தனியான
காகமொன்று எங்கோ தொலைவில் கரைந்து கொண்டிருக்கும் சத்தம் வெகு சன்னமாகக்
கேட்டுக் கொண்டிருந்தது. ஆளரவமற்ற வெட்ட வெளியில் வெற்றுடம்போடு ஒடுங்கிப்
படுத்துக் கொண்டிருந்தவரின் காதுகளில் அந்த மெல்லிய ஓலம் சலனத்தை
ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கரைதல் ஒலி மெல்ல மெல்ல அண்மித்தபடி இருந்தது.
ஒன்று இரண்டாகியது; இரண்டு பலவாகியது. காகங்கள் கூட்டம் கூட்டமாய் கூடிக்
கரைந்து அவரை நெருங்கிக்கொண்டிருந்தன. பெருத்த ஓலம். அந்தக் காட்டுக்
கூச்சல் அவரை நெருங்கி வர வர, அவருடைய உடல் சம்மட்டியால் பிளக்கப்படுவதைப்
போல் துடிதுடித்தது. அந்த வேதனையை உடல் அனுபவித்தபோதிலும் அது வலியாக
இல்லை. இம்சையாகவே இருந்தது. அவருடைய உடலில் இருந்து எவ்வித எதிர்வினையும்
வெளிப்படவில்லை; அல்லது அது காட்டிய எதிர்வினையேதும் வெளித் தெரியவில்லை.
அவருடைய உடலைச் சூழ்ந்து நின்றும், வட்டமடித்தும், குறுக்கும் மறுக்குமாகத்
திரிந்தும் கூப்பாடு போட்டன எண்ணற்ற காகங்கள். பெரும் இரைச்சல்.
ஆர்ப்பரிக்கும் இரைச்சல். திடீரென ஒரு காகம் அவருடைய உடலைக் கொத்தியது.
பின் ஒவ்வொன்றாய்... கூட்டம் கூட்டமாய் கொத்திக் குதறின. அது சகிக்க
முடியாததாக இருந்தாலும் வலி ஏதுமில்லை. அவை கொத்திப் பிடுங்கியதில்
உடலெங்கும் ரத்தம் கசியத் தொடங்கியது. கசிந்து பெருகியது.
பெரும் அசூயையில் சலனமற்றுக் கிடந்தது
உடல். அவற்றை விரட்ட அவர் எடுத்த பிரயத்தனங்கள் எதுவும் செயல்படவில்லை.
கைகளை ஆட்டியும், உஷ், உஷ் என சத்தமிட்டும் பார்த்தார். கைகள் அசையவில்லை,
குரல் வெளிப்படவில்லை. அவர் உடல் இறந்து கிடப்பதால்தான் இப்படியெல்லாம்
நடக்கிறதென்று எண்ணிக்கொண்டார். தான் உயிருடன் இருப்பதாகக்
காட்டிக்கொண்டால், எழுந்து உட்கார்ந்தமர்ந்து விட்டால், அவை பறந்து விடும்
என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. பெரும் சிரமமெடுத்து எழுந்து
உட்கார்ந்தார்.
ஒரு சிறிய அழுக்கடைந்த அறையின் ஒரு மூலையில் கிடந்த நைந்திருந்த பாயில் அவர் எழுந்து உட்கார்ந்திருந்தார். நெஞ்சைப் பிளந்து வெளிப்பட்டது போன்ற கடுமையான இருமலுடன் சளியைக் காறி, பக்கத்தில் மண் நிரப்பப்பட்டிருந்த கொட்டாங்குச்சியில் துப்பினார். கெட்ட வாடையடித்தது சளி. வாயைக் கழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் எழுந்து செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சுற்றிலும் காலியான சார்மினார் சிகரெட் பாக்கெட்டுகள் குவிந்தும் சிதறியும் கிடந்தன.
ஒரு சிறிய அழுக்கடைந்த அறையின் ஒரு மூலையில் கிடந்த நைந்திருந்த பாயில் அவர் எழுந்து உட்கார்ந்திருந்தார். நெஞ்சைப் பிளந்து வெளிப்பட்டது போன்ற கடுமையான இருமலுடன் சளியைக் காறி, பக்கத்தில் மண் நிரப்பப்பட்டிருந்த கொட்டாங்குச்சியில் துப்பினார். கெட்ட வாடையடித்தது சளி. வாயைக் கழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் எழுந்து செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சுற்றிலும் காலியான சார்மினார் சிகரெட் பாக்கெட்டுகள் குவிந்தும் சிதறியும் கிடந்தன.
அழுக்கடைந்த தலையணையோரம் கிடந்த சிகரெட்
பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை வெளியில் எடுத்தார். ஜிப்பா
பாக்கெட்டிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை வெளியில் எடுத்துப் பக்கத்தில்
வைத்துக்கொண்டார். சிகரெட்டை லேசாகவும் பக்குவமாகவும் கசக்கி அதிலிருந்த
புகையிலையைக் கொட்டாங்குச்சியில் கொட்டினார். பொட்டலத்தைப் பிரித்து,
அதிலிருந்து கொஞ்சம் கஞ்சாவை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு,
மறுபடியும் அந்தச் சிறு பொட்டலத்தைக் கவனமாக மடித்து ஜிப்பா பாக்கெட்டில்
போட்டுக்கொண்டார். இடது உள்ளங்கையிலிருந்த கஞ்சாவிலிருந்து கழிவுகளை
நீக்கினார். பின் வலதுகைக் கட்டைவிரலால் அழுத்தித் தேய்த்துத் துகளாக்கி,
அதை சிகரெட் சுருளுக்குள் பாந்தமாய் நிரப்பினார். அதிகாலை பூஜைக்கான
ஆயத்தம் போல வெகு பவ்யமாகவும் சிரத்தையோடும் அக்காரியம் நடந்தேறியது. கஞ்சா
அடைத்த அந்த சிகரெட், கனகச்சிதமாக அசல் சிகரெட் போல, உப்பலோ மெலிவோ இன்றி
அச்சு அசலாக அப்படியே இருந்தது. பல்லாண்டு கால செய்நேர்த்தி, அதை அவர் பற்ற
வைத்தபோது, நெஞ்சைக்கீறிக்கொண்டு இருமல் வெளிக்கிளம்பியது. இடது கையால்
நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டார். இருமல் தணிந்ததும் ஆசுவாசமாகப்
புகையை இழுக்கத் தொடங்கினார். வற்றி ஒடுங்கிய உடலுக்குள் புகை பரவத்
தொடங்கியதும் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றது போல் அவர் முகம்
மலர்ந்தது. உடம்பில் தெம்பேறுவது போல் உணர்ந்தார். அவர்மீது வாஞ்சையோடு
இருக்கும் இரு இளைஞர்களும் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரைக் கூட்டிக்கொண்டு
போக வந்துவிடுவார்கள். அதற்குள் தயாராகிவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டார்.
தயாராக என்ன இருக்கிறது. முகத்தைக் கழுவி வேறு உடுப்பு மாற்ற வேண்டும்.
அவ்வளவுதான்.
அவருடைய இந்த முடிவு அவருக்கே கொஞ்சம்
ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே இப்போதைக்கு இந்த
ஒரு மார்க்கம்தான் ஒரே வழி என்ற எண்ணம் அவருக்கு நிச்சயமாகிவிட்டிருந்தது.
உடல் இனியும் தாங்காது என்பது தெளிவாகவும், விடை பெறும் தருணம் வந்து
விட்டதென்பது சூட்சுமமாகவும் அவருக்குத் தெரிந்துவிட்டிருந்தது. இப்போது
ஆஸ்பத்திரிக்குப் போவதன் மூலம் உடலொன்றும் சீரடைந்துவிடப் போவதில்லை.
ஆனாலும் ஏதாவது ஒரு முயற்சி எடுத்துத்தானே ஆக வேண்டும். குறைந்தபட்சம்
எங்காவது ஒரு கூட்டத்துக்குள் முடங்கிக் கொண்டுவிட வேண்டுமென்று இருந்தது.
அரசு பொது மருத்துவமனைதான் இப்போதைக்குத் தோதான இடமும். சிகிச்சை,
பராமரிப்பு, கூடவே கும்பல். மிகத் தோதான இடமென்பதில் சந்தேகமில்லை.
தாக்குப் பிடிக்க முடியாவிட்டால் அதிலிருந்து வெளியேறியும் விடலாம்.
எந்தவொரு கட்டுப்பாட்டு அரணுக்குள்ளிருந்தும் வெளியேற அவரிடம் அநேக
உபாயங்கள் எப்போதுமிருந்தன. படுக்கையில் இருந்தபடியே ஒரு சிகரெட்
பற்றவைத்தால் போதும். வெளியில் அனுப்பிவிடுவார்கள். இப்போதைக்கு அங்கு
போய்ச் சேர்ந்துவிடவேண்டும். அவ்வளவுதான்.
சிகரெட்டை அணைத்துவிட்டு வெளியில் வந்தார்.
வெளிவராந்தாவின் கடைசி மூலையில் இருந்த பாத்ரூம் நோக்கிச் சென்றார். அந்த
அறையில் அப்போது அவர் மட்டுமே இருந்தார்.
