Search This Blog

Sunday, November 10, 2013

கதைத்தேர்வின் அளவுகோல்

கதைகள் பற்றிய என் அளவுகோல் என்ன என்பது இக்கதைகளை வாசிப்பவர்களுக்கே எளிதில் தெரியும். துரதிருஷ்டவசமாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எதையுமே வாசிப்பதில்லை. இருந்தாலும் புதியவர்களுக்காக ஒரு விளக்கம்.
*
தமிழில் இருவகைக் கதைகள் உள்ளன. என்னதான் வேறுபாடுகளைக் குழப்பி மழுப்பினாலும் அது அப்பட்டமான உண்மை. முதல்வகைக் கதைகள் பிரபல வணிக இதழ்களாலும் அவை முன்வைக்கும் கேளிக்கை எழுத்தாளர்களாலும் எழுதப்படுபவை. அதை வணிக எழுத்து அல்லது கேளிக்கை எழுத்து என்கிறோம். இன்னொன்று வாழ்க்கையை நோக்கி எழுதப்படும் இலக்கியம்.
இந்தக் கதைவரிசை இலக்கிய எழுத்தை முன்வைக்க, வளர்க்க மட்டுமே வெளியிடப்படுகிறது. வணிகக் கேளிக்கை எழுத்தை உருவாக்குவதோ வளர்ப்பதோ என் நோக்கம் அல்ல.
கதைகள் எழுதுபவர்கள் இருவகை. முதல்வகை வணிக எழுத்தை முன்மாதிரியாகக் கொண்டவர்கள். சிறுவயது முதலே வார இதழ்களையும் பின்னர் வணிகக் கேளிக்கை எழுத்துக்களையும் வாசிப்பவர்கள் மெல்ல நாமும் எழுதலாமே என எழுத ஆரம்பிக்கிறார்கள். வார இதழ்களுக்கு அனுப்பிப்பார்க்கிறார்கள். அவர்களில் சிலர் எனக்கும் கதைகளை அனுப்புகிறார்கள்
இவர்கள் எழுதும் கதைகளுக்குச் சில தனித்தன்மைகள் உண்டு. அவை ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும். இவர்களின் பங்களிப்பாக அவற்றில் இருப்பது ஒரு சிறிய வேறுபாடு மட்டுமே. காதல்கதைகள், உறவுகளின் கதைகள், சமூகக்கருத்துக்களைச் சொல்லும் கதைகள் என அவை பலவகை. முதலிருவகை கதைகளை குமுதம் விகடனுக்கு அனுப்பலாம். மூன்றாம் வகை தினமணிக்கதிருக்கு.
இவ்வகைக் கதைகள் கோடம்பாக்கத்தில் கதைவிவாதம் நிகழும்போது பிறக்கும் கதைகளைப்போன்றவை. கதைகளின் பெரிய ’டேட்டாபேஸ்’ அவர்களிடம் உள்ளது. கதை எப்படி அமையவேண்டும், எப்படி முடியவேண்டும் என்பதுபோன்ற விதிகளெல்லாமே அந்த கதையுலகில் இருந்து உருவாகி வந்துள்ளன. யோசித்து யோசித்து புதிய சாத்தியங்களுக்காகத் தேடி சட்டென்று ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள்,எழுதுகிறார்கள். அதை ‘knot’ என்று சினிமாக்காரர்கள் சொல்க்கிறார்கள். இவர்கள் ‘Plot’ என்கிறார்கள்
இத்தகைய கதைகள் பொதுவாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். ஏனென்றால் அவை வேறுவகையில் பிறரால் ஏற்கனவே எழுதப்பட்டவை. வடிவம், மொழி எல்லாமே முன்னரே தயாராக உள்ளன. அவற்றை எழுதுபவர்கள் நிறைய வாசித்து நிறைய எழுதி தேர்ந்தவர்கள்.
இதற்கு மாறானவை இலக்கிய முயற்சிகள். அவற்றை எழுதுபவர்கள் இலக்கியப்படைப்புகளை வாசித்தவர்கள். தங்களுக்கென ஒரு வாழ்க்கை கவனிப்பு கொண்டவர்கள். அதை எழுதலாமே என்ற நம்பிக்கையை அவர்கள் வாசித்த இலக்கியம் அளிக்கிறது, ஆகவே எழுதிப்பார்க்கிறார்கள்.
அவர்கள் அதிகம் எழுதியவர்கள் அல்ல. மேலும் அவர்கள் சொல்ல விரும்பும் வாழ்க்கை அவர்கள் மட்டுமே அறிந்தது. அவர்களே உருவாக்குவது. ஆகவே அவர்களின் நடை திணறுகிறது. அமைப்புச்சிக்கல்கள் வருகின்றன. முட்டிமோதுகிறார்கள். சிலசமயம் அவர்கள் உணர்ந்த வாழ்க்கைத்துளியை கதையாக ஆக்கிவிடுகிறார்கள்.
