பூலித்தேவன்:-
நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும் பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்டனர்.
1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.
பின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பவரோடு போரிட்டு வெற்றி பெற்றார். இதுவே பாளையக்காரர்கள்-ஆங்கிலேயர்
பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க சேதுபதி:-
இருபது ஆண்டுகளுக்கு மேலாக கப்பத் தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நாவாப் விரும்பினார். 1772-ல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆக்யோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த ராணி, அவரது இரு பெண்குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-ல் நாவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார். சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புகொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்துகொண்டார்.
ஆற்காடு நவாப்பின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில் அவரது சலுகைகளை எதிர்பார்த்து தங்களது வணிகத்தைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் சேது நாட்டின் வணிகத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் சேதுபதி மன்னர் மறுத்தார். எனவே பலவகையில் முயன்று ஆற்காட்டு நவாப்பிற்கும், ஆட்சியர் பவுனிக்கும் முறையிட்ட கம்பனியர் போர் தொடுக்க இரகசியத் திட்டம் தீட்டினர். மன்னருக்கு மிகவும் நம்பிக்கையான தளபதி மார்ட்டினிடம் கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் இருந்தன. எனவே 1795 பிப்ரவரி எட்டாம் நாள் கம்பெனியாரது படை இராமநாதபுரம் கோட்டை வாயிலைக் கடந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது.
ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் பயிற்சிபெற்ற நாலாயிரம் போர்வீரகள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் இருந்தும் மன்னர் வஞ்சகமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டார். மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரைத் தப்புவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தபின் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சியொன்றைத் தொடங்கினார். முதுகுளத்தூர், அபிராமபுரம், கமுதி ஆகிய ஊர்களிலுள்ள கம்பெனியாரது தானியக் களஞ்சியம், கிடங்குகள் ஆகியன சூறையாடப்பட்டன இப்புரட்சியில், குளத்தூர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சலங்குறிச்சி மக்களும் கலந்துகொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இப்புரட்சி கம்பெனியாரது ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது. மன்னர் சேதுபதி திருச்சி சிறையிலிருந்து நெல்லூர் சிறைக்கு மாற்றப்பட்டர். அங்கு கொடுமைதாளாது, இரவுபகல் தெரியாமல் பதினான்கு ஆண்டுகள் கழித்தார். குற்றாச்சாட்டுகள், விசாரணைகள் என எதுவுமே இல்லாமல் தமது வாழ்நாளைச் சிறையில் கழித்த சேதுபதி மன்னர் 1809-ல் இறந்தார்.
வேலு நாச்சியார்:-
1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை (doctrine of lapse) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்:-
ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
கும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மருதுபாண்டியர் :-
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக தனது திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார்.
ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றியபின் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதுசகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர். 1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.
மருது சகோதரர்கள் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கவாக அமைந்தது. இசுலாம் மற்றும் கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார். தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி முடிய மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போரட்டதிற்கு வித்திட்டனர் .
1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.
24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
இதுவே தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக மன்னர்கள் நடத்திய போர். அதன் பின்னர் நடந்ததே வேலூர் புரட்சி, பல தமிழர்களுக்கு இது இன்றும் தெரியாமல் இருப்பதே வேதனை, பகிரவும்..... THANKS
No comments:
Post a Comment