Search This Blog

Saturday, April 11, 2020

படித்துப் பாருங்கள் உருசிக்கும் சின்னஞ் சிறுகதை !

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”
தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.
“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”
”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.”
காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.
“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.
“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”
அவர் சொல்லத் தயங்கினார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.”
“அவர் சொல்ல மாட்டார்… நானே சொல்றேன்… கரன்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.
கேட்டா, “எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”
அவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
விமலா மேலும், அவனை சூடேற்றினாள்…
“இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க. இவர், பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு. எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”
”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு. நான்தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”
”எங்க வெச்சுப்பா தொலைஞ்சிச்சு?” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.
”அதுதாம்பா எனக்கும் புரியலை. விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.
அவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம். அங்க ஒரே கூட்டமா இருந்தது.
கூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம். தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”
”அந்த இளநீர்க்காரன் எடுத்திருப்பானோ!"
“இல்லப்பா… அவன் என் முன்னாலதான் இருந்தான். பின்னால, இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”
விமலா குறுக்கிட்டாள்…
”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா? சுத்த கோமாளித்தனமா இருக்கு. சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும். என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”
”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான்தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன். அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத்தானே இருந்தேன்.”
”ஒரு தடவை தொலைத்தாலும், மொத்தமா, 10 ஆயிரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அங்க, என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி, நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.
”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”
”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மாதானே வீட்டில இருக்காரு. காலைலயும், சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான். இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”
கதிரேசன் குறுக்கிட்டான்.
“விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம். இதுக்குப் போயி…”
“ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம். இங்கே, இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும். நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”
”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற?” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.
“எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க? கொஞ்ச நாள், உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க. அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”
”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.
”அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க? ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”
”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு. குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”
பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.
”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”
“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”
ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு, தந்தையின் அருகில் வந்தாள் விமலா.
“என்னப்பா?”
இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.
சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.
விம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.
கதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.
”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.
” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே.. பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியதுதான். தப்பில்ல..
ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத்தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க.. அதுக்கப்புறம்தான் பொண்டாட்டி, குழந்தைகள்..
நீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்?😳
நான் வர்றேன் மாப்பிள்ளே,
வர்றேன் சம்பந்தி.
காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.
”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.
”என்னம்மா?”
“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”
இந்த வீட்டை கட்டிக் காத்து உன் கணவனை வாழ வைத்து விட்டு,இப்போது மனைவியை இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...
கம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்..
Thanks 
Abdul Majeed

No comments:

Post a Comment