இதுவும் அவருடைய இடமில்லை. அவருக்கென்று ஒரு
இடம் இல்லாமலாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஊரின் இரண்டு இடுக்குகள்
கூட அவருக்கு அத்துபடி என்பதால் எங்காவது படுத்துக்கொண்டுவிடுவார். இந்த
இடம், ஒரு பெரிய அலுவலகத்தின் காவலாளி அறை. அதன் உரிமையாளர் இவருடைய
முன்னாள் மாணவர். சில நாட்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தபோது அவர் செய்த
உதவி இது. முன்புபோல நடந்து திரியவோ, அங்கும் இங்குமாகப் படுத்துக்கொள்ளவோ
இயலாதபடி உடல் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தது. அதனால் ஏதாவது ஏற்பாடு
செய்யும்படி கேட்டுக்கொண்டதால், காவலாளி அறையில் ஒண்டிக்கொள்ள இடம்
கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்குப் போன வாட்ச்மேன்
இன்னும் திரும்பவில்லை, ஒருவேளை, இப்போது தான்தான் இங்கு வாட்ச்மேனோ என்று
நினைத்துக்கொண்டார், சம்பளமில்லாத வாட்ச்மேன் என்று எண்ணி
சிரித்துக்கொண்டார். ஒவ்வொரு எட்டாய் எடுத்து வைத்து நடப்பதும் மிகவும்
சிரமமாகத்தான் இருந்தது. எதற்கு இந்தப் பாடு என்று எண்ணிக்கொண்டார். ஒரு
வழியாக, பாத்ரூம் சென்று, ஜிப்பா கையிரண்டையும் மேலே இழுத்து
விட்டுக்கொண்டு வாளியில் இருந்த தண்ணீரில் முகம் கழுவி வாய் கொப்பளித்தார்.
இரண்டு மூன்று முறை நன்றாகக் கொப்பளித்துத் துப்பினார். கைகளில்
அப்பிக்கிடந்த சொறி சிரங்கைப் பார்த்ததும், 'காகங்கள் கொத்திய புண்கள்'
என்று சொல்லிக்கொண்டார். அந்த தொடர் மனதில் உருவானபோது, தன்னை விழித்தெழச்
செய்த அசூயையான அந்த அதிகாலைக் கனவு மங்கலாக நினைவுக்கு வந்தது. அது கனவுக்
காட்சியா, மனம் உருவாக்கிய பிம்பமா என்பதும் தெளிவில்லாமல் இருந்தது.
இப்போதெல்லாம் மனம் விரிக்கும் காட்சிகள் கனவின் புதிரோடுதான் இருப்பதாக
எண்ணிக்கொண்டார், எல்லாமே குழம்பிப்போய் விட்டதாகத் தோன்றியது.
மீண்டும் அறைக்குத் திரும்பினார். நடப்பது போல்
அல்ல, ஊர்வது போல் இருந்தது. அறைக்கு வந்து சலவை செய்த வேட்டி ஜிப்பாவை
எடுத்து மாட்டிக்கொண்டார். கொஞ்சம் பழுப்பேறியிருந்தது என்றாலும் சலவை
செய்தது. பழைய ஜிப்பாவிலிருந்து கஞ்சா பொட்டலத்தை எடுத்து, இந்த ஜிப்பா
பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும்
எடுத்துக்கொண்டார். ஜிப்பா பாக்கெட் விளிம்பு கிழிந்திருப்பதை அப்போதுதான்
கவனித்தார். இதைத் தவிர நல்ல உடுப்பேதும் இப்போது அவரிடமில்லை. மெல்ல
நடந்து அக்கட்டிடத்தின் பிரதான வாசலுக்கு வந்தார். நன்றாக விடிந்து
போக்குவரத்தும் ஜன நடமாட்டமும் தொடங்கிவிட்டிருந்தது. வாசலில் நின்று தெரு
பார்த்தபடி, ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார். திடீரென, இன்று என்ன தேதி,
கிழமை என்று நினைத்துப் பார்த்தார். அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று விட்டுவிட்டார்.
ஒரு ஸ்கூட்டர் அவர் முன்னால் வந்து நின்றது.
அவர் தயாராக நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க, ஓட்டி வந்த சிவராமனுக்கும்
பின்னால் இருந்த மோகன கிருஷ்ணனுக்கும் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
'என்ன ஆச்சரியமா இருக்கா?' என்று லேசான புன்னகையுடன் அவர்களைப பார்த்துக் கேட்டார் ராஜன்.
'நம்பவே முடியலை' என்றான் கிருஷ்ணன் சிரித்தபடி.
'சரி, எப்படி போறோம்' என்றார் ராஜன்.
'இருங்க, ரிக் ஷா கூட்டிட்டு வர்றேன். நீங்க அதுல வந்திருங்க. நாங்க ஸ்கூட்டர்ல போயிடுவோம்' என்றான் ராமன்.
சரி என்பது போலத் தலையசைத்தபடி, 'பின்னால பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ரிக் ஷா நிக்கும்' என்றார்,
தலையாட்டியபடியே கிளம்பிச் சென்றான்
ராமன். ஸ்கூட்டரிலிருந்து இறங்கி அவருக்கருகே நின்றிருந்த கிருஷ்ணன், ஒரு
சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, 'நல்லா தூங்கினீங்களா?' என்று கேட்டான்,
காதில் விழாதவர் போல அவர், 'நேத்து போட்டுக் கொடுத்த சிகரெட் எப்படி இருந்துச்சு... ஏதாவது வேலை பண்ணுச்சா?' என்று கேட்டார்.
'ஒண்ணுமே இல்லை... ஏமாத்திட்டீங்க...' என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் கிருஷ்ணன்.
பதிலேதும் சொல்லாமல் அவர் சிரித்துக்கொண்டார்.
இன்று காலை மருத்துவமனை போகவிருப்பதைத் தெரிவிப்பதற்காக நேற்று இரவு அவரைப் பார்க்க சிவராமனும், கிருஷ்ணனும் சென்றிருந்தார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் ராஜன், கஞ்சா போட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டபோது, 'எனக்கு ஒண்ணு போட்டுக் கொடுங்களேன்... குடிச்சுப் பாக்கிறேன்' என்றான் கிருஷ்ணன்.
காதில் விழாதவர் போல அவர், 'நேத்து போட்டுக் கொடுத்த சிகரெட் எப்படி இருந்துச்சு... ஏதாவது வேலை பண்ணுச்சா?' என்று கேட்டார்.
'ஒண்ணுமே இல்லை... ஏமாத்திட்டீங்க...' என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் கிருஷ்ணன்.
பதிலேதும் சொல்லாமல் அவர் சிரித்துக்கொண்டார்.
இன்று காலை மருத்துவமனை போகவிருப்பதைத் தெரிவிப்பதற்காக நேற்று இரவு அவரைப் பார்க்க சிவராமனும், கிருஷ்ணனும் சென்றிருந்தார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் ராஜன், கஞ்சா போட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டபோது, 'எனக்கு ஒண்ணு போட்டுக் கொடுங்களேன்... குடிச்சுப் பாக்கிறேன்' என்றான் கிருஷ்ணன்.
'இதுக்க முன்னாடி அடிச்சிருக்கியா' என்று கேட்டார் ராஜன்.
ம்ஹூம் என்று தலையசைத்தான் கிருஷ்ணன்.
'சரி, ஷேஃப் டோஸ் போட்டுத் தர்றேன்' என்று கூறி சிகரெட்டிலிருந்த புகையிலையோடு கொஞ்சம் கஞ்சாவும் கலந்து போட்டுக் கொடுத்தார்,
கிருஷ்ணனுக்கு ஆசையாகவும் இருந்தது;
தயக்கமாகவும் இருந்தது. பதற்றத்துடன் அதை வாங்கிப் பற்றவைத்து, அவர்
இழுக்கும் பாணியிலேயே இழுத்தான். நடக்கப் போகும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தபடி
பரபரப்புடன் அதைச் சுண்டச் சுண்ட இழுத்து முடித்தான். முடித்த கையோடு
அவரிடமிருந்து விடை பெற்று சிவராமனும், கிருஷ்ணனும் கிளம்பிவிட்டார்கள்.
வீட்டுக்கு போன பின்பு கூட, ஏதோ நடந்துவிடும் என்று மிகுந்த கவனத்துடனேயே
இருந்தான் கிருஷ்ணன். எதுவுமே நிகழவில்லை. ஒருவகையில் ஏமாற்றமாக
இருந்தாலும் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
சிவராமனின் ஸ்கூட்டர் வந்து நின்றது.
பின்னாலேயே ஒரு ரிக் ஷாவும் வந்தது. சிவராமன் ரிக் ஷாக்காரரிடம், 'சாரை
ஏத்திக்கங்க. கேட் கிட்ட நாங்க வெயிட் பண்றோம். வந்திடுங்க' என்றான்.
'சாமிய நல்லாத் தெரியுமே... ஏறிக்கங்க சாமி' என்றார் ரிக் ஷாக்காரர்.
ஏற சிரமப்பட்டார். இருவரும் சேர்ந்து கைத்தாங்கலாக ஏற்றிவிட்டார்கள், ரிக் ஷா கிளம்பியது.
