Search This Blog

Wednesday, June 13, 2012

முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்




நாம் நிமிர்ந்து நிற்கும் போதும், நடக்கும் போதும், உட்காரும் போதும் நமது உடல் எடையை முதுகு தாங்குகிறது. எனவே அதிக உடல் பருமனே முதுகுவலிக்கு முக்கிய காரணம்.
முதுகு என்பது எலும்புகள் மட்டும் கொண்டது அல்ல. முதுகு எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு எலும்புகளுக்கு நடுவே டிஸ்க் எனப்படும் ஓர் தட்டு உள்ளது. இது உராய்வை தடுக்கின்றது.
இந்த டிஸ்க் தெரித்து பிதுங்குவதாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படலாம். மேலும் முதுகு எலும்பினைச் சுற்றி தசைகள், மற்றும் நார்கள் உள்ளன. இவையாவும் சேர்ந்து உடல் எடையை சீராகத் தாங்குகின்றன. இதைத் தவிர முதுகெலும்பு வழியாகத்தான் நரம்புகள் செல்கின்றன.
எனவே முதுகுவலி என்பது இவற்றில் ஏதாவது ஒன்றிலிருந்து அதாவது முதுகெலும்பு, டிஸ்க், தசைகள், நார்கள், முதுகெலும்பு சந்திப்புகள் நரம்புகள் போன்றவற்றில் எதிலிருந்தும் முதுகுவலி வரலாம்.
காரணங்கள்:
தண்டுவட- டிஸ்க் பாதிப்பினால் ஏற்படும் முதுகுவலி:முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள இண்டர் வெர்பல் டிஸ்க் தேய்வதால், பிதுங்குவதால் வீங்குவதால் மேலும் நரம்புகளை அழுத்துவதால் ஏற்படுகிறது.
20 சதவீத முதுகுவலி டிஸ்க் பிரச்சினையால் வருகிறது. 20-40 வயதுள்ளவர்களுக்கு வருகிறது. நீண்ட நேரம் உட்காரும் போதும், படுக்கும் போதும் நடு முதுகில் வலி இருக்கிறது.
மேலும் காலின் ஒரு பக்கமாக வலி பரவலாம். டிஸ்க் பிதுங்கி நரம்புகளை அழுத்துவதால் காலில் வலி பரவலாம். கால்களை தூக்கும் போதும், குனியும் போதும், கனமான பொருள்களை தூக்கும் போதும் வலி இருக்கும்.
இத்தகைய முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? முதல் தடவையாக வரும் முதுகுவலிக்கு உடனடி ஓய்வு தேவை. என்ன செய்தால் வலி அதிகமாகிறதோ அதனை தவிர்க்க வேண்டும்.
உடனடியாக மருத்துவரை அணுகி வலியின் காரணத்தை உறுதி செய்து மாத்திரை மற்றும் ஓய்வு ஆகியவற்றாலேயே முழுவதுமாக சரி செய்திட முடியும்.
சுயமருத்துவம், கை மருத்துவம், சுளுக்கு எடுத்தல், மசாஜ் செய்தல் ஆகியவை ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். இத்தகைய வலிகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது மிக எளிது. சரியாக சிகிச்சை எடுத்து கொள்ளாவிடில், நிரந்தர முதுகு வலியாகவோ, அல்லது நரம்புகளை அழுத்தி நரம்புகள் செயலிழக்கவோ வாய்ப்புகள் உள்ளது.
தண்டுவட நரம்பு பாதிப்பினால் ஏற்படும் முதுகுவலி: முதுகு எலும்பு தேய்வதாலும், முதுகு எலும்புகள் விலகுவதாலும், தண்டு வட நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் முதுகு வலி வருகின்றது.
சுமார் 15 சதவீத முதுகுவலிக்கு இது காரணம், இது போன்ற நரம்பு அழுத்த முதுகுவலி பெரும்பாலும் வயதானவர்களுக்கும், முதுகில் பலமான அடி ஏற்பட்டவர்களுக்கும் வருகிறது. இந்த முதுகு வலி ஒரு பக்கமாக இருக்கும்.
முதுகில் இருந்து கால்வரை வலி இருக்கும். நடக்கும் போதும், கால்களை தூக்கும் போதும், பொருட்களை குனிந்து தூக்கும் போதும் வலி இருக்கும். இத்தகைய வலி பெரும்பாலும் ஓய்வு பயிற்சி போன்றவைகளாலும் சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும் சரி செய்ய முடியும்.
கீழ் இடுப்பு வலி: முதுகெலும்புகளும், இடுப்பு எலும்புகளும் சேரும் சந்திப்பு சில சமயம் முதுகுவலிக்கு காரணமாகிறது. இந்த சந்திப்பு மூட்டுகளில் தேய்மானம் அடிபடுதல் மற்றும் எலும்பு நோய்கள் போன்றவைகளால் பாதிப்படைவதால் முதுகுவலி ஏற்படுகிறது. சுமார் 10%முதுகுவலிக்கு இது காரணமாகிறது. இந்த கீழ் இடுப்பு சந்திப்பு வலி பெரும்பாலும் உட்காரும் பகுதியில் வலி இருக்கும்.
தொடைப்பகுதியின் வெளிப்பக்கத்தில் வலி இருக்கும், கால்களை மடக்கும் போதும் வலி அதிகமாகும். இது போன்ற முதுகுவலியை சிடி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் மூலமாக கூட கண்டறிய இயலாது.
நோயாளியை பரிசோதனை செய்வதாலும் இந்த குறிப்பிட்ட சந்திப்பில் எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து ஊசி மருந்துகளை செலுத்துவதால் மட்டுமே வலியின் காரணத்தை அறியவும் அவற்றை நீக்கவும் இயலும்.

No comments:

Post a Comment