எழுத்து என்பது எப்போதுமே ஓர் ஒவ்வாமையிலிருந்துதான் எழுகிறது.இன்றிருக்கும் சமூகச்சூழல், பண்பாட்டுச்சூழல், அரசியல்சூழல் பற்றிய ஆழமான ஓர் ஒவ்வாமை, ஓர் உடன்படாமை எழுத்தாளனுக்குள் உள்ளது. அதுதான் அவனை எழுதவைக்கிறது. ஒரே வரியில் இலக்கியத்தை ‘முரண்பட்டவனின் வெளிப்பாடு’ என்று சொல்லிவிடலாம்.
அது நேற்றும் அப்படித்தான் இருந்தது. நேற்றைய இலக்கியம் மெல்லமெல்ல அமைப்பின் பகுதியாகி ஏற்படைகிறது. தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றை எண்ணிப்பாருங்கள். முடியுடை மூவேந்தருடன் முரண்பட்டு பாரியுடன் நின்று பாரிமகளிரை அழைத்துக்கொண்டு அலைந்த கபிலரின் இயல்பு என்ன?
தமிழ் என்றென்றும் போற்றும் பெருங்காவியத்தை எழுதியபின் ஒட்டக்கூத்தன் முதலிய அவைக்கவிஞர்களால் சிறுமைசெய்யப்பட்டு, அரசனிடம் பூசலிடு, சேரநாடு சென்று ஒளிந்துவாழ்ந்து, பிடிபட்டு அரசனால் கொல்லப்பட்ட கம்பனின் இயல்பு என்ன?
எட்டையபுரம் மன்னனிடமும் பிரிட்டிஷ் அரசிடமும் முரண்பட்டு தலைமறைவாக பாரதியை வாழச்செய்தது எது? நடிப்புச் சுதேசிகள் என தன் கட்சிக்காரரையே வசைபாடச் செய்தது எது?
மலையாளக் கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன் ஆரம்பகால முற்போக்கு இலக்கியவாதி. அவர் ஒருமுறை எழுதினார் “நல்ல நாளை ஒன்றுக்காக போராடுபவர்களுடன் நிற்பது என் கடமை. ஆனால் அப்படி உண்மையிலே பொன்னுலகு ஒன்று வந்தால்கூட நான் கோழிக்குஞ்சை பிடித்து கதறக்கதறக் கிழித்துச் சாப்பிடும் காகத்தைக் கண்டு கண்ணீருடன் மா நிஷாத என்று சொல்பவனாகவே நீடிப்பேன்”
பறவையிணையை கொல்லத்துணியும் வேட்டைக்காரனைக் கண்டு “நிறுத்து காட்டளனே” என்று கூவிய வால்மீகியே ஆதிகவி என்று நம் மரபு சொல்கிறது. தீது கண்டு அநீதி கண்டு எழும் கொந்தளிப்புதான் இலக்கியத்தின் அடிப்படையாக இருக்கமுடியும். அதற்கு இருக்கும் ஒரே தரப்பு அதுதானே ஒழிய, எந்த அரசியல் கருத்தியல் தரப்பும் அல்ல.
அந்த முரண்படும் இயல்பு, மீறல்தான் இலக்கியத்தின் அடிப்படை. அதையே புதுமைப்பித்தன் முதல் இன்று வரையிலான எழுத்தாளர்களிடம் காண்கிறோம். அவர்கள் சமூகமனநிலைக்கு எதிராக நிலைகொள்கிறார்கள். பண்பாட்டின் பொதுப்போக்கை எதிர்க்கிறார்கள். அரசை ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.
- ஜெ
Thanks :
No comments:
Post a Comment