கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள் எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம். அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ஒருவரையொருவர் கண்டிக்க வேண்டும்; திருத்த வேண்டும் என்ற முனைப்பு இருக்காது. இதெல்லாம் நெருக்கத்தில் விளைபவை. உடைமையுணர்வு அல்லது ஆதிக்க உணர்வை எருவாகக் கொண்டு செழிப்பவை, நமக்குச் சொந்தமான வீட்டில் இடித்துத் திருத்தி மாற்றங்களும் சௌகரியங்களும் செய்து கொள்வது போல, நமக்குச் சொந்தமென நாம் நினைக்கும் மனிதரையும் இடித்துச் செப்பனிட முயற்சி செய்தல், சுருக்கங்களை நீவி நேராக்கி விட முயலுதல்....
அந்த முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே ஏற்பட்ட சில சில்லறைப் பூசல்கள், உரசல்கள் உடல் சார்புள்ளவை, பால் பேதத்தின் சூட்சுமத்தையும், அந்தச் சூட்சுமத்தில் பொதிந்திருந்த இன்பத்தையும் உணரும் துடிப்பு. முதல் தடவையின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், கூடவே ஏமாற்றங்கள், எரிச்சல்கள், லட்சிய ஆண்மை, லட்சிய பெண்மை என்ற ரூபமற்ற கனவுச்சிதறல்களின் குவிமையம் கடைசியில் புராதனத்திலும் புராதனமான ஒரு பௌதிக நியதிதானா என்ற வியப்பு அதிர்ச்சி. இதுவும் பயிலவேண்டிய ஒரு வித்தை, என்ற உணர்வு ஏற்படுத்திய உற்சாகம். கூடவே ஆதாரமான இளமையின் புனிதமான படிமங்களின் பின்னணியில் ஒரு சோர்வு. உடல் ரீதியாக அவர்களிடையே சகஜ பாவமும் சீரான லய உறவும் ஸ்தாபிதமான பிறகு, இவ்வாறு தத்தம் உடல்கள் ஆள்வதிலும் ஆளப்படுவதிலும் அவர்கள் கர்வம் கொண்டவர்களாகி, இவனுடைய ஆளுமை முழுவதும் தனக்குச் சொந்தமென்று அவளும் அவளது ஆளுமை முழுவதும் தனக்குச் சொந்தமென்று அவனும் நினைக்க ஆரம்பித்தார்கள். பழக்கங்கள், பாணிகள் உள்பட எல்லாமே சொந்தமென்று. ஆறுமாதச் சொந்தம்; ஆறுமாத உரிமை.
இந்த உரிமையின் போதை முதலில் பிதற்றச் செய்தது அவளைத்தான். அவனுடைய பழக்கங்களைச் சீண்டத் தொடங்கினாள். முதலில் வேடிக்கையாக பிறகு சீரியஸாக. அவனுடைய ஊதாரித்தனத்தை, அவனுடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை.
முதலிலெல்லாம் சட்டையில் உட்காரும் பூச்சியைத் தட்டிவிடுவது போல அவன் அவளுடைய ஆட்சேபங்களை ஒரு புன்சிரிப்பால் அலட்சியமாகத் தட்டி உதறிவிட்டுத் தன் பாட்டில் இருந்தான். இது அவளுடைய அகந்தையைச் சீண்டியது. தன் அதிருப்தியை அவன் அங்கீகரிக்கும்படி செய்ய வேண்டும். அது அவனைக் காயப்படுத்தவேண்டும் என்பது அவளுக்கு ஒரு தீவிர தாகமாகவும் வெறியாகவும் ஆகி தன் ஆட்சேபணைகளின் காரத்தை ஏற்றிக் கொண்டே போனாள்.