இத்தகைய கதைகளில் ஓர் உண்மையான வாழ்க்கைத்தருணம், ஒரு அந்தரங்கமான கண்டடைதல் இருந்துகொண்டிருக்கிறது. எங்கோ உண்மை வாழ்க்கையில் இருந்துதான் அதை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதை அடையும்படி அவர்களின் மனம் திறந்திருக்கிறது. அதுவே அவர்களை இலக்கியவாதிகளாக ஆக்கக்கூடிய முதல் தகுதி.
ஆக நான் பார்ப்பது முதலில் அக்கதைகள் வாழ்க்கையிலிருந்து எழுந்தவையா இல்லையா என்பதையே. அவை வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்ததுமே இலக்கியத்துக்கான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டன.
அந்த வாழ்க்கையைச் சொல்லுமளவுக்கு கதையின் கட்டமைப்பு அமைந்துள்ளதா என்பதே அடுத்தவினா. என்னைப்பொறுத்தவரை கதைக்கட்டமைப்பு என்பது ஒரு சீர்மையின் வெளிப்பாடு. அதாவது கதைக்கு என ஒரு சமநிலை தேவை. உணர்த்தவரும் விஷயத்தால் தீர்மானிக்கப்படும் சீர்மை அது. அதுவும் இருந்தால் அது நல்ல கதை.
மற்றபடி கதையில் உள்ள சிறிய அமைப்புச்சிக்கல்களையோ மொழியையோ நான் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் இவை புதியவர்களின் கதைகள். அவையெல்லாம் அவர்கள் எழுதி எழுதி கண்டடைந்து மேம்படுத்திக்கொள்ளவேண்டியவைதான்.
எனக்கு அனுப்பப்பட்ட கதைகளைப் பார்க்கையில் பொதுவாக , கேளிக்கை எழுத்தை முன்னுதாரணமாகக்கொண்டு எழுதியவர்கள் சரளமான, பிழையற்ற நடையையும், அனைவருக்கும் புரியக்கூடிய இயல்பான பொதுஉரையாடலையும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கதைகள் நிராகரிக்கப்பட்டு இங்கே பிரசுரமாகும் கதைகளை வாசிக்கையில் அவை பிழைகளுடன், தட்டுத்தடுமாறும் மொழியில் இயல்பற்ற உரையாடல்களுடன் எழுதப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள். அவர்களே எனக்கு கோபமாக எதிர்வினையாற்றுகிறார்கள்.
வணிகஎழுத்துக்குத்தான் சரளமும் , புரியும்தன்மையும் நிபந்தனைகள். ஜிலுஜிலுவென செல்லும் ‘ஆற்றோட்டமான’ எழுத்துப்பாணி அங்கே மிகவும் செல்லுபடியாகும். அது எழுதி எழுதி அடையப்பெறும் ஒரு தொழில்நுட்பத் தேர்ச்சி மட்டுமே. ஆகவேதான் வணிக-கேளிக்கை எழுத்தாளர்கள் எழுதும்தோறும் தேர்ச்சி அடைகிறார்கள். வயதாகி அவர்களுக்கே சலிக்கும் வரை, அல்லது சாகும்வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இலக்கியத்தில் அந்த ஜிலுஜிலுப்புக்கு எந்த மதிப்பும் கிடையாது. வாழ்க்கையை ஆசிரியன் எப்படி எதிர்கொண்டிருக்கிறான் என்பது மட்டுமே இலக்கியத்திற்கு ஆதாராமான வினா. வாழ்க்கையின் நுட்பங்கள் சார்ந்த அவதானிப்பும் அவற்றை வெளிப்படுத்தும் முறையும் மட்டுமே அளவுகோல்கள். தொழில்நுட்பப்பயிற்சிக்கு மிகக்குறைவான மதிப்பெண்தான்.
இளமையில் அந்த நுண்ணுணர்வு அதிகமாக இருக்கிறது. காலப்போக்கில் எழுத்தில் தேர்ச்சி கைவரும், நுண்ணுணர்வு மெல்ல மழுங்க ஆரம்பிக்கும். ஆகவேதான் இலக்கியவாதிகள் அவர்களின் சிறந்த ஆக்கங்களை இளவயதில் உருவாக்கிவிடுகிறார்கள். பின்பு எழுத்தை ஒரு உத்தியாக மட்டுமே முன்னெடுக்கிறார்கள். கட்டாயத்துக்காக மட்டும் எழுதுகிறார்கள்
தன்னை தொடர்ந்து உடைத்து மறு ஆக்கம் செய்தும், தொடர்ந்து களத்திலிருந்தும் செயல்படும் மேதைகளே இந்தச் சிக்கலை தாண்டிச்செல்கிறார்கள். தமிழில் அசோகமித்திரன் சிறந்த உதாரணம்.
