Search This Blog

Friday, July 18, 2014

சாக்த அத்வைதம் (பதினெண் சக்தி பீடங்கள்)

"மகாசக்தி" பற்றிய குறிப்புகள் "சாக்த அத்வைதம்" எனும் நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலகத்தில் சக்தி மாதாதான் உலகத்தை இயக்கும் உந்து சக்தியாக இருக்கிறாள். கர்ப்பத்தில் கருவாகத் தோன்றி, வளர்ந்து குழந்தையாக வெளிவரும் சக்தியின் செயல்பாடுதான்.
அதனால்தான் ஒவ்வொரு பெண்ணும் 'சக்தி'யின் வடிவமாகப் போற்றப்படுகிறாள்.

தேவலோக அரசன் இந்திரனின் மனைவியின் பெயர் 'சசி'. அப்படியென்றால் சக்தி என்று பொருள். இந்த இந்திராணி (சசி) சப்த கன்னியரில் ஒருவள்.
சப்த கன்னியர்கள்: ப்ராஹ்மணி, வைஷ்ணவி, மஹேஸ்வரி, இந்திராணி, குமாரி, வராஹி, சாமுண்டி. இந்த எழுவரும் பிரஹ்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், ஸ்கந்தன், வராஹன் அல்லது எமன் இவர்கள் தவிர நரசிம்ஹருக்கு நரசிம்ஹி எனும் சக்தி.

சக்தியை நாம் 'அம்மா' என்கிறோம். கர்நாடகா, கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு அனைத்திலும் சக்தி
அம்மா தான்.
இந்தப் பகுதிகள் அனைத்திலுமே "சக்தி"தான் கிராமங்களை, கிராம மக்களைக் காக்கும் தெய்வம். அதனால்தான் கிராமப் பகுதிகளில் ஆண்டுதோறும் "சக்தி வழிபாடுகள்" வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன.

சக்தியைக் கொண்டாடுவதால், மழை பொழிகிறது, நிலம் செழிக்கிறது, பயிர்கள் விளைகின்றன, தொத்து வியாதிகள் தடுக்கப்படுகின்றன, செய்வினை, தீங்கு, கண் திருஷ்டி இவைகள் நீங்குகின்றன.


நாட்டில் புகழ்பெற்ற சக்தி மூர்த்தங்கள்

1. வடநாட்டைச் செழிப்பாக்கும் கங்கா மாதா. கங்கோத்ரியில் உருவாகி கடலில் கலக்கும் நதி. ஹரித்வார், ரிஷிகேஷ், காசி, கயா ஆகிய புண்ணியத் தலங்களில் இவள் புகழ் நிலைக்கும்.
2. காஞ்சியில் காமாட்சி அம்மன்.
3. கனகதுர்கா அம்மா
4. மஹாலக்ஷ்மி அம்மா
5. மதுரை மீனாட்சி அம்மா
6. மானஸா அம்மா
7. தமிழகத்தின் மாரியம்மா
8. எல்லம்மா தாயார்
9. போலரம்மா

ஆதி சங்கரர் 18 பதினெண் சக்தி பீடங்களைக் குறிப்பிடுகிறார். அவருடைய ஸ்லோகங்கள் அவற்றை நமக்குக் குறிப்பிடுகின்றன.

1. ஸ்ரீ லங்காவில் ஷங்கரி தேவி                    10. பீதிகாவில் புர்ஹூதிகா தேவி
2. காஞ்சியில் காமாட்சி அன்னை                 11. ஒதியானாவில் கிரிஜா தேவி
3. ப்ரத்யும்னாவில் ஷ்ரிங்கலா தேவி         12. த்ரக்ஷாரமத்தில் மாணிக்யா தேவி
4. மைசூரில் சாமுண்டீஸ்வரி தேவி           13. விஷ்ணு ஆலயத்தில் காமரூபி
5. ஆலம்பூரில் ஜோகுலாம்பா தேவி           14. அலஹாபாத்தில் மாதவேஷ்வரி
6. ஸ்ரீசைலத்தில் ப்ரம்மராம்பிகா தேவி      15. ஹிமாசல் பிரதேசம் ஜ்வாலாமுகி
7. கோலாப்பூரில் மஹாலக்ஷ்மி அன்னை 16. கயாவில் மங்களா கெளரி
8. மாகூரில் ஏகவீரிகா தேவி                             17. காசியில் விசாலாக்ஷி அன்னை
9. உஜ்ஜைனியில் மகாகாளி                             18. காஷ்மீரில் சரஸ்வதி.

இவை அனைத்தும் சக்தி பீடங்களாக இன்றளவும் போற்றி கொண்டாடப் படுகின்றன.

