Search This Blog

Tuesday, August 7, 2012

சி. வை. தாமோதரம்பிள்ளை


இராவ்பஹதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னுங் கிராமத்திலே வைரவநாதபிள்ளை என்பாருக்கும், அவர் பத்தினியாராகிய பெருந்தேவி என்பாருக்கும் சிரேட்ட புத்திரராய் 1832 செப்டெம்பர் 12 இலே பிறந்தார்கள்.
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், பாடசாலைப் பரிசோதகராயிருந்த தமது தந்தையாரிடமே உரிய பருவத்திற் கல்வி பயிலத்தொடங்கி, வாக்குண்டாம், நன்னெறி, மூதுரை, திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நூல்களை ஐயந்திரிபறக்கற்றுணர்ந்து, சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர்பால் அடைந்து, நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியப் பயிற்சியும், இலக்கணப்பயிற்சியும் பெற்றுத் தமிழ் விற்பன்னராய் விளங்கினார்கள்.
தமிழோடு ஆங்கிலமும் பயில விரும்பிய பிள்ளையவர்கள், தெல்லிப்பழை அமெரிக்க மிசன் கலாசாலையிலே ஆங்கிலக்கல்வியை ஆரம்பித்தார்கள். பின்னர் அம்மொழியிலேயே உயர்தரக்கல்வி பெறும் நோக்கமாக வட்டுக்கோட்டையிலுள்ள, யாழ்ப்பாணச் சர்வ சாத்திரக் கலாசாலையை அடைந்து 1844 ஒக்டோபர் 12 தொடக்கம் பயிற்சி பெற்று வருவாராயினார்கள். அக்கலாசாலையிலே, கறல் விஷ்வநாதபிள்ளை, நெவின்ஸ், சீ. டி. மில்ஸ் முதலிய பேரறிஞர்கள் பிள்ளையவர்களுக்கு ஆசிரியர்களாயிருந்து கற்பித்து வந்தார்கள். பிள்ளையவர்கள் அங்கு கற்பிக்கப்பட்ட பாடங்களுட் கணிதம், ஆங்கிலம், தமிழ், தத்துவம், வானசாத்திரம், என்னும் பாடங்களிலே விசேட திறமைபெற்று முதன்மாணவராய் விளங்கி, யாவராலும் நன்கு மதிக்கப்பெற்றார்கள். பிள்ளையவர்களிடத்திலே விளங்கிய தமிழறிவைக்கண்டு இறும்பூதெய்திய ஆசிரியர் நெவில்ஸ் அவர்கள், பிள்ளையவர்களைப் ‘பண்டிதன்’ என்று அழைப்பது வழக்கமாயிற்று.
இவ்வாறு நன்மதிப்புப் பெற்று, எட்டுவருட காலத்தை ஆங்கில உயர்தரக்கல்வியிற் பயன்படுத்திய பிள்ளையவர்கள், 1952 செப்டெம்பர் 23 இல் தம் இருபதாவது வயதிலே, கோப்பாயிலிருந்த போதனாசத்தி வித்தியாசாலையின் ஆசிரியர்களுள் ஒருவராக நியமிக்கப்பெற்றார்கள். இங்கு கற்பித்து வரும் நாளிலேயே, நீதிநெறிவிளக்க உரை பிள்ளையவர்களால் வெளியிடப்பட்டது.
அந்நாளில் சென்னையிலே வாழ்ந்த பார்சிவல் பாதிரியார் பிள்ளையவர்களின் விவேகசாதுரியத்தையுந், தமிழ்ப் புலமையையுங் கேள்வியுற்று, அவர்களைச் சென்னைக்கு அழைத்துத் ‘தினவர்த்தமானி’ என்னும் பத்திரிகை ஆசிரியராக நியமித்தார்கள். பிள்ளையவர்கள் பத்திரிகாதருமத்தினின்றும் எட்டுணையுந் தவறாமல், நடுநின்று, விடயங்களை ஆராய்ந்து, வசனநடையை அணிபட அமைத்துப் பத்திரிகையை நடத்தியும் லஷ்சிங்டன் துரை முதலான ஆங்கிலேயருக்கு தமிழ் கற்பித்தும் வந்தார்கள். இதனால், பிள்ளையவர்களது திறமையை நன்கு அறிந்த அரசினர், அவர்களை சென்னை இராசதானிக் கல்லூரித் தமிழப் பண்டிதராக நியமித்தார்கள்.