'ஒரு சிகரெட் அடிச்சுட்டுக் கிளம்பலாம்' என்றபடி ராமன், கிருஷ்ணனிடம் ஒரு சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான்.
ரி்க் ஷாவை ஓட்டியபடியே ரிக் ஷாக்காரர் பேச்சு கொடுத்தார். 'சாமி என்னத் தெரியுதுங்களா...?'
'தெரியாம என்னப்பா... மாணிக்கம்தானே நீ...'
'இப்படி ஆயிட்டீங்களே சாமி... முன்னாடிலாம்
நீங்க நடந்து வந்தா, நாங்கள்லாம் அப்படியே மலைச்சுப் போயி பாப்பம்... சரி
சாமி, போனது போகட்டும். உடம்பை தேத்திட்டு வாங்க... எல்லாம் சரியாயிடும்.'
'எதுவுமே இனி சரியாகாது மாணிக்கம். என்னமோ அங்க போய் படுத்துக்கணும்னு தோணுது. போறேன். அவ்வளவுதான்.'
'அப்படிலாம் சொல்லாதீங்க சாமி. உங்களுக்குத் தெரியாததில்ல... பெரிய படிப்பெலாம் படிச்சவங்க நீங்க...?
ராஜன் லேசாக சிரித்துக்கொண்டார். 'ஒரு காலத்துல
என்னைப் பெரிய புத்திசாலினு நினைச்சிகிட்டு ரொம்ப கர்வத்தோடதான்
திரிஞ்சேன். ஆனா இப்பதான் புரியுது... இந்த ஊர்லயே நான்தான் பெரிய
மக்குனு... ஒரு சாமர்த்தியமும் இல்லாம வாழ்ந்திருக்கேன்ன இப்ப தெளிவா
தெரியுது...?''
'அப்படிலாம் பேசாதீங்க சாமி. திரும்ப ஜம்முனு வருவீங்க. நீங்க மனசு வச்சா போதும்... எல்லாம் சரியாயிடும்.'
'நான் என்ன மாணிக்கம் மனசு வைக்கிறது. அது என்ன
நினைக்குதோ அதுதான். இப்ப ஆஸ்பத்திரில போய் படுத்துக்கோனு சொல்லுது...
போய்க்கிட்டிருக்கேன், அவ்வளவு தான்... சரி நீ உன் பாதையிலே கவனமாப் போ...'
என்றபடி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.
இருவரும் மௌனமானார்கள். ரிக் ஷா ஆஸ்பத்திரியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நீண்ட கூடம் போலிருந்து அந்த வார்டின்
முதல் வரிசையில் அமைந்திருந்த கடைசிப் படுக்கையில் ராஜன் படுத்திருந்தார்.
டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அரைத் தூக்க நிலையில் அசதியோடு
படுத்திருப்பது போலிருந்தது. ஏழெட்டு வரிசைகளாக ஒவ்வொரு வரிசைக்கும் நான்கு
படுக்கைகள் வீதம் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட அந்தப்
பெரிய அறையின் ஏகதேசமான மத்தியில் இருந்த டாக்டர் மேசைக்குப் பக்கத்தில்
சிவராமனும் மோகன கிருஷ்ணனும் நின்றிருந்தார்கள். மேசையின் ஓர் ஓரத்தில் ஒரு
கால் மடித்தும் மறு காலைத் தொங்கவிட்டும் உட்கார்ந்திருந்தபடி இளம் வயது
டாக்டர் அவர்கள் இருவரோடும் பேசிக்கொண்டிருந்தார்.
'இன்னைக்கு எடுத்த டெஸ்ட்டுகளோட ரிசல்ட்ஸ்,
எக்ஸ்ரே எல்லாம் நாளை காலைல கிடைச்சிடும். அதுக்கப்புறம் அவருக்கு ஆக
வேண்டியதைச் செய்யலாம். இன்னைக்கு மட்டும் அவர் சாப்பிடறதுக்கு அவர்
விரும்பியதை வாங்கிக் கொடுங்க... ரொம்ப பலவீனமா இருக்காரு. அதனால்தான்
இப்போதைக்கு டிரிப்ஸ் ஏத்தியிருக்கு' என்றார் டாக்டர்.
'கொஞ்ச நாளாவே அவர் எதுவும் சாப்பிடுறதில்லை
டாக்டர்' என்றான் சிவராமன். 'சாப்பிட முடியறதில்லை. ஒரு லட்டு இல்லேனா ஒரு
ஜிலேபி. எப்பவாச்சும் கொஞ்சம் திரட்சை...
இதுதான் அவரோட ஒரு நாள் சாப்பாடு. மத்தபடி புகைதான் கஞ்சாதான்.'
'சரி, பார்க்கலாம்' என்றார் டாக்டர். 'இப்படி
ஒரு பெர்சனாலிட்டி ஏனிப்படி தன் வாழ்க்கைய தாறுமாறா ஆக்கி வச்சிருக்காரு...
மனித வாழ்க்கை ரொம்பவும் விசித்திரமானதுதான்.'
இருவரும் பதிலேதும் பேசவில்லை.
'ரோட்ல படுத்துக் கிடக்கிறது... மத்தவங்ககிட்ட காசுக்கு நிக்கறது... இதெல்லாம் அவருக்கு இழிவாத் தெரியலியா...?'
'இல்ல டாக்டர்... எனக்குத் தெரிஞ்சு, அவரைப்
பொறுத்தவரை இந்த வாழ்க்கையில எந்தவொன்னும் இழிந்ததில்லை. எந்தவொன்றையும்
அவர் உயர்வா நினைச்சதாவும் தெரியலை. எல்லாமே வாழ்க்கைதான். வாழ்க்கையின்
எண்ணற்ற கோலங்கள்... அவ்வளவுதான். வாழ்க்கை ஒன்றுதான் பெறுமதியானது. அதில்
எல்லாமும் இருந்து கொண்டுதான் இருக்கும். அவை எல்லாவற்றையும்
அறிந்துகொண்டுவிட வேண்டுமென்பதுதான் அவருடைய எண்ணமாகவும் செயலாகவும்
இருக்குது' என்று உணர்ச்சி வசப்பட்டவனாகப் பேசினான் கிருஷ்ணன்.
'பெரிய ரைட்டரா?' என்றார் டாக்டர்.
'சந்தேகமே இல்லாம...' என்றான் கிருஷ்ணன். ரொம்ப முக்கியமான ரைட்டர். அவரோட உலகமும் சரி, அதை அவர் கிரியேட் பண்ணியிருக்கிற விதமும் சரி, தமிழுக்கு ரொம்ப புதுசு, தமிழோட ஒரே 'Avant Garde' ரைட்டர் அவர்தான். ஆனா அவருக்குத் தன்னைப் பத்தி அப்படியான பெரிய நினைப்பெல்லாம் கிடையாது.
கிருஷ்ணன் உணர்ச்சி வசப்படுவது சிவராமனுக்கு சிறு சங்கடத்தை எற்படுத்தியது. ஆனால், சிவராமனின் நண்பரான அந்த இளம் டாக்டரிடம் ராஜனைப் பற்றி அறியும் ஆர்வம் மிகுந்திருப்பது தெரிந்தது.
'இப்படியான ஒரு பெர்சனாலிட்டியுடன் பழகக் கிடைக்கிறது பாக்கியம்தான். இன்னும் கொஞ்ச நாள் இங்கதான இருக்கப் போறார்... பாத்துக்கலாம்' என்றார் டாக்டர்.
'அப்படினா அவருக்கு ஒரு புது டோனர் கிடைச்ச மாதிரிதான் என்றான் சிவராமன்
டாக்டர் சிரித்தபடியே கிருஷ்ணனிடம் 'அவரோட ஒர்க்ஸ் இருந்தா தாங்க... படிச்சுப் பாக்கிறேன்' என்றார். ‘இல்ல, எங்க கிடைக்கும்னு சொல்லுங்க வாங்கிக்கிறேன்.’
'சந்தேகமே இல்லாம...' என்றான் கிருஷ்ணன். ரொம்ப முக்கியமான ரைட்டர். அவரோட உலகமும் சரி, அதை அவர் கிரியேட் பண்ணியிருக்கிற விதமும் சரி, தமிழுக்கு ரொம்ப புதுசு, தமிழோட ஒரே 'Avant Garde' ரைட்டர் அவர்தான். ஆனா அவருக்குத் தன்னைப் பத்தி அப்படியான பெரிய நினைப்பெல்லாம் கிடையாது.
கிருஷ்ணன் உணர்ச்சி வசப்படுவது சிவராமனுக்கு சிறு சங்கடத்தை எற்படுத்தியது. ஆனால், சிவராமனின் நண்பரான அந்த இளம் டாக்டரிடம் ராஜனைப் பற்றி அறியும் ஆர்வம் மிகுந்திருப்பது தெரிந்தது.
'இப்படியான ஒரு பெர்சனாலிட்டியுடன் பழகக் கிடைக்கிறது பாக்கியம்தான். இன்னும் கொஞ்ச நாள் இங்கதான இருக்கப் போறார்... பாத்துக்கலாம்' என்றார் டாக்டர்.
