Search This Blog

Sunday, February 28, 2016

வைணவத்தின் சமூக உள்ளடக்கம்

முன்னுரை
தமிழகத்தில் பன்னெடுங்காலமாகவே வைணவம் வழக்கில் இருந்து வந்தது.எனினும் அதுஒரு பரந்துபட்ட சமையமாக விரிவடைந்தது, ஆழ்வார்கள் காலத்தில்தான் என்பது நன்கறிந்தது. ஆழ்வார்களுக்குப் பின்னால் ராமானுஜர் வைணவத்தை ஒரு தத்துவார்த்த அடிப்படையின் மேல் நிறுத்தியவர்.அதனை ஒரு கட்டுக்கோப்புடைய மதமாக நிறுவிய பெருமையும் அவருக்கு உண்டு. சமய மட்டத்திலும் பல சீர்திருத்தங்களைச் செய்தவராவார்.
ராமானுஜருக்குப் பின்னால் வைணவத்தில் இரு பிரிவுகள் தோன்றின. தோன்றிய பகுதியைப் பொறுத்து அவை வடகலை என்றும் ,தென்கலை என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. வடக்கில் காஞ்சியை மையமாகக் கொண்டு வடகலையும் ,தெற்கே ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு தென்கலையும் வளர்ந்தன.
இவ்விரு பிரிவினருக்கும் இடையே தத்துவ மட்டத்தில் வேறுபாடு இல்லை.இவ்விருசாராருமே ராமானுஜரையும் அவரது விசிஷ்டாத்வைத தத்துவத்தையும் முன்னோடியாகக் கொள்கிறார்கள், என்றாலும் இவர்களுக்கிடையே இறையியல் , ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் வழி போன்றவற்றில் கடும் வேறுபாடுகள் உள்ளன.
இவை குறித்துப் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். இவர்களில் Patricia y Mumme முதன்மை வகிக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள " The Srivaishnava Theological Dispute " என்ற அவரது நூல் இப்பொருள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகளில் மிகச் சிறந்தது.1
இக்கட்டுரையில் இவ்விரு பிரிவினரில் தென்கலை வைணவத்தின் தத்துவ , இறையியல்,பரமாத்மா ஜீவாத்ம, தொடர்பு ஆகியவற்றை ஓரளவு சமூகப் பின்னணியோடு ஆராய எண்ணியுள்ளேன்.
ராமானுஜரின் காலம் 11--12 ம் நூற்றாண்டு ஆகும், அவர் கி பி 1137 ல் காலமானார் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னால் கிட்டத்தட்ட 130 ஆண்டுகள் வைணவ சமயத்தில் நிகழ்ந்த உள் முரண்பாடுகள் ஒரு பெரும் தத்துவார்த்த சமயக் கிளர்ச்சியைத் தோற்றுவித்தன. இதனால் இப்பிரிவினரிடையே பல்வேறு நூல்கள் தோன்றின. சமயப் ப்ரசாரங்களும் நி்கழ்ந்தன.
இக்கால கட்டத்தில் வைணவம் மக்களிடையே வெகு வேகமாகப் பரவியது. இவை பற்றி விவாதிப்பதற்கு முன்னால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து ஓரளவு நினைவு படுத்திக்கொள்வது நமது நோக்கத்துக்கு உதவியாக இருக்கும்.
ராமானுஜருடைய தத்துவத்தை இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம்.
புற உலகையும் தனி மனித உயிர்களையும் (ஜீவான்மாக்கள்) ஒட்டுமொத்தமாக உடல் எனக் கொண்டால் இறைவனை (பரமாத்மா) அதில் உறையும் உயிர் எனக் கொள்ளலாம். எவ்வாறு உடலுக்கு உயிர் ஆதாரமோ அதுபோல புறஉலகு, ஜீவான்மாக்கள் ஆகியவற்றால் ஆன உடலுக்குப் பரமாத்மாவே உயிராவான்.
எனினும் இறைவனே உயிர்கள் அனைத்துக்கும் உலகுக்கும் அந்தர்யாமியாய் உள்நின்று அவையனைத்தையும் இயக்குகிறான்.எனவே ஆன்மாக்கள் பலவாயினும் அவ்வான்மாக்கள் அனைத்தையும் தனக்கு உடலாகக் கொண்டு ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாக நிற்பது பரமாத்மா ஒன்றுதான் என்பது கருத்து.
அதே சமயம் இறைவன் உயிருக்கு உயிராக நிற்கும் காரணத்தால் ,இறைவன் வேறு,ஜீவன் வேறு அல்ல,இரண்டும் ஒன்றுதான் என்பது பெறப்படுகிறது:. ராமானுஜரைப் பொருத்தமட்டில் புற உலகும் உண்மை (ஏனெனில் அது இறைவனின் திருமேனி) உயிர்களும் உண்மை.
