Search This Blog

Showing posts with label Tamil Kavithaikal. Show all posts
Showing posts with label Tamil Kavithaikal. Show all posts

Saturday, August 12, 2023

கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதை

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாத சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
மனைவி
துணைவி
இணைவி
பிணைவி என
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானேன் கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே நீ கவிஞ‌னெனில்
நீ கலைஞர் எனில்
நீயே உனக்கு சூடிக்கொண்டாயே
யாரளித்தார் உனக்கு கலைஞர் பட்டம்
தெலுங்கன் நீ தமிழன் என்பாய்
பொய்யில் பிறந்து
பொய்யில் வளர்ந்து
பொய்யில் வாழ்ந்து
பொய்யில் பிழைத்தவனே
அல்ப பதர் எல்லாம் கவிஞர் எனின்
ஒழுக்கமில்லா தறிகெட்ட தத்தி நீயே
நானேன் கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌....
Thanks

அஸ்வின் நமசிவாய சமூக அறக்கட்டளை

Saturday, September 11, 2021

குயில் பாட்டு


Mubeen Sadhika

குயில் பாட்டு மற்ற இலக்கியங்களிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. மெடாபிக்ஷன் எனப்படும் பின்நவீனத்துவ பாணியைப் பின்பற்றி ஆசிரியரே கதை மாந்தராகும் உத்தி இதில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சுயவரலாறு போல் சொல்லப்பட்ட காவியமாக இது இருக்கிறது. இதனை நெட்டைக்கனவு என்று இந்த இலக்கியம் சொன்னாலும் இறுதியில் இதில் வேதாந்தம் இருப்பது போல் கோடி காட்டுவது கவிதை சொல்லியின் தன்னிலையிலிருந்து சொல்லப்பட்ட ஒரு வாசகமாக இருக்கிறது. கவிதைச் சொல்லி என்ற பாத்திரமேற்பு வேதாந்தம், தத்துவம் கொண்டு இதுவரைப் பார்க்கப்பட்டது. ஆனால் இதில் மற்றொரு பொருளுறைவும் இருக்கிறது. இந்த இலக்கியத்தின் உத்தி காப்பியங்களின் முற்பிறவி கூறும் உத்தி போல் ஒரு ப்ளாஷ்பேக் போல் பயன்படுத்தப்படுகிறது. குயில் என்ற பெண் பாத்திரம் தன் முற்பிறவியைக் கூறுவதிலிருந்துதான் கவிதைத் தன்னிலை வெறும் கவிதை சொல்லி மட்டுமல்ல சேர இளவரசனுடைய மறுபிறவி என்பது தெரிய வருகிறது. ஆனால் இதில் மற்றொரு புள்ளியைக் கவனிக்கவேண்டும். இந்த இலக்கியம் முழுவதுமே முரண் இரட்டைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல்/சாதல், ஒளி/இருள், நாதம்/சேதம், பண்/மண், தாளம்/கூளம், புகழ்/இகழ் என்பதான இரட்டைகளால் வாழ்வு விளக்கப்படுகிறது. அதே போல் பாத்திரங்களும் முற்பிறவி/இப்பிறவி என்ற இரட்டைகளைக் கொண்டிருக்கின்றன. கவிதைச் சொல்லி/இளவரசன் என்பதாக இதனைப் பார்த்தால் இளவரசனின் கதை இது என்பதாக வாசித்துவிடலாம். அல்லது கவிஞரின் சுயசரிதை இது என்பதாகவும் வாசிக்கலாம். ஒரு வகையில் இது ‘உண்மை கதை’ என்பது போலவும் மற்றொரு வகையில் ‘வெறும் புனைவு’ என்பது போலவும் இரு வேறு பட்ட தளங்களில் வாசகரைப் பயணிக்க வைக்கிறது இந்த இலக்கியம். உண்மையா புனைவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதுதான் இந்த வகைமையிலான இலக்கியங்களின் குணாம்சம்.
கவிதை சொல்லி தன் நண்பர்கள் நடந்ததை விளக்குமாறு கேட்கும் போது குயில் என்ற பாத்திரத்திடம் பேசாமல் அதைச் சொல்ல முடியாது என்று கூறுவதும், கதை முடிந்தவுடன் கவிதை சொல்லி தன் இடத்தில் இருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல், பழம் பாய் போன்ற பொருட்களின் மூலம் இது வரை நடந்த கதை வெறும் கனவு என்பது போல் காட்ட முனைவதும் புனைவுக்கும்/எதார்த்ததிற்கும் இடையில் கதை நகர்வதைக் காட்டுகிறது. கவிதை சொல்லிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உறவாக இந்த கதையாடலைக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காக இதனை நெட்டைக் கனவு என்று சொல்லி திசைமாற்றம் செய்வது போலவும் இதனை வாசித்துக் கொள்ளலாம். ஏனெனில் இலக்கியத்திற்குள் வந்த கவிதை சொல்லிக்கும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞருக்கும் இடையில் உறவும்/உறவின்மையையும் வாசகர் உருவாக்குவதான இடுகுறித் தன்மையுடன் இருக்கிறது. இதுதான் மெடாஃபிக்ஷன் எனப்படும் பாணியாகக் கருதப்படுகிறது.

