Search This Blog

Tuesday, November 17, 2020

“கடவுள் தொடங்கிய இடம்” அ. முத்துலிங்கம் தமிழ் நாவலொன்று உலகத் தரத்துடன் வந்திருக்கிறது

அ.முத்துலிங்கம் கதைகள் படிப்பதற்கு அலாதியானவை. அவர் கதைகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் அயர்ச்சியோ சலிப்போ ஏற்படாத வகையில் நாம் அவற்றைப் படிக்க முடியும் என்பதுதான். அவரது சரளமான நடையில் நாம் தங்குதடையின்றி சறுக்கி விளையாடலாம்.  நகைச்சுவை அவரது பலம். அவரது எந்தக் கதையையும் சிறு புன்னகை கூட வராமல் நாம் படிக்கவே முடியாது. அதனால்தான் ஜெயமோகன், “அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. ‘இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்கிறார்.

இன்று நான் வாசித்து முடித்த புத்தகம் – “கடவுள் தொடங்கிய இடம்” – அ. முத்துலிங்கம் எழுதியது. – ‘ஆனந்த விகடன்’ பிரசுரம்.
அதன் பதிப்புரையிலே குறிப்பிட்டிருப்பதைப் போன்று “தமிழ் நாவலொன்று உலகத் தரத்துடன் வந்திருக்கிறது” – இது மிகையான வார்த்தைகளல்ல…
பதிப்புரையில் மேலும் குறிப்பிடப்பட்டவாறு, “… உலகத்தரம் என்பது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்சினைகளாலும்தான்…“



இது உண்மைகளும் கற்பனையும் இரண்டறக் கலந்த ஒரு நாவல் என்று நான் கூறுவேன். கனடாவில் தஞ்சமடைவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞனொருவனின் அனுபவங்கள்… அவன் சந்தித்த மனிதர்கள்… பார்த்த இடங்கள்… அவன் பிறழ்வடைந்த, பட்டை தீட்டப்பட்ட சந்தர்ப்பங்கள்…  என்று கதை சுவாரசியமாகவும், இலாவகமாகவும் கையாளப்பட்டுள்ளது. கதைமாந்தரோடு இரண்டறக் கலந்ததாக இடையிடையே தரப்படும் தகவல்களும் சுவாரசியமானவை.. எடுத்துக்காட்டாக, கொழும்பிலே நில அளவையாளராக வேலைசெய்து கனடாவுக்கு அகதியாகச் செல்லும் கனகலிங்கம் என்பவரது வாயிலிருந்து வருபவை இவை - ”எங்கள்  ஊரில் நில அளவையாளருக்கு மதிப்பில்லை… ஊருக்குள் நுழைந்தால் கள்ளரைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள்… தையல்காரர் உடல் அளவு எண்களை வைத்துக்கொண்டு அருமையான உடையைத் தைப்பது போல, அளவுகளை வைத்துக்கொண்டு கட்டிடத்துக்கு வேண்டிய நில வரைபடத்தை நான் தயாரித்து விடுவேன்… நாகரீகத்தை ஆரம்பித்து வைத்தது நில அளவைதான், தம்பி… எகிப்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது… ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் என் அரசன் இங்கிலாந்து முழுவதையும் அளந்து எழுதி வைத்து விட்டான்… எத்தனை பெரிய வேலை அது… பதப்படுத்திய ஆட்டுத்தோலில் சிவப்பு கறுப்பு மைகளால் எழுதி, இன்றைக்கும் அது பாதுகாக்கப்படுகிறது… லண்டன் மியூசியத்தில் இருக்கிறது… அதை எப்படியும் இறந்து போவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை…”
இடையிடையே இழைந்தோடும் நகைச்சுவையும் உண்டு – “… ஏஜன்ட் எச்சரிக்கை மிகுந்தவர்… நஞ்சைக் கூடக் குடிப்பதற்கு முன்னர் அதன் போத்தலில் முடிவு திகதியைச் சரிபார்ப்பவர்…“

ஜனரஞ்சக எழுத்ததாளர் சுஜாதாவுடன் போட்டி போடக்கூடிய நமது எழுத்தாளரான அ. முத்துலிங்கம் மிளிர்கிறார் என்றால் அது மிகையானதல்ல…
எனது பழைய முகநூல் பகிர்வொன்றில் அ. முத்துலிங்கம் அவர்களை பிரபல தொலைக்காட்சிப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கருக்கும், ராஜாவும் பேட்டி கண்டதைப் பகிர்ந்திருந்தேன்… அவர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு திரு. முத்துலிங்கம் வழங்கிய பதில்களும் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன…. Pathmanathan Mahadevah

No comments:

Post a Comment