இஸ்லாம் மார்க்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழ்ச் சமுதாயத்தில் பிளவு ஏற்படக் காரணமாக இருக்கும் இஸ்லாமியர்களை இரண்டு கன்னங்களிலும் அறைந்து சொல்லும் அற்புதமான பதிவு. டாக்டர் ஃபாஸில் ஃப்ரீமேன் என்பவர் எழுதியிருக்கிறார்.
எப்போதுமே தமிழனாய் நெஞ்சில் நிறைந்திருக்கும் என் (இயக்குநர் கஸாலி) போன்ற பல லட்சம் இஸ்லாமியர்களின் மனதைப் படித்தது போன்ற பதிவு:
…………………………….
என் அன்பிற்குரிய முஸ்லிம் சமுதாயத்துக்கு ஒரு மனம் திறந்த மடல்.
நீண்ட நாட்களாக நான் சொல்ல நினைத்தை, சொல்ல வேண்டுமா என்று பலமுறை யோசித்ததை, இன்று உங்களோடு பகிர்கிறேன், காலத்தின் தேவை கருதி. நீண்ட பதிவுதான், சில நிமிடங்கள் எனக்காக ஒதுக்க நேரமிருந்தால், அவசியம் படியுங்கள்.
ஓரிறை, ஓர் மறை, ஒரு நபி என்ற கட்டுப்பாடான “தீன்” வழியில் நடக்கும் ஒரு மார்க்கம் இந்த சமுதாயத்தில் எத்துணை உயரத்தில் கொலுவீற்றிருக்க வேண்டும்..? உண்மையில் அப்படி இருக்கிறதா உங்கள் நிலை..?
இன்றைய இந்த இழி நிலை உங்கள் சமுதாயத்துக்கு ஏன், எப்படி நேர்ந்தது என்று கொஞ்சமேனும் நீங்கள் சிந்திக்க வேண்டாமா..?
அன்பிலும், அறிவிலும், கருணையிலும், சமூக அந்தஸ்திலும் உச்சத்தில் இருந்த உங்கள் சமுதாயம் “வாங்க பாய்” என்று மரியாதையோடு அழைக்கப்பட்டு , கெளரவமாக மாற்று மதத்தாராலும் நடத்தப்பட்ட உங்கள் சமுதாயம்…
இன்று சர்வ சாதரணமாய் “துலுக்க பயலுகள்” என்று சில அரசியல் மேடைகளிலேயே பேசப்படும் நிலைமை வர காரணம் என்ன..?
நான் சொல்வதை கொஞ்சம் கோபப்படாமல் சிந்தித்துப்பாருங்கள். தமிழ் முஸ்லிம் என்ற ஒற்றை அடையாளத்தோடு உலா வந்த காலம் வரை உங்கள் வாழ்வியல் அழகானதாகவே இருந்தது. ஆனால் இன்றோ, எத்தனை கூறுகளாக பிரிந்து சிதறுண்டு கிடக்கிறீர்கள் நீங்கள்..?
மாமன் மச்சான் என்று காலம் காலமாய் உங்களோடு உறவு பாராட்டி வாழ்ந்திருந்த இந்து சமுதாயம், இன்று கொஞ்சம் அச்சத்தோடும், கொஞ்சம் வெறுப்போடும் உங்களை பார்க்கும் நிலைமை வர காரணம் என்ன..?
உடனே, ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று ஒற்றை குரலில் உரக்க கூறுவீர்கள் , அவர்களும் ஒரு காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் மட்டும்தான் காரணமா..? ஒரு கை மட்டும் வீசினால் ஓசை வருமா, கொஞ்சம் யோசித்து பாருங்கள்..?
ஒரு நாத்திக இடதுசாரி கம்யூனிஸ்ட் தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்தவன்தான் நான். நம்பிக்கையின் இரு பக்கங்களையும் நேரடியாக பார்த்து அனுபவித்து வளர்ந்தவன் எனவே இதை வெளியில் இருந்து கற்பனை செய்து கருத்து சொல்லவில்லை. என் வாழ்வில் நான் கண்டு வளர்ந்த மாற்றங்களை, என் உள்ள குமுறல்களைத்தான் உங்கள் முன் வைக்கிறேன்.