Friday, August 27, 2021

பாரதியின் இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை


பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.

குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.
பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்!
சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.
கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.
அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.
பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாகச் சொல்லப்படுகிறது.
அத்துயர நாளில் பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுக்கச் சென்ற போது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்.
ஆனால் பாரதி நெருங்கிய போது யானை அமைதியாகவே இருந்தது.
ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது..
கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா, தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து, குனிந்து பாரதியை தன் தோளில் போட்டுக் கொண்டார்.
யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்.
ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை.
கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது.
ஆனால் கட்டாந்தரையில் விழுந்ததில் முகம், மூக்கு, தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்.
காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்.
பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா? இல்லவே இல்லை!
கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம்,
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான். இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா?''
அங்கங்களின் காயம் ஆறத் தொடங்கியது.
பாரதியும்
சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்.
காயம் ஆறியதே தவிர, அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது.
சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது.
மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி.
செப்டம்பர் 11, அதிகாலை இரண்டு மணி.
வெளியேறத் துடிக்கும் உயிரோ பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.
சில நிமிடங்களில் அந்த 39 வருஷக்
கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.
ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ?
ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ?
குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன.
இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.
மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?
அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே.
இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ.
தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?
எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...
பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க, ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.
ஓராயிரம் கவிதைகளை
உச்சரித்த உதடுகளை
ஞான வெளிச்சம் வீசிய
அந்த தீட்சண்ய விழிகளை
ரத்தம் வற்றினாலும்
கற்பனை வற்றாத
அந்த இதயத்தை...
தேடித்தேடித் தின்றன
தீயின் நாவுகள்.
மகா கவிஞனே!
எட்டையபுரத்து கொட்டு முரசே!
உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்து
கொள்ளாத போது,
இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?
உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது?
படித்து பகிர்ந்தது ...
Arunan Meenachchisundaram