உலகம் முழுவதிலுமாக 51 இடங்களில் ஆதிசக்தி உபாசனை நடந்து வந்திருக்கிறது.  அவை இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாளம், வங்காளதேசம், திபெத், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளன.

 சக்தி ஆலயங்கள்:

1. இமாசலத்தில் அல்மோராவுக்கு 8 கி.மீ.தூரத்திலுள்ள கெளஷிக்.
2. மவுண்ட் அபு வில் அற்புதாதேவி.
3. உஜ்ஜையினியில் ஹரிசித்த மாதா (மகாகாளி)
4. நர்மதா நதிக் கரையில் ஓம்காரேஷ்வரில் சப்த கன்னியருக்கான சப்தமாத்ரிகா
5. கொல்கொத்தாவில் பாகீரதி நதிக்கரையில் ஹெளரா அருகில் காளிமாதா
6. நேபாள் காத்மாண்டு நகரிலுள்ள பசுபதிநாதர் கோயிலில் பாக்மதி நதிக்கரையில் குஹ்யேஷ்வரி
7. டில்லி சிம்லா பாதையில் பாகவதி காளிகா
8. காசி (வாரணாசி) மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி (முச்சக்தி பீடங்கள்)
9. ஹிமாசலில் காங்ரா எனுமிடத்தில் வித்தயேஷ்வரி பீடம்
10. கோலாப்பூர் (மகாராஷ்ட்டிரா) மஹாலக்ஷ்மி பீடம்
11. காஷ்மீர் ஸ்ரீநகருக்கருகில் பவானி யோகமாதா
12. கத்தியவார் அருகில் கிர்னார் ஜுனாகட்டில் அம்பா தேவி
13. அஸாமில் கெளஹாத்தி அருகில் சித்தி பீடம் எனும் காமாக்யா சக்தி பீடம்
14. சிட்டகாங் அருகில் பவானி பீடம்
15. சித்தூர்கட்டில் காளிகா பீடம்
16. ஹோஷியார்பூர் அருகே 30 கி.மீ.தூரத்தில் கானகத்தில் சின்னிபூரணி
17. விந்திய பர்வத அடிவாரம் சுனார் ரயில் ஸ்டேஷன் அருகில் துர்கா தேவி
18. ஜனக்பூர் ரயில் ஸ்டேஷன் அருகில் ஜனக் நந்தினி
19. ஜபல்பூர் (ம.பி.) 12 கி.மீ. பேராகாட் எனும் நீர்வீழ்ச்சியருகில் கெளரிஷங்கர்ஜி
20. நேபாள் காங்ரா மலைச்சிகரத்தின் அடிவாரத்தில் ஜ்வாலாமுகி அன்னை.
21. கேரளத்தின் திருவனந்தபுரத்தில் சிந்தானூர் எனுமிடத்தில் பத்மாவதித் தாயார்.
22. குஜராத்தின் துவாரகாவில் ருக்மணி சத்யபாமா ஆலயம் ருக்மணி தேவி
23. மகாராஷ்டிரா தேவிபட்ணம் படேஸ்வரி பீடம்
24. டில்லி நகரம் குதுப்மினார் அருகில் யோகமாயா பீடம்
25. நாக்பூரில் சஹஸ்ர சண்டி பீடம் ருக்மிணி ஆலயத்தில்
26. ஹிமாசல் பிரதேசம் குமாயன் பகுதியில் நயனா தேவி
27. வடக்கு எல்லை பிரதேசம் பதான்கோட்டில் பதான்கோட் தேவி
28. மகாராஷ்டிரா பந்தர்பூரில்ல் விட்டோபா ஆலயம் ருக்மிணி, சத்யபாமா, மஹாலக்ஷ்மி, ராதிகா
29. அலஹாபாத் பிரயாக் எனும் முக்கூடல் சங்கமத்தில் சாந்திகா தேவி
30. மகாராஷ்டிரா பூனே அருகில் பார்வதி தேவி
31. நேபாள எல்லையில் தனகாபூரில் சாரதா நதிக்கரையில் பூர்ணகிரி காளிகா தேவி
32. ஃபரூக்காபாத் எனும் ஊரில் மகாதிரிபுரசுந்தரி, ஸ்ரீயந்திரத்துடன் பிரதிஷ்டை
33. மஹேஸ்வரி பண்டா ஜில்லாவில் மஹேஸ்வரி தேவி
34. ஒடிஷா புவனேஷ்வரில் பந்த்ரா ஏரிக்கரையில் 108 யோகினிகளில் யோகினி பீடம்
35. உத்தர பிரதேசம் மதுரா அருகில் பரசானே எனும் ஊரில் ராதிகா ராணி
36. மதுரை வைகை நதிக்கரையில் மீனாட்சி அம்மன்
37. சென்னை சவுக்கார்பேட்டையில் மாதா குரிக்கா தெவி
38. மும்பையில் மும்பா தேவி ஆலயம்
39. மைசூரில் சாமுண்டீஸ்வரி
40. கர்நாடகாவின் சிருங்கேரி பீடத்திலுள்ள சாரதா தேவியார் ஆலயம்
41. மீர்சாபூர் அருகில் விந்திய மலை அடிவாரத்தின் விந்தியவாசினி தேவி
42. சிம்லாவில் கோடிகா தேவி
43. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயம் பிரம்மராம்பா தெவி பீடம்
44. ராஜஸ்தான் சாம்பார் ஏரி அருகில் மாதாஜி தேவி பீடம்
45. ஹரித்வார் அருகில் நீல மலையில் சண்டி தேவி பீடம்

