நீர்வை. தி.மயூரகிரி சர்மா
வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ
பான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்
பான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்
பிள்ளையார் சுழி
நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம்மவர்களின் உயிரோடு கலந்த உறவாடும் தெய்வம் பிள்ளையார்.
‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் சாதராணமாக பழகி வரும் மொழிகள்..
எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. இப்படியெல்லாம் இருக்கிற பிள்ளையார் பற்றிய தவறான கருத்துக்களும் கூட நம்மவர்களிடத்தில் பரவியிருக்கிறதை வேதனையோட பார்க்க வெண்டியிருக்கிறது. முக்கியமாக, மதமாற்றிகளின் கேலிக்கு உள்ளாகும் கடவுள்களில் பிள்ளையாரும் முக்கியமானவர். இப்படித் தான் அண்மையில் நண்பர் ஒருவர் கிறிஸ்துவர் ஒருவர் சொன்னார் என்று பிள்ளையார் பற்றிய சில கருத்துக்களைச் சொன்னார்.
அதுவே இக்கட்டுரை எழுதுவதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
பிள்ளையாரின் பிறப்பு
ஆதியும் அந்தமுமில்லாத பெருமானுக்கு பிறப்பேது? ஆனாலும் இறைவன் உயிர்கள் மேற் கொண்ட பெருங்கருணையால் அவதாரம் செய்கிறான். எனினும் விநாயகரை ஒரு அவதாரமாகக் கொள்ளலாமா? என்பது ஒரு கேள்வியே.. இவர் ஸ்ரீராமர் போல.. கிருஷ்ணர் போல மண்ணில் அவதரித்தவர் அன்று. எனினும், புராணங்களில் விநாயக உற்பத்தி பற்றி பல செய்திகள் கிடைக்கிறது. மத்ஸ்யபுராணத்தில் உமாதேவி தான் நீராடிய போது தன் உடல் அழுக்குகளைத் திரட்டி வைக்க அப்போது பிள்ளையார் பிறந்தார் என்கிறது. இதனைக் கூறுவது போல விநாயக சஹஸ்ரநாமத்திலும் ஒரு நாமம் உண்டு. ஆனால் இதனை இப்படியே பொருள் கொள்ளலாமா? அல்லது வேறு தத்துவ செய்தி உண்டா? அல்லது இக்கதையை விலக்க வேண்டுமா? ஆராயப்பட வேண்டியது.
விநாயகபுராணம்
மிகப்பெரிய சிக்கல் என்ன எனில் கந்தப்பெருமானுக்கு கந்தபுராணம் போல, விநாயகருக்கு விநாயக புராணம் என்று சொல்லுவார்கள். ஆனால் விநாயக புராணம் பதிணெண் புராணங்களுள் அடங்காதது. பிற்காலத்தது என்று கருதப்படுவது. அத்துடன் பல முரணான செய்திகள் இங்கு ஒருங்கே இருந்து பெரும் சிக்கலைத் தருகின்றன. இவற்றால் இப்புராணம் அறிஞர்களின் பார்வையிலிருந்து விலகியே இருக்கிறது.
விநாயக அவதாரம் பற்றி விநாயகபுராணத்தில் ‘மூவர் உபாசித்த படலத்தில்’ ஒருவாறாயும், சிந்தாமணி விநாயகர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், விக்னராசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், மயூரேசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், பலப்பல வகையே சொல்லப்படுகின்றன.
ஆனால் இவைகளை எல்லாம் நம்மவர்கள் ஏற்றுப் போற்றினாரில்லை. முக்கியமானதான, பிரணவத்தின் வடிவமாக பிள்ளையார் தோன்றினார் என்பதையே ஏற்றுக் கொண்டனர். உமாதேவியும் சிவபெருமானும் சித்திரமாக வரையப்பட்டிருந்த சமஷ்டிப் பிரணவத்தைப் பார்த்தபோது அதில் அகரம் களிறாக, உகரம் பிடியானதாம். அவை கூடிய போது விநாயகர் தோன்றினார்.
