யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்தைத் திரட்டியதுடன் திரிகோணமலையில் பல ஏக்கர் காணியையும் கொள்வனவு செய்தது. ஆனால் இன்று வரையும் அந்தப் பணத்துக்கும் காணிக்கும் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. (தமிழரசுக் கட்சித் தலைவராகவும், பல வருடங்களாக திரிகோணமலைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இரா.சம்பந்தன்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்)
தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த இரு கட்சிகளும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் சேர்ந்த பொழுதே அதைச் செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தார்கள்? தமிழரசு கட்சி தமிழ் பல்கலைக்கழகம்தான் அமைக்க வேண்டும் என்றும், தமிழ் காங்கிரஸ் கட்சி அமைவது இந்துப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்றும் சண்டை போட்டதில், ஐ.தே.க. அரசாங்கம் அதைச் சாக்காக வைத்து தமிழ் பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைவதை சாதுரியமாகத் தட்டிக் கழித்துவிட்டது.
இந்த நிலைமையில்தான் 1970 இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அரசாங்கத்தில் இணைந்த இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் வற்புறுத்தலாலும், அரசில் இணைந்திருந்த அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா போன்றோரினதும் மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் முயற்சிகளினாலும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைக்க முன்வந்தது.
தம்மால் முடியாமல் போனதை மற்றவர்களின் முயற்சியால் அமைப்பதா என்ற காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது.
பல்கலைக்கழகம் அமைப்பதற்காக திருநெல்வேலியில் இருந்த பரமேஸ்வரா கல்லூரியினதும், மருதனாமடத்தில் அமைந்திருந்த இராமநாதன் மகளிர் கல்லூரியினதும் கட்டிடங்களை அரசாங்கம் சுவீகரித்தபோது, ‘ஐயோ சேர்.பொன்.இராமநாதன் தம்பதியினர் கட்டிய பாடசாலைகளை சிறீமாவோ அரசாங்கம் கபளீகரம் செய்கிறது’ எனத் தமிழரசுக் கட்சியினர் கூச்சல் போட்டனர். ஆனால் இராமநாதனின் அன்றைய வாரிசாகக் கருதப்பட்ட முன்னாள் செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம் (பிரபல சட்டத்தரணி) அவர்கள் இந்தக் கட்டிடங்களில் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் ஆதரித்ததுடன், பின்னர் முற்போக்கு சக்திகளால் அமைக்கப்பட்ட ‘யாழ் பல்கலைக்கழக வளாக விஸ்தரிப்பு இயக்கம்’ என்னும் அமைப்புக்கு தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர் தமிழரசுக்கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிடும் என தமிழ் மக்களின் பழமைவாத சிந்தனைகளைக் கிளறி உசுப்பேத்தப் பார்த்தார்கள். அது எடுபடவில்லை. வட பகுதி கல்விமான்கள் மட்டுமின்றி, தமிழ் பொதுமக்களும் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் வரவேற்றனர் என்பதை அதன் திறப்பு விழாவின் போதும், அதைத் தொடர்ந்து யாழ்.விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதும் திரண்ட சனசமுத்திரம் எடுத்துக் காட்டியது.
தமிழரசுக் கட்சியினர் அகிம்சையே தமது வழி என்றும், தமது கட்சித் தலைவர் செல்வநாயகத்தை ‘ஈழத்துக் காந்தி’ என்றும் பேசி வந்தாலும், வன்முறைக்கும் தயங்காதவர்கள் என்பதை, யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக பேராசிரியர் க.கைலாசபதி நியமிக்கப்பட்டு, திறப்பு விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வந்து வண்ணார்பண்ணையில் உள்ள மைத்துனர் பொன்னம்பலம் (பின்னாளில் யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர்) தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் மீது ஒரு இரவு வேளையில் வீசிய கைக்குண்டு வீச்சுச் சம்பவம் எடுத்துக் காட்டியது.
இந்தச் சம்பவத்தைப் பற்றிய செய்தியை அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் ‘ஈழநாடு’ பத்திரிகையில் பார்த்துவிட்டு நானும் இன்னுமொரு தோழரும் கைலாசபதி அவர்களைப் பார்க்கச் சென்றபொழுது அவர் சிரித்துக்கொண்டே, “நானும் யாழ்ப்பாணத்து பனங்காட்டு நரிதான் என்பது இந்த மடையன்களுக்குத் தெரியாது போலும்” என அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது.
தமிழரசுக் கட்சியினரின் இந்த வகையான மிரட்டல்கள் பயனற்றுப்போய் திட்டமிட்டபடி பல்கலைக்கழகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழகத் திறப்புவிழாவையும், அதற்காக வருகை தரும் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க பங்குபற்றும் நிகழ்ச்சிகளையும் பகிஸ்கரிக்குமாறும், சிறீமாவோ யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இரண்டு நாட்களும் பொது மக்கள் பூரண ஹர்த்தால் அனுட்டித்து வெளியே வராமல் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி பொதுமக்களை வேண்டிக்கொண்டது. ஆனால் தமிழரசுக் கட்சி கேட்டுக்கொண்டதற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்கலைக்கழகத் திறப்பு விழா நிகழ்ச்சியிலும், சிறீமாவோ பங்கு பற்றிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதுடன், அவர் சென்ற வீதிகளின் இருமருங்கிலும் திரண்டு நின்று கையசைத்து தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழரசுக் கட்சியினர் பல்கலைக்கழகம் திறப்பதைத் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விக்கு மேலே தோல்வி கண்டபோதும், ‘சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன்’ போல தமது எதிர்ப்பு நடவடிககைகளைத் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை அந்தப் பீடத்தை இயக்குவதற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டிடங்களை சுவீகரித்தபோது, அதற்கெதிராகவும் தமிழரசுக் கட்சி கூச்சல் போட்டதுடன், சில கிறிஸ்தவ மதகுருக்களையும் அழைத்துக் கொண்டுபோய் அரசாங்கத்தில் இருந்த செல்வாக்குமிக்க அமைச்சரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் முறைப்பாடு செய்தனர். அதுவும் வெற்றியளிக்கவில்லை.