ஆகவே இக்கதைகளைத் தேர்வுசெய்யும்போது நான் தேர்ச்சியை ஓர் அளவீடாகக் கொள்ளவில்லை. புதிய நிலத்தில் நடப்பபவர்கள் தடுமாறவே செய்வார்கள். ராஜபாதையின் சொகுசு அங்கிருக்காது. நான் தேடுவது வாழ்க்கையின் ஒரு துளியை மட்டுமே.
உதாரணமாக இக்கதைகளிலேயே சொல்கிறேன். காட்சனின் பரிசுத்தவான்கள் முற்றிலும் குமரிமாவட்டத் தமிழில் எழுதப்பட்ட கதை. இம்மொழியில் எழுதப்படும் ஐம்பது கதைகளாவது ஒரு மாதத்தில் இங்கே பிரசுரமாகின்றன. அதில் ஒன்று இப்போது இன்னும் ஒருபடி மேலெழுந்து இலக்கியத்திற்குள் வந்துள்ளது.
அக்கதை முன்வைக்கும் மையம் பெண்களுடனான ஆண்களின் அதிகாரஉறவு. அதை ஆன்மீகம் தீண்டுவதே இல்லை என்ற யதார்த்தம். நகையை விரும்பும் பெண்ணின் நகையை வாங்கி அதை விற்று நகையைப்புறக்கணிக்கும் கிறித்தவசபையை உருவாக்குவதை அது மென்மையாக, அழுத்தாமல் சொல்கிறது. அதைச் சொல்ல அது தேர்ந்தெடுத்திருக்கும் களம் இற்செறிப்பில் இருக்கும் பெண்.அவளுடைய இல்லத்துக்குள் வரக்கூடிய விஷயங்கள் வழியாகவே கதை செல்கிறது.
ஓர் இடத்தில்கூட அந்த வடிவ ஒருமையை அது மீறவில்லை. நான் சீர்மை என்பது அதைத்தான். ஒரு இடத்தில் கதை அப்பெண்ணின் உலகைவிட்டு விலகியிருந்தால் அதன் வடிவம் சரிந்திருக்கும். இந்த தனித்த பார்வையும் வடிவக்கச்சிதமும்தான் நல்ல கதைக்கான அடையாளங்கள்.
இன்னொரு கதை விஜய்சூரியனின் கடைசிக்கண். வாழ்க்கை முழுக்க அறமே இல்லாத ஒருவர் கடைசிக்கணத்தில் அடைந்த திறப்பின் கணம் அது. அவரது மகனில் இருந்து அதை அவர்க் கண்டுகொள்கிறார். கடைசிக்கணம். விழித்து உறைந்த அந்தக் கண்களை ஒருவர் வாழ்க்கையிலிருந்தே பெறமுடியும்
அதை எழுத விஜய்சூரியன் தேர்ந்தெடுத்த களம் மருத்துவமனை. அந்தக்களத்தின் சித்தரிப்பை விட்டு வெளியே செல்லவேயில்லை கதை. உச்சகட்ட மனிதவாதையை விட்டு கதை விலகவில்லை. அதைத்தான் அதன் வடிவச்சீர்மை என்கிறேன். அறமே இல்லாது வாழ்ந்தவரை அவரது சொந்தக்காரர்கள் ஆண்மையாக வாழ்ந்தவர் எனக் கொண்டாடுவதைச் சொல்கிறது கதை. ஏனென்றால் அந்த வாழ்க்கை அவருடையது மட்டுமல்ல, அவரைப்போன்ற பிறருடையதும்தான்.
நீர்க்கோடுகளில் பிளெஸி என்ற மூளைவளராத மகள் இல்லை என்றால் அக்கதையை இலக்கியமாக நினைத்திருக்க மாட்டேன். அழைத்தவனில் அந்தப் பெற்றோரின் மனநிலை மீது ஆசிரியர் காட்டும் மெல்லிய கவன ஈர்ப்பு இல்லையேல் அதை கதை என முன்வைத்திருக்கமாட்டேன். நிர்வாணம் கதையில் ஒரு குடும்பத்தின் பரிபூரண வீழ்ச்சி எப்படி ஓர் அம்மாவின் விடுதலையாக அமைகிறது என்ற நுட்பமே அதை நான் தேர்ந்தெடுக்கக் காரணம்.
இதெல்லாம் நான் மட்டும் சொல்லக்கூடியவை அல்ல. இக்கதைகள் வெளிவந்தபோது தமிழின் மிகச்சிறந்த வாசகர்கள் அனைவருமே இந்த நுட்பங்களை ஒன்றுவிடாமல் கவனித்துப் பதிவுசெய்திருப்பதை வாசகர்கடிதங்களில் எவரும் காணமுடியும். அந்த நுண்ணுணர்வையே நாம் புதுமைப்பித்தன் முதல் இன்றுவரையிலான இலக்கிய இயக்கம் மூலம் உருவாக்கியிருக்கிறோம். இக்கதைகள் அந்த நுண்ணுணர்வை நோக்கி எழுதப்பட்டவை.
அந்த நுண்ணுணர்வுடன் பேசுவதற்கான பயிற்சிக்களமே இக்கதைகள். சென்றமுறை வந்ததுபோலவே இக்கதைகள் பற்றிய விரிவான ஆய்வு-மதிப்பீடுகளை எதிர்பார்க்கிறேன். இக்கதைகளை எழுதியவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் அவை உதவுமென நினைக்கிறேன்
THANKS  http://www.jeyamohan.in

No comments:

Post a Comment