கெக்கிராவ ஸஹானாவை நான் முதலில் வாசித்தது மல்லிகையில்தான். ஸஹானாவுக்கு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்து, அவரை ஊக்கப்படுத்தினார் ஜீவா. “பாரும் ஒரு சிங்களப் பகுதியில இருக்கிற முஸ்லிம் பொம்பிளைப்பிள்ளை என்ன மாதிரி எழுதுகிறா” என்று ஜீவா வாய் நிறைய, மனசு நிறையப் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
யாராவது இளைய - புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுதுவதைக் கண்டு விட்டால் போதும், இப்பிடித்தான், அவர்களைப் பற்றியே எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பார் ஜீவா. 1980 களில் வாசுதேவன்(மட்டக்களப்பு), சோலைக்கிளி, ஜபார், சந்திரா தியாகராஜா போன்றவர்களைப் பற்றியெல்லாம் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்.
ஜீவாவின் வாய்பைப் பயன்படுத்தி, 1990 களில் அதிகமாக எழுதினார் ஸஹானா. சில சமயம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ஸஹானா மல்லிகையில் எழுதிக் கொண்டேயிருந்தார்.
பிறகு வெவ்வேறு பத்திரிகைகள், இதழ்களிலும் எழுதினார் ஸஹானா. ஸஹானாவின் கவனம் எப்பொழுதும் மனித உறவுகளுக்கிடையிலான சிக்கல்களும் உணர்ச்சிச் சுழிப்புகளுமாகவே இருந்தது. அன்பை ஆதாரமாகக் கொண்ட வாழ்க்கையை அவர் வலியுறுத்தினார். அதிக சிரமமில்லாத எளிய எழுத்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் கேள்விப்பட்டேன். ஸஹானாவின் கதைகளைப் பற்றிப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஆய்வு செய்ததாக.
எழுத்துகளின் வழியே அறியப்பட்ட அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் எனப் பல தடவை யோசித்திருக்கிறேன். கடிதங்களில் எழுதும்போது நிச்சயமாகத் தனக்கும் அப்படி ஆர்வமுண்டு. வாருங்கள் என்று அழைத்திருந்தார். பல தடவை கெக்கிராவவின் வழியாகச் சென்றிருக்கிறேன். கடந்த ஆண்டு கெக்கிராவவில் ஒரு நண்பர் வீட்டில் நடந்த நிகழ்வொன்றுக்காகச் சென்றிருந்தேன். அப்பொழுது கூடச் ஸஹானாவின் வீட்டுக்குச் செல்ல வேணும், அவரைச் சந்திக்க வேணும் என்று விரும்பியிருந்தேன். நண்பர்களுடன் சென்றிருந்ததால் அதற்கான நேரம் கிடைக்கவில்லை. பிறகொரு தடவை பார்க்கலாம் என்று தாகம் நிரம்பிய நினைவோடு வந்தேன்.
இனி எப்போதுமே பார்க்க முடியாது. உங்களுக்குத் தந்த கால அவகாசம் எல்லாம் முடிந்து விட்டது என்று நிரந்தரத் துக்கத்தை உணரவைத்துச் சென்று விட்டார் ஸஹானா.
அவர் தந்து விட்டுச் சென்ற எழுத்துகள்தான் இனி அவருடைய அடையாளமும் உறவும் நினைவுகளும்.
என்றும் எங்களோடுதான் நீங்கள் ஸஹானா...Karunakaran Sivarasa
No comments:
Post a Comment