நிகழ்ந்து கொண்டிருபது வெறும் காதல் சீண்டல் அல்ல, தீவிரமான பலப்பரீட்சை; எறியப்படுபவை பூப்பந்துகள் அல்ல பாணங்கள் - என அவன் உணரச் சிலகாலம் பிடித்தது. உணர்ந்ததும் அவன் எச்சரிக்கை அடைந்தான். தன் அந்தரங்க உலகின் எல்லைக் கற்களைச் சோதித்து, பாராவைப் பலப்படுத்தினான். அவனுடைய ராஜ்யத்தில் அவள் பிரஜா உரிமை பெற்றவளாக இருக்கலாம். ஆனால், ஆட்சி அவனுடையதுதான் என உறுதியாகவும் அவளுக்கு உறைக்கும் படியும் பிரகடனப்படுத்தலானான். இது ஒரு விதத்தில் அவனுக்குத் தோல்விதான். இத்தகைய சுய பிரகடனங்களை அவன் விரும்பியவனேயல்ல, தான் அரசன் அல்லது தான் அடிமை என்று. அவள் அடிமை என்ற சட்டையை அவனுக்கு அணிவிக்க முயன்றதால் அம்முயற்சியை எதிர்க்கும் தீவிரத்திலும் பரபரப்பிலும் அவன் அரசன் என்ற சட்டை அணிய நேர்ந்தது. இதனால் அவனுடைய சகஜ நிலை - பொதுவாக அவன் அப்பியசிக்க விரும்பிய தோரணைகள் அற்ற எளிய தன்மை - பங்கப்பட்டது. ராஜா சட்டையில் தான் ஒரு சோளக்கொல்லை பொம்மையாகத் தோன்றுவதாக, தன் மீதே சிரிப்பு வருகிறது. அதே சமயத்தில் அந்தச் சட்டையைக் கழற்றினால்தான் பாதுகாப்பற்றவனாகி, தன் ராஜ்யம் சூறையாடப்பட்டு விடுமென்ற பயம் அவனைச் சட்டையைக் கழற்றவிடாமல் தடுக்கிறது.
சங்கடமான நிலை; அவனுடைய உலகில் இதுகாறும் நிலவி வந்த அமைதி, அறியாமை விளைவித்த அமைதிதானா, கடைசியில்? வெகுளித்தனமான, பக்குவம் பெறாத அமைதி. அந்த அமைதியைக் கடந்து அவனுடைய பலவீனங்களென்னும் வெண்ணெயைத் திரட்டி வழித்து ருசிப்பதுதான் அவள் நோக்கமென்றால் அதில் அவள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டாள். அவனுடைய பதற்றமான வெளிப்பாடுகளின் போது அவள் முகத்தில் ஒரு கணத்துக்குப் பளிச்சிட்டு மறையும் புன்னகை - ஆம் அது ஒரு வெற்றிப்புன்னகை!
’என் பலவீனங்களே உனக்கு ஒரு வெற்றி மமதையை அளிக்கின்றன’ என்று அந்தப் புன்னகையைப் பார்த்துவிட்டு ஒரு நாள் அவன் சொன்னான். ‘எனவே ஒரு விதத்தில் இந்தப் பலவீனங்களை நீ விரும்புகிறாய் என்று கூடச் சொல்வேன்... இப்போது நீ சுட்டிக் காட்டுகிற பலவீனங்களை நான் களைந்தேனானால் ஏமாற்றந்தான் உண்டாகும். அவசரமாக என்னிடம் வேறு பலவீனங்களைத் தேடிக் கண்டுபிடித்து உன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள முயலுவாய்.’
‘அதாவது நான் வேண்டுமென்றே உங்களிடம் குறைகளை கண்டுபிடிக்கறவள், வாக்குவாதத்துக்காக சால்ஜாப்புகள் தேடி அலைகிறவள் அப்படித்தானே?’
‘ஹூம்!’ என்று அவன் பெருமூச்செறிந்தான். ‘இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்... வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே! உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா? நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறாய், பாராட்டமாட்டேன்னென்கிறாய்?’
‘ஹோ!’ என்று அவள் நொடித்தாள். ‘நல்ல நேர்மை... நான் ஒன்று கேட்கட்டுமா?’
‘ஒன்றென்ன, ஒன்பது கேள்’
‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா?’
‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’
‘குடிக்க மாட்டேனென்ற தைரியம் - வேறென்ன?’
