Search This Blog

Sunday, August 14, 2016

தீயோடு தோன்றுக! நா.முத்துக்குமார்


'ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழிதேடி வந்தது... அதன் வண்ணங்கள் மட்டும் எந்தன் விரலோடு உள்ளது' என காதலின் நுண்ணுணர்வை எளிய சொற்களில் பாடிச் சென்ற கவிஞர் நா.முத்துக்குமாரின் அகால மரணம்,
பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (41), உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமார், சிகிச்சை பலனிற்றி இன்று காலமானார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற நோக்குடன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்து, சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் முத்துக்குமார். இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக 2012-ஆம் ஆண்டில் மட்டும் இவர் 103 பாடல்களை எழுதி உள்ளார். கிரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.

காதல் கொண்டேன், பிதாமகன், கில்லி, கஜினி, நந்தா, புதுப்பேட்டை, காதல், சந்திரமுகி, சிவாஜி, கற்றது தமிழ், 7 ஜி ரெயின்போ காலனி, காக்காமுட்டை, தெறி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் வரும் பாடல்கள் எழுதிய பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.

'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 2005-இல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு), அனா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

1975-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார்.

நா.முத்துக்குமார் - தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதம்) என்ற மகளும் உள்ளனர்.

இவரது பிரிவு தமிழ் திரையுலக்கிற்கு பெரும் இழப்பு. தமிழ் திரையுலகத்தினரிடையே பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி இலக்கிய திருவிழாவின் பேசுகையில் அவர் சொன்னது:

குடுசை வீடு தான், ஆனால் வீடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்றப்ட்ட புத்தங்கங்கள் இருக்கும், அப்பா எந்நேரமும் வாசித்து கொண்டே இருப்பார். அவரை நான் தூங்கி பார்த்ததே இல்லை. இதை தவிர தமிழகத்தில் வரும் அனைத்து சஞ்சிகைகள், சிறு பத்திரிகைகள் என அனைத்தையும் வாங்குவார். சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு, என்னையும் சைக்கிளில் அழைத்து செல்லுவார்

மிகவும் வேகமாக பாடல்கள் எழுதுவது இவரது தனித் திறம். இதன் காரணமாகவே பல வாய்புகள் இவரை தேடி தேடி வருகின்றன. எனக்கு தெரிந்த மட்டில் அடைமொழி இல்லாத கவிஞர் இவர் . (இணையத்தில் இவரை பற்றி தேடினால், கவி இளவரசன் என்று வருகிறது. அவர் அதை சூட்டிக் கொள்ளவோ, எந்த படத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்). கடந்த வருடத்தின் சிறந்த பாடலுக்கான விருதை : ஆனந்த யாழை, இந்திய அரசு இவருக்கு தந்து சிறப்பித்தது.
1975 ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின்
பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ
மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த
மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான்
வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப்
பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து,
மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே
சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன்
அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு
இருப்பதை.
இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித்
தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன்
தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்… ‘இன்று உலகின் இரண்டாவது
அறிவாளி பிறந்தான்!’
நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!
ஆழம் அறி!
எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன.
தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார்.
வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில்
பயணிக்கவைத்தார்.
மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில்
சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன்.
காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய
கதை.
வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார்.
அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி
சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச்
சந்தைக் குக் கூட்டிச் சென்றார்.
ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள்
இறங்கிக்கொண்டு இருக்க…
உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு
இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை
ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை
விரட்டிக்கொண்டு இருந்தார். ‘இந்த டீக்கடையில் நான்
காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்து
விட்டு வா’ என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி
வந்த என்னிடம் ‘உன் கதை நன்றாக இருந்தது.
ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை.
எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து
அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்’ என்றார்.
வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன்.
அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!
கோபம் கற்றுணர்!
பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும்
பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில
ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு
மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள்.
வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள்
என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை
விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள்.
வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன்
அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார்,
‘இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது.
இன்னும் நிறைய எழுது!’ மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார்
ஆனேன்.
உன் திசை உற்றுணர்!
காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன்.
எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில்
இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என்
வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர்.
வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து,
‘இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே’
என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன்
ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.
அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது
அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.
அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன்.
இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை
சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த
மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.
கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும்,
அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்
பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம்.
மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி
இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன்.
என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், ‘உன் முடிவை நீயே எடு.
பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே
உரிமை உண்டு!’ அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால்,
முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன்.
சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.
எரிக்க எரிக்க எழுந்து வா!
இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று
பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம்
சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த கால
கட்டம் அது.
ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச்
சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு
விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம்
விழுந்தது.
நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி,
கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற
நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
‘சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போது
கூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால்,
இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்’ என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்.
சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்து
விட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி
கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், ‘இறக்க வேண்டும் நான்’
என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது.
முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும்,
கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான்
ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!
————————————
மூலம் : ஆனந்த விகடன்

நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம்
“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்….
வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என்தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்கு த் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.
நிறைய பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப்பின்னாலும் இரண்டு கண்களைத்திறக்கின்றன. புத்தகங்களை நேசி.ஒரு புத்தகததை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்.உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
கிடைத்த வேலையை விட பிடித்த வேலையைச்செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால்இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. உறவுகளிடம் நெருங்கியும் இரு.விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே.நல்ல நண்பர்களைச்சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.
இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்து ச்சொல்பவை.

என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன்.நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.
நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப்பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால்,இந்தக் கடிதத்தை எடுத்துப்படித்துப்பார். உன் கண்களில்இருந்து உதிரும் கண்ணீர்த்துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.
இப்படிக்கு,
உன் அப்பா
நா.முத்துக்குமார்

No comments:

Post a Comment