ஆனால் அவை ப்ரம்மத்தின் ( இறைவனின் ) விசேஷணங்கள்.ப்ரம்மம் அவ்விசேஷணங்களையுடைய விசேஷியம். இந்த விசேஷணம், விசேஷியம் சேர்ந்த கூட்டுக்கு விசிஷ்டம் என்று பெயர்.அந்த விசிஷ்டத்துக்கு வேறாக வேறொன்றும் இல்லை. அதனாலேயே ராமானுஜருடைய தத்துவம் விசிஷ்டாத்வைதம் என்றழைக்கபட்டது.
Use ful tips
ராமானுஜர் தமது விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஆழ்வார்களின் பாசுசுரங்களின் அடிப்படையிலேயே உருவாக்கிக்கொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அதிலும் குறிப்பாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழியே விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை என்பதிலும் ஐயமில்லை.நம்மாழ்வாரின் கீழ்க்கண்ட திருவாய்மொழி இக்கூற்றை உறுதிப்படுத்தும்.
”திடவிசும் பெரிவளி நீர்நில மிவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை யுயிரெனக் காந்தெங்கும் பரந்துனன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே ”
ராமானுஜர் இப்பாசுரங்களின் அடிப்படையிலேயே ப்ரஸ்தானத் திரயங்கள் என்றழைக்கப்படும் உபநிடதங்கள்,ப்ரம்மசூத்திரம்,பகவத்கீதை ஆகியவற்றுக்கு உரை எழுதித் தமது விசிஷ்டாத்வைதத்தை விவரித்துக் கூறினார்.
வடகலை, தென்கலைப் பிரிவினர் இருவரும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தையே தங்கள் தத்துவமாகக் கொண்டுள்ளனர்.அதாவது தத்துவ மட்டத்தில் இரு சாராருக்கும் கருத்து வேறுபாடோ அன்றிச் சச்சரவோ இல்லை. ஆனால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை -- வேறு விதமாகச் சொல்வதானால், தனிமனித ஜீவன் (உயிர்) இறைவனை அடையும் வழிமுறை என்ன என்பதிலேயே இவர்களது வேறுபாடு தொடங்குகிறது.
இவ் வேறுபாட்டை விளக்க வைணவ அறிஞர்கள் கூறும் உவமை மிகவும் சுவாரசியமானது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே உள்ள உறவு குரங்குக்கும் அதன் குட்டிக்கும் இடையேயுள்ள உறவைப் போன்றது என்று வடகலையார் கூறுகின்றனர்.
இதனை மர்க்கட நியாயம் என்றழைக்கின்றனர் ( மர்க்கடம்-- குரங்கு ) தென்கலையாரோ அவ்வுறவு பூனைக்கும் அதன் குட்டிக்கும் போன்றது என்று கூறுகின்றனர். இதனை “ மார்ஜாரம்-- பூனை என்று அழைக்கின்றனர்.
இதனைச் சற்று விளக்குவோம். குரங்கு தன் குட்டியை வயிற்றில் கட்டிக் கொண்டு கிளைக்குக் கிளை தாவிச் செல்லும். அப்போது குட்டி,தாயின் வயிற்றில் ஒட்டிக்கொண்டு அதை இறுகக் கட்டிக்கொள்ளும்.
இவ்வுவமையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பும் கவலையும் குட்டிக்கு உண்டு.ஆனால் பூனை குட்டியைக் கவ்விக் கொண்டு செல்லும்பொழுது பூனைக்குட்டி எவ்விதப் பொறுப்பும் கவலையும் இன்றி நிம்மதியாக இருக்கும். இறைவனை அடைய விரும்பும் ஜீவாத்மா சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட தருமங்களை அல்லது கடமைகளை,ஆசாரங்களைக் கடைப்பிடித்துப் பற்றி ஒழுகினாலன்றி பரமாத்மாவை அடைதல் சாத்தியமல்ல என்று வடகலையார் கருதுகின்றனர். மாறாகத் தென்கலையாரோ ஜீவாத்மா முழுக்க முழுக்க தன்னை இறைவனிடம் ஒப்புக் கொடுத்துவிட்டால் போதும், பிறவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான் என நம்புகின்றனர். இவ்வாறு இறைவனை அடைதல் எவ்வாறு என்பது பற்றிய வேறுபாடே
இப்பிரிவினரிடையே ப்ரதான வேறுபாடாயிற்று எனலாம்.
