பராசக்தி
(1952) - தமிழகத்தின் தலை விதியை மாற்றியமைத்த கருவிகளின் பட்டியலில் இந்த
திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. திராவிட உணர்வு , சுயசிந்தனை, மூட
பழக்கவழக்கங்கள் ஒழிப்பு போன்ற சமுதாய அக்கறைகளை பரப்ப திரைப்படத்
தோட்டத்தில் விதைக்கப்பட்ட விதை இந்த
திரைப்படம். இதனை தொடர்ந்து தான் சமுதாய சிந்தனையுடன் பல திரைப்படங்கள்
எடுக்கப்பட்டன என்று சொன்னால் அது மிகையாகது. பராசக்தி திரைப்படம் 1000
அடிகளுக்கு மேல் தயாரித்த பின் அதை போட்டு பார்த்த அதன் தயாரிப்பாளர்
ஏவிஎம் செட்டியார் அவர்களுக்கு புதுமுக நடிகர் கணேசனின் மீது அவ்வளவு
திருப்தி இல்லை ஆகவே K.R.ராமசாமி அவர்களை வைத்து மீண்டும் இதை படமாக்கலாம்
என்றார். ஆனால் படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான P.A.பெருமாள் அவர்கள்
"என் தங்கை" நாடகத்தில் நடித்த இந்த கணேசன் தான் நடிக்க வேண்டும் படத்தை
முழுசாக எடுத்து முடித்து பார்ப்போம் என்று கணேசனின் மீது நம்பிக்கை
வைத்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. நமக்கு ஒரு நடிகர் திலகம்
கிடைத்தார். இந்த படத்தில் நடிப்பதுக்காக இளைஞர் கணேசன் வாங்கிய மாத
சம்பளம் Rs.250. இந்த பராசக்தி திரைப்படம் ஆன்மீகவாதிகளையும்
அக்ரஹாரங்ளையும் எந்த அளவுக்கு தாக்கியது என்பது படம் பார்த்தவர்கள்
அறிவார்கள். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. முதல்வர் ராஜாஜி
அவர்கள். அவருக்கு இந்த திரைப்படத்தின் மீது முழு திருப்தி இல்லை இருந்தும்
திரைப்படம் மக்களுக்காக எடுக்கபடுவது அவர்களே அதை பார்த்து நல்லது கெட்டது
தெரிந்து கொள்ளட்டும் என்று திரைப்படத்தை வெளியிட அனுமதித்தார். ஆகவே
திரைப்படம் 17 அக்டோபர் 1952 ஆம் ஆண்டுதீபாவளி நாளன்று வெளியீடு கண்டு
மாபெரும் வெற்றி பெற்றது. இளைஞர் கணேசன் முதன் முதலில் கேமரா முன் நின்று
நடித்த திரைப்படம் "பூங்கோதை" என்ற திரைப்படமே. ஆனால் பராசக்தி முதலில்
வெளியீடு கண்டதால் அது அவரது முதல் படம் ஆனது. பூங்கோதை அவரது ஆறாவது படமாக
வெளியீடு கண்டது.
No comments:
Post a Comment