Search This Blog

Wednesday, April 25, 2012

அனுபவத்திற்கு வயது தேவையில்லை







Join Only-for-tamil
குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். 
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.


கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?


அதிர்ஷ்டசாலி யார்?

Join Only-for-tamil


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். 

வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். 
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.
தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்.


Join Only-for-tamil

No comments:

Post a Comment