யாழ் பல்கலைக்கழகம் அமையவுள்ள சுற்றாடலில் வசிக்கும் மக்கள் மாணவர்களுக்கு, குறிப்பாக சிங்கள மாணவர்களுக்கு தமது வீடுகளில் அறைகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என தமிழரசுக் கட்சியினர் செய்த பிரச்சாரமும் மக்களிடம் எடுபடவில்லை.
அதுமட்டுமின்றி, ஒரு சமயம் புதிதாக வந்த மாணவர்கள் மீது வெளியார் ஒருவர் மேற்கொண்ட பகிடிவதையால் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கில் திருத்தும் கடையொன்றில் தினவரி குழுமி நின்று வம்பளக்கும் உள்ளுர் வாலிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பொழுது, அதைப் பயன்படுத்திய தமிழரசுக் கட்சியினர், பல்கலைக்கழகத்தை இயங்கவிடாமல் செய்ததுடன், பல்கலைக்கழகத்தை சில வாரங்கள் மூடவும் வைத்தனர். அதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸ் பாதுகாப்புடன் 6 பஸ்களில் வெளியூர் மாணவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வசித்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாநகர முதல்வர் சி.நாகராசா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் திரண்டு பல்கலைக்கழக (பரமேஸ்வரா) சந்தியிலுள்ள ஆலயத்துக்கு முன்னால் தெருவோரம் ஒரு கொட்டகை அமைத்து, அதற்குள் மணல் போட்டு, வாள்கள், கம்பிகள், பொல்லுகள் சகிதம் இரவு பகலாக மாணவர்கள் மீது வன்முறை பிரயோகிப்பதற்கு தயாராக இருந்தனர். அந்த நேரத்தில் அருகிலிருந்த வீதியால் சைக்கிளில் வந்த கல்வியன்காட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவரது மண்ணீரல் பாதிப்புக்குள்ளானது.
தமிழரசுக் கட்சியினர் செய்த அட்டகாசங்கள் ஒருபுறமிருக்க, பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலிகள் யாழ் பல்கலைக்கழகம் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனம் கொஞ்சநஞ்சமல்ல.
புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டு, விஜிதரன் என்ற மாணவனைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தை மறந்துவிட முடியாது. அதுமட்டுமல்ல, பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த செல்வி, மனோகரன், படிப்பை முடித்திருந்த தில்லை போன்றோரை ஒரே நாளில் கடத்திச் சென்று தமது வதை முகாம்களில் பல மாதங்கள் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர். விமலேஸ்வரன் என்ற மாணவனை நடுவீதியில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். அதுபோல மருத்துவ பீட பேராசிரியை ராஜினி திரணகமவை வீதியில் வைத்து பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்தனர்.
இது தவிர, நாவாந்துறையைச் சேர்ந்த பீலிக்ஸ், இணுவிலைச் சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இரு பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்குச் சார்பானவர்கள் என்று சொல்லி கடத்திச் சென்று கொலை செய்தனர்.
1995 ஒக்ரோபரில் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொழுது, புலிகள் வன்னிக்குத் தப்பியோடிவிட, பல்கலைக்கழகத்தில் இருந்த அவர்களது சில ஆதரவாளர்கள் பல்கலைக்கழகத்தை மூடி வன்னிக்குக் கொண்டு சென்று இயக்குவதற்கு முயற்சி செய்தனர். (இறுதி யுத்தத்தின்போது வன்னியிலிருந்து தப்பியோடி தற்பொழுது தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கும் ஒருவர் இதில் முக்கியமானவர்) ஆனால் பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்திய அமைதிப்படை வந்திருந்த காலத்தில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு, அதன் பிரதான கட்டிடத்திலும், பெண்கள் விடுதியிலும் அமைதிப்படையின் சென்னைப் படைப்பிரிவு நிலை கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து அதை விடுவித்து பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பதற்கான முயற்சிகள் எதனையும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையோ அல்லது அவர்களின் தீவிர ஆதரவாளரான அப்போதைய உப-வேந்தர் சு.வித்தியானந்தனோ செய்யவில்லை. ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்களில் இருவர்களான ராஜினி திரணகமவும், கே.சிறீதரனுமே இந்திய அமைதிப்படையுடன் கதைத்து, அவர்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு வழிவகை செய்தார்கள்.
இப்படியே தமிழ் தேசியவாதத் தலைமைகள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு எதிராக மேற்கொண்ட கைங்கரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முதலில் பல்கலைகழகம் வருவதை எதிர்த்தவர்கள், பின்னர் அதைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது, இது ஒரு வகையில் ‘கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதைதான்’. இதை தொடர்ந்து அனுமதிப்பது தமிழ் மக்கள் தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது.
இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்களும், உண்மையில் வரலாறு தெரியாது அறிக்கை விடுபவர்களும் இந்த உண்மைகளைக் கொஞ்சமாவது கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கே இப்பதிவு.