நூற்றாண்டுகள் கடந்தும் இணக்கத்தோடும், இன்முகத்தோடும் நம் இந்து சகோதரர்களோடு நீங்கள் குடும்பமாய் வாழ்ந்து வர முக்கிய காரணம் என்ன தெரியுமா..? உண்மையிலேயே அவர்கள் உங்கள் பல்லாண்டுகால குடும்பம் மற்றும் உறவு என்பதால்தான்.
ஆம், நீங்கள் என்ன அரேபியாவில் இருந்தா இறக்குமதி ஆனீர்கள்..? நம் பாட்டன் கொள்ளுப்பாட்டன்கள் முதற்கொண்டு ஆண்டாண்டு காலமாய், தலைமுறை தலைமுறையாய், இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்தவர்கள்தானே நம் முன்னோர்கள். இந்துக்களாக இருந்தவர்கள்தானே அவர்கள்?
அதனால்தான் அந்த இரத்த உறவுகளும் குடும்ப பாரம்பரியங்களும் நிலைத்தன, இன்னும் நிலைக்கின்றன. உங்கள் முன்னோர்கள்கூட மத நம்பிக்கையில் மாறுபட்டிருந்தாலும், வணக்க வழிபாட்டு முறைகளில் வேறுபட்டிருந்தாலும், கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் தமிழ் மண்ணோடு நீக்கமற நிறைந்து வேரூன்றியிருந்தனர்.
ஒவ்வொரு ஊரிலும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி ஞானிகளின் பாடல்களையும் அவர்களின் வாழ்க்கையும் படித்தால் உங்களுக்கே அது புரியும்.
இருபது, முப்பது ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் உங்கள் சமுதாயத்தில். அரேபியா என்ற மந்திர கதவு திறந்ததும் எண்ணை வளத்தில் புதுப்பொலிவு கண்ட அரேபியா நோக்கி படையெடுத்தீர்கள்.
இளம் சிறார்கள்கூட விடுமுறையில் வரும் அப்பா மாமா-க்களின் அத்தர் மணத்தில் மயங்கிப்போக, ஏற்கனவே படிப்பறிவில் பின்தங்கியிருந்த முஸ்லிம் சமுதாயம் மேலும் சரிந்துபோனது. பத்தாம் வகுப்பு பாஸாகும் முன்பே விசாக்கள் ரெடியாகிவிட, அரேபிய கனவானது அரசு வேலை முதற்கொண்டு அனைத்து துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தின் அடையாளத்தையும் பங்களிப்பையும் அற்றுப்போக வைத்துவிட்டது.
காவல்துறை முதல் கலக்டர் அலுவகங்கள் வரை, பஸ் கண்டக்டர்கள் முதல் ரயில்வே ஊழியர்கள் வரை, அரசு பணியில் இருக்கும் எத்தனை முஸ்லிம்களை உங்களுக்கு தெரியும்..?
இதில் வேதனை என்னவென்றால், சென்ற மூன்று தசாம்சங்களாகத்தான் தமிழகத்தில் அரசு உதவியோடு பல பின்தங்கிய சமூகங்கள் அதிகம் முன்னேற்றங்கள் கண்டன, அரசு பணிகளிலும், கல்வி எழுச்சியிலும், சமூக மேம்பாட்டுலும்.
இதை முற்றாக தொலைத்துவிட்ட முஸ்லிம் சமுதாயம், அதற்கு மாற்றாக கண்டடைந்தது என்ன.
அரேபியாவின் பணம் மட்டுமல்ல, அரபு கலாச்சாரமும், அங்கு வழக்கில் இருக்கும் வகாபிய சித்தாந்தமும் தான். அவை நம்முள் மெல்ல திணிக்கப்பட்டது. அதுவரை நம் மண் சார்ந்து வாழ்வியல் கண்ட தமிழ் முஸ்லிம்களிடையே கறுப்பு பர்தாக்கள் மிகப்பரலாக வலம்வர துவங்கிற்று.
அரேபியாவில் பணிபுரிந்த ஆண்கள், அங்குள்ள பெண்கள் அணியும் ஆடைகளுக்குள் இங்குள்ள தம் வீட்டு பெண்களை புகுத்திய போதிலும், தாமும் அரேபிய ஆண்களின் ஆடைகளை அணியவேண்டும் என்று எண்ணாமல் போனது நகைமுரணா..?