‘அதுதான் சொன்னேனே இது ரொம்பச் சின்ன விஷயம். நீ குடித்தாலும் சரி குடிக்காவிட்டாலும் சரி, நம்முடைய உறவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’
‘பொய்! சுத்தமான வடிகட்டின பொய்!’ என்றாள் அவள், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவாறு. ‘ஓர் ஆண் என்ற முறையில் சிகரெட் பிடிப்பது உங்கள் பிரிவிலேஜ், குடிக்கிறீர்கள்... நான், என் பெற்றோர் எல்லோரும் இதை நவீன வாழ்க்கையின் ஒரு சாதாரண அம்சமாக, சுமுகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்... ஆனால் நான் சிகரெட் குடித்தால் நீங்கள் ஏற்றுக் கொண்டால் கூட பெற்றோர், சமூகத்தினர் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம், அது ஒரு சின்ன விஷயமாக இருக்காது - உண்டா, இல்லையா?’
‘ஸோ உனக்கு அனுமதிக்கப்படாத ஒன்று எனக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் உன் ஆட்சேபணையா?’
‘நேர்மையைப் பற்றிச் சொன்னீர்கள், உங்கள் மனைவி செய்தால் உங்களை அதிருப்தி கொள்ளச் செய்யும் ஒன்றை நீங்களும் செய்யாமலிருப்பதுதான் நேர்மை என்று சொல்ல வந்தேன்...’
‘நான்தான் நீயும் குடி, என்று சொல்கிறேனே....’
‘வேண்டாம்’ என்று அவள் பிணங்குவது போலப் பாசாங்கு செய்து, சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த முயன்றாள். ‘வேண்டாம்.. இரண்டு பேரும் ஒன்றையே குடித்தால், போராடிக்கும்... நான் வேண்டுமானால் விஸ்கி குடிக்கிறேன்.’
‘ஷ்யூர்!’
‘அல்லது ரம் குடிக்கட்டுமா? ஆரம்பக் குடிகாரர்களுக்கு ஏற்றது?’
‘இரண்டையும் கலந்து குடி.’
பக்கென்று சிரித்தாள் அவள். ‘ஓ.கே... நாளை ஆபிசிலிருந்து வரும்போது நினைவாக வாங்கி வாருங்கள், என்ன? நாளைக்கே தொடங்கப் போகிறேன்...’
அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்... ஏதோ ராகத்தின் நயங்களை அனுபவிப்பவன் போல கண்களை மூடிக்கொண்டு தலையை மெல்ல இங்குமங்குமாக ஆட்டினான். பிறகு சொன்னான்.
‘உன்னுடைய எண்ணக் குதிரையின் ஓட்டம் இருக்கே... அப்பா! வெரி இன்ட்ரஸ்டிங். சிகரெட்டைப் பார்த்தவுடனே உனகு சினிமா வில்லன்தான் நினைக்கு வரான் - அசோகன், சத்ருகன் சின்ஹா. சிகரெட்டின் தொடர்ச்சியாக மது நினைவு வருது, அப்புறம் வுமனைஸிங் என்கிற பிம்பமும் நினைவு வருமோ என்னவோ, யார் கண்டது! இதோ பாரு. சிகரெட் பாபகரமான விஷயம்கிற ரீதியிலே சிந்திச்சி இதை நீ ஏன் ஒரு ஒழுக்கப் பிரச்னையாக்கிற? இது வெறும் ஹெல்த் பிராப்ளம்னு ஏன் புரிஞ்சுக்கமாட்டேங்கிற!’
‘டியர், ஹெல்த் பிராப்ளமோ இல்லையோ, இது ஒரு சேவிங்ஸ் பிராப்ளம்னு நீங்க புரிஞ்சுக்கணும்னுதான் என் ஆசை.’
‘சேவ் பண்ணினா உனக்கு இன்னமும் இரண்டு ஸாரி வாங்கலாம், இல்லையா?’
‘உடனே இப்படிப் பேசுவீங்க. தினம் பொழுது விடிஞ்சா இங்கே நான் ஸாரி வாங்கணும்னு அடம் பிடிக்கிற மாதிரி.’
‘ஓ.கே., ஸாரி... ஐ மீன், மன்னிப்புக் கேட்டுக்கிற ஸாரி...’
