Search This Blog

Tuesday, July 12, 2011

சகிப்புத் தன்மை

சகிப்புத் தன்மை       

தற்கொலை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் சர்வ சாதாரணமாக வந்து கொண்டிருக்கின்றன.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

துன்பங்களைத் தாங்க முடியாமல் இந்த முடிவுக்கு  வருகின்றவர்கள்   பலர்.

தற்கொலை பற்றி முடிவு செய்ய எவ்வளவு துணிச்சல் வேண்டும்?

அந்த துணிச்சலை மூலதனமாகக் கொண்டு வாழ்வதற்கு ஏன் முயற்சி செய்யக் கூடாது?

சகிப்புத் தன்மை என்பது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.

"ஐயோ! என்னால் தாங்க முடியவில்லையே!" என்ற அலறல் ஒவ்வோர் உள்ளத்திலும் கேட்கிறது. சிரித்துக் கொண்டே அவற்றைச் சகித்து கொள்ளும் பழக்கம் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

காலையில் கண் விழித்ததிலிருந்து, இரவு   படுக்கைக்கு போகும் வரை துன்பங்களையே சந்திப்பவர்கள் உண்டு. இதில் சகிப்பு தன்மையை எப்படி வரவழைப்பது? 

மனம் மரத்துப் போய் விட வேண்டும்; உணர்சிகளை கொன்றுவிட வேண்டும்; எந்த அடியையும் தாங்கும் உள்ளதைப் பெற்று விட வேண்டும்.

நாம் விரும்பி பிறக்காததுப் போலவே, நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவையல்ல.

கோடானுகோடி மக்களுக்கு நடுவிலே- இல்லை கோடானுகோடி குணங்களுக்கு நடுவிலே நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

'எல்லாம் நிறைந்ததுதான் உலகம்' என்று கண்டு கொண்டுவிட்டால் , சகிப்புத் தன்மை வந்து விடும்.

'ஒன்று நடந்தே தான் தீரும் என்றால், அதிலே கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது' என்றான் மராட்டிய ஆசிரியன் காட்கரி.

இதைத்தான் 'விதி' என்று இந்து மதம் சொல்கிறது. 

எனது தாயார் மரணப் படுக்கையில் இருந்த போது சென்னையின் மிகப்பெரிய லேடி டாக்டர் வந்து பார்த்தார். அப்போது மாலை மணி ஆறு.

என்னை அவர் தனியாகக் கூப்பிட்டு, " இரவு பன்னிரண்டு மணிக்கு உயிர் போய்விடும்", என்றார்.

அப்போது என் தாயார் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆறு மணி நேரம் நான் மரணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் நிலை எப்படி  இருந்திருக்கும்?  

நடந்தே தீரப் போகிற ஒன்றுக்காக நாம் ஏன் அழ வேண்டும்?

ஏமாற்றம்; தோல்வி; நடுக்கம்; எரிச்சலூட்டும் சூழ்நிலை; இரக்கமற்ற மனிதர்கள்; இவற்றுக்கு நடுவே ஒரு மனிதன் வாழ முயற்சி செய்கிறான்; வாழ்ந்தே ஆக வேண்டும் என்று தீர்மானிக்கிறான்; வாழ்ந்து விடுவோம் என்று துணிகிறான்; அவனுக்கு சகிப்புத் தன்மை வந்து விடுகிறது.

பிறக்கும் போது வாழ்க்கைகென்று ஒரு நோக்கம் இல்லை; பிறந்த பிற்பாடு அமைகின்ற சூழ்நிலை ஒரு  நோக்கத்தை தோற்றுவித்து விடுகிறது. இதற்கு முக்கிய தேவை சகிப்புத் தன்மை.

 இப்பொழுதெல்லாம் சகிப்புத் தன்மையை வரவழைப்பதற்கு மாத்திரைகளே வந்து விட்டன.

ஒரே மாதிரி வாழ்வில் எரிச்சல் அடைந்து, மேல் நாட்டு மனிதர்கள் சீரழிந்த வாழ்கையை தொடங்கி விட்டார்கள். ஆனால், வாழ்க்கைக்கு அது வழியாகாது.

நிரந்தரமானது துன்பம்; வந்து போவது இன்பம் ; இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாகக்  கண்டு கொண்டு விட வேண்டும்.

தைரியத்திலும், நம்பிக்கையிலும் வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எனக்கு ஏற்ப்பட்ட சித்ரவதைகள் கொஞ்சமல்ல.

இரக்க குணத்தாலேயே  அழிந்தவன் நான்.

சகித்துக் கொள்ளப்  பழகினேன்; இன்னும் பழகிக் கொண்டுதான் இருக்கிறேன்!

அழுவதால் பிரச்சனை தீரும் என்றால், நான் அழத் தயார். ஆனால், ஆறுதலுக்காக பல நேரங்களில் அழுவதுண்டு; முடிவில் ஒரு நம்பிக்கையை வரவழைத்துக் கொள்வேன்.

எவ்வளவு பெரிய தத்துவங்களைப் பேசுகிறவனுக்கும், நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி வருகின்றன.

அவநம்பிக்கையைக் குறைப்பது அல்லது போக்கடிப்பது சகிப்புத்தன்மையே .

சகிப்பு தன்மையின்   மூலம் அனுபவங்கள் சேகரிக்கப்படுகின்றன.

அளவு கடந்து துன்பங்களை அனுபவித்தவன் தன் வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளபடி எழுதினால் உலகமே பயங்கரமாக காட்சி அளிக்கும்.

மேல் கிளையிலே நாகம்; கீழே வேங்கை; நடுக் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை.

கை வலிக்கும்; சகித்துக் கொள்ளுங்கள். நேரம் ஆக ஆக வேங்கை விடைபெற்றுக் கொள்ளும்.

சகிப்புத்தன்மையின் இறுதி மகிழ்ச்சிகரமான வெற்றியாக இருக்கும்.

காட்கரியின் பொன் மொழியை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

"ஒன்று நடந்துதான் தீரும் என்றால், அதில்  கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?"

கவிசக்ரவர்த்தி கண்ணதாசன் 
கடைசி பக்கம் என்ற நூலிலிருந்து...................



சங்கே முழங்கு! சங்கே முழங்கு!!
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!


அன்புடன் ........
ப. ரவிச்சந்திரன் 

No comments:

Post a Comment