வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் பார்த்து, “நீ ஏன் திருடுகிறாய். இது, பாவம் இல்லையா?” என்றார் நாரதர். ‘என் குடும்பத்தைக் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்’ என்றான் அவன். ‘உன் பணத்தில் பங்கு பெறுபவர்கள், நீ செய்யும் பாவத்திலும் பங்கேற்பார்களா என்று கேட்டு வா’ என்றார் நாரதர்.
அவன் முதலில் பெற்றோரிடம் சென்றான். ‘வழிப்பறியில்தான் நம் வாழ்க்கை நடக்கிறது. அடுத்தவர் பொருளைக் கையாடும் எனது பாவத்தில், உங்களுக்குப் பங்கில்லையா?’ என்றான். ‘பாவி மகனே, நீ செய்யும் ஈனத் தொழிலை இதுநாள் வரை நாங்கள் அறியவில்லையே. உனது பாவத்தில் நாங்கள் ஏன் பங்கேற்க வேண்டும்?’ என்று கோபத்தில் கத்தினர்.
வருத்தத்துடன் அவன் மனைவியிடம் சென்று நடந்ததை விளக்கினான். ‘கைப்பிடித்த பெண்ணுக்குக் காலம் முழுவதும் வாழ்வளிப்பது கணவனது கடமை. நீ தவறான வழியில் பொருள் ஈட்டினால், அந்தப் பாவத்தில் நான் எப்படிப் பங்கேற்க முடியும்?’ என்றாள் மனைவி.
நாரதரிடம் திரும்பியவன், ‘இனி, நான் என்ன செய்தால் நல்லது?’ என்று வழி கேட்டான். ‘உனது பணத்தைப் பங்கு பிரித்தவர்கள், நீ செய்த பாவத்தில் பங்கேற்க விரும்பவில்லை. அவர்களது அன்பு சுயநலமானது. எனவே, பாவத் தொழிலை விட்டுவிடு. இறைவனை இதயத்தில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடு. உன் மனம் மாசுகளிலிருந்து விடுபடும்’ என்றார் நாரதர். அப்படியே செய்தான் திருடன்.
வருடங்கள் வளர்ந்தன. தியானத்தில் இருந்தவனைப் புற்று மூடியது. வானத்திலிருந்து ‘முனிவரே எழுந்திடும்’ என்று அசரீரி கேட்டது. ‘கள்வனாகிய நானா முனிவன்?’ என்றான் அவன். ‘தியானம் உனது மாசகற்றி, முனிவனாக மாற்றிவிட்டது. புற்றிலிருந்து எழுந்து வந்ததால் இனி நீ ‘வான்மீகி’ என்று அழைக்கப்படுவாய்’ என்றது அசரீரி. ராமாயணம் தந்த வான்மீகியின் வரலாறுதான் இது.
No comments:
Post a Comment