Search This Blog

Wednesday, April 27, 2011

நடைப்பயிற்சி

நிதானமாக உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய், இதயநோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என அண்மையில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள்  ஆராய்ந்து கூறியுள்ளனர்.  விஞ்ஞான யுகத்தில் வெகுதூரம் சென்ற மேலை நாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் சித்தர்கள் சொன்னதை இப்போது ஆய்வு செய்து சொல்கிறார்கள்.  சித்தர்களின் அறிவாற்றல் மேலைநாட்டு மக்களுக்கு புரிய ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்தர்கள் வழிவந்த நம் மக்கள், அறிவு ஜீவிகளாக தன்னைக் காட்டிக்கொண்ட மேலை நாட்டு மக்களின் அறியாமையை நாகரிகம் என்ற பெயரில்  நாம் பின்பற்றி வந்தோம்.  விளைவு மேற்கண்ட நோய்கள்தான்.  ஆயுளையும் குறைத்து ஆரோக்கியத்தையும் இழந்து பேதை மனிதனாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

அறிவிலும், ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் அவசியம் பயிற்சி தேவை என்பதை சொல்லவே தியானம், யோகா மற்றும் மலை ஏறுதல், பாதையாத்திரை என பல வழிமுறைகளைச் செல்லிவைத்தனர்.  அவர்களும் அதைக் கடைப் பிடித்து நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர்,

பள்ளிகளில் விளையாட்டு மைதானமும் இல்லை.  விளையாட அனுமதிப்பதும், சொல்லிக் கொடுப்பதும் இல்லை.  விளையாட்டு, உடற்பயிற்சி என்பது ஏதோ ஒரு தேவையற்றது என்று பெற்றோர் நினைக்கின்றனர்.

படிப்பு ஒன்றே எல்லாவற்றையும் தந்து விடாது. நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால்தானே நன்றாக படிக்கவும் முடியும்.  நோய்களின் தாக்கம் வந்த 45 வயதை கடந்தவர்கள்தான் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்கிறார்கள்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு.

குழந்தைகளுக்கு படிப்புடன் உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள்.  பாரதி கூறிய படி மாலையில் விளையாட அனுமதியுங்கள்.  அப்போதுதான்  திடகாத்திரமான பலமான இளைஞனாக உங்கள் குழந்தை வளருவார்கள்.

உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன.  அவற்றில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், என பலவகை உண்டு.  இந்த இதழில் நடைப்பயிற்சி செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது.  பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.

பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது.  காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு  நடப்பதுதான் நடைப்பயிற்சி.  நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல.  குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும்.  கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது.

மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும்.  நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.

நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்.

உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.

உடல் உறுப்புகள் நன்கு இயங்கும்.  வியர்வை நன்கு வெளியேறும்.  இதனால் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். உடல் வலுப்பெறும்.

காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சுவாசத்தை சீராக்குகிறது.

நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது,  மூளை புத்துணர்வு பெறுகிறது.  ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

எலும்புகள், பலப்படும்.  தசைகள் சுருங்கி விரியும்.

உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

நல்ல உறக்கம் கிட்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முதுமையைத் தள்ளி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.

கை, கால் மூட்டு வலி நீங்கும்.

செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.

முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.

தினமும் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.


நடைப்பயிற்சி நமக்கு நலம் தரும் பயிற்சியாகும்.  ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பயிற்சி.  தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நட்புடன்,
தஞ்சை பாவை பிரபாகர்.

No comments:

Post a Comment