மாற்றம் ஆடையில் மட்டும் வெளிப்பட்டு விடவில்லை, சிந்தனையிலும் செயல்பாட்டிலும் கூடத்தான். அதுவரை “லகும் தீனுக்கும் வலியதீன்” என்ற குரான் வசனத்தின்படி “உங்கள் வழி உங்களுக்கு, எங்கள் வழி எங்களுக்கு” என்று அமைதியாக வாழ்ந்திருந்த முஸ்லிம்கள், தம் வழியில் இருந்து சற்றே பிறழத்துவங்கினர்.
ஆரம்பத்தில் உங்கள் மதத்துக்கு உள்ளேயே இருந்த பாரம்பரிய (வகாபி அல்லாத) முஸ்லிம்களை முஷ்ரிக்குகள் (இறைவனுக்கு இணை கற்பிப்பவர்கள்) என்று பட்டம் சூட்டுவதில்தானே அனைத்தும் துவங்கியது..?
சூபி ஞானிகளைக் கூட அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் படுகேவலமாக விமர்சிக்கப்பட்டார்கள். அது சார்ந்த துண்டு பிரசுரங்கள் சகட்டு மேனிக்கு ஊரெங்கும் வினியோகிக்கப்பட்டன.
இந்த பிரச்சாரம், அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் இருகூறுகளாக அல்லவா பிரித்தது. இரண்டு மையவாடி, இரண்டு ஜமாத், இரண்டு பள்ளிவாசல் என்று உங்களுக்குள்ளேயே பிரிவுகள் தோன்ற… ஒன்றாக இருந்த பல ஊர்களும் இரண்டுபட்டன.
கூத்தாடிக்கு கொண்டாட்டமாக முடிந்த இந்த இரண்டு படுதலுக்கு அச்சாரம் போட்டதும் இதே முஸ்லிம் சமுதாயம்தான். மக்களை கவரும் பல பேச்சாளர்கள் இந்த குழுக்களில் உருவாக, எதிர்ப்பின் எல்லை இஸ்லாத்துக்கு வெளியேயும் நீண்டது.
பிற மத கடவுளரும், கடவுள் கொள்கையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கப்பட்டது. கடவுள் கொள்கை ஆய்வு, ஒப்பீடு என்ற பெயரில் இந்து மற்றும் பிற மத கடவுளர் மிகவும் தரக்குறைவாய் விமர்சிக்கப்பட்டனர்.
விவாத்துக்கு அழைக்கிறோம் என்ற போர்வையில் “தில் இருந்தால் வாருங்கள்” என்ற வகையில் ஊருக்கு ஊர் அறைகூவல் விடப்பட்டது. “நீங்கள் பிறர் வணங்கும் கடவுளரை விமர்சிக்காதீர்கள்” என்று குரான் மிகத்தெளிவாக சொல்லியிருக்க, அதையே தொழிலாகக்கொண்டு களமிறங்கியது உங்களில் ஒரு கூட்டம்.
இதன் விளைவாய் பிற மதத்தினர் மத்தியில் ஒரு வெறுப்பு கலந்த அன்னியத்தை நீங்களே விதைத்தீர்கள். குருட்டுத்தனமான வறட்டு விவாதத்தால் வெறுப்பன்றி அன்பா விளையும்..?
இப்படி நீங்கள் அமைத்துக்கொடுத்த இந்த தளத்தை அடிப்படையாக கொண்டுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள் நேர்த்தியாய் திட்டமிட்டு களம் இறங்கின. “பார்த்தீர்களா.. பொது இடத்தில்கூட மேடை போட்டு இந்த துலுக்கர்கள் நாம் காலம் காலமாய் வணங்கும் கடவுளரை எப்படி அசிங்கப்படுத்துகிறார்கள்” என்று பரப்புரை செய்தனர்.
இந்து கடவுளரை ஒப்பீட்டாய்வு செய்கிறோம் என்ற பெயரில் நீங்கள் வெளியிட்ட கொச்சைப்படுத்தும் காணொளிகளை, புத்தகங்களை, பிரசுரங்களை காட்டி, தம் இருப்பை பலமாக ஸ்தாபித்துக்கொண்டனர்.