Saturday, July 10, 2021

எனக்கு ஒரு நிழல் இருப்பதை நம்ப முடியவில்லை


அது என்னுடன் வருகிறது என்னைப் போலவே நடக்கிறது
என்னையே பிரதிபலிக்கிறது
ஒரு நேரம் இருக்கிறது
ஒரு நேரம் மறைந்துவிடுகிறது
இருந்தும் இல்லாமலும்
அது வேடிக்கை காட்டுகிறது
எனக்குள் இருக்கும் இருட்டை போல அது கருப்பாக இருக்கிறது
நான் பேசும்போது என்னைப்போலவே உதடுகளை அசைக்கிறது
அது என்னுள் சமாதி நிலையில் இருக்கிறது
என் மீது ஒளி பட்டு தெறிக்கும் போது
தியான நிலையில் இருந்து வெளியேறுகிறது
என்னைப் போன்று அது இருப்பதாக ஒருபோதும் கூறியதில்லை
நான் நினைத்துக் கொள்கிறேன் அது என்னுடைய பிம்பம் என்று
என்னுள் படிந்திருக்கும் துயரத்தையும் சோகத்தையும் கண்ணீரையும்
தனிமையையும் அது உணர்ந்திருக்கவில்லை
அது ஒரு ஒளி விளையாட்டு வேறொன்றுமில்லை
என் நிழல் பெரு மரத்தின் பெரும் நிழலைப் போல இளைப்பாறுதலை
கொடுப்பதில்லை
என் நிழல் என்னுடன் வீணாகவே வசிக்கிறது..

Iyyappa Madhavan 

Sunday, February 28, 2021

சுஜாதா – 15 கவிதைகள்

EraMurukan Ramasami

சுஜாதாவின் நாலாயிரத் திவ்யப் பிரபந்த ஈடுபாடு, தமிழ் மரபுக் கவிதையில் ஈடுபாடாக முகிழ்ந்தது. முக்கியமாக வெண்பாப் பிரியர் அவர். வாசகர்களை வெண்பா எழுதத் தூண்டியதோடு அவ்வப்போது அவரும் உற்சாகமாக நேரிசை வெண்பா எழுதினார்.
வெண்பாவில் எத்தனையோ தலைமுறை கடந்து இளையோரின் விருப்பம் அரும்பியிருக்கிறது என்றால் சுஜாதாவின் அட்டகாசமான, தற்காலக் காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்டும் விளையாட்டு, வைர ஊசி வெண்பாக்களும் அதற்கு ஓரளவு காரணம்.
’வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு அவர் எழுதிய வெண்பா இது –
பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சணை.
திருவள்ளுவரைத் தன் வெண்பாவுக்குள் அழைத்து வந்து ஆங்கில நகைச்சுவைக் கவிதை வடிவமான லிம்ரிக் பாணியில் சுஜாதா எழுதிய வெண்பா –
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் – உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
மரபுக் கவிதையில் தற்காலத்தைச் சித்தரிப்பது அவருடைய ‘உடன்’ என்ற கவிதை. கிட்டத்தட்ட எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த மூன்று செய்யுட்கள் இவை. உலகச் சிறார் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் எழுதியது.
கோயிலுக்குப் பக்கத்தில் கார்துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட்எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள்பிடிப்பாய்
வாய்மொழியின் வார்த்தைகளில் வயதை மீறிடுவாய்
வழியெல்லாம் கிடக்கின்ற ப்ளாஸ்டிக் பொறுக்கிடுவாய்.
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல்உடைப்பாய்
கார்அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டுவிற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழாஎடுக்கப் போகின்றோம்.
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்சநாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..
அவருடைய ’கவிஞர்களே இவ்வருஷம்’ மரபுச் செய்யுள் இப்படி முடியும் –
நித்த நித்தம் உயிர்வாழும் யத்தனத்தில்
நேர்மைக்கும் கவிதைக்கும் நேரம் இன்றி
செத்தொழியக் காத்திருக்கும் மனுசர் நெஞ்சின்
சிந்தனையைக் கவிதைகளாய்ச் செய்து பார்ப்போம்
முத்தனைய சிலவரிகள் கிடைக்கா விட்டால்
மூன்றுலட்சம் ‘ ராமஜெயம் ‘ எழுதிப் பார்ப்போம் !
மரபில் ஈடுபாடு என்பதால் சுஜாதா புதுக்கவிதையைப் புறக்கணித்தார் என்பதில்லை. கல்யாண்ஜி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் என்று தேடிப் படித்து எழுதிச் சிலாகித்தார் அவர்.
ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவும் சுஜாதா மூலம் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக அறிமுகமானது.
அவர் இங்கே பிரபலமாக்கிய ஒரு ஜப்பானிய ஹைக்கூ இது –
அழகான மரக்கிண்ணம்
பூக்களை நிரப்புவோம்
அரிசிதான் இல்லையே.
’ஹைக்கூ மூன்றே வரிதான் இருக்க வேண்டும். எழுதுகிறவரின் அனுபவமாக இருக்க வேண்டும். உவமை, உருவகம் இருக்கக் கூடாது. முதல் இரண்டடி ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக, மூன்றாம் வரி ஒரு புதிய சிந்தனையைச் சொல்வதாக இருக்க வேண்டும்’ என்ற ஹைக்கூவின் இலக்கணத்தைக் கூறி, வாசகர்களை தமிழ் ஹைக்கூ எழுதத் தூண்டி, தன் பத்திரிகைப் பத்திகளில் அவற்றைப் பிரசுரித்து உற்சாகப்படுத்தியவர் சுஜாதா.
அறிவியலை ஜப்பானிய ஹைக்கூ வடிவத்தில் பொதிந்து வைத்து அவர் எழுதிய தமிழ் ஹைக்கூ இது -
சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும்போது
கதவைப் பூட்டினேனா?
ஹைக்கூ பாதிப்பில் அவர் எழுதிப் பார்த்த குறுங்கவிதை இது -
மன்னாரு வந்தான்
மணி பார்த்தான், படுத்து கொண்டான்
சென்னை விட்டு திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தை கடந்து செல்லும்
அவ்வப்போது சுஜாதா ஆங்கிலக் கவிதைகளில் அவருடைய உள்ளம் கவர்ந்தவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தம் எழுத்து மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதை இது -
புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்துவிடுவேன்
சிலவேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது. நீயும் வாயேன்.
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்- அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கி விழுகிறது
அதிக நேரமாகாது. நீயும் வாயேன்.
எது நல்ல கவிதை என்பது பற்றி சுஜாதாவுக்கு சந்தேகமே இல்லை. நினைவு கூரும் கவிதை (evocative poem) தான் உயர்ந்த கவிதை என்பார் அவர். அந்த அளவுகோட்டோடு தமிழ்ப் புதுக்கவிதை, மரபுக் கவிதை மற்றும் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அணுகினார் அவர். குறிப்பிடத் தகுந்தவை என்று அவர் கருதியவற்றைச் சளைக்காமல் தம் வாசகர்களுடனும் பகிர்ந்து கொண்டார்.
நல்ல கவிதை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய மறுமொழி அவர் எழுதிய கவிதைகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.
நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்து விடும், குப்பையில் கிடக்கும் பொற்காசு போல. உலகின் கவிதைக் கணங்கள் ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றன.
அதனால், நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவறவிடக்கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக்கூடாது.