இரண்டு பேரும் சிரித்து விட்டார்கள். அந்தச் சிரிப்பின் தொடர்பாக அவன் எழுந்து சுவரில் ஆணியில் தொங்கிய தன் சட்டையின் பையிலிருந்து சிகரெட் ஒன்றை உருவி எடுத்து வாயில் பொருத்திக் கொண்டான். இயந்திரம் போல இவ்வளவும் செய்தவன், சட்டென்று அவள் தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்தான். வாயில் பொருத்திக் கொண்ட சிகரெட்டை மறுபடி கையிலெடுத்து வைத்துக் கொண்டான்.
‘பரவாயில்லை, பிடியுங்கள்’ என்றாள் அவள்.
ஆனால் அவன் அதை வாயில் வெறுமனே விரலிடுக்கில் செருகிக் கொண்டு மறுபடி கட்டிலில் வந்து உட்கார்ந்தான். ‘நான் கூட இதை விட்டுடணும், குறைச்சுக்கணும், என்றெல்லாம் அடிக்கடி யோசிக்கறதுண்டு... தண்டச் செலவுதான், எனக்குத் தெரியாமல் இல்லை’ என்றான் தனக்குத்தானே பேசிக் கொள்பவன் போல.
அவள் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘ஆனால் இதுதான் என்னுடைய ஒரே லக்சரி, என்னுடைய கனவு பலூன்... இதுவும் கூட இல்லைன்னா வாழ்க்கை ரொம்ப டல்லாப் போயிடும் - அப்படி வாழ்ந்தும் என்ன பிரயோஜனம்?’
‘இது இல்லேன்னா டல்லா ஏன் போகணும், வாழ்க்கை? எனக்குப் புரியலே...’
‘வாழ்க்கையிலே பொதுவாகவே ஒரு அலுப்பூட்டுகிற தன்மை இருக்கு இல்லையா? அதைச் சொல்ல வரேன்... ஒரே மாதிரியான நம்முடைய தினசரி அலுவல்கள், கடமைகள்... இன்றைக்குச் செய்ததையே செய், இந்த ரூட்டிலிருந்து ஒரு எஸ்கேப் தேவையாயிருக்கு’
‘அதுக்கு சிகரெட் உதவுகிறதாக்கும்?’
அவன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டினான். தொடர்ந்து பேசினான்.
‘அப்புறம் சில சமயங்களிலே பிரச்னைகள் ரொம்பக் கடுமையான இடுக்கியாலே பிடிக்கிற மாதிரி மென்னிய வந்து பிடிக்கின்றன... ஒரே டென்ஷன்.. அந்த மாதிரி சமயங்களிலே சிகரெட் பிடிச்சால் ஒரு ரிலீஃப் கிடைக்குது...’
‘இதெல்லாம் நீங்களாகவே மனசிலே நினைச்சிக்கிறதுதானே! சிகரெட் பிடிக்கறதினாலே நிலைமைகள் ஏதாவது மாறிடப் போவுதா?’
‘இல்லை... ரொம்ப கரெக்ட். ஆனால் அப்படி அவை மாறிடறாப்லே, என்னை அவை பாதிக்க முடியாது என்பது போல, ஒரு இல்யூஷனை சிகரெட் கொடுக்கிறது... இந்த இல்யூஷன் எனக்கு ரொம்பத் தேவையாயிருக்கு.’
‘சரி, ஆனா ஒண்ணு கேக்கிறேன் பதில் சொல்லுங்க, இப்ப இந்த கணத்திலே உங்களுக்கு என்ன டென்ஷன் அல்லது அலுப்பு? இப்ப எதுக்காக அவசரமா சிகரெட்டை உருவியெடுத்தீங்க? என் பேச்சு உங்களுக்கு அலுப்பாகவும் டென்ஷனாகவும் இருக்குன்னு அர்த்தமா? சொல்லுங்க’
இதைக் கேட்டு அவன் பெரிதாகக் கடகடவென்று சிரித்தான். ‘நல்லா மடக்கிட்டே, போ’ என்றான். பிறகு சற்றே யோசித்துச் சொன்னான்: ‘ரொம்ப மகிழ்ச்சியான தருணங்களிலும், அந்த மகிழ்ச்சியை செலிபிரேட் பண்ண நான் பிடிக்கிறது வழக்கம்.’