இதைத் திருஞானசம்பந்தர்
‘பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே’
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே’
என்று பாடுகிறார். இக்கதையே காஞ்சிப்புராணம் கந்தபுராணம் ஆகியவற்றிலும் காணலாம். இச்செய்தி அற்புதமான தத்துவச் செறிவுடையதாக விளங்குகிறது. விநாயகரின் உருவமே ஓங்காரவடிவம். எனது சிறுவயதில் ஓ என்ற எழுத்தை எழுதி அதனை பின் பிள்ளையாராக வரைந்து பார்க்கிற வழக்கம் இருந்தது ஞாபகம் வருகிறது.
220 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்தவரான கச்சியப்ப முனிவரர் என்கிற பெரியவர் விநாயகபுராணத்தைத் தமிழில் பாடியிருக்கிறார். ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்கள் கொண்ட இப்புராணம் லீலா காண்டம், உபாசனா காண்டம் என்ற இருபிரிவுகள் கொண்டதாயிருக்கிறது. இப்புராணத்தில் இருந்து தான் காரியசித்தி மாலை என்ற எட்டுப்பாடல்கள் தொகுக்கப்பட்டு பலராலும் ஓதப்பட்டு வருகின்றன.
‘அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்தக உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்த்தெய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்’
அமர்ந்தக உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்த்தெய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்’
என்பது முதலாயிருக்கிய கச்சியப்ப முனிவரரரின் பாடல்கள் நனிச்சுவை நிறைந்தவையாயுள்ளன. எனினும் இப்புராணமும் மக்கள் மத்தியில் பெருவழக்கு உடையதாயில்லை என்பதும் குறிப்பிட வேண்டியுள்ளது.
இலங்கையில் இன்றும் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், ஏகாதசிப்புராணம், திருவாதவூரடிகள் புராணம், சிவராத்திரிப்புராணம், திருச்செந்தூர்ப்புராணம், மயூரகிரிப்புராணம், திருத்தணிகைப்புராணம் என்று பல்வேறு புராணங்களும் ஆலயங்களில் முறைப்படி புராண படனம் செய்யப்படுகிறது. எனினும் விநாயகபுராணத்தைப் படனம் செய்வதாக அறியமுடியவில்லை. எனினும் கச்சியப்ப முனிவராரின் தனிச்செய்யுட்கள் தனிச்சிறப்புடன் ஓதப்பட்டு வருவதைக் காணக்கிடைக்கிறது.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வாழ்ந்த வரதராஜபண்டிதர் என்னும் வரதபண்டிதர் அவர்கள் பிள்ளையார் கதை என்று ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்கள். இது பிள்ளையார் வைபவத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்ட இப் பிள்ளையார் கதை செய்யுள் நடையில் உள்ளது. கவித்துவம் நிறைந்தது. இது இலங்கையில் மிகப்பிரபலமாயுள்ளது.
‘மந்தரகிரியில் வடபால் ஆங்கோர் இந்துதவழ் சோலை இராசமாநகரில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியும் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டி..’ இப்படி இக்கதை நீண்டு செல்கிறது. ஆனால் இக்கதையூடே விநாயகர் வரலாற்று முறைமை முழுமை பெற்றதாகச் சொல்ல இயலாதிருக்கிறது.
எழிலார் விநாயகர் வடிவம்
சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர். அவரது திருமுகம் யானை வடிவம். அவரது திருக்கரங்கள் தேவவடிவம். ஆவரின் மேனி மனித வடிவம். அவரது திருவடிகள் பூதவடிவம் என்பர். அவர் மயூரேசராக மயிலேறி வலம் வரும் போது பறவையினத்தையும் அவர் இணைத்துக் கொள்கிறார். ஆக, சகல உயிர்களின் இணைப்பை சித்தரிப்பது போல பிள்ளையாரின் வடிவம் அமைகிறது.
பிள்ளையார் நிறைய உணவு உண்ணும் சாமி என்பது பலரின் தவறான எண்ணம். ஆதனால் தான் அவர் பெரிய வயிறோடு இருக்கிறாராம். உண்மை என்ன எனில், இதுவும் பிற்காலத்தைய தவறான அபிப்ராயங்களின் விளைவே என நம்பலாம். அண்டப்பிரம்மாண்டமே தன் வயிற்றில் கொண்டதால் தான் பிள்ளையாருக்கு பருத்த வயிறு அமைந்தது என்பதும் சில தத்துவ அறிஞர்களின் கூற்று. இதுவும் சிந்தனைக்குரியதே.