இப்பிரிவினரின் வேறுபாட்டுக்கு சமூகக் காரணங்கள் உண்டு,அவை குறித்து ஆராயுமுன் இவ்வேறுபாட்டை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தத்துவம் என்பது தனி மனித உணர்வுக்கும் புற உலகுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆய்வு செய்யும் இயல். உணர்வைப் பற்றி ஆராய்வதை ஞானம் என்றும் புற உலகை ஆராய்வதை விஞ்ஞானம் என்றும் கீதை கூறுகிறது. தத்துவத்தில் இருபெரும் கூறுகள் உள்ளன. ஒன்று ஞானமே முதல் என்றும் விஞ்ஞானம் ஞானத்தின் படைப்பு என்றும் கூறுகிறது.
அதாவது உணர்வே புற உலகைத் தோற்றுவிக்கிறது என்று கூறுகிறது.இதனை ஆன்மீகவாதம் அல்லது கருத்து முதல்வாதம் என்று அழைக்கிறோம். ஆனால் விஞ்ஞானமே ப்ரதானம், ஞானம் அதன் விளைவு என்பதைப் பொருள் முதல் வாதம் என்று அழைக்கிறோம். இந்தியத்தத்துவத்தில் இவ்விரு பிரிவுகளும் தோன்றி வளர்ந்துள்ளன. அதேபோன்று ஞானத்தையே முதலாகக் கொண்ட கருத்து முதல் வாதத்திற்குள்ளே பல பிரிவுகள் உள்ளன.
இப்பிரிவுகளில் சங்கரர் ஞானம் மட்டுமே உண்மையென்றும் விஞ்ஞானம் பொய்யென்று கூறினார். அதாவது உணர்வு மட்டுமே உண்மை புற உலகம் மாயை, அல்லது தோற்றப் பிழை என்று கூறி அதை மறுத்தார். ராமானுஜரோ ஞானமும் உண்மை , விஞ்ஞானமும் உண்மை என ஒப்புக்கொள்ளும் அதேபோதில் ஞானமே அடிப்படை எனக் கருதினார். முன்னவரை அகவய ஆன்மீக வாதி என்றும்,பின்னவரை புறவய ஆன்மீக வாதி என்றும் கூறலாம்.
இவ்வாறு மனித உணர்வுக்கும் புற உலகுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆய்வதோடு தத்துவத்தின் ( Philosophy ) எல்லை முடிவடைந்துவிடுகிறது. பொருள் முதல்வாதிகள் போன்ற தத்துவவாதிகளின் விசாரணையின் எல்லையும் இதுதான். ஆனால் அதற்கு மேல் தனிமனித உணர்வுக்கும் பூரண உணர்வுக்கும் இருப்பதாகக் கருதப்படும் அதாவது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வது soteriology எனப்படும். இது தத்துவத்துக்கும் ( Philosophy ) இறையியலுக்கும் (Theology ) இடைப்பட்ட நிலையில் உள்ளது. இந்திய ஆன்மீகவாதிகள் குறிப்பாக வேதாந்திகள் எனப்படும் அத்வைத, விசிஷ்டாத்வைத, துவைத,சைவசித்தாந்தவாதிகள் தத்துவம் என்ற பெயரில் இந்த soteriology அல்லது கீதையில் குஹ்ய சாஸ்திரம் என்றும் ரகஸ்யம் என்றும் அழைக்கப்படும் ஜீவாத்மா பரமாத்மா தொடர்பு பற்றியே பெரிதும் ஆராய்கின்றனர். இதனைத் தத்துவம் என்றும் அழைக்கின்றனர்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அத்வைதம், ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்பது துவைதம், வேறெனினும்,பரமாத்மாவுக்குள் ஜீவாத்மா அடக்கம் என்பது விசிஷ்டாத்வைதம். இத்தகைய வேறுபாடுகள் தோன்றியதற்கு சமூகக் காரணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி ராமானுஜரின் தத்துவம் குறித்து வடகலை,தென்கலைப் பிரிவினரிடையே பெரும் வேறுபாடு ஏதுமில்லை. இவ்விரு பிரிவினரின் வேறுபாடு ஆன்ம ரகஸ்யம் பற்றியதே ஆகும். இறைவனை அடைவது எவ்வாறு என்பதிலேயே தான் முக்கிய வேறுபாடு, இக்கட்டுரையில் ஆன்மாவின் தன்மை ,அது பக்தி மார்க்கமா சரணாகதி மார்க்கமா,வருணாசிரமஆசார அனுஷ்டானங்களினாலா அல்லது உருவ வழிபாடே போதுமா போன்றவற்றில் வடகலை, தென்கலை வைணவப் பிரிவுகளின் சித்தாந்த ரீதியான வேறுபாடுகளையும் அவற்றின் குறிப்பாக தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம் குறித்தும் கட்டுரையின் எல்லைக்குட்பட்டு ஆராய்வோம்.