முப்பது வருடங்களுக்கு முன் மதக்கலவரமே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பாலான இந்துக்களே உங்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் மிதவாத இந்துக்களுக்கு அஞ்சியே இந்துத்துவா அமைப்புகள் அடக்கி வாசித்தன.
இன்றோ, மிதவாதிகளில் பலரும்கூட கண்டும் காணாமல் ஒதுங்கி போகும் நிலைதானே நிலவுகிறது.எனக்கு மிகவும் நெருக்கமான சில இந்து, கிருஸ்தவ நண்பர்களே இது போன்ற பேச்சுக்கள் மற்றும் காணொளிகளை என்னிடம் பலமுறை காண்பித்து வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
சில தனி நபர்கள், தம்மை பேச்சாளர்களாகவும் தலைவர்களாகவும் உயற்திக்கொள்ள, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையே ஒரு மிகப்பெரும் இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
திக போன்ற நாத்திக அமைப்புகள் மத கொள்கைகளை விமர்சிப்பது வேறு, ஒரு மதம் சார்ந்த அமைப்பு பிறர் மத கடவுள் கொள்கைகளை விமர்சிப்பது என்பது வேறு.
ஒரு மதத்தை பின்பற்றிக்கொண்டே, கடவுள் நம்பிக்கை சுமந்துகொண்டே, பிற மதங்களை, பிறர் கடவுளரை விமர்சிப்பது அறிவுடைமை ஆகுமா..? “உங்கள் கடவுள் நம்பிக்கை உங்களுக்கு, அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு” என்ற இஸ்லாத்தின் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் போனதால் ஏற்பட்ட விளைவுதான் இது.
யானை பலம்கொண்ட அரசியல் கட்சிகளாலேயே மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயம், இன்று சாதாரண லெட்டர்பேட் கட்சிகளால்கூட நக்கலடிக்கப்பட்டு உதாசீனம் செய்யப்படும் நிலையில் இருக்கிறது.
இது ஒன்றும் எதேச்சை நிகழ்வல்ல, நீங்களே உங்கள் கரங்களால் எழுதிக்கொண்ட விதி..!
தம்முடைய ஒற்றுமையின்மையாலும், தொலைநோக்கு பார்வை இல்லாததாலும், சயநலம் வேரூன்றிப்போன தலைவர்களாலும், முஸ்லிம்கள் தமக்குதாமே ஏற்படுத்திக்கொண்ட இழிநிலை..
இவ்வளவு நடந்த பிறகும்கூட சுயபரிசோதனை செய்து தன்னை திருத்திக்கொள்ள இந்த சமுதாயம் தவறினால்… குஜராத் மாடல் தேசமெங்கும் நடைபெறுவதை யாராலும் நிறுத்தமுடியாது. “அதெல்லாம் அல்லா பார்த்துக்கொள்வான்” என்று உங்களில் பலர் நம்புவது போன்றுதான் அன்று அந்த குஜராத் முஸ்லிம்களும் நம்பி இருந்தனர் என்பதை மறந்துவிடாதீர்கள். நான் உங்கள் நம்பிக்கையை குறை சொல்லவில்லை, அது இந்த கட்டுரையின் நோக்கமும் அல்ல. உங்கள் செயல்பாடுகளைத்தான் விமர்சிக்கிறேன்.
ஒருவேளை அப்படியானதொரு பயங்ரவாத சூழல் ஏற்பட நேர்ந்தால், அப்போதும் உங்களுக்கு ஆதவுக்கரம் நீட்ட வருவது, நீங்கள் வெறுக்கும் நாத்திகர்களும், நீங்கள் ஒதுக்கும் இடதுசாரிகளும், வகாபிகள் நக்கலடிக்கும் மிதவாத இந்து சொந்தங்களுமாகத்தான் இருப்பர்.
இஸ்லாம் உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் தமிழ் உங்கள் பண்பாட்டு, கலாச்சார அடையாளம் என்பதை மறக்காதீர்கள்.
அரபு கலாச்சாரம் வேறு, இஸ்லாமிய நம்பிக்கை வேறு என்பதை புரிந்துகொள்ளுங்கள்..!
தோழமையுடன்,
Dr. Fazil Freeman Ali, PhD
http://www.tamizhvalai.com/archives/25579
No comments:
Post a Comment