அவள் அலட்சியமாக ஒரு நொடிப்பு நொடித்தாள்: ‘போதும் நிறுத்திக்குங்க. உங்க விளக்கங்கள் ஒண்ணாவது நம்புகிறமாதிரி இல்லை.’
இது ஒரு விடுமுறை நாளில் இருவருமே ஆசுவாசமாக உணர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களிடையே நடந்த சம்பாஷணையின் சாம்பிள். இத்தகைய சந்தர்ப்பங்கள் அபூர்வமாகத்தான் நிகழ்கின்றன. ஆனால் இந்தச் சந்தர்ப்பங்கள் மிக முக்கியமானவை. அவை நெஞ்சில் பதிக்கும் - பிற்பாடு தடவுகையில் இனிய நெருடல்களை ஏற்படுத்தும் - சுவடுகள் மிக முக்கியமானவை. அவர்களிடையேயுள்ள உறவின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவது என அவள் உணரத் தொடங்கியிருந்தாள்.
சில நாள்களில் ஆபீசிலிருந்து திரும்புகையில் ஒரே அலுப்பும் சிடுசிடுப்புமாக இருப்பான். அத்தகைய சந்தர்ப்பங்களில் இப்படியெல்லாம் உரிமையெடுத்துக் கொண்டு அவனிடம் பேச முயன்றால் பலன் விபரீதமாகிவிடும். இது ஒரு ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போல ஆகி விட்டிருந்தது. சரியான அசைவுகள், ஓசைகள் மூலம் காளையை மெல்ல, மெல்ல வசப்படுத்தி அதன் முதுகில் ஏறி உட்கார வேண்டும். எங்கேயாவது கொஞ்சம் பிசகினால் போச்சு, காளை மிரண்டு விடும். முட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடும்.
கடவுள் நம்பிக்கைக்கும் வாழ்க்கையை அவரவர் அணுகும் முறைக்குமிடையே உள்ள தொடர்பு பற்றி அவர்களிடையே நடந்த சர்ச்சையும் சுவையானது.
இந்தச் சர்ச்சையும் ஒரு முறை விடுமுறை நாளன்று, சேவிங்ஸ் பிராப்ளத்தை வித்தாகக் கொண்டுதான் தொடங்கியது. அன்று கந்தர் சஷ்டி. சௌகரியமான விடுமுறை நாளன்று வாய்த்திருந்தது. கோயிலுக்குப் போய் அன்றைய விசேஷ ஏற்பாடுகளையெல்லாம் பார்த்து வர வேண்டுமென்று அவள் பத்து நாள்கள் முன்பே கேட்டுக் கொண்டு அவனும் அதரு இணங்கியிருந்தான். ஆனால் கடைசியில் அன்றைக்குக் கோயிலுக்குப் போக முடியாமல் போயிற்று. காரணம், அங்கே போய்விட்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவுக்குக் கூட கையில் காசு இல்லை. மாதக் கடைசி! அவன் என்னவோ ரொம்பச் சுலபமான ஒரு மாற்று வழியைச் சிபாரிசு செய்தான். அந்த வழியைக் கடைப்பிடித்திருந்தால், அவர்கள் கோயிலுக்குப் போய் வந்திருக்கலாம். ஆனால் அவள் அந்த வழியை ஏற்கவில்லை. பக்கத்து வீட்டு மாமியிடமவள் பத்து ரூபாய் கடன் வாங்கி வர வேண்டும் என்பதுதான் அவன் சொன்ன யோசனை. எப்படியிருக்கிறது கதை?
அவளுக்கு இருந்த அளவு தெய்வபக்தி அவனுக்கும் உண்டு. ஆனால் அவளுக்குக் கொஞ்சம் வெவ்வேறு கோயில்களுக்குப் போக வேண்டும்.. உற்சவம், பஜனை ஆகியவற்றில் பங்கு பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை உண்டு. அவனுக்கு இவ்வித ஆசைகள் கிடையாது. வெறுமனே வீட்டில் காலையும் மாலையும் நெற்றியும் விபூதி இட்டுக்கொண்டு சாமி படத்தின் முன்பு கும்பிடு போடுவதோடு சரி. வெளியே கிளம்புவதற்கு முன் அதை ஞாபகமாக அழித்து விடுவான். ‘இது என்னுடைய பர்சனல் விஷயம். டமாரம் அடிக்க விரும்பவில்லை’ என்பான். அவள் ஏதோ தன்னுடைய நம்பிக்கைகளை டமாரம் அடிக்கிற மாதிரி; அவள் கோயிலுக்குப் போவது அனாவசிய வெளிப்பகட்டு மாதிரி.
