Search This Blog

Thursday, April 2, 2020

தமிழ் சினிமாவின் இலக்கணம் மகேந்திரன்

தமிழ்த் திரையின் உயிர்த் துடிப்பு கொண்ட இயக்குநர் மகேந்திரன் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. சினிமா ஒரு தவம் என்றோ அதற்காகவே காத்துக்கிடந்தவர் என்றோ அவரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் சினிமாவுக்கு வந்தது அவரே சொல்லியிருப்பதுபோல் ஒரு விபத்துதான். ஆனால், சினிமாவுக்கு வந்த பின்னர் அவர் படைத்த சினிமாக்களில் சிலதாம் அவரைக் காலாகாலத்துக்கும் சாகாவரம் பெற்றவராக்கியிருக்கின்றன.
https://www.hindutamil.in/
கோதைமலர் பூம்பாதம் வாவென்றதோ....
உங்களுடன் ஓரிருமுறை பேச வாய்த்தது மகேந்திரன் சார், இறுதியாக தொலைபேசியது உங்களின் ஓர் பிறந்த நாளில் . வாழ்த்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது உங்கள் பள்ளிக்கரணை வீட்டிற்கு ‘அவசியம் வாங்க’ என்ற அழைப்போடு உரையாடலை நிறைவு செய்தோம் . இன்று மெட்டி ஒலிக் காற்றோடு கேட்டபடி அசைபோடுகிறேன்.கைஸெ கஹூன் பாடல் பார்க்கவேண்டும் அதில் அந்த பெண்களின் உதடு விலகாத புன்னகை மலர்வதை காண வேண்டும் . ஜானி பார்க்க வேண்டும்.இருவருக்குமான அந்த காதலைச் சொல்லும் தருணத்தில் அப்டித்தான் பேசுவேன் என்ற வசனத்தை மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டும். . 

உதிரிப்பூக்களில் சினிமாவிற்கு போகலாம் என்று விஜயன் சொன்னதும் அஸ்வினி வெளியே வந்து வானம் பார்க்கும் காட்சியை ரசிக்க வேண்டும் .

முள்ளும் மலரும் அந்த கையிழந்தபிறகு அணைக்க வரும் ஷோபா அழும் போது ஒன்னுமில்லம்மா என்று ரஜினி சொல்லும் காட்சிக்கு நெகிழாமலிருக்க வேண்டும்.

அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா பாடல் இம்முறையாவது ஊர் நினைப்பை தூண்டிவிடாமல் பாதியில் அணைக்காமலிருக்க வேண்டும்.

மெட்டி ஒலிக்காற்றோடு பாடலில் புத்தரின் காதில் பூச்சுட்டி விளையாடும் அந்த இளங்குமரிகளில் இறந்து போன அக்காவின் நினைப்பு மேலெழுந்து விடக்கூடாது. பாலப்பட்டி நதிக்கரையில் எடுக்கப்பட்டதாம் உதிரிப்பூக்கள் இறுதிக் காட்சி ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும் .
பூட்டாத பூட்டுகள் ,நண்டு இரண்டும் என்னுள் நிகழ்த்தியவை குறித்துப் பேச மீண்டும் எங்கே போய் தேவ்ராஜ் அண்ணனைத் தேடுவேன் நான் .ஜானியில் வரும் தோழி சகலத்திற்கும் சாட்சியாய் இருப்பது எப்படி என்று யோசித்துக் கிடந்த நாட்கள் பல உண்டு. உங்கள் படத்தில் வரும் சரத் பாபு, உங்கள் படங்களில் வரும் வெண்ணிற ஆடை ராமமூர்த்திக்கு ஒரு பிரத்யேக முகம் வைத்திருந்தீர்கள் இல்லையா சார் . உங்கள் படங்களில் வரும் தாய் உங்கள் படங்களில் வரும் தங்கைகள் .. எனக்கும் நிஜத்திலும் சற்றுக் கூடக் குறைவான நலன்களுடன் வாய்த்தார்கள் சார். நான் தான் முள்ளும் மலரும் படத்தில் ஜானியாகவும் ஜானி படத்தில் முள்ளும் மலரும் படத்தில் வரும் ஷோபாவின் காதலனாகவும் அசந்தர்ப்பமாக வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருப்தியாக இருக்கிறேன் . ஆமாம் ,பெரிதும் அர்த்தச் சுமையற்ற கணங்களால் ஆன பல நிகழ்வுகள் தான் பின்னாளில் கோர்த்துப் பார்க்கும் போது வாழ்வாக எஞ்சி நிற்கிறது . Piece of Art,Small Act of love யாருக்கோ தூண்டலாக ஒரு கணநேர உந்தமாக மாறும் பொழுதை எந்த மனசால் தீர்மானிக்க முடியும் எந்த கலைஞனால் அறுதியிட முடியும் .உங்கள் கதைகளில் வரும் சம்பவங்கள் யாவும் “ நேர்பவை” திட்டமிடலுக்கெதிரான வாழ்வின் அபத்தங்கள். இயல்புகள் என்று நம்புகிறவை எப்படி வாழ்வோட்டத்தில் திரிந்து போகின்றன என்று பேச முயன்றவை.இந்த உலகம் கேளிக்கைக்காரர்களுக்கானது போல் தோன்றினாலும் மெய்யான கலைதான் எளிய அன்பை நம்பும் மனிதர்களின் சாவை ஒத்தி வைக்கிறது.நானும் சாவை ஒத்தி வைக்கும் சிறு கீற்றை உங்களிடமிருந்து பெற்றிருக்கிறேன் . நன்றி அலெக்ஸாண்டர் சார். உங்களுடைய ராஜ்ஜியத்தில் சூரியனும் நிலவும் உதித்தும் மறைந்தும் உயிர்வளர்ப்பார்கள் .
நேச மித்ரன்

No comments:

Post a Comment