இக்கட்டுரையின் பிற்சேர்க்கையாக இரண்டு அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. அட்டவணை 1 வடகலை தென்கலை ஆகிய பிரிவினரின் ப்ரதான ஆசிரியர்களின் பட்டியலைக் காட்டுகிறது. அவர்களின் காலமும் ஆண்டுவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டவணை 2 இவ்விரு சாராரும் இயற்றிய நூல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
வடகலை வைணவத்தின் ப்ரதான ஆசிரியராகக் கருதப்படுபவர் வேதாந்த தேசிகர். இவரது காலத்துக்கு முன்னரேயே வடகலை வைணவம் தோன்றி விட்டதெனினும் அது தெளிவாக உருப்பெற்றது வேதாந்த தேசிகரின் காலத்தில்தான். இவருடைய நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே எழுதப்பட்டவை. இந்நூல்களில் பெரும்பகுதி விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலைநிறுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டவை. அவ்வகையில் பிற வேதாந்த தத்துவங்களையும்,வேத விரோத தத்துவங்களையும் இவரது நூல்கள் விமரிசிக்கின்றன. அதே சமயம் ஜீவாத்மா பரமாத்மா உறவையும் இவை ஆராய்கின்றன.
ஆழ்வார்களின் திவ்யப் ப்ரபந்தங்களை இவர் எதிர்க்கவில்லை யெனினும் அவற்றைக் காட்டிலும் தருமசாஸ்திரங்களையும்,கீதை,உபநிடதங்கள்,பிரம்மசூத்திரம் போன்றவற்றையே தமது கொள்கையின் அடிப்படையாக இவர் கொள்கிறார். மோட்சம் அடைய வேண்டுமெனில் தரும சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள வருணாசிரம தரும அடிப்படையில் வாழவேண்டும். அதாவது சாஸ்திரங்களில் ஒவ்வொரு வருணத்தாருக்கும் விதிக்கப்பட்டுள்ள ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.வேறு வகையில் சொல்வதானால் தத்தம் வினைப்பயனை ஒட்டியே விளைவுகள் இருக்கும். விடுதலை அல்லது மோட்சத்திற்கு தரும சாஸ்திரங்களே அடிப்படை என்பது தேசிகரின் கருத்து.
தென்கலை வைணவத்தின் தலைசிறந்த ஆசிரியராகக் கருதப்படுபவர் , வேதாந்த தேசிகரைக் காட்டிலும் காலத்தால் நூறாண்டுகள் பிந்திய மணவாள மாமுனிகள் ஆவார். இவரது காலம் கி. பி. 1370----- 1443 ஆகும்.இவருக்கு முன்னரே,திருக்குருகைப் பிரான் தொடங்கி,பெரியவாச்சான்பிள்ளை, பிள்ளை லோகாச்சாரியர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் போன்றோர் பல்வேறு நூல்கள் இயற்றித் தென்கலை வைணவத்தைப் பரப்பினர் என்றாலும் மணவாள மாமுனிகளே தென்கலையின் பிரதான ஆசிரியராகக் கருதப்படுகிறார்.
தனக்கு முன்பிருந்த ஆசிரியர்களின் நூல்களுக்கு உரை எழுதியதன் மூலம் தமது கொள்கையை அவர் நிலை நாட்டினார். உதாரணமாக,அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய ஆச்சாரிய ஹ்ருதயம், திருவரங்கத்தமுதனார் இயற்றிய ராமானுஜ நூற்றந்தாதி பிள்ளை லோகாச்சாரியர் இயற்றிய ஸ்ரீவசன பூஷணம், முமு‌க்‌ஷுப்படி ஆகிய நூல்களுக்கு மணவாள மாமுனிகள் எழுதிய உரைகள்,தென்கலை வைணவத்தின் கொள்கை மற்றும் நடைமுறை ஆகியவற்றை ஸ்திரமானதொரு அஸ்திவாரத்தில் நிறுத்தின எனில் மிகையாகாது.
பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை ஒரு ஆண்டாள் அடிமை உறவுக்கு மணவாள மாமுனிகள் ஒப்பிடுகிறார், பரமாத்மாவை அடைய விழையும் ஜீவாத்மா செய்ய வேண்டியதெல்லாம் இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு அவனை முழுக்கச் சரணடைய வேண்டிய தேயாகும். சாஸ்திரங்களில் கூறப்பட்ட, வருணத்திற்கேற்ப விதிக்கப்பட்ட உவிதி முறைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே மோட்சம் கிட்டும் என்பது பொருளற்ற கூற்று.
இன்னும் சொல்லப்போனால் வருணாசிரமதருமமும் அவற்றைக் கூறும் தரும சாஸ்திரங்களும் மோட்சத்திற்குத் தடையாக நிற்பவை என அவர் கூறுகிறார். இவையெல்லாம் உவமையில் வரும் குரங்குக் குட்டியின் கவலையைப் போன்றவை, ஜீவாத்மா பூனைக் குட்டியைப் போன்று இறைவனிடம் தன்னை ஒப்படைத்துவிட்டுக் கவலையின்றி இருந்தாலே போதுமானது.