எனவே இந்தப் பகட்டுக்கு அவள்தான் பண ஏற்பாடு செய்து கொள்ளவேண்டுமாம் பக்கத்து வீட்டு மாமி மூலம். ஹூம். அவளுக்கொன்றும் இத்தகைய இரவல் சுவாமி தரிசனமெல்லாம் வேண்டாம். அவளுடைய விருப்பம் எதனுடனாவது அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருக்கலாம். இருந்தாலும் அதை கௌரவிப்பதுதானே அன்பின் அடையாளம். இந்த அன்பு இருந்திருந்தால், அவன் நிச்சயம் அன்றைய பணத்துக்காக முன்னேற்பாடுடன் இருந்திருப்பான். இக்கருத்தை அவள் சூசகமாகத் தெரிவித்தவுடன் அவன் வெடித்தான், ‘இதை நீ வீணே ஒரு கௌரவப் பிரச்னையாக்குகிறாய்.’
‘ஒரு திட்டமில்லாமல் வாழ்க்கை நடத்துவதை நான் ஆதரிக்க முடியாது’ என்றாள் அவள். ‘பத்து ரூபாய்தானே, பக்கத்து வீட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் திடீரென்று நூறு ரூபாயோ அல்லது ஆயிரம் ரூபாயோ கூட நமக்குத் தேவைப்படுகிற சந்தர்ப்பம் இன்றோ நாளையோ நேரலாம். அதையும் கூட பக்கத்து வீட்டில் வாங்கிக் கொள்வீர்களா என்ன?’
‘நீ வெறுமனே ஆர்க்யூ பண்ணணுமென்பதற்காகவே ஆர்க்யூ பண்ணுகிறாய்.’
‘நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்.’
’நூறோ ஆயிரமோ தேவைப்பட்டால் அது கிடைப்பதற்கும் கடவுளே ஒரு வழி பண்ணுவார். தேவையை உருவாக்குகிறதும் அவர்தான். தீர்த்து வைக்கிறதும் அவர்தான்.’
இப்படி அவன் கூறினானோ இல்லையோ, உடனே காரசாரமான ஒரு சொற்போர் அவர்களிடையே தொடங்கியது. கடவுள் என்ற கருத்தை அவன் கொச்சைப்படுத்துகிறானென்றும், பொறுப்பின்மை, திட்டமின்மை இதற்கெல்லாம் கடவுள் ஒரு சால்ஜாப்பாகிவிடக்கூடாதென்றும் அவள் கூறினாள். அவள்தான் அவ்வாறு கொச்சைப்படுத்துகிறாளென்றும், கடவுளின் அருளில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் நாளையச் சோறு பற்றிய கவலை கூட அண்டாத தூய மட்டங்களில் சஞ்சரித்தலே தமக்கும் கடவுளுக்கும் செய்துகொள்ளும் நியாயமென்றும் அவன் கூறினான். அவன் குதர்க்கம் செய்வதாக அவள் சொன்னாள். இல்லை, அவள்தான் குதர்க்கம் செய்கிறாளென்று அவன் சொன்னான்.
இதையடுத்துச் சிறிது நேரம் மௌனம்; அவள் சமையலறை வேலைகளில் ஈடுபட்டாள். அவன் தன் சட்டைகளைத் துவைக்கத் தொடங்கினான். அவன் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் உலர்த்தத் தொடங்கும்போது, அவளும் அங்கே வந்தாள், அங்கிருந்த அம்மியைப் பயன்படுத்துவதற்கு. உடனே அவன் மறுபடி தொடங்கிவிட்டான்: ‘அன்றைய சாம்பாருக்கு வேண்டியதை நீ அன்றன்றைக்குத்தானே அரைத்துக் கொள்கிறாய்? ஒரு வாரத்துக்கு முன்பே அரைத்து வைத்துக் கொள்வதில்லையே! அதே போல, அன்றன்றுக்கு எழும் பிரச்னைகளை அன்றன்றைக்குத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கலாமே என்றுதான் நான் சொல்கிறேன்.’
