Search This Blog

Thursday, July 31, 2014

சக்தி ஜோதி கவிதைகள்

முத்தங்களினால் 
தன்னை நிரப்பிக்கொண்டிருப்பவளின்
தனிமை
இருளின் நிழலைப்போல
அடர்த்தியானது 

சிலசமயம் இருள் இனிமை என்கிறாள்
சிலசமயம் இருள் துயரம் என்கிறாள்
சிலசமயம் இருள் அமைதி என்கிறாள்
உண்மையில்
தனிமையிலிருப்பவளின்
இரவின் நினைவை ஆராய்வதும்
விதையின் ரகசியத்தை ஆராய்வதும்
அத்தனை எளிதில்லை என்று நினைக்கையில்
இரவு அவள்மீது கவிகிறது .


கிட்டத்தட்ட பகல் முடிந்த நேரம்
காமத்தின் அடுக்குகளுக்குள்
புரண்டு கூரை தொடும்
தன்னுடைய அந்தரங்க எண்ணங்களை
யாரிடமும் பகிர்தல் செய்யவியலாத நிலையில்
தன்னைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்
அன்றாடத்தின் பாடுகளுக்குள்
தன்னைப் புகுத்திக் கொண்டிருக்கும் ஒருத்தி

அவள்
தாங்கவியலாத இன்பமும்
உணர்ந்தவளில்லை
தாங்கவியலாத துன்பமும்
பகிர்பவளில்லை

நேசிப்பின் வலியைப்
புலப்படுத்தும் சொற்களுக்கு
வலுச்சேர்க்கவியலாமல்
இருளுக்கும் சுடருக்கும்
இடையே தன்னைக் கரைத்துக் கொண்டிருகிறாள் .

No comments:

Post a Comment