'அப்படினா அவருக்கு ஒரு புது டோனர் கிடைச்ச மாதிரிதான் என்றான் சிவராமன்
டாக்டர் சிரித்தபடியே கிருஷ்ணனிடம் 'அவரோட ஒர்க்ஸ் இருந்தா தாங்க... படிச்சுப் பாக்கிறேன்' என்றார். ‘இல்ல, எங்க கிடைக்கும்னு சொல்லுங்க வாங்கிக்கிறேன்.’
'மூணு புத்தகங்கள்தான் வந்திருக்கு... அதுவும்
அவர் நல்லா இருந்த காலத்துல அவரே போட்டது. எதுவும் முறையா
விநியோகிக்கப்படலை... அதனால இப்ப எங்க கிடைக்கும்னு தெரியலை. என்கிட்ட
இருக்கு... நாளைக்கு கொண்டு வந்து தர்றேன்' என்றான் கிருஷ்ணன்.
'தேங்க்ஸ்' என்றபடி டாக்டர், 'என்ன சிவராமன், ஆபீசுக்குப் போகலியா? லீவு போட்டாச்சா' என்று கேட்டார்.
'இல்ல டாக்டர், பெர்மிஷன் போட்டிருக்கேன். பையப் போய்க்கலாம்... ஒண்ணும் பிரச்சனையில்லை' என்றான் சிவராமன்.
'நல்ல வேலை சிவராமன் உங்களோடது. கொடுத்து வச்ச ஆளு. உங்க யூனியன் வேற ரொம்ப ஸ்ட்ராங் இல்லியா!' என்றார் டாக்டர்,
சிவராமன் சிரித்தபடி தலையாட்டினான். தொடர்ந்து,
'சரி டாக்டர், நாங்க அவரோட கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பறோம்...
சாயந்தரமா திரும்ப வர்றோம்' என்றான்.
'ஓகே, சிவராமன். சாயந்தரம் நான் இருக்கமாட்டேன். நாளை காலைல பாக்கலாம்' என்றபடி டாக்டர் அவர்களோடு கை குலுக்கினார்.
அவர்கள் இருவரும் ராஜன் படுத்திருக்கும்
படுக்கையை நோக்கிச் சென்றார்கள். டிரிப்ஸ் சொட்டுச் சொட்டாக இறங்கிக்
கொண்டிருந்தது. அவர் முகம் சற்று தெளிந்திருப்பது போல் கிருஷ்ணனுக்குத்
தோன்றியது. கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த ஸ்டூலில் கிருஷ்ணன் உட்கார்ந்து
கொண்டான். அடுத்த கட்டிலுக்குப் பக்கமிருந்த ஸ்டூலைக் கேட்டு வாங்கி, அவர்
தலைமாட்டுக்குப் பக்கத்தில் சிவராமன் உட்கார்ந்துகொண்டான்.
'என்ன சொல்றார் டாக்டர்' என்றார் ராஜன்.
'நாளை காலைல எல்லா ரிசல்ட்சும் வந்த பிறகு, பாத்துட்டு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்னார்' என்றான் சிவராமன்.
வார்டின் பின்புற வாசலையயாட்டி, உள்ளே
தயக்கத்துடன் எட்டிப் பார்த்தபடி, மொசுமொசுவென்று புஷ்டியாக இருந்த ஒரு
வெள்ளைப் பூனை 'மியாவ், மியாவ்' என்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது.
ராஜனுடைய கட்டில் பின்புற வாசலுக்குப் பக்கமாக இருந்ததால், கிருஷ்ணன்
அந்தப் பூனையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அது யாருடைய கவனத்தையோ
தன் பக்கம் திருப்புவதற்காக பிரயாசைப்படுவது போலிருந்தது. நான்கைந்து
கட்டிலுக்குப் பின்னாலிருந்து ஒரு நடுத்தர வயது அம்மா, ஒரு கையில்
டம்ளருடனும் மற்றொரு கையில் ரொட்டித் துண்டோடும் அதை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தார். அவர், அந்தப் பூனையை நெருங்க நெருங்க அதன் 'மியாவ்'
சத்தம் வேகமெடுத்தது. அந்த அம்மா புன்னகையோடு அதைக் கடந்து, வாசல் தாண்டி
ஓர் ஓரமாக இருந்த கிண்ணத்தில் டம்ளரிலிருந்த பாலை ஊற்றினார். அதன்
பக்கத்தில் ரொட்டியை சில துண்டுகளாகப் பிய்த்துப் போட்டார். பூனை திரும்பி
நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தது. பின், அவர் திரும்பி வாசல் கடந்து
சில எட்டுகள் எடுத்து வைக்கும்வரை தன் இடம் மாறாமல் நின்றிருந்த பூனை, அவர்
உள்ளே வந்ததும், கிண்ணத்தை நோக்கிச் சென்று பாலை நக்கிக் குடித்தது.
அந்த அம்மா கிருஷ்ணனைக் கடந்தபோது, நின்று
லேசான புன்முறுவலுடன், 'மொதவே ஊத்தி வைச்சுருக்கணும்பா. கொஞ்சம்
லேட்டாயிடுச்சு. அவர் உடம்ப க்ளீன் பண்றதுக்குள்ள பெரும் பாடாயிருச்சு.
எல்லாக் காரியத்தையும் அந்தந்த நேரத்துல செய்ய முடியுதா என்ன... கொஞ்சம்
லேட்டானதுக்கு என்ன கூப்பாடு போடுது, பாருப்பா' என்றபடி கடந்து சென்றார்.
கிருஷ்ணன் திகைத்துப் போய் எதுவும் சொல்லத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தான்.
அவன் எதேச்சையாகப் பூனையைக் கவனித்தபோது, அது குடிப்பதை நிறுத்திவிட்டு
ஒளிரும் பசும்மஞ்சள் கண்களால் அவனை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
'என்ன போகலாமா?' என்று கேட்டான் சிவராமன். 'போயிட்டு சாயந்தரமா வரலாம். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்.'
'சரி' என்று எழுந்து கொண்ட கிருஷ்ணன், 'கஞ்சா
எதுவும் வச்சிருக்கீங்களா... நீங்க பாட்டுக்கு ஸ்மோக் பண்ணி வைக்காதீங்க,
வெளில அனுப்பும்படி ஆயிடும். தயவுசெஞ்சு, கொஞ்ச நாளைக்கு, இங்க இருக்கற
வரைக்கும் அதைத் தொட வேண்டாம்' என்றான்.
'இருக்கு... தேவைப்பட்டா ரகசியமா டாய்லட்டுல போய் போட்டுக்கறேன்' என்றார்.
'கொடுங்க. நான் சாயந்தரமா போட்டுட்டு வந்து தர்றேன். நைட் டாய்லெட் போய் யூஸ் பண்ணீக்கங்க' என்றான்.
சரி என்பது போலத் தலையாட்டியபடி, வலது கையால்,
வலதுகைப் பக்கமிருந்த ஜிப்பா பாக்கெட்டிலிருந்து சிகரெட் டப்பாவையும் சிறு
பொட்டலத்தையும் எடுத்துக் கொடுத்தார்.
எதையும் ஏற்றுக்கொள்ளவும், யாருக்கும் சிரமம்
தராமல் அனுசரணையாக இருக்கவும் அவர் தீர்மானம் எடுத்துக்கொண்டு விட்டது
போலிருந்தது அந்தச் செய்கை.
அவர் ஆஸ்பத்திரியில் இருக்கப் போகும் இந்த
நாட்களில் அவருக்குத் தேவைப்படும் பொருட்களென என்னவெல்லாம் வாங்க வேண்டும்
என்ற அவர்கள் இருவரும் பேசிக் கொண்டபடியே சென்றார்கள். தட்டு, டம்ளர்,
ப்ளாஸ்க், இரண்டு ஜோடி வேஷ்டி ஜிப்பா, துண்டு, அவரைத் தொடர்ந்து பராமரிக்க
ஒரு அட்டெண்டர் ஏற்பாடு செய்வது பற்றியும் சிவராமன் யோசித்தான்.
மாலையில் மீண்டும் அவரைப் பார்க்க சிவராமனும்
மோகனகிருஷ்ணனும் மருத்துவமனை சென்றார்கள். எல்லா நோயாளிகளின் படுக்கைகளைச்
சுற்றிலும் உற்றார், உறவினர், நண்பர்களெனப் பலர் இருந்து
கொண்டிருந்தார்கள். ஏதேதோ கொடுத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், மௌனமாகவும்
ஆறுதலாகவும் இருந்து கொண்டிருந்தார்கள். கலகலப்பு, கலக்கம், கவலை,
மகிழ்ச்சி, வேதனை, கண்ணீர், நம்பிக்கை, ஆறுதல், பராமரிப்பு என மனித மனங்கள்
நெகிழ்ந்து கொண்டிருந்தன. ராஜன் மட்டும் தனியாக இருந்தார். கட்டிலின்மீது
கால் நீட்டி சாய்ந்து உட்கார்ந்திருந்தபடி அவர் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தார். மிகவும் அமைதியாக இருப்பது போலிருந்தது அவர் தோற்றம்.
அவர்கள் இருவரும் அவர் பக்கத்தில் சென்றதும் புன்னகைத்தார்.