ஆழ்வார்களின் பாசுரங்களும் எளிமையான வழிபாட்டு முறையும் இதிகாச புராணங்களில் கூறப்படும் பக்தர்களின் வாழ்க்கைக் கதைகளும் சரணாகதியும் மோட்சத்திற்கு அடிப்படை என்று மணவாள மாமுனிகள் கருதுகிறார். இறைவன் சந்நிதியில் வருண வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பது அவரது கொள்கை.
இவ்விருவரின் கொள்கைகளை இன்றும் சற்று ஆழமாகச் சில தலைப்புகளில் ஆராயலாம்.
ஜீவாத்மாவின் இயல்பு
விசிஷ்டாத்வைத தத்துவப்படி ஆன்மா, அத்வைதிகள் கூறுவதைப் போல, ஞானம் மட்டுமல்ல, அது ஞானத்தின் பிறப்பிடமும் கூட,ஆனால் பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் ஞானமே ஆன்மா என்று கூறுகின்றன,இது விசிஷ்டாத்வைதத்திற்கு சற்றுத் தடையாக இருப்பது உண்மையே.
ராமானுஜர் இக்கூற்றை விளக்கும் போது ஞானம் இரண்டு வகையானது என்றும் அது புறவய ஞானம், அகவய ஞானம் எனப்படும் என்றும் கூறுகிறார். அகவய ஞானம் ஆன்மாவின் தொடர்ச்சியான அடிப்படியான பண்பு என்றும், புறவய ஞானம் அதன் வெளிப்பாடு என்றும் கூறுகிறார்.
புற உலகையும் ,புறவுலகத்தின் தன்மையையும் புரிந்து கொள்ளப் புறவய ஞானம் உதவுகிறது. விடுதலை பெற்ற ஆன்மாவுக்கு எல்லாமே இன்பமயமாக உள்ளது.
வாழ்வில் தளையுண்ட ஆன்மாவுக்கு இவ்வின்பம் தத்தம் வினைப்பயனுக்கு ஏற்பவே அமைகிறது அதாவது வினைப்பயனுக்கும் மோட்சத்திற்கும் தொடர்பு உண்டு. இதனையே சாஸ்திரங்கள் (குறிப்பாக பிரம்மசூத்திரம்)
’ பிரகிருதியின் இயல்பின் விளைவு “ என்று கூறுகின்றது இவ்வகையில் பார்க்கும்போது ஆன்மாவின் இயல்பு மூன்று. (1 ) ஆன்மா சாஸ்திரங்களை அறியும் திறன் கொண்டது. இது ஞாதா எனப்படும் (2) அது செயல்களின் விளைவுகளை அனுபவிக்கும் திறன் கொண்டது. அதனால் போக்தா எனப்படுகிறது. (3) செயல்களைச் செய்யும் திறனும் கொண்டது. எனவே அது கர்த்தா என அழைக்கப்படுகிறது.
வேறுவகையில் சொல்வதானால் ஆன்மா புறவுலகை சாஸ்திர ரீதியாக அறியக்கூடியது.அவ்வறிவின் அடிப்படையில் செயல்படக் கூடியது. அத்தோடு அத்தகைய செயல்பாட்டின் விளைவுகளை அனுபவிக்கக் கூடியது . இவ்வாறு பிரம்மசூத்திரக் கருத்துக்கு விளக்கம் அளிக்கிறார்.
அவ்வாறாயின் ஆன்மா தன்னிசையாக இயங்குதல் சாத்தியமா ? அவ்வாறு இயங்கினால் அது சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை -- நிபந்தனைகளை மீறியதாகி விடுமே?
இக்கேள்விகளுக்கும் ராமானுஜர் விடையளிக்கிறார்.
ஆன்மா தன்னிச்சையாக இயங்குகிறது. செயல்படுகிறது. ஆனால் இந்த சுயேச்சைத் தன்மையானது பரமாத்மா அனுமதிப்பதன் விளைவுதான்.அதாவது ஆன்மா தன் இஷ்டம் போல் செயல்பட முதலில் பரமாத்மா அனுமதிக்கிறார். இவ்வாறு அனுமதிப்பதை “உதாசீனம்” என்று ராமானுஜர் குறிக்கிறார், ”உதாசீனம் “ என்றால் கண்டும் காணாதது போல் இருத்தல் என்று பொருள்.
ஆன்மா தன் சுயமுயற்சியால் செயல்படத் தொடங்கும்போது நல்லது கெட்டது என சாஸ்திரங்களில் கூறப்படும் செயல்களைச் செய்கிறது.இறைவனின் கண்காணிப்பிலேயே இது நிகழ்கிறது.
