திருவள்ளூர்: ஓட்டுநரின் சோர்வை அளந்து, தேவைக்கேற்ப குறுஞ்செய்தி மூலம்
எச்சரிக்கை விடுக்கும் கருவி ஒன்றை எஸ். ஏ பொறியியல் கல்லூரி மாணவர்கள்
வடிவமைத்து உள்ளனர். தூக்கமின்றி தொடர்ந்து வண்டியோட்டுவதால் ஏற்படும்
விபத்துகளைத் தவிர்க்க உதவும் வகையில் இந்தக் கருவி தொடர்ந்து
உணர்வலை(சென்சார்) மூலம் ஓட்டுநரின் அசதி, சோர்வு ஆகியவற்றை மதிப்பிட்டு
எச்சரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
எஸ். ஏ பொறியியல்
கல்லூரி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வீரராகவபுரத்தில்
அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர்களான எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்
குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் தம் விரிவுரையாளர் ஹெச். அன்வர் பாஷாவின்
வழிகாட்டுதலின்படி, இந்த, கண்ணிமை மாறுபாடுகளைக் கொண்டு ஓட்டுனரின்
விழிப்புநிலையைக் கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இக்கருவி ஓட்டுநரின் கண்ணிமை மாறுபாடுகளைக் கணக்கில் கொண்டு அசதியை
அளவிடுகிறது. மேலும், அந்நிலை குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது,
வாகனத்திற்குரிய வரின் எண்ணுக்கு குறுஞ்செய்தி யொன்றையும், ஓட்டுநரின்
அப்போதைய காணொளி ஒன்றையும் அனுப்பி வைக்கிறது. மேலும் ஜீபீஎஸ் எனப்படும்
இடமறிதல் நுட்பம் மூலம் வாகனம் இருக்கும் இடத்தையும் காண்பித்துத்
தருகிறது. பின்வருங்காலங்களில் வண்டியின் நிலை, வானிலை, ஓட்டுநரின்
உடல்நிலை உள்ளிட்ட மற்றக் காரணிகளும் இதில் சேர்க்கப்படும் என்று
தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் இந்த வடிவமைப்பைக் கல்லூரித்தலைவர்
டி. துரைசாமி, முதல்வர் சுயம்பழகனார் ஆகியோர் பாராட்டினர்
Related Posts : Good to Read,
Health
No comments:
Post a Comment