Search This Blog

Tuesday, February 5, 2013

உலக புற்றுநோய் தினம்



புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் முன் காப்போம் என்று நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே இந்த தினத்தை நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட்ட மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு இருந்தால் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

புற்றுநோய் என்பது எம்மால் தினந்தோறும் பேசப்படும் ஒரு விசயமல்ல என்ற போதும், எமக்கு நெருங்கியவர்கள் யாரையாவது நிச்சயம் இதனால்
இழந்திருப்போம்.

கமல்ஹாசன் புற்றுநோயால் உயிரிழந்த திரைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் புற்றுநோய்க்கு எதிராக போராடிய போது, பேஸ்புக்கில் நூற்றுக்கான செய்திகள் பரிமாறிக்கொண்டோம்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் உயிரிழந்தார் என கேள்விப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான அஞ்சலிகளை பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு தானா, அவற்றுடன் புற்றுநோயை மறந்துவிடப்போகிறோமா?

புற்றுநோய் என்பது வலியை விட கொடியது, தலைமுடி உதிரும், உடல் பலவீனமடையும், உடலில் புள்ளிகள் உண்டாகும் என பலரும் நினைக்கலாம். உண்மையில் அவர்கள் பயப்படுவதும், கோபப்படுவதும், இந்த பிரச்சினைகளுக்காகவா அல்லது புற்றுநோய் விரைவில் அவர்களின் உயிரை பறிக்க போகிறது என்பதற்காகவா?

இங்கு கவனிக்கப்பட வேண்டியது புற்றுநோயுடன் வாழ்பவருக்காக பரிதாப்படுவது அல்ல. அவர்களுக்கு உங்கள் பரிதாபம் தேவையில்லை. மாறாக உங்கள் அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் நோயாளிகளாக முழுவதும் மாறிவிடப்போவதில்லை.

அவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்களை முழுமையானதாக திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

நீங்கள் அப்படிப்பட்ட ஒருவர் மீது காட்ட நினைக்கும் பரிதாபமும், அனுதாபமும் அவர்களை மேலும் பயத்திற்குள் தள்ளிவிடுகிறது. மாறாக, அவர்களை உற்சாக படுத்துங்கள். அவர்களது பயத்தை தோற்கடியுங்கள். உங்களை போன்ற சக மனிதராக பாருங்கள். உலகின் புற்றுநோய் 47% வீதம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்படுகிறது. 55% வீதமானோர் அங்கு தான் புற்றுநோயால் உயிரிழந்து போகின்றனர்.

ஆனால் வளரும் நாடுகள் அலட்சியமாக இருந்தால், 2030 இல் புற்றுநோய் 81% வீதம் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது. 2030 இல் வருடத்திற்கு 21.4 மில்லியன் புற்றுநோயாளிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இணங்காணப்படலாம் என எதிர்வு கூறியுள்ளது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்.

விமானப்பயணத்தில் உங்களுக்கு விமான பணிப்பெண்கள் ஒரு விசயம் சொல்வார்கள். 'மற்றவர்களுக்கு உதவும் முன்னர் நீங்கள் ஒட்சிசன் முகமூடிகளை போட்டுக்கொள்ளுங்கள்'.

இது தான் புற்றுநோய் தொடர்பிலும் சொல்லக்கூடியது. ஆல்ககோல், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பருமன் அதிகரித்தல், உடற்பயிற்சி இன்மை இப்படி எதுவுமே புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

ஒவ்வொரு வருடமும் உலகில் 22 % வீதமான புற்றுநோய் தாக்கம் புகையிலை மூலமே வருகிறது என்கிறது ஒரு ஆய்வுத்தகவல். புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம் சிறுநீர் பை, கணையம் மற்றும் வயிறு மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் புற்று என்று இத்தனை வகை புற்றுநோய் உருவாகிறது. புகைபிடிக்கும் பழக்கம் என்பது, அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்போருக்கும் பாதிப்பை தருகிறது.

இன்றைய புற்றுநோய் தினத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய நான்கு நம்பிக்கைகளும், உண்மைகளும் இவை.

1. நம்பிகை : புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விசயம் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

2.நம்பிக்கை : புற்றுநோய் என்பது நன்கு ஆரோக்கியமான, முதிர்ந்த, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மாத்திரமே ஏற்படுகிறது என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : புற்றுநோய் உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது.

3.நம்பிக்கை : புற்றுநோய் என்பது ஒரு மரண தண்டனை என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்.

4. நம்பிக்கை : புற்றுநோய் என்பது என் விதி என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும்.

எனவே இவற்றை கருத்தில் கொள்ளுங்கள். புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடி தெளிவடைந்து கொள்ளுங்கள். புற்றுநோயை தடுப்பதற்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையும், உங்களை சுற்றியுள்ள சுற்றத்தாரின் ஆதரவும் நிச்சயம் தேவை.

No comments:

Post a Comment