ஆன்மாக்களின் வினைப் பயனுக்கேற்ப இறைவன் தீர்ப்பு வழங்குகிறான்.இத்தீர்வு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப ஆன்மா எவ்வாறு இயங்கிறது என்பதைப் பொறுத்தே வழங்கப்படும்.
சுருங்கச் சொல்வதானால் ஆன்மா தன்னைத்தானே அறிந்து கொள்வதையும் புறவுலகை அறிவதையும் தனது இயல்பாகக் கொண்டிருக்கிறது.சுயேச்சையாக இயங்க இறைவனால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வாறு இயங்கும்போது அது செய்யும் வினைப்பயனுக்கேற்ப இறைவன் தீர்வு வழங்குகிறான். இதில் நல்லது எது ,தீயது எது என்பது தரும சாஸ்திரங்களின் அடிப்படையிலே அமையும்.
இதனையே வடகலை வைணவர்கள் ----குறிப்பாக அதன் ஆரம்ப ஆசிரியரான சுதர்சன சூரி ஜீவனின், ’ஸ்வாதந்தரியம்” என்றும் அது தரும சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டது என்றும் கூறுகிறார். வேறு வகையில் சொல்வதானால் தனது சொந்த வாழ்வில் சாதீய ஏற்றத்தாழ்வை எதிர்த்த ராமானுஜர் இறையியல், தத்துவம் என்று வரும்போது வருணாசிரம தருமத்தைப் போதிக்கும் தரும சாஸ்திரங்களின் அடிப்படையிலேயே இறைவன் தீர்வு வழங்குவான் என்று கூறுகிறார். இக்கூற்றைத் தென்கலை வைணவ ஆசிரியர்கள் பிரதானமாகக் கொள்வதில்லை, இதனைப் பின்னால் விளக்கலாம்.
ராமானுஜர் இறைவனுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை விளக்க பல்வேறு இரட்டைச் சொற்களைப் பயன்படுத்தினார்.
சரீரி -----சரீரம்: ஸ்வாமி----தாசன்; ஆதாரம்------ஆதேயம்; நியந்தந்---நியம்யம்: சேஷி------சேஷம் ஆகிய சொற்களே அவை வைணவ இலக்கியத்தில் கடைசியாகக் கூறப்பட்ட சேஷி--- சேஷம் ஆகிய சொற்களே பெரும்பாலும் பயன் படுத்தப்படுகின்றன.இதனை ஆண்டான் ---- அடிமை உறவு எனக் குறிப்பிடலாம்.
நாம் மேலே விவாதித்த இரு கருத்துக்களையும் இணைத்து ராமானுஜர் ஜீவனின் இயல்பு குறித்து இவ்வாறு தனது வேதார்த்த சங்கிரகம் என்ற நூலில் விளக்குகிறார்.
’ஜீவனுக்கு இரண்டு இயல்பு உண்டு. ஒன்று ஞானம். இது ஆன்மாவின் இயல்பில் ஒரு பகுதி மட்டுமே, இன்னொன்று அதன் சேஷத்துவம் அதாவது அதன் தாசத்துவம்.. அடிமைப்பண்பு. (ஸ்வரூபம் )”
வைணவத்தின் இரு கலையாரும் ராமானுஜரின் கருத்தைத் தங்களுடைய கொள்கைக்கேற்ப வியாக்யானம் செய்துகொள்கின்றனர்.
ஆன்மாவின் இயல்பு ஞானம் என்பதை வடகலையாரும் சேஷத்துவம் என்பதைத் தென்கலையாரும் பற்றிக்கொண்டனர்.
ஆன்மாவின் இயல்பு ஞானம்,செயல்பாடு,அனுபவம் ஆகியவை என்று கொண்டால் மட்டுமே அது நன்மை தீமையை உணரமுடியும்.அப்போதுதான் தருமசாஸ்திரங்கள் பொருளுடையவையாக இருக்கும்.இல்லையெனில் தருமசாஸ்திரத்தில் கூறப்படும் ஒழுக்கங்கள் பொருளற்றுப் போய்விடும் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்
தென்கலையாரோ சேஷத்துவக் கருத்துக்கே முதலிடம் தருகிறார்கள். மணவாள மாமுனி சேஷத்துவம் என்ற பண்பு சாதாரண இயல்பு ( ஸ்வரூபம்) மட்டுமல்ல. அது ஸ்வரூபயாதாத்மியம்-------அதாவது இறைவன்பால் உச்சபட்ட சேஷத்துவமும் சார்புமே அதன் இயல்பு என்று கூறுகிறார். சேஷத்துவம் சுதந்திரம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்ற ஒத்துப்போக முடியாதவை.