'எப்படி இருந்தது. நல்லா ரெஸ்ட் எடுத்திங்களா?' என்று கேட்டான் சிவராமன்.
'டிரிப்ஸ் ஏத்தினது கொஞ்சம் தெம்பாதான்
இருக்கு' என்றார் ராஜன். 'கூட்டத்தோடு இருக்கறதும் நல்லாதான் இருக்கு'
என்றவர், கிருஷ்ணனைப் பார்த்து, 'போட்டுக் கொண்டாந்திருக்கியா' என்று
கேட்டார்.
'இல்ல... டிரை பண்ணிப் பாத்தேன்... போட வரலை.
நைட் நீங்களே, கண்டிப்பா வேணும்னா டாய்லட்டுல போய் போட்டுக்கங்க' என்றபடி,
சிகரெட் பாக்கெட்டையும் சிறு பொட்டலத்தையும் உள்ளங்கைக்குள் பொத்தி ரகசியம்
போலக் கொடுத்தான் கிருஷ்ணன். அவர் அதை சாதாரணமாக வாங்கி ஜிப்பா
பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.
நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இரண்டு ஸ்டூலை எடுத்துக் கட்டிலின் இரு புறமுமாகப் போட்டுக்கொண்டு சிவராமனும் கிருஷ்ணனும் உட்கார்ந்துகொண்டார்கள்.
'ஏதாவது சாப்பிடறீங்களா? வாங்கிட்டு வரவா' என்று கேட்டான் சிவராமன்.
'இப்ப ஏதுவும் வேண்டாம்... டிரிப்ஸ் ஏத்தினதில வயிறு நிறைஞ்சு இருக்குற மாதிரி இருக்கு. நாளைக்கு வரும்போது கொஞ்சம் கிரேப்ஸ் வாங்கிட்டு வா... போதும்' என்றார்.
நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இரண்டு ஸ்டூலை எடுத்துக் கட்டிலின் இரு புறமுமாகப் போட்டுக்கொண்டு சிவராமனும் கிருஷ்ணனும் உட்கார்ந்துகொண்டார்கள்.
'ஏதாவது சாப்பிடறீங்களா? வாங்கிட்டு வரவா' என்று கேட்டான் சிவராமன்.
'இப்ப ஏதுவும் வேண்டாம்... டிரிப்ஸ் ஏத்தினதில வயிறு நிறைஞ்சு இருக்குற மாதிரி இருக்கு. நாளைக்கு வரும்போது கொஞ்சம் கிரேப்ஸ் வாங்கிட்டு வா... போதும்' என்றார்.
'இங்க இருக்கும்போது ஏதோ நம்பிக்கை சுரக்கிற
மாதிரி இருக்கு... ஆனா நீங்க எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை
இழந்துவிட்டிருக்கிறீர்கள்' என்றான் கிருஷ்ணன்.
ராஜன் லேசாக சிரித்தார். 'வாஸ்த்வம்தான். நான்
எந்தவொன்றின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. புதிதான ஏதோ ஒரு
நம்பிக்கைக்கும் என்னிடம் இடம் இருப்பதாகத் தெரியவில்லை' என்று
ஆங்கிலத்தில் சொன்னார். எது பற்றியாவது அவர் தீவிரமாகப் பேசத்
தொடங்கும்போது, அதன் எடுப்பு பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கும்.
தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பேசத் தொடங்கினார்.
'நம்பிக்கை' என அழுத்தமாக உச்சரித்தவர்,
தொடர்ந்து, 'நம்பிக்கை என்பது தன்னளவில் போற்றுவதற்குரிய ஒன்றல்ல' என்றார்.
'மனித இன வரலாற்றில் நம்பிக்கையின் பேரால் நடந்திருக்கும் படுகொலைகள்,
வேறெந்த வகை மரணத்தை வடிவும் அதிகம். மத நம்பிக்கையின் பேரில் நடந்து
கொண்டிருக்கும் இஸ்ரேல் - அரபு நாடுகளுக்கிடையேயான யுத்தங்கள் பற்றி
உங்களுக்குத் தெரியும்தானே. யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என
மும்மதத்து மக்களும் பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கையில் சிக்குண்டு
மடிந்துகொண்டே இருக்கிறார்கள்'. அவர் குரலில் துயரம் தோய்ந்திருந்தது.
தொடர்ந்து பேசினார்.
'மோசஸ் ஏசு, முகம்மது போன்ற இறைத்தூதர்களிடம்
வெளிப்பட்ட ஞானத் தெறிப்புகளிலிருந்துதான் மதங்கள் உருவாகின. ஜெருசலேம்
இம்மூன்று மதங்களின் புனித பூமியாக இருந்து கொண்டிருக்கிறது. இறுதித்
தீர்ப்பு நாளுக்கான நிகழ்விடமாகவும் அது புனைவு பெற்றிருக்கிறது. வாழ்வை
அல்ல, மரணத்தை நினைவூட்டியபடி சலனம் கொள்ளும் நகரம் அது. இறுதித் தீர்ப்பு
நாளை முன்னிறுத்தி இயங்கும் நகரம். அதைக் கைப்பற்றி தனது சொந்தமாக்கிக்
கொள்ள மதங்கள் மேற்கொள்ளும் வெறியாட்டத்தில் ஜெருசலேம் காலம் காலமாக ஒரு
படுகொலைக் களமாக இருந்துவருகிறது. யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய அடிப்படைவாதம்
நம் காலத்தில் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. நம் கால உலக அரங்கில் 'இறுதித்
தீர்ப்பு நாள்' என்பது அசுர பலமும் வேகமும் பெற்றுள்ளது, லேசாக மூச்சு
வாங்கி, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசினார்.
'ஜெருசலேமைக் கைப்பற்ற நடக்கும் படுகொலைகள்,
யுத்தங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள், முற்றுகைகள், பேரழிவுகள் என இடையறாது
நடக்கும் போராட்டங்கள் அந்த நகரைத் தொடர்ந்து யுத்த களமாக வைத்துள்ளன,
மதங்களின் கொலைக்களமாகவும் எலும்புக் கிடங்காகவும் அந்நகரம் இருந்து
கொண்டிருக்கிறது'.
அவருக்கு இருமல் வந்தது. கடுமையான இருமல். ஒரு கையால் நெஞ்சையும் மறுகையால் வயிற்றையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு இருமினார்.
'சரி, கொஞ்சம் அமைதியா இருங்க' என்றான் சிவராமன்.
அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
கொஞ்சம் தண்ணீர் குடித்தார். மீண்டும் நன்றாகச் சாய்ந்துகொண்டு பேச
ஆரம்பித்தார். பக்கத்துப் படுக்கையிலிருந்த நடுத்தர வயது நோயாளியும்
அவருக்குத் துணையாக இருந்த இளைஞனும் கூட அவர் பேசுவதை ஆவலுடன்
கேட்டுக்கொண்டிருப்பதை கிருஷ்ணன் கவனித்தான்.
'நடுநிலைமை என்ற பாவனையில் ஐரோப்பா இஸ்ரேல்
மக்களுக்கும் அவர்களது கலாச்சாரத்துக்கும் ஆதரவளிப்பதால், அது அரபுப்
பண்பாட்டைத் தாழ்மைப்படுத்தி ஒரு ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்தியுள்ளது.
மிகவும் வளர்ச்சியுற்ற யூத மக்கள் தங்கள் மத்தியில் ஒரு இடத்தைப்
பெற்றிருக்கும்போது, அரபு மக்களுக்கு ஒரு புதிய ஏகாதிபத்தியத்துக்கு
இரையாகிவிடுவோமோ என்ற அச்சம் இருப்பது நியாயம்தான்' என்றார்.
அவர் குரல் தளர்ந்துவிட்டிருந்தது. அவர்
பேசுவதைக் கேட்பதில் சிவராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஆர்வமும்
கிளர்ச்சியும் இருந்த போதிலும் அவர் தன்னை வருத்திக் கொள்கிறாரோ என்ற
பதற்றமும் இருந்தது.
'இறுதித் தீர்ப்பு நாள்! என்ன ஒரு அழகான
கற்பனை... என்ன ஒரு மகத்தான நம்பிக்கை! ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு
கொடூரமானவை' என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.
சிறிது நேரம் கழிந்ததும், டாய்லெட் போக
வேண்டுமென்றார். அவருடைய படுக்கைக்குப் பக்கத்தில்தான் டாய்லெட்
செல்வதற்கான பின்புற வாசல் இருந்தது. நடப்பதற்கு வெகுவாக சிரமப்பட்டார்.
கைத்தாங்கலாக இருவரும் கூட்டிப் போனார்கள். அவருடைய கைகள் மிக மோசமாக
நடுங்கின. டாய்லெட்டுக்குள் நுழைந்துகொண்டதும், சுவரில் சாய்ந்து
நின்றுகொண்டு, ஒரு சிகரெட்டை வெளியில் எடுத்தார். அதன் ஒரு முனையை
உள்ளங்கையில் தட்டி, சிகரெட்டை விரல்களால் நீவி புகையிலையை வெளியில் எடுக்க
முற்பட்டார். கை விரல்கள் மோசமாக உதறியதில், சிகரெட் பிடிமானமற்றுக் கீழே
விழுந்தது. பதறி அதை எடுக்கத் தள்ளாடினார். அதற்குள் அது டாய்லெட் தரையின்
ஈரச் சொதசொதப்பில் ஊறிவிட்டிருந்தது. 'ஐயோ... விடுங்க' என்று அலறினான்
கிருஷ்ணன்.