பிள்ளையார் குழந்தை உருவினராகவே பழைய இலக்கியங்களில்.. மந்திரங்களில், தோத்திரங்களில் சித்தரிக்கப்படுகிறார்.
ஆதிசங்கரர் சுப்பிரம்மண்யபுஜங்கத்தில் ஸதாபாலரூபர் என்று விநாயகரைப் போற்றுவார். விநாயகர் குழந்தை உருவினர் என்பதாலேயே நம் தமிழர்கள் பிள்ளை-யார் என்றே அழைக்கிறார்கள். குழந்தைப் பிள்ளை மெல்லிதாக இருப்பதைக் காட்டிலும் சிறிது பருமனாக.. இருப்பதையே விரும்புவர். குழந்தைக் கடவுளான பிள்ளையாரும் அந்தளவில் தான் பருத்த வயிற்றராயிருக்கிறார். ஆனாலும் அவர் என்றும் சுறுசுறுப்பானவர். எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..
விநாயகர் கஜமுகன், உதத்தன், துந்தரன், நக்கிரன், கிருத்திராசூரன், சேமன், குசேலன், குரூராசூரன், பாலாசூரன், வியோமாசூரன், துந்துபி, தர்பாசூரன், சிந்தூரன் இப்படி எராளமான அசுரர்களை அழித்ததாக விநாயக புராணமே சொல்கிறது. இவ்வாறாகில் எவ்வளவு வீரதீரக்கடவுளாக விநாயகர் அமைதல் வேண்டும். இதை விட கணேசக்கடவுள் தன் கரங்களில் அங்குசம், பாசம் முதலிய ஆயுதங்களை வைத்திருப்பதால் அவரது எழுச்சியம்.. அவர் எப்போதும் தன்னடியார்களைக் காத்தருளும் திறனும் வெளிப்படுகிறது.
விநாயகரின் கையில் பூரணத்தின் வடிவமான மோதகத்தைக் காணலாம். அவர் கையிலிருக்கும் மோதக இனிப்பின் ஊடாக பிள்ளையார் தன் அடியவர்களிற்கு இனியன தருவார் என நம்புகிறார். குணநிதியான கணபதியின் வலது திருக்கரத்தில் தந்தம் இருக்கிறது. தனது தனித்துவமான உறுப்பாகிய தந்தத்தை பிள்ளையாரே ஒடித்து தனது கரத்தில் வைத்திருக்கிறார். அது எப்படி?
வியாசர் மகாபாரதம் எழுத முற்படுகையில் அதனை எழுதி அருள வேண்டும் என்று விநாயகரைப் பிரார்த்தித்தார். பெருமானும் தனது தந்தத்தையே முறித்து அதனை எழுத்தாணியாகக் கொண்டு மாபாரதம் வரைந்தார். முறித்த தந்தம் பசு ஞானத்தையும் முறிக்கப்படாத பூரணத்துவம் கொண்ட தந்தது பதிஞானத்தையும் காட்டும் என்பது சைவசித்தாந்தக் கருத்து. அந்தத் தந்தம் அவரது கரங்களில் காட்சி தருகிறது. எழுத்தின் பொருட்டு முறிக்கப்பட்ட கொம்பும்.. அக்கொம்பு
கையில் இருக்கும் காட்சியும் காண்பவர்களுக்கு கல்வி தானே வளரும் என்பது திண்ணம். இதனையை
‘நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்’
கற்குஞ் சரக்கன்று காண்’
என்கிறது திருவருட்பயன்.
‘ஐந்து கரத்தன்’ என்று பிள்ளையாரைப் போற்றுவார்கள். அதில் ஒரு கரம் பாசம் ஏந்துகிறது. பாசக் கயிறு பிணைப்பதற்கு உதவும். அந்தப் பிணிப்பு பிறப்பை உண்டாக்கும். ஆக, அதன் ஊடாக படைத்தல் தொழில் காண்பிக்கப்படுகிறது. இன்னொரு கரம் அங்குசம் ஏந்துகிறது. அது தீமைகளை அழிக்கும். எனவே அது அழித்தல் தொழிலின் அடையாளம். மோதகம் ஏந்திய கரம் அருளலைக் குறிக்கும். அபயகரம் மறைத்தலையும் துதிக்கை காத்தலையும் குறிக்கும் என்றும் விளக்குவர்.
