Search This Blog

Tuesday, May 24, 2011

செப்பு மொழிகள்

வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால், அவன் குடும்பம் கூடச் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் வீழ்ந்து விட்டால், நாய்கள் கூட மிதிக்கிறது. இருக்குமிடமும், இருக்கும் நிலையும் குறைந்த அளவே உள்ளவரை, யானை சவாரிதான் கிடைக்காதே தவிரக் கழுதை சவாரி செய்ய வேண்டிய கட்டாயம் வராது.

2  வீழ்த்தியவன்  ஜாக்கிரதையாக இல்லை என்றால், வீழ்ந்தவனுக்குதான் வெற்றி.

3  பலவகை மலர்களை மாலையாகக் கட்டினாலும், சில வண்ண மலர்கள் மட்டுமே எடுப்பாக தெரிகின்றன. இந்திய தேசிய இனங்களில் தமிழர், வங்காளியர், மராட்டியர் ஆகியோர் அவ்வகையினர்.

4  காதல் உன்னதமானதென்று சொன்னவனே முதன் முதலில் அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்.

5   'காமம் விசாரமானது' என்று நீங்கள் வாதாடுகிறீர்களா? உங்கள் தாய் அப்படி நினைத்திருந்தால், அந்த வாதமே பிறந்திருக்காதே.

6  சீட்டாட்டத்தில் ராஜாவும், ராணியும் சேர்ந்தால் மட்டும் அது சேர்ந்ததாக கருதப்பட மாட்டாது. கூட ஜாக்கியும் சேர வேண்டும். அதன் பொருளென்ன? ராஜாவும் ராணியும் சேர்வதற்கே ஒரு தரகன் வேண்டி இருக்கிறது என்று பொருள்.

7  கடிகாரம் எப்போது மெதுவாகப் போகிறது? காதலிக்காகக் காத்திருக்கும் போது!

8  தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள்; பரிசு வரப் போகிறது. பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்; தண்டனை வரப் போகிறது. எது வந்தாலும் அமைதியாக இருங்கள்; எதுவுமே வராது.

9  நீங்கள் சொன்ன விஷயம் பொய்யாகி விட்டால், அதற்காக வருந்தாதீர்கள். ஏனென்றால் அதன் மூலம் ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள்.

10  சுவையான சொற்பொழிவு எது? பேசி முடிக்கும் வரை இது பொய்யென்று தெரியாமலிருப்பது!

கவியரசு கண்ணதாசன்
செப்பு மொழிகள் 250 என்ற நூலில் இருந்து .....
.

No comments:

Post a Comment