ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டலாம். ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு பிளாட்டை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியிருக்கின்றனர், சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் துறையினர்.
அப்படி இந்த கட்டடத்தில் என்னதான் சிறப்பும் வித்தியாசமும் என்கிறீர்களா? இதன் மூலப் பொருட்கள் தான். முற்றிலும் வித்தியாசமான இதன் மூலப்பொருள் குறித்து பார்ப்போம்...
ஜிஎப்ஆர்ஜி என்றால் என்ன?
உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அளவு சிமென்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்து தான் ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையினர் இந்த மாதிரி வீட்டை அமைத்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம் தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய் விடுமா என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த புதிய தொழில் நுட்பம் நிச்சயம் பயன்படும் என்கின்றனர் பொறியாளர்கள்.
பரீட்சார்த்த முறையில் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டை, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
ஐ.ஐ.டி,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் டாக்டர் தேவதாஸ் மேனன் மற்றும் டாக்டர் மெஹர் பிரசாத் ஆகியோரிடம் நேயர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி: சாதாரணமாக கட்டப்படும் வீடுகளை தவிர்த்து இந்த வீடுகளை கட்டுவதால் எவ்வளவு சேமிக்கலாம்?
பதில்: தற்போதைய சூழ்நிலையில் கட்டப்படும் வீடுகளின் செலவைக் காட்டிலும் இந்த ஜிப்சம் பலகை கொண்டு வீடுகட்டினால் 20 சதவீதம் வரை சேமிக்கலாம், தவிர இந்த மாதிரியான கட்டடங்களுக்கு பிளாஸ்டரிங் தேவைப்ப டுவதில்லை. குறைந்த நாட்களில் , குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு இந்தக் கட்டடங்களை கட்டிவிடலாம். 8 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பை மரபு சார் கட்டடத்தைக் காட்டிலும் 50 சதவீதம் எடை குறைவானதாகவே அமைக்க முடியும். இதனால் அஸ்திவாரம் அமைப்பதற்கு ஆகும் செலவைக் குறைத்து அதிக அளவில் பணம் சேமிக்க இயலும்.
கேள்வி: கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம், இவை எங்கு கிடைக்கின்றன?
பதில்:இந்தியாவில் கேரள மாநில கொச்சியிலும், மும்பையிலும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை இவற்றை தயாரிக்கின்றன.
எதிர்காலத்தில், தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சுதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது.
ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நில நடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும். ஜி.எப்.ஆர்.ஜி பலகைகள் 12 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் 124 மிமீ கனம் கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன.
கேள்வி: உலகில் ஐ.ஐ.டியில்தான் முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா?
பதில்: ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில், கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கேள்வி: 6 லட்சம் ரூபாய்க்கு பிளாட் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், இந்த கட்டடங்களின் ஸ்திரத்தன்மை எப்படி இருக்கும்
பதில்: இந்த வகை கட்டடங்களின் ஸ்திரத்தன்மை, மரபு சார் கட்டடங்களுக்கு நிகரானதாக இருக்கும். ஒப்பிட்டுப் பார்க்கும் போது பராமரிப்புச் செலவு கனிசமாக குறைவு.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றதான இவ்வகை கட்டடங்களை கட்ட மணல், சிமென்ட், தண்ணீர், இரும்பு எல்லாமே குறைவான அளவிலேயே தேவை. இவ்வகைக் கட்டடங்களின் கான்கிரீட் தட்பவெப்ப சூழலின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவதில்லை. இதனால் மரபுசார் கட்டடங்களைக் காட்டிலும், இவற்றின் ஸ்திரத்தன்மை பன்மடங்கு அதிகம்.
கேள்வி: ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பயன்படுத்தி சராசரியாக எத்தனை மாடிகள் எழுப்பலாம்?
பதில்: கட்டடம் அமைக்கப்படும் பகுதி, நிலநடுக்க அபாய வளைவில் (seismic zone) எந்த பட்டியலில் அமைந்திருக்கிறது என்பது முக்கியம். மிதமான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய ஜோன் 3 (moderate seismic risk) பகுதியில் 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடியை அமைக்கலாம். ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பேனல்களுடன் ஆர்.சி., ஷியர் வால்ஸ் (RC shear walls) எனும் மற்றுமொரு தொழில்நுட்பத்தை புகுத்தி 10க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டடத்தையும் எழுப்ப முடியும்.
கேள்வி: இதுபோன்ற வீடுகளை வீட்டுவசதி வாரியங்கள் கட்டுவதற்கு ஊக்குவிப்பீர்களா?
பதில்: குறைந்த செலவில் கட்டப்படும் இந்த மாதிரியான வீடுகளை அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீட்டுவசதி வாரியங்களும் பின்பற்ற உகந்தது. தொகுப்பு வீடுகள் கட்ட ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) மிகவும் ஏற்புடையது. இருப்பினும் இவற்றை அமைப்பதில் தரம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
இதற்கான பிரத்யேக பணியாளர்களைக் கொண்டு நல்ல முறையில் திட்டத்தை செயல்படுத்துதல் அவசியம். எனவே வீட்டு வசதி வாரியங்கள் இவ்வகை வீடுகளை கட்டும் பட்சத்தில் கட்டுமானப் பணிகளை நல்ல பயற்சி பெற்ற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியது அவசியம்.
மணல் திருட்டை தடுக்க வேண்டும், நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் இப்படி பல கட்டாயத்தில் இருக்கும் தருணத்தில் குறைந்த அளவு சிமெண்ட், குறைந்த அளவு இரும்பு, குறைந்த அளவு தண்ணீர், மிகக் குறைவான அளவில் மணல் கொண்டு நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும் கட்டடங்களை கட்ட முடிந்தால் அது நிச்சயம் வரப்பிரசாதமாகத்தான் அமையும்... பார்ப்போம்!
No comments:
Post a Comment