சுஜாதா என்றால் சம்ஸ்கிருத மொழியில் நன்றாக பிறந்தது என்று பொருள், ஆம் அவர் படைப்புகளும் நன்றாகவே பிறந்தது என்றே சொல்லலாம். இவரை கதை எழுத்தாளர் என்றோ கட்டுரை எழுத்தாளர் என்றோ சுருக்கி சொல்லி விட முடியாது. தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம் எழுத்தாளர் சுஜாதா என்றே சொல்லலாம். 1935ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பிறந்த ரங்கராஜன் அவர்களே பின்னாளில் சுஜாதா என்ற புனைப்பெயரோடு தமிழ் எழுத்துலகில் பல அசுர சாதனைகள் படைத்தார். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை இவர் கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. அப்போது தொடங்கி இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி இயற்பியல் படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ மின்னணுவியல் பிரிவில் கல்வி கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் பொறியாளராக சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக பதவி உயர்ந்தார். அப்போதிலிருந்தே எழுதவும் செய்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் சென்னைக்குத் திரும்பினார். அறிவியலை எழுத்து மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. இன்று நாம் அனைவரும் வாக்களிக்கும்
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்சில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துலகில் இவர் தொடாத பிரிவே இல்லை எனலாம். இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை, ஆன்மிகம், வரலாறு என்று பல வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார். பல நூறு கட்டுரைகளை இவர் எழுதி உள்ளார். பிரபல பத்திரிகை பலவற்றில் ஆசிரியராக பணி புரிந்தும் உள்ளார்.
தமிழ் சினிமா உலகில் இவரின் பங்களிப்பு பெரிது எனலாம். காயத்ரி, விக்ரம், ரோஜா, இந்தியன், முதல்வன், அந்நியன் என இவரின் கதை வசன உத்திகள் தமிழ் ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்தன. இந்தியாவின் கூகிள் என்று அழைக்கப்பட்டவர் சுஜாதா. அத்தனை விவரங்களை பொதித்து வைத்து இருந்தவர் இந்த எழுத்தாளர். சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்த எழுத்தாளர் சுஜாதா தமது 73 வயதில் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தா‌ர். உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சுஜாதா சிகிச்சை பலனின்றி 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று இரவு 9.30 மணியளவில் மறைந்தார். தமிழகமே அவருக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியது. எனினும் தனது அற்புத படைப்புகளால் இன்றும் சுஜாதா வாழ்ந்தபடியே இருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா மறைந்த தினம் இன்று.