பிள்ளையவர்கள், இராசதானிக் கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராயிருந்து கடமைபுரிந்துவருநாளிற் சென்னைச் சர்வசாத்திரக் கலாசாலை தாபிக்கப்பட்டது. அக்கலாசாலையிலே 1857ம் வருடம் முதன்முதல் நடாத்தப்பட்ட பிரவேச பரீட்சைக்குத்தோற்றிச் சித்தியடைந்த மூவரிற் பிள்ளையவர்களும் ஒருவர். பிரவேச பரீட்சைக்குப்பின் நான்கு திங்களுள், முதன்முதல் பி.ஏ பரீட்சையும் நடைபெற்றது. இப்பரீட்சைக்கும் பிள்ளையவர்கள் தமது ஆசிரியரான காறல் விஷ்வநாதபிள்ளையவர்களுடன் தோற்றிச் சித்தியடைந்தார்கள். இதன்பின், கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலை உதசியாசிரியராக நியமிக்கப்பெற்றார்கள். அவ்வித்தியாசாலையிற் கடமையாற்றிய ஆறு மாதகாலத்துள், அவ்வித்தியாசாலையிலுண்டாக்கிய விசேட அபிவிருத்திகள், சீர்திருத்தங்கள் காரணமாகப் பிள்ளையவர்களுக்கு அரசாங்க வரவு செலவு கணக்குச் சாலையிற் கணக்காய்வாளர் பதவியும், அத்துறையில் காட்டிய திறமை காரணமாக விசாரணைக்கர்த்தர் பதவியும் முறையே கிடைத்தன. இக்காலத்திலே (1871) பிள்ளையவர்கள் பி.எல் பரீட்சையிலும் வெற்றி பெற்றார்கள்.
சின்னஞ்சிறு பராயந்தொட்டே தமிழ்மொழியில் மிக்க பயிற்சியும் சிறந்த தமிழபிமானமுமுடையவராய் இருந்த பிள்ளையவர்களுக்கு, வரவுசெலவுக் கணக்குச்சாலையிற் கடமையாற்றிவருங் காலத்திலே – ஓய்வு நேரங்களிலே, பண்டைத் தமிழ்க் கிரந்தங்களை மேன்மேற் கற்பதிலும், பரிசோதனஞ் செய்வதிலும் ஈடுபாடு உண்டாயிற்று. கடல்கோளாலும் பிற காரணங்களாலும் அரிய பெரிய தமிழ்நூல்களெல்லாம் அழிந்தொழிய, எஞ்சிநின்ற சில நன்னூல்களும், அந்நாளிலே ‘செல் துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னாளேடு’ களாய், ஓரஞ்சிதைந்தும் இதழ் ஒடிந்தும் ‘சீரழிந்து கெட்டுச் சிதைந்து நிரைமாறிப் – பேரழிந்து பூஞ்சு பிடித்துப் பிடியாகி – முன்பின் முரணி முழுதும் புழுவுழுது – கம்பை நடுமுரிந்து கட்டுவிட் டுச்சிதறி – மூலைக்கு மூலை மடங்கி முடங்கி’ எடுப்பாரும் அடுப்பாருமின்றி மண்ணுக்கிரையாகிக் கிடந்தன. இந்நிலையைக் கண்ட பிள்ளையவர்கள், அழிந்தொழிவனவாய அக்கிரந்தங்களுட் சிறந்தனவற்றை விரைந்தச்சிட்டுப் பாதுகாக்க வேண்டியது எத்துணை இன்றியமையாப் பெருங் கடமையென்பதை யுணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளை மேற்கொண்டார்.
முன்னர் – தமது இருபதாவது வயதிலேயே நீதிநெறிவிளக்கத்தை அச்சிட்டு வெளிப்படுத்திய பிள்ளையவர்களுக்கு ஏடுகளைப் பரிசோதனஞ்செய்து அச்சிடுவது புதியதொரு முயற்சியன்று. ஆயினும், இராசாங்க உத்தியோகத்திலிருந்த தமக்கு தேசமெங்குஞ்சென்று பரிசோதனத்துக்குத் தேவையான ஏட்டுப்பிரதிகளைப் பெறுதற்கு போதிய அவகாசமின்மையானும், அந்நாளிலே தமிழ்நாடெங்கணும் மெய்யறிவுறித்திய ஆசாரியாரும் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கிய சிறீலசிறீ ஆறுமுக நாவலரவர்கள் இப்பெருங் கடமையை மேற்கொண்டு அநேக நூல்களைத் திருத்தியும் விளக்கியும் விரித்தும் அச்சிடுவித்து வந்தமையானும் தாம் அச்சிட்டு வெளியிடத்தொடங்காமல், நாவலரவர்களது பரிசோதனம்பெற்று வெளியாவதே நன்றென்று கருதி, அவர்களுக்கு தம்மாலியன்ற உதவிகளைப் புரிந்து வந்தார்கள். இத்தொடர்பினால் நாவலரவர்கள் பரிசோதித்துக்கொடுத்த தொல்காப்பியம் சொல்லதிகாரத்தைப் பிள்ளையவர்கள் தம்பெயரால் அச்சிட்டு விபவ (1868) வருடம் புரட்டாதி வெளியிட்டார்களென்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்நூல் வெளிவந்தபின் பதினொரு வருடங்கள் கழித்து – 1879 வருடம் கார்த்திகை மாதம் 21 இல் நாவலரவர்கள் இறைவனடி யடைந்தார்கள். அதனால்,