ஆன்மா ஞானமுடையது,என்று பேசும்போதே அது சேஷத்துவத்திற்கு ஊறு விளைவிக்கிறது.வேறு விதமாகச் சொல்வதானால் ஞானத்தை வலியுறுத்தும் போது இறைபற்று அழிந்து போகிறது என மணவாள மாமுனிகள் கருதுகிறார்.இவ்வாறு கூறும் பொழுது அறிவே பொருளற்றது என அவர் கூறவில்லை,புற உலகைப் புரிந்து கொள்ள ஞானம் பயன்படும். ஆனால் இறைவனை அடைய அதாவது ஜீவாத்மா பரமாத்மாவை அடைய சேஷத்துவமே பயன்படும் என்பது தென்கலையாரின் கருத்தாகும்.
மேலே கூறியவற்றை ஆராய்ந்தால் ஒரு விஷயம் நமக்குத் தெற்றென விளங்கும்.அதாவது இவ்விருசாராரும் மனுஸ்ம்ருதி போன்ற தரும சாஸ்திரங்களின் முக்கியத்துவம் குறித்து அடிப்படையில் தமக்குள் வேறுபடுகின்றனர் என்பதே அது.
சாஸ்திரங்கள் நல்லது எது தீயது எது என விளக்குகின்றன அதனை அறிந்து அதன்படி ஒழுக ஞானம் தேவை, அவ்வாறு சாஸ்திரவிதிகளைப் பற்ரி ஒழுகினாலே மோட்சம் கிட்டும்.இறைவனை அடையலாம் என்பது வடகலையார் கருத்து.
ஞானம் என்பது ஆன்மாவின் இயல்பாகிய சேஷத்துவத்திற்கு உட்பட்டது.அதோடு மட்டுமல்ல ஞானமும் இறைவனுக்கு கட்டுப்பட்டது. சந்தனமும் நறுமலரும் தமக்குத் தாமே பயனுடையதாக இருக்க முடியாது,அதனைச் சூடுபவராலேயே அது பயன் பெறுகிறது.
அதே போன்று ஆன்மாவும் தனக்கென எவ்விதப் பயனுமின்றி ( ஸ்வப்பிரயோஜனம்) சேஷிக்கு ---அதாவது இறைவனுக்கே பயன்படுதாகிறது.அதுவே அதன் இயற்கையான இயல்பு என மணவாள மாமுனிகள் கூறுகிறார்.
ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார்.
ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 - 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)
இந்த மஹாசார்யருடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது மரபு; இவர் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளை வடிவில் தோன்றி,
“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||”
என்னும் தனியனை அருளியதாக வரலாறு.
(தனியன் என்பது ஆசார்ய புருஷர்களுக்கான த்யாந ச்லோகம்)
மாமுனிகளுக்கான தனியனை இயற்றியதால் இவர் மாமுனிகளின் சீடராகிறார்; ஸ்ரீமந்நாராயணன், பெரிய பிராட்டி, சேனை முதலியார், நம்மாழ்வார் என்று தொடங்கும் குரு பரம்பரை மீண்டும் நாராயணனிடம் நிறைவு பெறுகிறது;
மாமுனிகள் அரங்கன் திருமுன்னிலையில் திருவாய்மொழிக்கு விரிவுரை செய்தருளிய ஆண்டு 1430 AD
உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் தோன்றிய கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன்; அவரிடமே பயின்றவர். ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )
பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.
என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப்
பின்னருளால் பெரும்பூதுர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.
- தேசிகப் பிரபந்தம்
சில குறிப்புக்கள்
பல ஆசார்ய சிரேஷ்டர்கள் வேதநூற் பிராயம் எனப்படும் 100 வயது கடந்து வாழ்ந்துள்ளனர்.
திருமந்திரம் (அஷ்டாக்ஷரம்), த்வயம், சரம ச்லோகம் இவை வைணவ மரபு போற்றும் மறை பொருள் பொதிந்த ரகசியமாம்; ரஹஸ்யத்ரயம் என்பர்.
ஆளவந்தார் பரமபதமடையும் தருணத்தில் அவர்தம் சீடர்கள் சரம ஸந்தேசமாக (இறுதி உரை) ஏதாவது அருளுமாறு விண்ணப்பிக்க, ஆளவந்தாரும் திருமந்த்ரார்த்த ப்ரதிபாத்யனாக அரங்க நகரப்பனையும், த்வய ப்ரதிபாத்யனாகப் பேரருளாளனையும், சரமச்லோக ப்ரதிபாத்யனாகத் திருமலையப்பனையும் நினைத்திருக்க ஆணையிட்டார். ஆதலின் 108 திவ்ய தேசங்களில் இவை மூன்றும் முதன்மை பெறுகின்றன.
பின்னர் உடையவர் உகந்தருளியதால் திரு நாராயணபுரமும் (மேல் கோட்டை) முக்கியத்துவம் பெற்றது.