பிள்ளையாரை பல வடிவங்களில் உருவாக்கி வழிபடுவர். பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். அவை; பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி ,ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ரணமோசனகணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி,த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பன.
ஆனால், தற்போது விநாயக சதுர்த்தி நாட்களில் விதம் விதமாக எல்லாம் பிள்ளையாரைப் பார்க்கிறோம். ஆனால், அவ்வாறெல்லாம் வளைந்து கொடுத்து காட்சி தரவல்ல கடவுள் விநாயகர் தானே? ஆனாலும் அதற்காக கடவுளுக்கே உரிய அழகை அழியாத நிலையில் வடிவங்களை உருவாக்குவது மிகத் தவறானது. அவை கண்டிக்கப்படவேண்டியனவுமாகும். பஞ்சரத்னங்கள் பல உண்டு. அவற்றில் ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய கணேச பஞ்சரத்னம் என்கிற ‘முதாகரார்த்த மோதகம் ஸதா விமுக்தி சாதகம்’ என்கிற ஐந்தும் இசை கூடுகிற போது அமைகிற அழகிருக்கிறதே.. இது பஞ்சரத்ன நாயகம் என்கிற பெருமை பெற்று விடுகிறது.
வேதத்தை ஏற்றுக் கொண்டவர்களான வைதீக இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர்களும் பௌத்தர்களும் கூட விநாயகரை வணங்கி வருகிறார்கள். விநாயகரும் எந்தப் பேதமுமில்லாமல் எல்லொருக்கும் அருள் செய்கிறார். இவர் விண்வெளிப்பயணம் செய்தவரல்லவா?
தன்னை நினையத் தருகின்றான்
சைவத்திருமுறைகள் கண்டெடுக்கப்படுவதற்கு விநாயகப்பெருமான் காரணராக விளங்கினார் என்பது ஐதீகம். திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையாருக்கு பூஜை செய்து அதன் மூலமே கல்வி, கலை யாவும் அப்பிள்ளையாரிடமே கற்றவர் நம்பியாண்டார் நம்பிகள்.
அந்த நம்பியடிகளும் இராஜராஜனும் இணைந்து செய்த ஒப்புயர்வற்ற திருப்பணி தான் திருமுறைகள் கண்டெடுத்தமையும் அவற்றை முறைப்படுத்தியமையுமாகும். இதற்கெல்லாம் நம்பிகளின் உள் நின்று வழிகாட்டியவர் மூத்த பிள்ளையாகிய விநாயகர். இவ்வாறெல்லாம் தனக்கு அளப்பெருங்கருணை புரிந்த விநாயகர் மீது நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை பாடியிருக்கிறார்.
என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் -புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்
தன்னை நினையத் தருகின்றான் -புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்
என்பது முதலாயுள்ள இப்பாடல்கள் தமிழ்ச்சுவை மிக்கன. இங்கே இப்பாடலில் ‘தன்னை நினையத் தருகின்றான்’ என்ற வரிகள் இன்பம் பயக்க வல்லன. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற மாணிக்கவாசகரின் வாக்கு இத்துடன் இணைத்துச் சிந்திக்கத்தக்கது.
திருஞானசம்பந்தர் தேரழுந்தூர் வந்த போது சிவன் கோயிலைக் காட்டியவர் பிள்ளையார் தானாம். அது போல, திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் படிக்காசு அளித்த போது அதனை ஒழுங்காக வழங்கியவர் பிள்ளையார் தானாம். திருமுருகன் பூண்டியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளை கூப்பிட்ட கூப்பிட்ட பிள்ளையாரையும், திருவாரூரில் அவருக்காக மாற்றுரைத்த கணபதியையும் பார்க்கலாம்.
பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான்
‘எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நிள்முடிக்
கடக்களிற்றினைக் கருத்துள் இருத்துவாம்’
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நிள்முடிக்
கடக்களிற்றினைக் கருத்துள் இருத்துவாம்’
என்று விநாயகர் வணக்கம் செய்கிறார். அருணகிரியாரின் திருப்புகழில் ஐந்து பாடல்கள் பிள்ளையாருக்குரியன.