வேதம்வலி குன்றியது மேதகுசி வாகம
விதங்கள் வலிகுன்றி னவடற்
சூதன்மொழி மூவறுபு ராணம்வலி குன்றியது
சொல்லவரி சைவ சமயப்
போதம்வலி குன்றியது பொற்போதிய மாமுனி
புகன்றமொழி குன்றியது நம்
நாதனிணை ஞாலமிசை நாடரிய ஆறுமுக
நாவல ரடைந்த பொழுதே
என்று வருந்தி, நாவலரவர்கள் மேற்கொண்ட பணியைத்தொடர்ந்து நன்னூல்களையெல்லாம் அச்சிட்டுத் தமிழைப் பாதுகாத்தலே தம் வாணாட் கடமையாமெனத் துணிந்த பிள்ளையவர்கள், வீரசோழியம் என்னும் நூலை 1881ம் வருடம் வெளியிட்டார்கள். நாவலரவர்களது மறைவுக்குப்பின் இரண்டு வருடங்கள் கழித்து இராசாங்க உத்தியோகத்தினின்றும் பிள்ளையவர்கள் இழைப்பாறினார்கள். அதன்பின், தமது முழுநேரத்தையும் தாம் ஆற்றத்துணிந்த நற்பணிக்கு செலவிடுவாரானார்கள். அதன்பயனாய், 1883ம் வருடம் தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் என்பனவும், 1885ம் வருடம் தொல்காப்பியம் பொருளதிகாரமும், 1887ம் வருடம் கலித்தொகையும், 1889ம் வருடம் இலக்கண விளக்கம் சூளாமணி என்பனவும், 1891ம் வருடம் தொல்காப்பியம் எழுத்ததிகாரமும், 1892ம் வருடம் தொல்காப்பியம் சொல்லதிகார(நச்சினார்க்கினிய)மும் வெளிவந்தன. (1897 வருட பிற்பகுதியில் புறநானூறு – மணிமிடை பவளம் வரை பிள்ளையவர்களால் பரிசோதிக்கப்பட்டதாயினும், வெளியிடப்படவில்லை)
இந்நூல்களை வெளியிட்டதோடமையாது, கட்டளைக்கலித்துறை என்னும் இலக்கண நூலையும், பொருட்பொலிவு உவமான உவமேயச்சிறப்பு நடையழகு முதலியன செறிந்து கற்றோர்க்கு வியப்பை தரும் வசனசூளாமணியையும் சைவ மகத்துவம் என்னும் செய்யுளும் உரையும் செறிந்த சைவ நூலையும், ஆறாம் ஏழாம் வாசக புத்தகங்களையும் நட்சத்திர மாலை முதலியனவற்றையும் தாமே யாத்து வெளியிட்டார்கள்.
பிள்ளையவர்கள் இராசாங்க உத்தியோகத்தினின்று ஓய்வுபெற்ற பின் 1887ம் வருடம் தொடக்கம் புதுக்கோட்டை சமஸ்தான மகாமன்றத்து நியாயாதிபதிகளில் ஒருவராயும் நீதிபதியாயும் நான்கு வருடங்கள் கடமையாற்றியவர்கள். சென்னைத் திராவிடக்கிரந்த பரிபாலன சபை, நியாய பரிபாலன சபை என்பவற்றில் அங்கத்தவராயும், சென்னைச்சர்வகலாசாலைத் தமிழ்ப் பரீட்சகராயும் இருந்து பணிபுரிந்தவர்கள். சென்னைச் சர்வகலாசாலையின் முதல் வித்தியார்த்தி என்ற பெருமைக்கும் உரியவர்கள்.
தேசமத பாசாபிமானமிக்கவரும் சிவபூசாதுரந்தரரும் ஏடுகாத்த பீடுடையாரும் ஆகிய சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களது சால்புடைமையைக் கண்ட சென்னை அரசாங்கம் 1875ம் வருடம் இராவ் பகதூர் என்னுங் கண்ணிய பட்டம் நல்கி கௌரவித்தது. இத்துணைப் பெருஞ்சிறப்பெய்தித் தமிழரனைவர்களுக்கும் ஒரு தமிழ்த் தந்தையாய் வாழ்ந்த பிள்ளையவர்கள் 1901ம் வருடம் தை 1 செவ்வாயக்கிழமை காலை 9.30 மணியளவிலே வைகுந்த ஏகாதசி என்னும் புண்ணிய காலத்திலே சங்கமிருந்து தமிழாய்ந்த சிவனார்தந் திருவடிக்கீழ் எய்தி அயராவின்பத் தழுந்தினார்கள்.
வாழிய வமலன் பாதம் வாழிய தமிழன் மாட்சி
வாழிய வதுகொள் சங்கம் வகுத்தநன் னூல்களெல்லாம்
வாழிய ரருநூல் வல்ல வண்புகழ்ப் புலவர் மேலும்
வாழிய ரந்நூ லோம்பும் வள்ளலெந் தாமனன்னார்.
 http://www.thejaffna.com

No comments:

Post a Comment