Search This Blog

Wednesday, November 4, 2020

நடிப்பிலும் நடனத்திலும் முத்திரை பதித்தவர் ஈ.வி.சரோஜா.



தமிழ்ப்படவுலகில் நடிப்பு, நடனம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கி பிரபலமான, மிகக் குறைவான நடிகைகளில், இவ்விரு துறைகளிலும் முத்திரை பதித்து, ஏராளமான ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர் ஈ.வி.சரோஜா என்பது மிகையன்று.
இவரது சொந்த ஊர் திருவாரூரை அடுத்த, எண்கண் என்ற
கிராமமாகும்.வேணுபிள்ளை-ஜானகி தம்பதியருக்கு ஒரே மகளாக, 1935ஆம் ஆண்டில் பிறந்தவரான சரோஜா, தனது ஏழாவது வயதிலேயே தந்தையை இழந்தார்.நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சரோஜாவை, இவரின் தாயார், அக்கால நடன மேதையான வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் பயிற்சிக்கு அனுப்பவே, அவரும் சரோஜாவை சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் நடனக் கலைகளை கற்றுக் கொண்டு நன்கு தேர்ச்சி பெற்ற சரோஜாவின் நாட்டிய அரங்கேற்றம் 1951ஆம் ஆண்டில் சென்னை ரசிக ரஞ்சினி சபாவில் நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் நடந்தேறியபோது, அனைத்து தரப்பினரின் பாராட்டு மாலைகள் ஒருசேர சரோஜாவுக்கு குவிந்தன.இந்த வேளையில் சிவாஜி கணேசன் நடித்து வந்த ‘என் தங்கை’ என்ற நாடகத்தை அதே பெயரில் அசோகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தார், எம்ஜிஆரை நாயகனாக்கி திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாக மீனா என்ற பாத்திரத்தில் நடிப்பதற்கு இளம்பெண் ஒருவரை பட அதிபர்கள்
தேடிக் கொண்டிருந்தனர்.நடன நிகழ்ச்சியில் சரோஜாவை பார்த்த இவர்கள், தங்கள் படத்தில் இவரை நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.பார்வையற்றப் பெண்ணான மீனாவின் நடிப்பு இந்தப் படத்தில் மிக முக்கியமான வேடமாகும்.தங்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கும் ஏழை அண்ணன் ராஜேந்திரனாக,
எம்ஜிஆரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும், அதற்கு ஈடாக சரோஜாவின் உருக வைக்கும் பாத்திரமும், படத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கின.இதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை எடுத்த எடுப்பிலேயே சரோஜா கவர்ந்தார்.
அடுத்து 1954இல் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்தப் படைப்பான சுகுமார் புரொடக்க்ஷன்ஸ் ‘விளையாட்டு பொம்மை’ படத்தில்
குமாரி கமலாவுடன் இணைந்து சரோஜா நடித்தார்.தொடர்ந்து 1955இல் ஏ.பி.நாகராஜனின் ‘பெண்ணரசி’ படத்திலும் எம்ஜிஆருடன் ‘குலேபகாவலி’ படத்திலும், ஆர்.எஸ்.மனோகர் நடித்த ‘நல்ல தங்காள்’ படத்திலும், ஜெமினி கணேசன் நடித்த ‘நீதிபதி’ படத்திலும் அடுத்தடுத்து சரோஜா நடித்தார்.1956இல் தங்கவேலுவுடன் ‘அமரதீபம்’ படத்தில் தோன்றிய சரோஜா, இந்த ஆண்டில் ‘நன்நம்பிக்கை’, ‘பாசவலை’, ‘மறுமலர்ச்சி’, ‘மதுரைவீரன்’, ‘ரம்பையின் காதல்’, ஆகியப் படங்களிலும் திறம்பட நடித்தார்.
‘எங்க வீட்டு மகாலஷ்மி’, ‘கற்புக்கரசி’, ‘நீலமலைத் திருடன்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ஆகியப்
படங்கள் 1957ஆம் ஆண்டில் சரோஜாவின் அபார நடிப்புடன் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கடன் வாங்கிக் கல்யாணம்’, ‘காத்தவராயன்’, ‘குடும்ப கௌரவம்’, ‘பிள்ளைக்கனியமுது’, ‘பூலோக ரம்பை’ ஆகியப் படங்கள் 1958இல் சரோஜாவின் நடிப்பு நடனம் இரண்டையும் புலப்படுத்தி வெளியீடு கண்டன.1959இல் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’, ‘சுமங்கலி’, ‘தங்கப்பதுமை’, ‘மனைவியே மனிதனின் மாணிக்கம்’ ஆகியப் படங்களிலும் சரோஜா இடம் பெற்றார்.
