Search This Blog

Sunday, April 22, 2018

21 ம் நூற்றாண்டின் பென்னிvகுயிக் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!!


நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம்.
அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.
ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.
2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார்.
அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.
சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில் தான்.
2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.
பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.
ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார்.
அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.
சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.
அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை.
ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும்.
நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது.
அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது.
இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது.
எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர்
ககன்தீப் சிங் பேடி.
சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி.
அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது.
ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.
வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை.
அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை.
எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன்தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது.
ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.
தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார். ஆனால் இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை.
இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது .
பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்.
ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது.
வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க.
ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது.
நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.
பணி தொடங்கியது
ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.
1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.
துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :
கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது.
12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது.
சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள்.
ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது.
ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.
ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி,
"ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க.
எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.
எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.
கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.
ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது.
ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.
பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர்.
அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.
கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார்.
இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது.
இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.
திட்டத்துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார்.
அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார்.
தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன.
அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.
கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிந்திருக்கின்றன.
மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம்.
பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.
மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே.
சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களுக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வார்களா நம் மக்கள்?
ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
(*** இந்த செய்தியை முழுமையாக படித்தமைக்கு நன்றி ***)


No comments:

Post a Comment