அவர் மிகவும் தளர்வுற்றவராக, டாய்லெட்டில்
குந்தி உட்கார முயற்சித்தார். முடியவில்லை. அவர் குனிந்து உட்கார அவர்கள்
உதவிப் பார்த்தார்கள். பாதிக்கு மேல் அவரால் குனிய முடியவில்லை. அரை
குறையாகக் குனிந்திருந்தபடியே முயற்சித்தார். எதுவும் வரவில்லை.
எழுந்துகொண்டு, கைகளால் தலையைத் தாங்கியபடியே, 'கடவுளே, என்னைச் சீக்கிரம்
உன்னிடம் அழைத்துக்கொள்' என்று கதறி அழுதார். இருவரும் செய்வதறியாது
கலக்கத்துடன் அருகில் நின்றிருந்தார்கள். 'சரி, வாங்க போகலாம்!' என்றான்
கிருஷ்ணன். குவளையில் தண்ணீர் பிடித்து அவருடைய பிருஷ்டத்தைக் கழுவி,
கால்களிலும் நீருற்றினான் சிவராமன்.
வேட்டியைத் தூக்கிக் கட்டியபடியே அவர்களுடன்
திரும்பி வந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டார். உடம்பு, கை கால்களெல்லாம்
வெடுவெடுவென்று நடுங்கின.
'என்ன செய்யுது?' என்று கேட்டான் சிவராமன்,
'குளிருது... ரொம்பக் குளிருது. சிதையில் போய் படுத்துக்கொண்டால்தான்
இந்தக் குளிர் அடங்கும்' என்றார்.
என்ன சொல்வதென்று தெரியாமல் இருவரும்
மருட்சியோடு நின்றிருந்தார்கள். சற்று நிதானித்து, 'சரி படுத்துக்கங்க''
என்றபடி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த போர்வையைப் பையிலிருந்து
வெளியில் எடுத்தான் சிவராமன். அவர் படுத்துக்கொண்டதும் போர்த்திவிட்டான்.
அவர்களுக்கு எவ்வித சிரமமும் தந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் போல
ஒடுங்கிப் படுத்துக் கொண்டார் ராஜன்.
அவர் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது போலத் தோன்றியது.
'என்ன வேணும். டாக்டரை வேணும்னா கூட்டிட்டு வரட்டுமா?' என்று கேட்டான் சிவராமன்.
வேண்டாம் என்பது போலத் தலையசைத்தார்.
அவர் தலைமாட்டுக்குப் பக்கமாக ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான் சிவராமன். மீண்டும் அவர் உதடுகள் முணுமுணுத்தன.
'என்ன' என்றபடி அவரை நோக்கிக் குனிந்தான் சிவராமன். கிருஷ்ணன் நகர்ந்து சிவராமனை ஒட்டி நின்று கொண்டான்.
'I fall upon the thorns of life!
I bleed....' என்றார். அதையே இரண்டு மூன்று முறை சொன்னார். கண்கள் மூடித் தூங்க முயற்சித்தார். !
சிறிது நேரம் இருவரும் அவரைப் பார்த்தபடியே இருந்தார்கள். 'சரி, அவர் தூங்கட்டும். நாளை காலைல வரலாம்' என்றான் கிருஷ்ணன். அவரிடமிருந்து விலக மனமில்லாதது போல, சிவராமன் கலக்கத்துடன் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
கிருஷ்ணன், சிவராமனின் தோள்மீது கை வைத்தான். 'சரி போகலாம்' என்றபடி எழுந்து கொண்டான் சிவராமன்.
பக்கத்துப் படுக்கை நோயாளிக்குத் துணையாக இருந்த இளைஞனிடம், 'கொஞ்சம் பார்த்துக்கங்க... நாளை காலைல வர்றோம்' என்று தயங்கியபடி சொன்னான் சிவராமன். அந்த இளைஞன் அசட்டையாகத் தலையாட்டினான்.
I bleed....' என்றார். அதையே இரண்டு மூன்று முறை சொன்னார். கண்கள் மூடித் தூங்க முயற்சித்தார். !
சிறிது நேரம் இருவரும் அவரைப் பார்த்தபடியே இருந்தார்கள். 'சரி, அவர் தூங்கட்டும். நாளை காலைல வரலாம்' என்றான் கிருஷ்ணன். அவரிடமிருந்து விலக மனமில்லாதது போல, சிவராமன் கலக்கத்துடன் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
கிருஷ்ணன், சிவராமனின் தோள்மீது கை வைத்தான். 'சரி போகலாம்' என்றபடி எழுந்து கொண்டான் சிவராமன்.
பக்கத்துப் படுக்கை நோயாளிக்குத் துணையாக இருந்த இளைஞனிடம், 'கொஞ்சம் பார்த்துக்கங்க... நாளை காலைல வர்றோம்' என்று தயங்கியபடி சொன்னான் சிவராமன். அந்த இளைஞன் அசட்டையாகத் தலையாட்டினான்.
மறுநாள் காலை மருத்துவமனையில் ராஜன்
அனுமதிக்கப்பட்டிருந்த வார்டை நோக்கி சிவராமனும் கிருஷ்ணனும் வேக வேகமாக
நடந்துகொண்டிருந்தார்கள். காலை ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் காஃபியோடு வந்து
சிவராமன் பார்த்துக்கொள்வதென்றும் எட்டரை, ஒன்பது மணியளவில் கிருஷ்ணன்
வந்து கவனித்துக் கொள்வதென்றும் அவர்கள் பேசி வைத்திருந்தார்கள். ஆனால்
சிவராமனுக்கு வீட்டில் ஒரு நெருக்கடி. காலையில் கிளம்ப முடியாமல்
போய்விட்டது. நேரமாகிவிட்டதால் சேர்ந்தே போய்விடலாமென நினைத்து கிருஷ்ணன்
வீட்டுக்குப் போய் அவனையும் கூட்டிக்கொண்டு சிவராமனின் ஸ்கூட்டரில்
இருவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தபோது மணி எட்டரையை
நெருங்கிவிட்டிருந்தது. மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அவர்கள் அந்த வார்டை நெருங்கிவிட்டிருந்த போது, சீருடைப் பணியாளர் ஒருவர்
ஒரு சிறிய தகர டிரேக்கள் கொண்ட தள்ளுவண்டியில் ரொட்டி பாக்கெட்டுகளோடு அந்த
வார்டிலிருந்து வெளியேறி வந்துகொண்டிருந்தார். கதவுகளற்ற நுழைவாசலருகே ஒரு
பூனை நின்றுகொண்டிருந்தது. அது நேற்று அவன் பின்வாசலருகே பார்த்த பூனைபோல்
தானிருந்தது. ஆனால் அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது என்பது போலவும்
அவனுக்குத் தோன்றியது. நேற்று பார்த்த பூனை முழு வெள்ளையாக இருந்ததாகத்தான்
ஞாபகம். ஆனால் இதன் உடம்பில் அங்கங்கே சில பழுப்பு வண்ணத் திட்டுகள்
இருந்தன.
அவர்கள் வார்டுக்குள் நுழைந்தபோது, எல்லோருடைய
பார்வையும் சட்டென அவர்கள்மீது குவிந்தது. ராஜனுடைய படுக்கை காலியாக
இருந்தது. அவர்களுக்கு திக்கென்றானது. ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டார்கள். தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து
நழுவிவிட்டாரோ என்ற தோன்றியது. நேற்று பூனைக்குப் பாலும் ரொட்டியும்
கொடுத்த அந்த அம்மா பதற்றத்தோடு அவர்கள் முன்வந்து. 'என்னப்பா.. இப்படி
விட்டுட்டுப் போயிட்டீங்களே... உங்க ஐயா உங்களை விட்டுப்
போயிட்டாருப்பா...' என்று தழுதழுத்த குரலில் கூறினார்கள்.
ஒரு கணத் திகைப்பிற்குப் பின் சுதாரித்து 'எப்பம்மா... எப்படிம்மா...' என்று கிருஷ்ணன் கேட்டான்.
'ராத்திரி தூக்கத்திலேயே போயிட்டாரு போலப்பா.
எங்க யாருக்கும் எதுவும் தெரியாது. யாருக்கும் தொல்லை இல்லாம... தொல்லை
கொடுக்காம போய்ச் சேந்துட்டாரு. காலைல டாக்டர் ரவுண்ட்ஸ் வந்து
பாத்தப்பதான் தெரிஞ்சது... நல்ல சாவுதான். என்ன நீங்கள்லாம் பக்கத்துல
இல்லாததுதான் குறை...' என்றார் அந்த அம்மா.
இருவரும் என்ன சொல்தென்று தெரியாமல் அதிர்ந்து
போய் நின்றிருந்தார்கள். ஒருவிதக் குற்றவுணர்வு அவர்கள் மீது
இறங்கியிருந்தது. கொஞ்சம் தயக்கத்தோடு சிவராமன், 'இப்ப எங்க...' என்றான்.