தமிழ்க்கடவுளான முருகனின் அண்ணனாகிய பிள்ளையாரும் தமிழ்க்கடவுள் தான். ஆனால் சில மேற்றிசை அறிஞர்கள்(?) சில போலித்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கு நம் நாட்டு அறிஞர்(?) சிலரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். பிள்ளையார் மராட்டியக்கடவுள் என்கிற வாதமும் இருக்கிறது. ஆனால் அவர் தமிழருக்குத் தான் அதிகம் சொந்தக்காரர். விநாயகர் ஓங்கார வடிவம் என்று சொல்கிறோம். ஓ என்ற தமிழ் எழுத்தின் வடிவமாகவே அவர் முகம் அமையக் காணலாம். இது வேற்று மொழிகளில் காண்பதரிது.
பிள்ளையாருக்குரிய பிடித்த நெய்வேதனம் மோதகம். புழந்தமிழ் இலக்கியங்கள் இதனைக் ‘கவவு’ என்கின்றன. இம்மோதகம் செய் முறை தமிழ்நாட்டின் சிறந்த சமையற் கலையின் வடிவமாகவே இன்று வரை துலங்குகிறது. இலங்கையில் மோதகம் இல்லாத விசேஷங்களை காண இயலாது. மோதகம் செய் முறைமையை நோக்கின் இது ஒரு சமையற் கலையின் உன்னதப்படைப்பு என்பதும் புலப்படும்.
யானையும் தமிழ்நாட்டின் சேரதேசத்தின் முதன்மை விலங்கு.. ஆக, பழந்தமிழரின் பெரும் செல்வம். நால் வகைப்படையில் கஜ,ரத,துரக,பதாதி என்கிற போது முன் நிற்பது கஜமே. ‘மலைநாடு வேழமுடைத்து’ என்பதும் தமிழ்நாட்டுச் சிறப்பல்லவா? ஆக, வேழமுகனுக்கும் தமிழ்நாடே உரித்து. வாதாபி காலத்தில் திருச்செங்கோட்டுப் பிள்ளையாரை வாதாபி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கலாம்.
அனாலும் அதற்கு முன்னரே நிறைவான விநாயகர் வணக்கம் இருந்திருக்க வேண்டும். இது இப்படியிருக்க, சங்ககாலத்தில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் என்று ஒரு வழிபாடு நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலும் சேரநாட்டின் தலைநகர் வஞ்சியில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் இருந்ததாகவும் அது கையிற் பாசத்துடன் இருப்பதாயும், அதர்மத்தை அழித்து நன்மையை அது நிலைநாட்டுவதாயும் குறிப்புக்கள் உள. இவை விநாயகர் வழிபாட்டின் அடித்தளமாக இருக்கலாம். பிள்ளையாரையும் பூதநாதன், கணநாதன் என்று சுட்டுவது ஈண்டு சிந்திப்பதற்குரியது.
இலங்கையின் அனுராதபுரத்தில் கிறிஸ்து பிறக்க முன் 2ம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் இருகரங்களும் யானை முகமும் கொண்ட உருவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை எல்லாவல என்கிற ஆய்வாளர் ஆய்வு செய்து கணநாதன் வடிவம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
எளிமையின் தெய்வம்
அறுகும் எருக்கும் பிள்ளையாருக்குரியன. வயல் வெளிகளில் தேடுவாரற்று கிடக்கிற மருத்துவப் பொருளான அறுகை பிள்ளையார் தன் தலையில் சாற்றிக் கொள்வதை விரும்புகிறார். அது போல, எருக்கமிலையை எவருமே நாடுவதே இல்லை.. வெள்ளெருக்கம் வேரில் கூட பிள்ளையார் உறைகிறார் என்று வழிபடுவர். எவரும் விரும்பாத அதனை தன் மிக உவப்பான வில்வமாகக் கொண்டு பிள்ளையார் மட்டும் கருணை செய்கிறார்.
தோர்பி கர்ணம் தான் வேழமுகப்பெருமானுக்கு மிக உயர்ந்த வழிபாடு. தோர்பி என்றால் கைகளினால் என்றும் கர்ணம் என்றால் காது என்றும் பொருள் கொண்டு கைகளால் காதைப்பிடித்துக் கொள்வதை இது குறிக்கும் என்பர். இப்படியே மும்முறை முழந்தாளழவு இருந்து எழுந்து இவ்வழிபாடடைச் செய்வர். இலவச உடற்பயிற்சியாக அமையும் இப்பயிற்சியால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இதன் மூலம் குண்டலினி சக்தியிலும் எழுச்சி உண்டாகும் என்றும் கூறுகிறார்கள்.
