சாந்தியின் மதிப்பு
Taoism என்றொரு சமயம் இருக்கிறது. சீனாவில். லாவோட்ஸ என்பவரால் தோற்று விக்கப்பட்டது என்பார்கள். மிகவும் பழமையான சமயம். தாவொயியர்களிடையே வழங்கும் ஒரு கதை. இதை ஏற்கனவே அகத்தியத்தில் போட்டு, இறுதியில் ஒரு கேள்வியையும் கேட்டிருந்தேன். யாருமே இன்றுவரை பதில் சொல்லவில்லை. இப்போது புதிய ஆட்கள் பலர் இருக்கிறார்கள். ஆகவே மீண்டும் இந்தக் கேள்வியை மிதக்கவிடுகிறேன். இதே மாதிரி கதை நம்மிடமும் உண்டு.
அது என்ன கதை?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒரு சன்னியாசி காட்டில் ஒரு கல்லைக் கண்டெடுத்தார். அதை அவருடைய தொங்கு மூட்டையில் வைத்துக்கொண்டு வந்தார். ஓர் ஊரை ஒட்டிய பெரிய மரத்தடியில் இருந்த கல்மேடையில் தம்முடைய மூட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார்.
அப்போது ஒருவன் வேகமாக ஓடிவந்தான்.
அவன் அந்த சன்னியாசியைக் குலுக்கி எழுப்பி, "எங்கே அந்தக் கல்? அந்த அரிய கல் எங்கே? அதை கொடு" என்றான். "என்ன கல்?" என்று சன்னியாசி கேட்டார். நேற்று இரவு நிதிக் கடவுள் என் கனவில் வந்தார். அவர் " இந்த ஊருக்கு வெளியில் தங்கி யிருக்கும் சன்னியாசியிடம் ஒரு கல் இருக்கும். அது உன்னை மிகப் பெரிய செல்வந்தனாக ஆக்கும்", என்று என்னிடம் சொன்னார். சன்னியாசி தம்முடைய மூட்டைக்குள் குடைந்து அந்தக் கல்லை எடுத்தார்.
"நான் இந்தக் கல்லைத்தான் காட்டில் கண்டெடுத்தேன். விசித்திரமான கல். ஆகவே கையில் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்தா. உனக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்," என்று சொல்லி விட்டு அந்தக் கல்லை அவனிடம் கொடுத்துவிட்டு, கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் மூட்டையைத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்து, மறுபுறம் திரும்பிக்கொண்டு முழங்கால்களை மடக்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கலானார்.
அந்த மனிதன் தன் கையிலிருந்த கல்லை மிகவும் வியப்புடன் பார்த்தான். அவனுடைய உள்ளங்கையை நிரப்பிக்கொண்டு அந்தக் கல் இருந்தது.
உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல்!
வீட்டுக்குத் திரும்பினான்.
தூக்கமே வரவில்லை.
இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டேயிருந்தான். ஒரே குழப்பம். சிந்தனை.
விடிந்தவுடன் வேகமாக அந்த மரத்தடிக்குச் சென்றான். சன்னியாசி இன்னும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.
அவரைக் குலுக்கி எழுப்பிச் சொன்னான்,
"இந்த மகத்தான விலை மதிப்பில்லாத உயர்ந்த வைரத்தை, கூழாங்கல்லை எறிவது போல சர்வசாதாரணமாக எறியச் செய்த மிகப்பெரும் அரிய செல்வம் எதையோ நீ வைத்திருக்கிறாய்.
அதை எனக்குத் தா!"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சரி. யோசித்துப்பாருங்கள்.
No comments:
Post a Comment