பெரிய நம்பிகள் சோழனின் அவையில் கண்களை இழந்தார்; திருவரங்கம் திரும்பும் வழியில் பராந்தக புரம் என்ற ஊரில் உயிர் துறந்தார். அப்போது அவர்தம் வயது 105 என்று ‘ப்ரபந்நாம்ருதம்’ தெரிவிக்கிறது - ’வத்ஸராணாம் ததா தஸ்ய பஞ்சோத்தரசதம் கதம்’.
திருக்கோட்டியூர் நம்பிகளும் 105 ஆண்டுகள் வாழ்ந்தவர்; இவ்விருவரும் ஆளவந்தாரின் சீடர்கள்; உடையவருக்கு ஆசார்யர்கள்.
உடையவர் மேல்நாட்டில் எழுந்தருளியிருந்தபோது் பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலையாண்டான், திருவரங்கப் பெருமாளரையர், திருக்கச்சி நம்பிகள் ஆகியோர் பரமபதம் அடைந்தனர். ஆளவந்தார் உயிர் துறக்கும்போது உடையவர் அரங்கம் வந்துசேரவில்லை; அதுபோலவே ஆளவந்தாரின் சீடர்களான இவர்களின் அந்திம தசையிலும் உடையவர் அருகில் இல்லை.
கூரத்தாழ்வான் உடையவரைக் காட்டிலும் வயதில் பெரியவர்; முன்பு தோன்றி முன்பே மரித்துப் பரமபதத்தில் ஆசார்யனை எதிர்கொள்ளக் காத்திருந்தார்.
மஹா விரக்தரான கூரேசருக்கு 60 வயது கடந்தபின் குழந்தைகள் பிறந்தனர்; வடக்குத் திருவீதிப் பிள்ளையின் சரி்தமும் இது போன்றதே.
பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.
ஸ்ரீ பராசர பட்டர் 28 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார் என்பது ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் தெரிவிக்கும் செய்தி.
நம்பிள்ளைகள் 2ம் ராஜராஜன், 3ம் குலோத்துங்கன் இவர்களின் காலத்தவராக இருந்திருக்க வேண்டும்.
பெரியவாச்சான் பிள்ளையும், வடக்குத் திருவீதிப் பிள்ளையும் ஒரே ஆண்டில் அவதரித்தவர்கள்.
நஞ்சீயர் நூறு முறை திருவாய் மொழிக்கு உரை கூறியவர்; ஸ்வாமி தேசிகன் முப்பது முறைக்குமேல் ஸ்ரீ பாஷ்யத்திற்குப் பொருள் கூறியவர்;
ஸ்வாமி தேசிகன் தம் நிகரற்ற புலமையால் 100க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும், வடமொழி யிலுமாக அருளிச் செய்துள்ளார்; அச்யுத சதகத்தை ப்ராக்ருத மொழியிலும் அருளினார். திருவாய்மொழி உற்சவம் தடையின்றி நடைபெற வழி செய்தருளினார்.

ஸ்வாமி தேசிகன் பரமபதம் சென்ற அடுத்த ஆண்டில் அவதரித்தவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.
பொதுவாகத் துறவியர் இல்லறத்தாருக்குச் சீடராவதில்லை. விதிவிலக்காகத் துறவியான நம்ஜீயர், பராசர பட்டரின் சீடராக இருந்தார்; ப்ரம்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் சீடர்.
ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்தில் தோன்றியவர் திருவாய்மொழிப்பிள்ளை என்னும் திருமலை ஆழ்வார் (ஸ்ரீசைலேசர்) . இவர் பிள்ளை லோகாசார்யரின் சீடர்; ஸ்வாமி மணவாள மாமுனிகளின் ஆசார்யர். இவரது அர்ச்சைத் திருமேனி ‘கொந்தகை’ எனும் ஊரிலுள்ள ஆலயத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பாண்டிய நாட்டின் நிர்வாகப் பொறுப்பை வகித்தவர்.
’திவ்யஸூரி சரிதம்’, ‘யதிராஜ வைபவம்’ போன்ற நூல்கள் நாம் ஆசார்யர்களை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றன. இவை உடையவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை; ‘இராமாநுச நூற்றந்தாதி’ உடையவரின் பெருமைகளைக் கூறுவது.

‘பெரிய திருமுடி அடைவு’ என்னும் நூல் ஆசார்ய புருஷர்களின் வரலாற்றுக் குறிப்பைத் தெரிவிப்பது. ஆளவந்தாரின் சீடரான மாறநேர் நம்பி அவதரித்தது பாண்டிய நாட்டின் ’பராந்தகபுரம்’ என்ற ஊர் என்பது இந்நூல் தெரிவிக்கும் செய்தி.

No comments:

Post a Comment