இதைக் கேட்டு அவள் சட்டென்று அரைப்பதை நிறுத்தினாள். முகத்தில் ஒரு விஷமத்தனமான புன்னகை. ‘ஒன்று சொல்கிறேன் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?’ என்றாள்.
ஒரு வாரத்துக்கு அரைத்து வைத்துக் கொள்வது சாத்தியந்தான். ஆனால் அதற்கு வீட்டில் ஃப்ரிஜ் இருக்க வேண்டும். மறுபடி சேமிக்கிற விருப்பத்தையும் திறனையும் பொறுத்த விஷயம்.’
அவன் பேசாமலிருந்தான்.
‘இன்னொன்று சொல்கிறேன். அன்றன்றைய வாழ்வு என்று தத்துவம் பேசுகிறவர்கள் மாதச் சம்பளத்துக்கு ஒரு வேலை ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. கல்யாணம் செய்துகொண்டு இருக்கக்கூடாது. ஒரு சிலவற்றில் தொலைதூர நோக்கும் நிரந்தர ஏற்பாடுகளும் வேண்டும். வேறு சிலவற்றில் அந்த நோக்கு வேண்டாம் என்பது முரண்பாடாக இருக்கிறது.’
பலமாகவே பதிலடி அடித்துவிட்டாள். ஆனால் அவன் சிறிதும் நிதானமிழக்கவில்லை. இழந்தால் அது அவளுக்கு வெற்றியாகிவிடுமே! அமைதியாகச் சொன்னான். ‘என்னில் முரண்பாடு இல்லையென்று நான் எப்போது சொன்னேன்? நான் தேவபுருஷனல்ல, ஒரு சராசரி மனிதன், என்னில் சில முரண்பாடுகளுக்கும் குறைகளுக்கும் அனுமதி தா, என்றுதான் நான் சதா வேண்டுகிறேன்.’
‘அப்படியானால் எனக்கும் உங்கள் முரண்பாடுகளை ஏற்காமல் முரண்பட அனுமதி தாருங்கள்.’
ஒருவேளை ஏதோ ஒரு விஷயத்தை வைத்து - அது எந்த விஷயமானாலும் சரி வாக்கு வாதம் செய்வதில் அவர்களுக்கு ஓர் இன்பம் ஏற்படத் தொடங்கியிருந்ததோ?
அப்படியும் இருக்கலாம்.
அவன் ஒரு எஸ்கேப்பிஸ்ட் என்று அவள் அலுத்துக்கொள்வாள். ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன், என்ற உண்மையை அவன் சந்திக்கத் தயாரில்லை, அதுதான் பிரச்னை உண்மையில், சிகரெட்டை ஊதித்தள்ளி, ஏதோ அரச குமாரனாகத் தன்னை எண்ணிக் கொண்டு.....
ஆமாம், நான் ஓர் எஸ்கேப்பிஸ்ட்தான், என்பான் அவன். ரசனையற்ற மூடர்கள்தான் உண்மையை ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்திக் கொண்டவாறிருப்பார்கள். கற்பனை மூலமும் கனவுகள் மூலமும் வாழ்க்கையை ரம்மியப்படுத்திக் கொண்டு வாழ்தலே அவனுக்குப் பிரியமான....
பொறுப்பில்லாதவன். எவ்வித வருங்காலத் திட்டமும் இல்லாதவன், என்று அவள் அவனைச் சாடுவாள். நிகழ்காலத்தை அனுபவிக்கத் தெரியாதவள் என்று அவன் அவளைக் கிண்டல் செய்வான்.
அவள் வேண்டும் என்றால் அவன் வேண்டாம் என்பான். அவள் வேண்டாம் என்றால் அவன் வேண்டும் என்பான்.
ஆனால் திடீரென்று ஒரு நாள் அவளுடைய வேண்டாம் அவனுடைய வேண்டாமாகவும் ஆகியது. திடீரென்று அவன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டான். காரணம், அவர்களிடையே நடந்த எந்த வாக்குவாதமும் இல்லை, அவள் அவனிடம் சொன்ன ஒரு செய்தி: ‘நான் உண்டாகியிருக்கிறேன்.’
