இந்துக்களுக்கே இந்து மதத்தைப் பற்றி விளக்கி உரைக்க வேண்டிய அவசர அவசிய சூழ்நிலைகளும் தேவைகளும் ஏற்பட்டு விட்டன. இன்னும் சொல்லப் போனால், தாய்ப்பசு கூடத் தனது கன்றினை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இயற்கையான உய்த்துணர்வு இருக்கும் போது; இந்துக்கள் மட்டும் தங்களின் மூலவர்களாக, காவலர்களாக, அருளுலக வாரிசுகளாக, வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் தமிழர்களை, தமிழ்மொழியை, தமிழ்நாட்டை உய்த்துணர முடியாமல் போனது ஏன்? எவ்வாறு? எதனால்?
இம்மண்ணுலகில் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து மண்ணின் ஈசர்களான [ஈசர் = தலைவர்] மணீசர்களைப் பண்பாட்டுக்குரிய மனதைப் பெற்ற 'மனிதர்களாக' மாற்றியதுதான் இந்துமதம். இந்துமதம் பதினெண் சித்தர்களால்; தங்களது தாய்மொழியான தமிழ்மொழியில் இன்றைக்கு 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால் 'இளமுறியாக் கண்டம்' [இளமை மாறாமல் = The Immatured Soil] என்ற பெருநிலைப் பரப்பில் படைக்கப் பட்டது.
தனி மனிதர், குடும்பம், சமூகம், அரசு என்ற நான்கு வகை நிலைகளுக்கும் தேவையான கருத்துக்களை 'வாக்கு', 'வாக்கியம்', 'வாசகம்' என்ற மூன்று வகைகளாக 'இயல்', 'இசை', 'நாடகம்' என்று முத்தமிழில் வழங்கியவர்களே பதினெண் சித்தர்கள்.
இந்து மதத்தைக் 'கருக்கள்', 'குருக்கள்', 'தருக்கள்', 'திருக்கள்' என்ற நான்கு வகை நிலையினரே நாற்சுவர்க் கோட்டையாகக் காத்திடும் மரபு .தோற்றுவிக்கப் பட்டது. இவர்கள், 'நான்மறைகள்', 'நான்முறைகள்', 'நானெறிகள்', 'நான்வேதங்கள்' என்ற நான்கு பிரிவு கொண்ட நான்கு செயல்நிலைகளை வடிவமைப்புச் செய்தார்கள். இவற்றின் உயிர் நிலையாக 1. நேமம், 2. நியமம், 3. நிடதம், 4. நிட்டை என்ற நான்கும்; 1. சுருதி, 2. ஆரணம், 3. ஆகமம், 4. மீமாம்சை என்ற நான்கும் படைக்கப் பட்டன. இவை துணை, இணை [நேமம், துணை நேமம், இணை நேமம்] என்ற இரு பிரிவுகளோடு ஒவ்வொன்றும் மூன்று வகையான அமைப்பைப் பெற்றன.
மனிதர்கள், மதத்தைச் செயலாக்கிடப் 1. பூசை [பூ+ செய்] 2. தவம், 3.வேள்வி, 4. சித்தம் என்ற நான்கு பெரும் பிரிவுகளாக்கினர். இதன்படி, குருவழியாகப் 1.பயிற்சி, 2. முயற்சி, 3. தேர்ச்சி, 4. முதிர்ச்சி என்ற நான்கு நிலைகளைக் கடக்கும் பாடத்திட்டம் வகுக்கப் பட்டது. அதில் கல்வி கற்றவர்கள் 1. பத்தி, 2. சத்தி, 3. சித்தி, 4. முத்தி என்ற நான்கு வாழ்வியல் நிலைகளைப் பெறும் உறுதியும் வாய்ப்பும் வசதியும் உருவாக்கப் பட்டன.
பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் இந்து மதத்தைச் செயலாக்கிட; 1. 48 வகைச் சித்தர்கள் 2. 48 வகைக் கருப்புகள், 3. 48 வகை வழிபடு நிலையினர்கள், 4. 48 வகைக் கருவறை மூலவர்கள், 5. 48 வகை அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், 6. 48 வகை மருளாளர்கள், மருளாளிகள், மருளாடு நாயகங்கள், 7. 48 வகைப் பதினெண்சித்தர் பீடாதிபதி வழி ஆச்சாரியார்கள், 8. 13 வகைக் கருவழி ஆச்சாரியார்கள், 9. 13 வகைக் குருவழி ஆச்சாரியார்கள் என்று ஒன்பது வகை அருளுலக ஆட்சியாளர்களை உருவாக்கினார்கள்.
இந்து மதத்தில் உயிரோட்டமாக எண்வகை ஆச்சாரியார்கள் 1. ஈசுவராச் சாரியார், 2. ஆதி ஈசுவராச்சாரியார், 3. சிவாச்சாரியார், 4. ஆதி சிவாச்சாரியார், 5. பரமாச்சாரியார், 6. ஆதி பரமாச்சாரியார், 7. சங்கராச்சாரியார், 8. ஆதிசங்கராச் சாரியார் உருவாக்கப் பட்டு உள்ளனர்.
இவர்களெல்லாம் செயல்பட முத்தீ ஒம்பல் என்று 1. கந்தழி நிலை, 2. வள்ளி நிலை, 3. கொடி நிலை என்று மூன்று வகை வழிபாடும்; ஐந்தீ வேட்டல் என்று 1. ஓமம், 2. ஓகம், 3. யாகம், 4. யக்ஞம், 5. வேள்வி என்று ஐந்து வகை வழிபாடும் படைக்கப் பட்டன.
