை வரைந்த வாத்தியார்
இன்று எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்தநாள். வரலாற்றின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களை அவர்களின் மறைவுக்கு நெடுங்காலத்தின் பின்னே கொண்டாடுவது தமிழ் மரபாகிவிட்டது. அந்த மரபின் படி மறைந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மறுவாசிப்பு செய்யப்பட்டு அவரின் எழுத்துக்கள் மீது வாசக வெளிச்சம் பட்டது.
இதே நாள், செப் 1 (1929) அன்று பழநியில் வழக்கறிஞர் கணேசனின் மகனாக பிறந்த நாகராஜன் அவருக்கு ஏழாவது பிள்ளை. மதுரையில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி முதுகலை வரை படித்த நாகராஜன் காரைக்குடி கல்லூரியில் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் பல்வேறு வேலைகள் செய்த அவர் இறுதியில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். நாகராஜன் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தால் அப்படியே மனதுக்குள் பதிந்துவிடும் என்ற பெயருண்டு. அந்தக்கால மதுரை மாணவர்களின் ஹீரோவாக இருந்தார்.
ஜி.நாகராஜன் எழுத்திலும் இயல்பிலும் சண்டமாருதனாகத்தான் இருந்தார்.காற்றைக் கட்டிப்போட முடியாது என்கிற அறிவியல் உண்மை தெரிந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர பணியாளராக அவரை நியமித்தார்கள். எழுத்தாளர்கள், எழுத்திலும் கூட தொடத்தயங்கிய பாத்திரங்களை யதார்த்தத்துடன் படைத்தளித்தவர் நாகராஜன். விலைமாது, பிட்பாக்கெட்கள்,திருடர்கள் என அவரின் படைப்புலகம் உலக வாழ்வின் இருண்ட முகங்களை அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது.
அவர் 'குறத்தி முடுக்கு' மற்றும் 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய குறு நாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.
அவரின் படைப்புகளில் ரசிக்கப்பெற்ற சில வாசகங்கள்.
"உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்."
"மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்."
"தனது கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்."
"‘மனிதாபிமான’ உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்க வல்லது. இல்லையெனில் ‘மேக்பெத்’ என்ற நாடகமோ ‘கலிவரின் யாத்திரை’ என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது."
"மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."
" தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்."
"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன."
"எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்."
1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் குறத்தி முடுக்கு நாவலை வெளியிட்ட நாகராஜன் அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"நாட்டில் நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்."
இதுதான் ஜி.நாகராஜன்!
‘சிதையில் படுத்தால்தான் குளிர் அடங்கும்’ – ஜி. நாகராஜன்
ஜி.நாகராஜன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்
ஜி.நாகராஜன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்
ஜி.நாகராஜன் நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். அவரைப்பற்றிய என் முழுமையான மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அது நான் நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற பேரில் இருபது எழுத்தாளர்களைப்பற்றி எழுதிய ஏழு நூல்களில் ‘நவீனத்துவத்தின் முகங்கள்’ என்ற நூலில் உள்ளது
நாகராஜனின் கசந்த அங்கதம் பற்றியும் எதிர்மறை வாழ்க்கைநோக்கு பற்றியும் விரிவாக இங்கே பேசவில்லை. நீங்கள் கோரியபடி அவரது பாலியல்சித்தரிப்பு ஏன் முக்கியமானது என்று சொல்கிறேன். அவர் பாலுறவை சித்தரிக்கிறார். ஆனால் அந்தச் சித்தரிப்பு மேலோட்டமான பரபரப்பை அல்லது ஈர்ப்பை மட்டும் உருவாக்குவதில்லை. அதை வாசகன் கடந்தானென்றால் நுட்பமான கண்டடைதல்கள் வழியாகச் செல்லமுடியும்
’நாளை மற்றும் ஒரு நாளே’ நாவலில் மீனாவை கந்தன் ஒரு விபச்சார விடுதியில்தான் கண்டுகொள்கிறான். விலைகொடுத்து வாங்குகிறான். அவளை விபச்சாரத்துக்கு அனுப்பிச் சம்பாதிப்பதுதான் அவன் நோக்கம். அவள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறான். அவளை இன்னொருவருக்கு விற்றுவிடவும் எண்ணம் கொண்டிருக்கிறான், அவளுக்கு நல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்வதற்காக.
ஆனால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ளும் சித்தரிப்பிலுள்ள உரையாடலைக் கவனியுங்கள். ’அக்கா வீட்டுக்கு கண்டவனும் வருவானே , இப்பிடித்தான் ரொங்கிப் படுத்திருப்பியா?” என்கிறான். அவளுடன் பிற ஆண்கள் உறவுகொள்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு அப்போது முக்கியமாகப் படுகிறது. அது அவனை உள்ளூர அரிக்கிறது. பெண்ணை தன் உடைமை எனக் கருதும் ஆதி மிருகம்.
அவள் எத்தனை நுட்பமாக அதைப்புரிந்துகொள்கிறாள். ‘அக்கா வீட்டுக்கு கண்டவனும் வரமாட்டான். ஒருமாதிரி டீசண்டானவங்கதான் வருவாங்க’ என்கிறாள். ஆண் மிருகத்திற்கு ஒரு துண்டு மாமிசம்.
உடலுறவு நடக்கிறது. ‘தலையணை வச்சுக்கவா?’ ‘வேண்டாம். சரியா இருக்கு’ கூடவே உள்ளங்களும் உரையாடிக்கொள்கின்றன. ‘எப்டிப்பட்டவங்க வருவாங்க?’ என்கிறான். அவள் நுணுக்கமாகச் சொல்கிறாள். ‘காலேஜ் பசங்க வருவாங்க’. அதாவது அவள் அவனுக்குச் சமானமாகப் பொருட்படுத்தக்கூடியவர்கள் வருவதில்லை. இரண்டு விளையாட்டுக்கள்!
மொத்த நாவலையும் இப்படியே வாசித்துக்கொண்டே செல்லலாம். மீனா தன்னம்பிக்கை கொண்ட உற்சாகமான அடாவடியான பெண். ஆனால் உடலுறவு முடிந்து கந்தன் திரும்பிப்படுத்தால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அது மனஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு. [ஹென்றி மில்லர் அற்புதமாக அந்த பின்மனநிலையை எழுதியிருக்கிறார். நெக்ஸஸ் நாவலில்] உண்மையில் மீனா உள்ளூர துயரமான மனச்சோர்வு கொண்ட இன்னொரு பெண்.
’குறத்திமுடுக்’கில் ‘ஏன் உதட்டிலே முத்தமிடக்கூடாதுன்னு சொல்றாங்க?” என்று தங்கம் அவனிடம் கேட்கிறாள். ‘தெரியலை’ என்கிறான். அவளுடைய நோய் தனக்குத் தொற்றிவிடுமெனும் அவநம்பிக்கை அது என்று சொல்லவில்லை. பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது
அவன் அவளை அள்ளி உதட்டில் முத்தமிடுகிறான். தங்கமும் அவனும் காதல்கொள்ளும் தருணம் அது. மறைந்த நண்பர் குவளைக்கண்ணன் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ‘வச்சாண்டா பாரு… அவன் அறிஞ்சவண்டா’ என்று குதூகலித்ததை நினைவுகூர்கிறேன்.
தங்கம் மாதாமாதம் போலீஸில் கைதாகி கோர்ட்டில் அபராதம் கட்டி வருபவள். ஆனாலும் அவளுக்கு ஒருமுறை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அபராதம் கட்டாமல் வாதாடவேண்டும் என அடம்பிடிக்கிறாள். அந்த வேகம் எவருக்கும் புரியவில்லை. அவனுக்கும்தான். ‘ஏன்?’ என்கிறான். ‘காலிப்பய சேதுவ நான் கூப்பிட்டதா கேஸ போட்டிருக்கானே. அதை ஏத்துக்கவே முடியாது’ என்கிறாள். ஏன்? அவன் ஒருவனை மட்டும் அவள் ஏன் வெறுக்கிறாள். அவனைக் கூப்பிட்டாள் என்று சொன்னால் ஏன் அவள் சுயமரியாதை புண்படுகிறது? சேது யாரென்றே நாவலில் இல்லை. ஆனால் வாசகன் அந்த மனநிலையை தொட்டு அறியமுடியும்.
இந்த நுட்பங்களை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்கு ஜி.என். அசலான புனைவுக்கலைஞன். தமிழின் இலக்கியசாதனையாளர்களில் ஒருவர். வெறுமே உடல்விவரணைகளை மட்டும் வாசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான் அவர் போதாதவர். துரதிருஷ்டவசமாக பாலியல்சார்ந்த எழுத்துக்கு மொண்ணை வாசகர்களே அதிகமும் வருகிறார்கள். ஜி.என் ஐ அவர்கள் மேல்மட்டம் வழியாகக் கடந்துசெல்கிறார்கள்.
Thanks https://www.jeyamohan.in
No comments:
Post a Comment