"நாள்தோறும் பார்வையில் நான் விடும்
தூது.
கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.
நானொரு ஆண்டாளோ திருப்பாவைப்
பாட
ஏழையை விடலாமோ இதுபோல வாட"
தி. ஜானகிராமனின் மோகமுள் நாவல் திரைப்படமாக்கப்பட்ட போது இசைஞானி இளையராஜா இசையமைத்த “சொல்லாயோ வாய் திறந்து” என்றப் பாடலின் வரிகள் இவை. சண்முகப்பிரியாவின் இரசத்தை அப்படியே பிழிந்து கொடுத்து விட்டார் இளையராஜா. பொதுவாக பக்தியை வெளிப்படுத்தும் பாடலுக்குத்தான் சண்முகப்பிரியாவை எடுத்துக் கொள்வார்கள். அந்த இராகம் பக்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு இன்னொரு இராகத்தால் முடியுமா என்பது தெரியவில்லை. பக்தியின் ஒரு வெளிப்பாடுதானே காதலும் காமுமும்.
வாயில் நீர் ஊறவைக்கும் அழகுக் கொட்டிக் கிடக்கும் இளம் பெண் தங்கம்மா. வறுமையின் காரணமாக கிழவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். கிழவனோ வாயில் சளுவாய் ஒழக உறங்கிக் கொண்டிருக்கிறான். ஏற்கெனவே அவளோடு உறவு கொண்டிருந்தாலும், கதாநாயகன் பாபு தற்போது அவளைக் கண்டு கொள்ளாததால் அவள் விரகதாபத்தில் உருகுகிறாள். “நானொரு ஆண்டாளோ திருப்பாவைப் பாடா” என்று கேட்கிறாள். கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து தன்மேல் ஊற்றிக் கொண்டு காமத்தைத் தணிக்கப்பார்க்கிறாள். கடைசியில் ஊர்க்குளத்தில் அவர் உடல் மிதக்கிறது. அம்பின் வாய்ப்பட்டு துடிப்பவர்களைப் போல் காமம் அதன் வயப்பட்டவர்களை வதைக்கிறது. இந்த வேதனை ஆண்டாளுக்கும் உண்டு. அவள் வாயாலே இப்படிக் கூறுகிறாள்
ஆரே உலகத் தாற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
காரேறுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும்
கிடப்பேனை
ஆராவமுத மனையான் தன் அமுத வாயிலூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை
நீக்கிரே
ஆயர்பாடி முழுவதும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற கறுத்த எருது போன்ற கண்ணன் மீது காதல் கொண்டு துன்பப்பட்டு கிடப்பதாகப் புலம்புகிறாள் ஆண்டாள். ஏங்கி ஏங்கி தளர்ந்து முறிந்து கிடக்கும் அவள் இடும்பையைத் தீர்க்க யார் இருக்கிறார்கள். அதனால் அவளே அதற்கான மருந்தையும் சொல்கிறாள். உண்ண உண்ணத் திகட்டாத அமுதமாகிய ஆராவமுதனின் வாயில் ஊறிய அமுதத்தை எடுத்து வந்து, அது உலர்வதற்கு முன்னதாகவே கொண்டு வந்து பருகக் கொடுத்தால் அவளுடைய வலி அகலுமாம்.
ஒருவேளை கண்ணன் வாயமுது கிடைக்கவில்லையென்றால் அவன் ஊதும் வேய்ங்குழலின் துளையில் ஒழுகும் நீரைக் கொண்டு வந்தாவது முகத்தில் தெளியுங்கள் என்கிறாள்.
அழிலும் தொழிலும் உருக்காட்டான்
அஞ்சேலென்னான் அவனொருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று
போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி
வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத்
தடவீரே
கண்ணீர் விட்டு அழுதாலும் கைகளைக் கூப்பித் தொழுதாலும் அவன் தன்னுடைய உருவத்தைக் காட்டமறுக்கிறான். அது பரவாயில்லை. என்னை நோக்கி அஞ்சாதே என்று ஒரு வார்த்தை சொல்லாலாம்அல்லவா. அதையும் செய்ய மறுக்கிறான். ஆனால் என்னை நெருக்கி அணைத்து முன்னும் பின்னும்சூழ்ந்து போகாமல் நிற்கிறான் (ஆண்டாளால் இதை உணர மட்டுமே முடிகிறது) ஆநிரைகளை மேய்த்தபடி குழலூதி வரும் கண்ணபிரானின் புல்லாங்குழலின் துளைகளில் இருந்து வெளியாகும்அந்த நீரைக் கொண்டு வந்து குளிர்ச்சியடையும் படி என் முகத்திலே தடவுங்கள் என்கிறாள்.
ஒருவேளை ஆண்டாள் போல் தங்கம்மாவும் நாச்சியார் திருமொழியோ திருப்பாவையோ பாடியிருந்தால் அவளுக்கு பாபு கிடைத்திருப்பானோ?
No comments:
Post a Comment