Search This Blog

Tuesday, September 15, 2015

"பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படைகோயில் "ராமசாமி கோயில்”

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.
தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.
பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் 

பஞ்சவன் மாதேவிச்சரம் வரலாறு !!!!!
சோழப் பெருமன்னர்கள் வரிசையில் திலகமென திகழ்ந்த முதலாம் ராஜராஜனின் மனைவியே இந்த பஞ்சவன்மாதேவி.இவர் சேரர் குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள்.திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவுரே இவரின் ஊராகும்.பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி “அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்” என்று கூறுகிறது.திருப்புகலூர் கல்வெட்டால் இத்தேவியின் மற்றொரு பெயர் “நக்கன் தில்லையழகி” என அறிய முடிகிறது.
கோவிலின் முன் தோற்றம்
கோவிலின் முன் தோற்றம்
பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.
IMG_20141102_121909
தேவியின் ஆடல் திறனை விளக்கும் சிற்பம்
பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகளும்,சாதனைகளும் பலவாகும்.நினைவு கூறத்தக்க வகையில் புகழ் மிகுந்து திகழ்ந்ததால் சோழ நாட்டில் ஓர் ஊருக்கே இவர் பெயரால் “பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்களம்” என பெயர் மாற்றம் ஏற்பட்டது.
IMG_20141102_121918
போர்த்திறனை விளக்கும் சிற்பம்
பஞ்சவன் மாதேவிச்சரம் என்பது ராஜராஜனின் தேவி பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றனைகாக எடுக்கப்பட்ட நினைவாலயம்.இத்திருகோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இதனை “பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்” என்று குறிப்பிடுகிறது. இதே கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் தளபதி அருண்மொழியான உத்தம சோழ பிரம்மராயன் பற்றியும், சைவ மடங்களுள் ஒன்றான லகுலிசமடம் பற்றியும் அதன் தலைவர் லகுலிச பண்டிதர் பற்றியும் பல வரலாற்று தகவலை சுமந்து நிற்கிறது.

பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்
பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்
இக்கோவில் திருச்சுற்றில் உள்ள விநாயகர்,பிச்சை தேவர்,ஆலமரச் செல்வர்,லிங்கோத்பவர், பிரம்மன்,துர்க்கை போன்ற சிற்பங்கள் ராஜேந்திர சோழனின் தனி முத்திரையாகும்.இரண்டு சிவபெருமானின் கோல நிலைகளில் பல்லவர்களின் கலைமனம் கமழ்கிறது. இவை கி.பி. 710-715 வரை ஆண்ட இரண்டாம் நந்தவர்ம பல்லவனின் காலத்தில் அவனது கோநகரான பழையாறையில் இடம் பெற்று இருந்த சிலைகளாய் இருக்கலாம்.
IMG_20141102_122433
பல்லவர் கால சிவபெருமான் சிற்பம்
கருவறையின் அர்த்தமண்டபத்தில் உள்ள நந்தியும் கல்தூணும் பழுவேட்டரையர்களின் கலைப்படைபாகும்.இதே போன்ற நந்தியும் தூணும் பழுவுரிலும் காணபடுகிறது. பழுவேட்டரையரின் மகள் என்பதால் இத்தேவி பிறந்த மண்ணின் கலைமனம் கருவறையில் வீசுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற நந்தி
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற நந்தி
IMG_20141102_122306
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற லிங்கம்
சோழ பெருமன்னர்களின் தலைநகராகவும்,சோழ அரச குடும்பத்தினர் இறுதிவரை வாழ்ந்த இடம் என்ற பெருமையை உடைய பழையாறை மாநகரில் ஒரு பகுதியாக திகழ்ந்த பட்டீச்சரம் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது இந்த பஞ்சவன் மாதேவிச்சரம். பட்டீச்சரம் தேனுபுரிச்சரர் திருகோவிலில் இருந்து அரை கி மீ துரத்தில் உள்ளது இந்த பள்ளிப்படை ஆலயம். தற்பொழுது இந்த கோவில் ராமநாதன் கோவில் என்று அழைக்கபடுகிறது.
IMG_20141102_121951
மேற்கூரிய தகவல்கள் குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவின் குடவாயில் கட்டுரைகள் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. பலர் பார்த்து படித்து பஞ்சவன் மாதேவியின் வரலாற்றை தெரிந்துகொள்ள போகும் படி எங்களின் Natives OF Thanjavur Public Welfare Trust அறக்கட்டளை சார்பில் இந்த வரலாற்றை அந்த கோவில் வைத்துள்ளோம், இந்த வரலாற்றை படித்து அதை தொகுத்து எழுதும் பாக்கியத்தை அடியேனுக்கு வழங்கிய எங்கள் Natives OF Thanjavur Public Welfare Trust அறக்கட்டளை நண்பர்களுக்கு என் சிரந்தாழ்த்த நன்றிகள், நான் படித்து பரவசமடைந்த பஞ்சவன் மாதேவி வராலாற்றை இன்று பலரும் பார்க்கும் வண்ணம் அங்கே நிறுவியுள்ளோம், அதை என் கையால் எழுதி கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது என்பதை நினைக்கும் பொழுது வரும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எல்லாம் பஞ்சவன் மாதேவியின் அருள்.
IMG_20141102_122029


Thanks-Thiruganansambandham chandru

No comments:

Post a Comment