கருவூறாரின் பரம்பரையினரின் அருளுலகப் படைப்பாற்றலுக்கு உரியவையாக இரவில் மட்டும் கூறப்படும் 1.தந்திரம், 2.தந்திறம், 3.தந்தரம், 4. தாந்தரம், 5. தாந்தரீகம் என்பனவும்; காகபுசுண்டரின் பரம்பரையினரின் அருளுலகக் காப்பாற்றலுக்கு [போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்தல்] உரிய பகலில் மட்டும் கூறக்கூடிய 1.மந்திரம், 2.மந்திறம், 3. மந்தரம், 4. மாந்தரம், 5. மாந்தரீகம் என்பனவும்; இருகாலத்தும் கூறக் கூடிய 1.எந்திரம், 2.எந்திறம், 3.எந்தரம், 4.ஏந்தரம், 5.ஏந்தரீகம் என்பனவும்; இந்து மதத்தில் படைக்கப் பட்டு 'இந்துமதம் ஓர் அண்ட பேரண்டமாளும் மதம்' என்ற நிலையைப் பெற்றுள்ளது. மாறாத இளமையும் குன்றாத சுவையும், அமுதப் பண்புமுடைய உயர் தனிச் செம்மொழியான தமிழ் மொழியே இந்த அண்டபேரண்டமாளும் இந்துமதத்தின் ஆட்சி மொழி; அருள்மொழி; கடவுள்மொழி; தெய்வமொழி; தேவமொழி யாகும்.
பதினெண்சித்தர்கள், 1.ஒன்பது கடவுட்கலைகள், 2. ஒன்பது தெய்வீகக்கலைகள், 3. ஒன்பது பேய்க்கலைகள், 4.ஒன்பதுநோய்க்கலைகள், 5.ஒன்பது தேய்கலைகள், 6.நாற்பத்தெட்டு அருட்கலைகள், 7.அறுபத்து நான்கு ஆயகலைகள்.... என்று இந்துமதத்துக்காகப் பலவகைக் கலைகளைப் [ARTS] படைத்துள்ளார்கள்.
இவர்கள், அருளின் வெளிப்பாடுகளாக 1.அத்திறங்கள், 2.சாத்திறங்கள், 3.சூத்திறங்கள், 4.தோத்திறங்கள், 5.நேத்திறங்கள்... என்று இந்துமதத்துக்காகப் பலவகை அறிவியல்களைப் [Sciences] படைத்துள்ளார்கள்.
இவர்கள் எண்ணற்று உருவாக்கியுள்ள இந்துமதச் சட்டதிட்டக் கட்டுப்பாடுகள் 1.குருபாணி, 2.குருமார் ஒழுக்கம், 3.பூசாவிதி, 4.கருவறைப்படி, 5.பலிநூல், 6.மடநூல், 7. அடுக்களைச் சாத்திறம், 8. படையல்நூல், 9.கனாநூல், 10. மணநூல் 11.மோகநூல், 12.தாக நூல், 13.வேகநூல், 14.போக நூல்... என்று பல உள்ளன.
இப்படிப் பதினெண்சித்தர்கள் கணக்கற்ற கோடி ஆண்டுகளாக அண்ட பேரண்ட முழுதும் பரவியுள்ள இந்துமதத்தை மிகமிகத் தெளிவாக வரையறுத்து ஏட்டுலகச் செய்தியாகவும், [Theoretical Information], நாட்டுலக நடைமுறை அநுபவ அறிவாகவும் [Practical Knowledge] தூய வாய்மை மிகு அமுதப் பைந்தமிழில் வழங்கி யுள்ளார்கள். இப்பேருண்மைகளை உணர முடியாத குருடர்களும், உணர மறுக்கும் திருடர்களும் அன்னியர்களிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு தமிழுக்கும்; தமிழாக உள்ள இந்து மதத்துக்கும் துணிந்து துரோகிகளாக, விரோதிகளாகச் செயல்படுகிறார்கள். இவர்களை விடப் போலிகளும் நாத்திகர்களும் நல்லவர்களே; எனவே, இந்துமத மூலவர்களாகவும் காவலர்களாகவும் உள்ள தமிழர்கள் பொறுப்போடும் பொறுமையோடும் சிந்தித்துத் தங்களை இந்துக்கள் என்று உணர்ந்தும் உணர்த்தியும் உரையாற்றியும் செயல்படல் வேண்டும்.
தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம், தமிழின ஒற்றுமை, தமிழின உரிமை, தமிழகப் பெருமை, தமிழர் தன்மானம், தமிழின மானம்.... முதலிய அனைத்தும் தமிழ்ப் பாரம்பரியத்தையே வளர்க்கும், விளைவிக்கும் இந்துமதத்தில்தான் உள்ளன என்ற பேருண்மையில்தான் அனைத்து விடிவுமுள்ளன.
ஒவ்வொரு தமிழனும் சாதி, மதம், அரசியல்கட்சி, பதவிவெறி, பணவெறி, புகழ் வெறி முதலிய அனைத்தையும் கடந்து தன்னைத் தமிழினத்தான் என்று மட்டும் உணர்ந்து ஒன்று திரண்டு ஒற்றுமைப் பட்டால்தான் வருங்காலம் ஒளி நிறைந்ததாக இருக்கும். இந்த ஒற்றுமையை உருவாக்கும் அறிவியல் நிலையும் ஆற்றல் நிலையும் ஆர்வ நிலையும் தமிழ்மொழியில் உள்ள இந்துமதத்துக்குத்தான் உண்டு! உண்டு! உண்டு! ...
No comments:
Post a Comment