Friday, January 29, 2021

ஆணின் ஐவகைக் குற்றவுணர்வு

உயிரழுத்தம் கூடிக்கொண்டது
ஒருத்தி என்ற சொல்லை
ஐந்திணை மண்ணோடு பிசைந்து பார்க்கிறேன்
ஐவகை குற்றவுணர்வுகளோடு
ஆண் வர்க்கம் பெருமையுடன்
உருக்கொள்கிறது
ஏகாதிபத்தியத்தை பெண் யானை மீது
விட்டு விரட்டி தன் கூட்டத்தையே அழித்து
வனத்தில் சமத்துவத்தை சீர்குலைக்கும்
ஆண் யானை
கருணையோ கண்ணுக்கு எட்டும் நிம்மதி
அதனை
சிலம்பன்களின் கூட்டில் மணிக்குயில்
உயிர்கொள்ளும் போதும்
காட்டுப் பூனைகள் சிச்சிலம்பு ஒலியில்
வால் முறுக்கி ஆடும் போதும்
பெருகுவதைக் கண்டிருக்கிறேன்
அன்பே ஆக்கும் கலை
காமத்தில் கலைவது கலையாகாது
காமத்தின் சூழ்ச்சியே
எங்கும் வியாபித்திருக்கிறது
காமத்தால் அடிமையாக்கப்பட்டதே தாயகம் ( தாய் அகமும்)
தாயின் காமத்தின் மீது பூசப்பட்டதே வர்ணம்
காமத்தால் அனுசரிக்கப்பட்டதே தேசம்
காமத்தால் துண்டாடப்படுவதே வர்க்கம்
காமத்தால் வரையப்பட்டதே எல்லைக் கோடுகள்
காமத்தால் வீழ்த்தப்படுவதே வரலாறு
காமமே அரசாட்சியின் மனக்கண்ணாடி
காமத்தால் ஒடுக்கப்பட்டதே கிராமங்கள்
காமத்தால் பிரிக்கப்பட்டதே நாடுகள்
காமத்தால் விரிவாக்கப்பட்டதே சாதிகள்
காமம் குற்றவுணர்வுகளின் குரூரத் தகப்பன்
காமத்தின் படிக்கட்டுகளே ஞானத்திற்கான வழி
காமம் கண்ணின் விதி
மனதின் எதிர்நிலை
வீழ்த்தமுடியாத சுயநிலை
உறவுகளின் எமநாவு
நீதிக்கு நேர்நஞ்சு
பெண்ணிடம் வலுவாய் வலிந்து  திணிக்கப்பட்ட முடிவில்லா போர்
ஆணின் ஐவகைக் குற்றவுணர்வு
- Composed by Thenmozhi Das