ஆற்றங்கரைகளில், அரசமரத்தடிகளில் பிள்ளையாரை வைத்து வழிபாடாற்றுவது தமிழர் மரபு. சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை மகிழ்வித்து வழிபடுவதும் இங்கு முக்கியமானது. வயலில் உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடியினர் தமது பயிர்களுக்குப் பாதுகாப்பாக நம்பிக்கைப் பிள்ளையாரை வேண்டிக் கொள்வர். பின் அறுவடை நிறைவு பெற்றதும் பிள்ளையாருக்குப் பூஜை செய்வர்.
ஏற்றப்பாடல் ஒன்று
‘பிள்ளையாரே வாரும் பிழை வராமல் காரும்
மழை வரக்கண் பாரும் மாதேவனே எமைப் பாரும்’
மழை வரக்கண் பாரும் மாதேவனே எமைப் பாரும்’
இப்படிச் செல்கிறது. இவை எவ்வளவு தூரம் நம் சமூகத்தில் பிள்ளையார் வணக்கம் பரவியிருக்கிறது என்பதற்கு ஆதாரங்களாயுள்ளன. அவர் கரத்தில் நெற்கதிர்களைக் கொடத்து வழிபடும் வழக்கமும் உண்டு. எனவே, அவர் காக்கும் தெய்வமாயும் விவசாயிகளின் தெய்வமாகவும் இருக்கிறார். எனவே, அப்பெருமானை பெருவயிறராகக் காண்பது இவ்விடத்தும் சரியாகத் தெரியவில்லை.
பிள்ளையாரும் நகைச்சுவையும்
விநாயகர் தன் ஆடலைக் கண்டு நகைத்த சந்திரனைக் கோபித்து சாபம் கொடுத்து பின் அதே சந்திரனைத் தன் முடியில் சூடிக் கொண்டு பெருமை தந்தவர் என்பது புராணச் செய்தி. ஆக, நகைச் சுவையை என்றைக்கும் பிள்ளையார் விரும்பினார்.
இன்றைக்கு விநாயக சதுர்த்தி நாட்களில் சந்திரனுக்கும் பூஜை செய்கிற வழக்கம் உண்டு. இது விநாயகரின் அதிசய கருணையைக் காட்டும். சங்கடஹர சதுர்த்தி (தேய்பிறைச் சதுர்த்தி) களில் சந்திர தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
காஞ்சியில் விகடசக்கர கணபதியாகப் பிள்ளையார் இருக்கிறார். இக்கடவுளைப் போற்றியே கந்தபுராணக் காப்புச் செய்யுள் அமைந்திருக்கிறது. இவை காரணமாக பிள்ளையாருக்கு விகடராஜர் என்றும் பெயர் உள்ளது.
பிள்ளையார் மூஷிக வானராக விளங்குவதும் அவரது எளிமையை, எல்லாருக்கும் இரங்கும் பேருண்மையைக் காட்டுகிறது. இதை காளமேகப் புலர் காஞ்சியில் கண்டார். அவர் கடவுளர்களை நிந்தாஸ்துதி பாடுவதில் வல்லவர். அதாவது மேலோட்டமாகப் பார்க்கும் போது நிந்தனை போல இருக்கும் அக்கவிகளில் உள்ளார்த்தம் போற்றுதலாயமையும். அவர் பாடுகிறார்.
மூப்பான் மழுவும் முராரி திருச்சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறி போச்சோ –மாப்பார்
வலி மிகுத்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகிறதே பார்
பார்ப்பான் கதையும் பறி போச்சோ –மாப்பார்
வலி மிகுத்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகிறதே பார்
இவ்வாறான சம்பவங்களுக்கும் இடங்கொடுத்துக் காக்கிற கணபதி நம் பிள்ளையார் தானே? திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் விநாயகர் வாழ்த்தாக அமைத்திருக்கிற பாடல் அழகானது.
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வல்வினைகள் தீர்ப்பாம்
தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வல்வினைகள் தீர்ப்பாம்
நாமும் அந்தக் கணநாதன்.. விக்னேஸ்வரனைப் போற்றினால் விநாயகனின் பேரருள் கிடைக்கும் என்பது பேருண்மையாகும்.
No comments:
Post a Comment