'டாக்டர் பாத்துட்டு மார்ச்சுவரிக்குக் கொண்டு போகச் சொல்லிட்டாருப்பா...'
'சரிம்மா நாங்க டாக்டரைப் போய்ப் பார்க்கிறோம்' என்றான் சிவராமன்
அவர்கள் இருவரும் டாக்டருடைய அறைக்குச்
செல்வதற்காகத் திரும்பியபோது, 'இந்தக் காலத்து பசங்களெல்லாம் இப்படித்தான்
இருக்காங்க' என்று ஒரு ஆண் குரல் சொல்வது கேட்டது.
டாக்டரின் அறையில் அவருக்கு எதிரிலிருந்த
இருக்கைகளில் சிவராமனும் கிருஷ்ணனும் அமர்ந்திருந்தார்கள். டாக்டரின் முன்
ராஜனுடைய எக்ஸ்ரே மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இருந்தன.
'என்னுடைய பதினைந்து வருட அனுபவத்தில்
ஒருவருடைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பார்க்கப்படும் முன்பாகவே, அவர் இறந்து
போவது இதுதான் முதல் முறை... அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல்
போனது ஒரு இழப்புதான்' என்றார் டாக்டர். சிறிய மௌனத்துக்குப் பின் அவர்
கூறினார்: 'உண்மையில் அவர் சட்டென இறந்துவிட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
அவர் இவ்வளவு நாள் உயிரோடிருந்ததுதான் பெரிய ஆச்சரியம். ஒரு பக்க நுரையீரலே
அவருக்கு இல்லை. எப்படி தாக்குப் பிடித்தாரென்றே தெரியவில்லை... சரி,
அடுத்து ஆக வேண்டியதைப் பாருங்கள்' என்றார் டாக்டர்.
'இப்ப அதுதான் டாக்டர் பெரிய பிரச்சனை' என்றான்
சிவராமன். 'நேத்து ராஜனைச் சேர்த்திருக்கும் தகவலை அவரோட மனைவிக்குத்
தெரியப்படுத்தி விடுவதுதான் நல்லது என என் மனைவி மாலா அபிப்ராயப்பட்டாள்.
அவருடைய மனைவி ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்து அலுவலகம் சென்று
வருவதால், நேற்று மாலை அந்த விடுதிக்குச் சென்று அவர்களைப் பார்த்து
சொல்லிவிடும்படி நான் மாலாவிடம் சொன்னேன். அவளும் போய் பார்த்திருக்கிறாள்.
ஆனால் அவர்கள் அவர் பற்றி எதுவும் கேட்க விரும்பவில்லை என்று பேச்சை
முறித்துவிட்டிருக்கிறார்கள். இப்ப மறுபடியும் அவர்களைத்தான் போய்ப்
பார்த்து விசயத்தைச் சொல்ல வேண்டும் என்றான். 'அது வரை உடல் இங்கு
மார்ச்சுவரியில் இருக்கலாம்தானே' என்று கேட்டான்,
'அது ஒன்னும் பிரச்சனையில்லை' என்றார் டாக்டர்.
'நீங்க போகும்போது, மார்ச்சுவரி போய் பார்த்துட்டு அங்கிருக்கும் ஆளையும்
கவனிச்சுட்டுப் போங்க... நீங்க போய் தைரியமா அந்த அம்மாவைப் பாருங்க. ஆள்
உயிரோட இருக்கிறவரைதான் வெறுப்பு, சண்டை, கோபதாபமெல்லாம்... ஆள்
இறந்துட்டா, அது எல்லாப் பிரச்சனைக்கும் நிரந்தர முடிவென்பதால், அடுத்து ஆக
வேண்டியதைக் கவனிப்பதற்கு மனம் தயாராகிவிடும். நீங்கள் அவருடைய மனைவியைப்
பாருங்க, எல்லாம் சுலபமாக முடிந்துவிடும்.'
டாக்டரின் வார்த்தைகள் அவர்களுக்குத்
தெம்பூட்டின. டாக்டரின் அறையை விட்டுக் கிளம்பி பிண அறைக்குச் செல்லும்வரை
அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை
மருத்துவமனையின் மரங்கள் நிறைந்த வெட்டவெளிப்
பகுதியொன்றின் ஒரு மூலையில் பிண அறை இருந்தது. அந்த வெட்டவெளியில் அவர்கள்
நடந்து சென்றபோது, எண்ணற்ற காகங்கள் அங்கு இருந்துகொண்டிருந்தன. அவ்வளவு
காகங்களை ஒருசேர அதற்கு முன் பார்த்திருக்கவில்லை என கிருஷ்ணன் நினைத்தான்.
எல்லாமே ஒன்றுபோல இருப்பதாகவும், எந்தவொன்றும் தனித்து அடையாளம் காணக்
கூடியதாக இல்லையெனவும் நினைத்தான். அப்படி இல்லாமல் இருக்குமா என்ன?
அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
ஒரு பெஞ்சின்மீது ராஜனின் உடல்
கிடத்தப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் உடலைப் பார்த்தபடி மௌனமாக
நின்றிருந்தார்கள். சிவராமனுக்குக் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.
நேற்று காலை அவரை சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு வந்தபோது, முறையான
சிகிச்சை பெற்றால் அவர் தேறிவிடுவார் என்றுதான் அவர்கள்
நினைத்திருந்தார்கள். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒரு இக்கட்டை அவர்கள்
இப்போது எதிர்கொண்டிருந்தார்கள். அவர் வெகு நிம்மதியாக
உறங்கிக்கொண்டிருப்பதாகக் கிருஷ்ணனுக்குத் தோன்றியது. மரணம் அவருடைய
முகத்துக்கு ஒளியூட்டியிருந்தது. நிறைவும் சாந்தமும் அந்த ஒளியில்
புலப்பட்டன. அவர் என்பது இப்போது இந்த உடல் மட்டும்தான். இந்த உடல்
எரிக்கப்பட வேண்டும் அல்லது புதைக்கப்பட வேண்டும். அதை இந்த உடலுக்கு
உரியவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர் உயிரோடு இருந்தபோது அவருக்கு
நெருக்கமாவும் அணுக்கமாகவும் இருந்த அவர்கள், உயிர் பிரிந்து உடல்
என்றானதும் அந்நியமாகி விட்டார்கள். இந்த உடலோடு அவர்களுக்கு எவ்வித
பந்தமுமில்லை. ஆனால் இந்த உடலை அதற்கு உரியவர்களிடம் சேர்க்க வேண்டிய
பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதுதான் இனி அவர்கள் செய்யவேண்டியது. சில
நாட்களுக்கு முன்பு ராஜன் சொன்ன ஒரு விசயம், இப்போது ஒரு பிரத்தியட்ச
உண்மையாக அவர்கள் முன் இருந்து கொண்டிருக்கிறது. அன்று அவர் சொன்னது
இப்போது கிருஷ்ணனின் நினைவுக்கு வந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு, சென்னை
சென்ற நண்பர்களை எல்லாம் பார்த்துவிட்டு வரப்போவதாகச் சொல்லி சிவராமனிடம்
அவர் பணம் கேட்டார். இவ்வளவு மோசமான உடல்நலத்தோடு இப்போது ஏன் அலையவேணடும்
என சிவராமன் கொஞ்சம் கறாரான குரலில் சொன்னான். அப்போது கிருஷ்ணனும்
உடனிருந்தான். அதற்கு அவர், 'ஏன், போற வழியில் செத்திடுவேனு
பயப்படுறியா?...' இருக்கிற வரைக்கும்தான் இந்த உடம்பு என்னோட பிரச்சனை.
செத்துட்டா இந்த உடம்பை என்ன செய்யணும், எங்க சேக்கணும்கிறது மத்தவங்களோட
பிரச்சனை. புரியுதா...?' என்றபடி லேசாகச் சிரித்தார். இப்போதும்
உள்ளுக்குள் அந்த சிரிப்பு அவரிடம் இருந்துகொண்டிருப்பது போல்
கிருஷ்ணனுக்குத் தோன்றியது. இப்போது அவருடைய பிரச்சனைகளிலிருந்து அவர்
வெளியேறிவிட்டார். அந்த உடல் பெரும் சுமையாய் அவர்கள் மீது
ஏறிவிட்டிருந்தது.
ஒரு இளம்வயதுப் பணியாளர் வேகமாகப் பிண
அறைக்குள் நுழைந்தார். ஒரு மரத்தடியில் நின்று பீடி குடித்துக்
கொண்டிருந்தவர், நாங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்துவிட்டு வேகமாக வந்திருக்க
வேணடும். அவரிடமிருந்து பீடி வாசனை குப்பென்று வந்தது.
'அய்யோவோட பசங்களா...' என்று கேட்டார் அவர்.
'இல்லை... தெரிஞ்சவங்க' என்றான் கிருஷ்ணன்
'உறவுக்காரங்க யாரும் வரலியா...? நீங்கதான் சேத்தீங்களா?'
'இருக்காங்க இனிமேதான் அவங்களைக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வரணும்' என்றான் கிருஷ்ணன்
அந்தப் பணியாளரின் முகபாவம் எதுவும் புரியாதது
போல் இருந்தாலும் அவர் தலையாட்டினார். பிறகு, 'ஐயாவோட ஜிப்பா பாக்கெட்டுல
சிகரெட் டப்பா, தீப்பெட்டியோட ஒரு கஞ்சா பொட்டலமும் இருந்துச்சு...'
என்றார்.
'இருக்கட்டும்... அத நீங்க எடுத்துக்கங்க...' என்றான் கிருஷ்ணன்,
அவர் தலையாட்டினார். ராஜனின் மரணத்தின்போது
அவரிடம் எஞ்சியிருந்தது அவைதான் என்ற உண்மை அவர்களைத் தாக்கியது. கஞ்சாப்
பொட்டலம் பயன்படுத்தப்படாமல் தங்கிப் போனதற்கு அவன் ஒரு காரணம் என்ற எண்ணம்
ஒரு குற்றவுணர்வாகக் கிருஷ்ணனிடம் ஊடுருவியது. ஒருவேளை அவர் கஞ்சா
குடித்துக்கொண்டிருந்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள்
இருந்திருந்திருப்பாரோ... அந்தப் பிண அறைப் பணியாளர் ஏனோ திரும்பத் திரும்ப
'அய்யா பாக்கெட்டில கஞ்சாப்பொட்டலம் இருந்தது' என சொல்லிக்கொண்டே
இருந்தார்.
'சரி நாங்க கிளம்பறோம். இனிமே போய்தான் அவரோட
உறவுக்காரங்களைப் பார்த்து விசயத்தை சொல்லணும். அதுக்கப்புறமா வந்து 'பாடி'
ய எடுத்துக்கறோம். அதுவரை இங்கேயே இருக்கட்டும். பாத்துக்கங்க' என்றான்
சிவராமன்.
'அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சார்... நீங்க போயிட்டு வாங்க ஐஸ் பார் வாங்கணும்... பணம் கொடுத்துட்டுப் போங்க...' என்றார்.
சிவராமன் பர்ஸை எடுத்து, அதிலிருந்து பத்து
ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினான். அவர் அடைந்த புளகாங்கிதம்
அவருடைய முகத்தில் தெரிந்தது. ஏதோ நினைவு வந்தவனாக சிவராமன், தன் கைப்
பையிலிருந்து திராட்சைப் பழப் பொட்டலத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அவர் மலர்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டு 'அய்யாவுக்கு வாங்கி வந்ததுங்களா?' என்று கேட்டார். இருவரும் தலையாட்டியபடி கிளம்பினார்கள்.
சிவராமனின் ஸ்கூட்டர் ஓர் அலுவலகத்தின் முன்
நின்றது. ராஜனின் மனைவி லட்சுமி பணியாற்றும் அலுவலகம் அது. ராஜனின் உடலை
ஒப்படைக்கும் பாரத்தைச் சுமந்தபடி, இருவரும் தயக்கத்தோடு அந்த
அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். அவர்கள் மனம் கனத்திருந்தது. இருவரும்
அந்த அம்மாவை இதுவரை பார்த்ததுகூடக் கிடையாது. அவரைச் சந்திப்பதிலும்,
ராஜனுடைய மரணச் செய்தியை அவரிடம் சொல்ல இருப்பதிலும் கடுமையான பதற்றம்
அவர்களைப் பீடித்திருந்தது. அவர்கள் இதுவரை எதிர் கொண்டிராத இக்கட்டான
நிலைமை. இப்போது எதிர் கொண்டாக வேண்டிய கட்டாயம்.
அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அது ஒரு
விசாலமான கூடமாக இருந்தது. மூன்று வரிசைகளாக, முப்பதுக்கும் மேற்பட்டோர்
அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மேசைகளிலும் ஏகப்பட்ட
பைல்கள் குவிந்திருந்தன. நுழைந்ததும், முதலாவதாகத் தென்பட்ட பணியாளரிடம்,
திருமதி லட்சுமியைப் பார்க்க வேண்டுமென்று சிவராமன் ஆங்கிலத்தில் சொன்னான்.
அவர் ஒரு சிப்பந்தியை வரவழைத்து விபரம் சொன்னார். அந்த சிப்பந்தி
வராந்தாவில் இருந்த ஒரு பெஞ்சில் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே
போனார். அவர்கள் பரஸ்பரம் எதுவும் பேசிக் கொள்ளாமல் காத்திருந்தனர்.
அவர்களுடைய மௌனத்தின் ஊடாக அவர் உடல் இருந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு
நொடியையும் அவர்கள் உணர்ந்துகொண்டிருந்தார்கள். பத்து நிமிடங்களுக்குப்
பிறகு ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவர்களை நோக்கி வந்தார். அவர்களுக்குப்
பக்கத்தில் அவர் வந்ததும் அவர்கள் இருவரும் எழுந்துகொண்டார்கள்.
'யார் நீங்க? என்ன விசயம்?' என்று தன்மையான குரலில் அவர் கேட்டார்.
'ராஜன் சாரோடஃ ப்ரெண்ட்ஸ்...' என்று இழுத்தான் சிவராமன்
அவனை சட்டென இடைமறித்து, 'சரி என்ன விஷயம் சொல்லுங்க?' என்ற அவருடைய குரலில் கண்டிப்பு வெளிப்பட்டது.
'ராஜன் சார் இறந்துட்டாங்க' என்று வெடுக்கெனச் சொன்னான் கிருஷ்ணன்.
ஒரு கணம் அந்த அம்மா திடுக்கிட்டுப் போனார்.
நிதானத்திற்குத் திரும்பாமலேயே, 'எங்க... எப்ப...?' என்றார். அவருடைய
குரலில் பதற்றம் வெளிப்பட்டது.
'ஜி.எச்.ல... நேத்து காலைலதான் சேத்தோம். ராத்திரி தூக்கத்துலேயே இறந்துட்டார்...' என்றான் கிருஷ்ணன்.
அவர் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, அவர்களையும் உட்காரச் சொன்னார். இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.
'நேத்து ஒரு பொண்ணு ஹாஸ்டலுக்கு வந்து அவரை ஹாஸ்பிடல்ல சேர்த்துக்கிறதா சொல்லுச்சு... அது யாரு தம்பி' என்று கேட்டார்.
'என்னோட ஒய்ப் தான் மேடம்' என்றான் சிவராமன்.
'அவரால நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை
தம்பி... அதனாலதான் அப்படி முறிச்சு பேசும்படி ஆயிடுச்சு... இந்த வேலைனு
ஒண்ணு இருந்ததால எப்படியோ சமாளிச்சுட்டேன்... சரி, அதையல்லாம் இப்ப பேசி
எனன் ஆகப்போகுது...' அவர் மெதுவாக நிதானமடைந்து கொண்டிருப்பது தெரிந்தது.
'பாடி இப்ப எங்க இருக்கு..'
'மார்ச்சுவரிலதான் மேடம்' என்றான் சிவராமன்.
ஒரு நிமிட மௌனத்துக்குப் பின் அவர், 'இருங்க
எங்க அண்ணன்ட ஃபோன்ல பேசிட்டு வாறேன்... அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு
முடிவு பண்ணலாம்' என்றபடி எழுந்து உள்ளே சென்றார்.
அவர் திரும்பி வரும் வரை இருவரும் மௌனமாகக்
காத்திருந்தார்கள். இடையில் மௌனத்தைக் கலைத்து 'பாவம், இந்த அம்மா...'
என்றான் சிவராமன், மௌனமாகத் தலையாட்டினான் கிருஷ்ணன்.
அவர் திரும்பி வந்தபோது முகம் தெளிந்திருந்தது.
'எங்க அண்ணன்ட பேசினேன். பாடிய நாளை காலை 7 மணிக்கு மார்ச்சுவரில் இருந்து
நேரா தத்தநேரி சுடுகாட்டுக்குக் கொண்டு வரச் சொல்றாரு... அங்க வைச்ச
சடங்கெல்லாம் செஞ்சுக்கலாம்னார்...' என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரம்
தயங்கினார். பிறகு தழுதழுத்த குரலில், 'தம்பி நீங்க யாருன்னு எனக்குத்
தெரியாது. கடைசி காலத்துல அவருக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கீங்க...
நாளைக்கு காலைல பாடிய சுடுகாட்டுக்குக் கொண்டு வந்துட்டீங்கன்னா பெரிய
உபகாரமா இருக்கும்...' என்றார்.
இருவரும் சரி என்பது போல் தலையாட்டினார்கள். அவர் கையயடுத்துக் கும்பிட்டார். அவருடைய கண்களில் நீர் ததும்பிருந்தது.
'சரிங்க மேடம், நாளைக்குக் காலைல பாடிய
சுடுகாட்டுக்குக் கொண்டு வந்துடறோம்...' என்றான் சிவராமன். அவர்கள்
இருவருக்கும் பின்னாலிருந்து யாரோ ஒருவர் அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த
பெரும் பாரத்தை இறக்கிவைத்தது போல அவர்கள் உணர்ந்தார்கள்.
இருவரிடமிருந்தும் ஆசுவாசப் பெருமூச்சு வெளிப்பட்டது.
No comments:
Post a Comment