அவளுடைய இந்த அறிவிப்பு கிடைத்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டதாக அவன் அறிவித்தான். ‘உனக்காக இல்லை, குழந்தைக்காக’ என்றான். ‘சிகரெட் நாற்றம் அதற்கு ஒத்துக் கொள்ளாது...’ மேலும், பெரிய பணக்கார வீட்டுக் குழந்தை போல் மிக சொகுசாக அதை வளர்க்க வேண்டும். எவ்விதமான குறையும் அதற்கு இருக்கக் கூடாது; அதற்குப் பணம் சேர்க்கத் தொடங்க வேண்டாமா?’
அவளுக்கு, தனக்குக் கிடைத்தது வெற்றியா அல்லது தோல்வியா என்று புரியவில்லை. குழந்தையின் பாலுள்ள கரிசனமும் அக்கறையும் அவனுக்குத் தன்னிடம் ஏனோ இல்லை. குழந்தை அவனுடையதென்றால் தானும் தானே அவனுடையவள்? தான் காண்பித்த உடைமையுணர்வினால் அவனுடைய (அவள் பாற்பட்ட) உடைமையுணர்வு பிணங்கிக் கொண்டதா?
‘மேலும்....’ என்று அவன் தொடர்ந்தான். ‘மேலும் அப்பா ஏதோ தப்புக் காரியம் பண்ணுகிறார் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டாம்... குழந்தையின் அப்பா பற்றிய ஓர் லட்சிய உருவம் உன்னுடையதிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டாம்... அப்பாவை பற்றி அது பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும். நீ உன் அப்பாவைப் பற்றிச் சொல்லிக் கொள்வது போலவே.’
இந்த சம்பாஷணை நடந்தது விடுமுறை இல்லாத ஒரு தினத்தன்று காலையில், அவன் ஆபிசுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது. சொல்லி விட்டு அவன் ஆபிஸ் போய் விட்டான். அன்று பகலெல்லாம் அந்தச் சொற்கள், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள் - அவள் மனத்தில் ரீங்காரமிட்டபடி இருந்தன. அவள் தன் அப்பாவின் மேல் வைத்திருக்கும் மதிப்பை அவன் மீது... வைகக்வில்லையென்று அவன் சொல்ல விரும்புகிறானோ? இந்த மனப்பாங்கு குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளும் என்று பயப்படுகிறானோ? கடவுளே, இதென்ன வீண் தப்பபிப்பிராயங்களும் குழப்பங்களும்....
அன்றிரவு அவள் அவனிடம் சொன்னாள்: ‘இதோ பாருங்கள், உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.கௌரவிக்கிறேன்... உங்கள் பழக்கங்களைப் பற்றி நான் பேசியதெல்லாம் ஒரு அன்பினால்தான். நீங்கள் இப்படித் தவறாகப் புரிந்து கொள்வதாக இருந்தால்.... நல்லது, உங்களுடைய எந்தப் பழக்கத்தைப் பற்றியும் நான் இனி எதுவும் சொல்லவில்லை. சிகரெட் பிடிப்பது உள்பட.’
அவன் பூடகமாக ஒரு புன்னகை புரிந்தான். ஆனால் அதன் பிறகு அவன் சிகரெட் குடிக்கவே இல்லை. அவளும் இத்தகைய விஷயங்களைப் பற்றிக் குறிப்பிடுவதையே கவனமாகத் தவிர்க்கத் தொடங்கினாள்.
அவர்களுடைய சிந்தனை, எதிர்பார்ப்பு எல்லாம் இப்போது குழந்தையை பற்றியதாகத்தான் இருந்தது.
இருவரும் தத்தம் சுய மதிப்புக்குச் சிறிதும் குந்தகம் விளைவிக்காமலேயே தம் தனித்தனியான அன்பின் வடிகாலாகவும் பரவசமூட்டும் ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கப் போவதாகவும் வரப்போகும் குழந்தையை உருவகம் செய்து கொண்டு அதன் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
புகையில்லாத ஒரு நெருப்புக்காக அவர்கள் காத்திருப்பது போலத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment