காமத்தையும் காரத்தையும் ஒப்பிட்ட ஃப்ரெஞ்ச் தத்துவ அறிஞர் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962).
சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், இலக்கியம் போன்ற பல துறைகளில் அறிஞராக விளங்கிய ஜார்ஜ் பத்தாயின் (1897 - 1962) முக்கியத்துவம் என்னவென்றால், அவரது சிந்தனை அவரது காலத்தை விட ஒரு நூற்றாண்டு முன்னால் இருந்தது. அதாவது, 2030இல் சொல்ல வேண்டியதை 1930-லேயே சொன்னார் பத்தாய். அதனால்தான் அவரை யாருக்கும் புரியாமல் போய் விட்டது. கருத்துச் சுதந்திரத்தை அதி தீவிரமாகப் பாராட்டக்கூடிய ஃப்ரான்ஸிலேயே ஜார்ஜ் பத்தாய் யாருக்குமே தெரியாத ரகசியப் பெயரில் எழுத வேண்டியிருந்தது. காரணம், அவர் புதினங்கள் ஒழுக்கக் கேடானவையாக (immoral) இருந்தன. 1940களில் எழுதப்பட்ட அவரது புத்தகங்கள் 1990களில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் பத்தாயை தெரிதா, ஃபூக்கோ, ஜூலியா க்றிஸ்தவா, சூஸன் சொண்டாக் ஆகியோரின் துணை கொண்டு வாசித்தால்... இல்லை, அதெல்லாம் கூட வேண்டாம்; பத்தாயின் புனைகதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கட்டுரைகளேதான் திறவுகோல். இவர் காலத்தில் வாழ்ந்த சக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையெல்லாம் விட ஏராளமாக எழுதினார் என்றாலும் உயிரோடு இருந்த போது யாரும் இவரை அங்கீகரிக்கவில்லை; சரியாக விவாதிக்கவும் இல்லை. இவ்வளவுக்கும் உலகிலேயே அதிக அளவில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம் ஃப்ரான்ஸ். ஒரு பாப் பாடகரைப் போல் உலகம் முழுவதும் அறியப்பட்ட எக்ஸிஸ்டென்ஷியலிச சூப்பர் ஸ்டாரான ஜான் பால் சார்த்தர் கூட ஜார்ஜ் பத்தாயை மட்டமாகவும் கிண்டலாகவும்தான் குறிப்பிட்டார். ”பத்தாய் ஒரு தத்துவவாதி அல்ல; அவர் ஒரு mystic. இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்” என்பது சார்த்தரின் நிலைப்பாடு. இது கிட்டத்தட்ட மார்க்சீயவாதிகளின் நிலையை ஒத்தது. ஆனால் பத்தாய் இதை ஸ்தாபன ரீதியான சித்தாந்தம் (Status quo) என்று ஒதுக்கித் தள்ளினார். சார்த்தருக்கும் பத்தாய்க்கும் நடந்த விவாதங்கள் Excremental Vs Existential என்று பேசப்பட்டது.
எல்லாவற்றையும் விட ஆச்சரியம், பத்தாயுமே தன்னை ஒரு ‘மிஸ்டிக்’ என்றே சொல்லிக் கொண்டார். அவர் எழுத்துகளில் அடிக்கடி ‘உள்ளார்ந்த அனுபவம்’ என்ற வார்த்தை தென்படுகிறது. பாலியல் அனுபவம் அப்படிப்பட்டதுதான் என்பது பத்தாயின் கருத்து. உதாரணமாக, பத்தாயின் மதாம் எத்வார்தா சிறுகதையை எடுத்துக் கொள்வோம். (இதையும் பத்தாய் யாருமே அறியாத ரகசியப் பெயரில்தான் எழுதினார்.) தெரிதா போன்றவர்களின் சிந்தனையில் பெரும் பாதிப்பை நிகழ்த்திய மற்றொரு ஃப்ரெஞ்ச் தத்துவவாதியும், இலக்கியக் கோட்பாட்டாளருமான Maurice Blanchot இந்தக் கதையைப் பற்றி, ’the most beautiful narrative of our time' என்று குறிப்பிடுகிறார். அதில் உள்ளார்ந்த அனுபவமும் பாலியல் அனுபவமும் ஒன்றாக இணையும் ஒரு காட்சியைப் பார்ப்போம்:
She was seated, she held one long leg stuck up in the air, to open her crack yet wider she used her fingers to draw the folds of skin apart . .. 'Why', I stammered in a subdued tone, 'why are you doing that?' 'You can see for yourself ', she said, 'I'm GOD'.
ஜார்ஜ் பத்தாய் அவருடைய காலத்தில் அங்கீகரிக்கப்படாமல் போனதற்குக் காரணம், அவருடைய சிந்தனை, எழுத்து எல்லாமே அப்போது முற்றிலும் புதிதாக இருந்தது. உதாரணமாகச் சொன்னால், அவர் பச்சையான போர்னோ மொழியில் கதைகளை எழுதினார். அதற்கு அப்போது போர்னோ எழுத்து என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் கொடுக்கப்படவில்லை. 1928-இல் அவருடைய ”கண்ணின் கதை” என்ற நாவல் Lord Auch என்ற பெயரில் வெளிவந்தது. பல ஆண்டுகளுக்கு அந்தப் பெயரில் எழுதியது யார் என்றே தெரியாமல் இருந்தது. Auch என்ற வார்த்தை aux chiottes என்ற பேச்சு வழக்கின் சுருக்கம். கிட்டத்தட்ட அதன் பொருள், நீ கக்கூஸுக்குத்தான் லாயக்கு. ஆக, Lord Auch என்பதை கக்கூஸ் நாயகன் என்று மொழிபெயர்க்கலாம். போர்னோ மொழியில் எழுதப்பட்ட ”கண்ணின் கதை” ஒரு போர்னோ நாவலாகவே கருதப்பட்ட நிலையில் அந்த நாவலைப் பற்றி 1962-இல் ரொலான் பார்த் Metaphor of the Eye என்ற கட்டுரையை பத்தாயின் பத்திரிகையான Critique-இலேயே எழுதினார். அந்தக் கட்டுரைதான் முதல் முதலாக ”கண்ணின் கதை” என்பது போர்னோ நாவல் அல்ல; தத்துவார்த்தமாக விரியும் பல அர்த்தத் தளங்களைக் கொண்ட நாவல் என்பதை நிலைநாட்டியது. அந்தக் கட்டுரையை ரொலான் பார்த் எழுதிய போது ஜார்ஜ் பத்தாய் உயிரோடு இல்லை என்ற முக்கியமான தகவலை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல; பத்தாயின் மற்றொரு நாவலான My Mother அவரது மரணத்துக்குப் பிறகே பிரசுரமாயிற்று. ஈடிபஸ் காம்ப்ளக்ஸை அடிப்படையாகக் கொண்ட, வெளிப்படையான மொழியில் எழுதப்பட்ட நாவல் அது. பத்தாய் 1935-இல் எழுதி முடித்த Blue Moon என்ற நாவலும் 1957-இல் தான் பிரசுரமாயிற்று. இந்த நாவல் எப்படி இருக்கும் என்பதை இங்கே நான் விவரிப்பது கூட சாத்தியம் இல்லை. ஆனால் பத்தாய் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லப்படுவது எப்படியென்றால், 1935-இல் அவர் எழுதியதெல்லாம் 1939-இலிருந்து ஐரோப்பிய நகரங்களில் நிகழத் துவங்கியது. பாலியலும் மரணமும் ஒன்றுக்குள் ஒன்று சிக்கிக் கொள்ளும் தத்துவார்த்த முரண் பற்றிய நாவல் அது.
1936-இல் பத்தாய் Acephale என்ற ரகசிய வாசகர் வட்டத்தைத் துவக்கினார். வட்டத்தின் சார்பில் அதே பெயரில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆஸிஃபால் என்ற கிரேக்க வார்த்தைக்கு ”தலையற்ற” என்று பொருள். இதன் உறுப்பினர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வட்டம் பற்றிய செய்திகளை வெளியே சொல்லக் கூடாது என்பது முக்கியமான விதி. ஆஸிஃபால் வாசகர் வட்டம் இரண்டாம் உலகப் போர் (1939) துவங்கிய போது முடிவுக்கு வந்தது. 1936-39 நான்கு ஆண்டுகளில் ஐந்து இதழ்கள் வெளிவந்தன. முதல் இதழ் எட்டு பக்கங்களைக் கொண்டிருந்தது. இந்த வட்டத்தில் பல ரகசியமான விதிகள் கடைப்பிடிக்கப் பட்டன. உதாரணமாக, வட்ட உறுப்பினர்கள் யூத எதிர்ப்பாளர்களோடு பழகக் கூடாது; சந்தித்தால் கூட கை குலுக்கக் கூடாது. தலையை வெட்டி தண்டனை கொடுப்பது சரியே. ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது 16-ஆம் லூயியின் தலை வெட்டப்பட்டதை வட்டம் ஆதரித்தது. அதேபோல் வட்டத்தில் தியான வகுப்புகளும் மற்ற தாந்த்ரீக செயல்முறைகளும் நடத்தப்பட்டன.
பத்தாயை, அவருடைய பாலியல் எழுத்தை எப்படி மிஸ்டிஸிஸத்துக்குள் அடக்குவது? இரு உடல்களின் சேர்க்கையை அவர் ”ஒருமை” என்கிறார். ஈருடல், ஓருயிர் என்று சொல்வோம் அல்லவா, அதுதான் அவர் சொல்லும் மிஸ்டிக் அனுபவம். இதை அவர் மரணத்தோடு இணைக்கிறார். ஏனென்றால், மரணம்தான் சிருஷ்டியின் விதை. இலக்கியத்தைக் கூட பத்தாய் அப்படித்தான் வரையறுக்கிறார்.
Literature (fiction) took the place of what had formerly been the spiritual life; poetry (the disorder of words) that of real states of trance.
”ஆன்மிகம் இருந்த இடத்தை இலக்கியம் பிடித்துக் கொண்டது; கவிதை என்பது தியானத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.”
பத்தாயின் எழுத்தில் இருவித மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று, பாத்திரங்களின் மரணம். இரண்டாவது, எழுத்தாளனின் மரணம். ஆம், பத்தாய் தன் ஒவ்வோர் எழுத்திலும் தன்னையே மறுதலித்துக் கொண்டு செல்கிறார். தன்னுடைய கதையாடலைத் தானே கலைத்துப் போடுகிறார். (நான் எழுதுவது புத்தகம் அல்ல; வாசகருக்கு அது ஒரு சவால்: பத்தாய்). தானே தன்னுடைய பிரதியில் இல்லாமல் போகிறார். அர்த்தத்துக்கு எதிரான எழுத்தை உருவாக்குகிறார். இப்படியாக எழுத்தின் அதிகாரத்தை நொறுக்கி விடுகிறார். இது பத்தாய் பற்றிய தெரிதாவின் ஒரு வாசிப்பு.
சாரு நிவேதிதா
No comments:
Post a Comment