சரோஜாவின் அற்புத நடிப்பை புலப்படுத்தும் விதமாக 1960இல் ‘
ஆட வந்த தெய்வம்’, ‘மணப்பந்தல்’, ‘பங்காளிகள்’, மற்றும்
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ ஆகியப் படங்கள் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கைதி கண்ணாயிரம்’, ‘படிக்காத மேதை’, ‘பாட்டாளியின் வெற்றி’, ‘இரத்தினபுரி இளவரசி’, ‘ராஜபக்தி’ ஆகியப் படங்கள் இவரின் நடிப்பை பாராட்டும் விதமாக ரசிகர்களை மகிழ்வித்தன.1961இல் ‘பாக்கியலஷ்மி’ படத்திலும், 1962இல் ‘வீரத்திருமகன்’ படத்திலும் சரோஜாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.
இவர் தனது சகோதரர் ஈ.வி.ராஜனுடன் இணைந்து, ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி 1963ஆம் ஆண்டில் ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தையும் 1969இல் ‘தங்கச் சுரங்கம்’ என்ற படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கொடுத்து வைத்தவள் படத்தில் எம்ஜிஆருக்கு இணையாக சரோஜாவின் நடிப்பு தரமாக அமைந்திருந்தது.இப்படத்தில் பித்தனாக விடும் எம்ஜிஆரை சந்தர்ப்பவசத்தில் மணந்து கொள்ளும் துர்ப்பாக்கியப் பெண்ணாக சரோஜா திறம்பட நடித்திருந்தார். எம்ஜிஆருடன் இவர் பாடும் ‘என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு’ என்ற பாடல், இவரை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வரும் இனிமையானப் பாடலாகும்.
தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ 70 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, எம்ஜிஆருடன் நடித்திருந்த ‘கொடுத்து வைத்தவள்’ படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லத்தரசியாகவே தனது வாழ்நாளைக் கழித்தார்.பிரபல இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவுக்கு இரண்டாவது மனைவியான இவருக்கு நளினி என்ற பெயரில் ஒரே ஒரு மகள் உண்டு.சரோஜா 1974ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து கலைமாமணி விருது பெற்றார்.2002ஆம் ஆண்டில் முத்தமிழ் பேரவை சார்பில் ‘நாட்டிய செல்வி’ என்ற விருதையும், 2004ஆம் ஆண்டில் தமிழக அரசின் எம்ஜிஆர் விருதையும் சரோஜா பெற்றுள்ளார்.
மதுரை வீரன் படத்தில் ‘வாங்க மச்சான் வாங்க’, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு படத்தில் ‘சல சல ராகத்திலே’ மற்றும் ‘துணிந்தால் துன்பமில்லை’, மணப்பந்தல் படத்தில் ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்’, பாக்கியலஷ்மி படத்தில் ‘காதலெனும் வடிவம் கண்டேன்’ மற்றும் ‘காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே’, கொடுத்து வைத்தவள் படத்தில் ‘நீயும் நானும் ஒன்று’ மற்றும் ‘மின்னல் வரும் தேதியிலே மழை பொழியும்’ ஆகியப் பாடல்கள் சரோஜாவின் அபிநயங்களை நினைவுக்கு
கொண்டு வரும் ரம்மியமானப் பாடல்களாகும்.
நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா, 2006ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3ஆம் நாள் உயிரிழந்தார்.நடிப்பு, நடனம் இவையிரண்டிலும் திறம்பட மிளிர்ந்த ஈ.வி.சரோஜாவின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை மறுப்பாரில்லை.

No comments:

Post a Comment