சுமார் இருபது அடி நீளமுள்ள தடிமனான கயிறு அது. அதனை கையில் ஏந்தியிருந்த அந்த மாயவித்தைக்காரர் கண்களை மூடி தன் தலையை குனிந்திருந்தார். அவரது உதடுகள் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி இருந்தன. கூட்டம் அசுவாரசியமாக சலசலத்துக் கொண்டிருந்தது. மாயவித்தைக்காரர் கயிறைக் காற்றில் சுழற்ற ஆரம்பித்தார். வேகமாகச் சுழற்றியபடியே கயிறை வான் நோக்கி வீசினார். கூட்டத்தின் பார்வை மேல்நோக்கி உயர்ந்தது. மீண்டும் கீழிறங்கவில்லை. கயிறும்தான். வானுக்கும் நிலத்துக்கும் பாலமாக கம்புபோல விறைத்து நின்றது.
'ஏ பையா! ஏறு அதிலே!
அந்தச் சிறுவன் கூட்டத்தினரைப் பார்த்து கைகளை சந்தோஷமாக அசைத்தான். விறைத்து நின்று கொண்டிருந்த கயிறைப் பற்றினான். வாலில்லா குரங்குபோல சடசடவென கயிறில் ஏறினான். கயிறு வளையவோ, நெளியவோ, சுருண்டு விழவோ இல்லை. கயிறின் உச்சியை அடைந்தான்.பறக்கும் விமானம் ஒன்று மேகத்துக்குள் மறைவதுபோல, காணாமல் போனான். கூட்டம் வாய்பிளந்தது.
மாயவித்தைக்காரர் பி.எஸ். வீரப்பாவின் ஜெராக்ஸ் சிரிப்பு ஒன்றை சிரிக்க, யாருக்கும் பதிலுக்குச் சிரிக்கத் தோன்றவில்லை. அவர், வாள் ஒன்றைத் தன் பற்களால் கவ்வியபடி, கயிற்றைப் பிடித்தார். விறுவிறுவென மேலே ஏறினார். உச்சியை அடைந்தார். வாளைக் கையில் எடுத்தார். சூரிய ஒளிபட்டு வாளின் முனை பளபளத்தது. கூட்டத்தினர் கண்கள் கூச வான்நோக்கி மெளனமாக 'ஆ' உச்சரித்துக் கொண்டிருந்தனர்.
மாயவித்தைக்காரர் தன் வாளை காற்றை வெட்டுவதாக சில முறை குறுக்கும் நெடுக்கமாக வீசினார். ஒரு சில நொடிகள் கடந்திருக்கும். மேலே ஏறிச் சென்று மாயமாகிப் போன சிறுவனின் உடல் பல துண்டுகளாகத் தரையில் விழுந்தது. கூட்டம் அதிர்ந்து சில அடிகள் விலகி நின்றது. சிலர் மயங்கிக் கூட விழுந்தனர். மாயவித்தைக்காரர், ரத்தம் சொட்டும் வாளைத் தன் பற்களால் கவ்வியப்படி சரசரவென கீழே இறங்கினார். கண்களால் கயிற்றுக்கு கட்டளை இட்டார். அது பெட்டி பாம்புபோல சுருண்டு விழுந்தது..
மீண்டும் அந்த வில்ல சிரிப்பு. அடேய் படுபாவி கொலைகார என்று சிலர் மாயவித்தைக்காரரை மனத்துக்குள் சபிக்க ஆரம்பித்திருந்தனர். அவரோ தன் வாளை உறைக்குள் சொருகிவிட்டு ஒரு கம்பளத்தை எடுத்து உதறி தரையில் விரித்தார். சிதறிக் கிடந்த அந்தச் சிறுவனின் உடல் துண்டுகளை அந்த கம்பளத்தில் ஓர் ஒழுங்குப்படி அடுக்கினார். அந்த கம்பளத்தை சுருட்டினார். மீண்டும் கண்களை மூடி ஏதோ மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தார். அடுத்து நிகழவிருப்பது அதிசயமா அல்லது மீண்டும் அதிர்ச்சிதானா? கூட்டத்தினரின் கணகள் விரிந்து கிடந்தன.
கம்பள மூட்டை அசைந்தது. படாரென கம்பளத்துக்குள் இருந்து அந்தச் சிறுவன், முழுமையான உடலுடன் எந்தவிதக் காயமும் இன்றி பழையபடி சிரித்துக்கொண்டு எழுந்து நின்றான். கூட்டத்தினரை நோக்கி கையை அசைத்தான். எழுந்த ஆரவார ஒலியை மாயவித்தைக்காரர் பெருமிதத்துடன் எதிர்கொண்டார்.
இந்த வித்தை இந்தியாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் நடத்தப்பட்டதுதான். இந்த மாயவித்தையை உருவாக்கியது யார், எந்த காலகட்டத்திலிருந்து அரங்கேற்றப்படுகிறது என்ற வரலாறு தெரியவில்லை ஆனால் இந்தியாவுக்கு வந்த மார்க்கோ போலோ, இபின் பதூத்தா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் இந்த கயிறு வித்தை குறித்து வியந்து எழுதி வைத்திருக்கிறார்கள். மகுடி ஊதினால் சுருண்டு கிடக்கும் கயிறு, பாம்பை போல படமெடுத்து எழுத்து அப்படியே வானை நோக்கி உயரமாக வளரும் வித்தை குறித்தும் வியந்திருக்கிறார்கள். உயிரை விட்டு உடல் மாற்றுவது உள்ளிட்ட பல அதிசயங்களை நிகழ்த்திய மாயவித்தைக்காரர்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றனர் என்ற வாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..
நன்றி-முகில்
நன்றி-முகில்
No comments:
Post a Comment