ஆதி பராசக்தி (Ultimate Shakthi) என்பது உலகில் படைக்கப்பட்ட எல்லா ஜீவன்களிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சக்தி இல்லாதது ஜீவன் இல்லை. இந்து சமயத்தில் "சாக்தம்" என்பது அறுவகைப் பிரிவுகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.

ஆதி சங்கரரின் ஷண்மத ஸ்தாபனம்

சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம்
இவை சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், சக்தி, சூரியன் வழிபாடுகள்.

தமிழகத்தில் சக்தி வழிபாடு.
கண்ணகி கோயில்.
மாரியம்மன்
காளியம்மன்
துர்க்கையம்மன்
திரெளபதி அம்மன்

வெவ்வேறு கடவுள்கள் ஏன்?

பரம்பொருள் ஒன்று;  பல்வேறு செயல்களுக்கு மனிதன் உருவாக்கிய கடவுள்கள் ஒரு அரசாங்கம், பல்வேறு துறைகள்

விநாயகன் -             விக்கினமின்றி செயல்கள் நிறைவேற
முருகன் -                 வீரம், விவேகம்
காளி, துர்க்கை -    சக்தி வழிபாடு
சிவன், விஷ்ணு - முக்தி தரும் மூர்த்திகள்
பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி - வீரம், செல்வம், கல்வி
மாரியம்மா -            மழை வேண்டி, நோய்களும் துன்பங்களும் நீங்க

கிராம தேவதைகள் பல.

சக்தி வழிபாடு பெரும்பாலும் தமிழகத்தில் கிராமப் புறங்களில் நடைபெறும்.
தேவதைகள்: அம்பிகை, துர்க்கை, காளி, கெளமாரி, மாரியம்மா, திரெளபதி
உயிர்ப்பலி என்பது நம் வழிபாட்டில் கிடையாது. மூட நம்பிக்கைகள் காரணம்.
பலிபீடம் என்பது நம் ஆணவத்தை விட்டுவிடுவது.

புகழ்பெற்ற மாரியம்மன் ஆலயங்கள்:

சமயபுரத்தம்மா
புன்னைநல்லூர் மாரியம்மா
திருவேற்காடு கருமாரியம்மா
பன்னாரி காமாட்சியம்மன்
கரூர் மாரியம்மன்
வலங்கைமான் காமாட்சியம்மன்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன்
திருச்சி வெக்காளியம்மன்
பகவதி அம்மன்
தஞ்சை உக்ரமாகாளி அம்மன்

கிராமதேவதைகளுக்கான திருவிழாக்கள்
தீ மிதித்தல்; கரகம், காவடியெடுத்தல்; வேண்டுதல்கள் முடித்தல்

மாரியம்மன் வழிபாடு தென்னாட்டில் தோன்றியது. கண்ணகிக்கு கோயில் எடுத்ததன் பின்னால். மாரியம்மன் திருவிழாக்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் மழைவேண்டி நடைபெறும். ஆடி மாதத்தில் பெண் தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடைபெறும். தொத்து வியாதிகளான
காலரா, அம்மை நோய், பெரியம்மை போன்றவற்றுக்கு மாரியம்மனை வேண்டுவார்கள். பிடாரி அம்மன், காளி அம்மன், துர்க்கை அம்மன் இவைகள் கிராமதேவதைகளாகக் கொள்வர். சாக்தம் எனும் சக்தி வழிபாட்டில் இவை குறித்து பல செய்திகள் உண்டு.

வேத முறைப்படியான வழிபாடுகள் இங்கு கிடையாது. இந்த விழாக்களில் கூழ், கஞ்சி, பொங்கல் இவை மண்பானைகளில் திறந்த வெளியில் செய்து படைக்கப்படும்.

மாரியம்மன் உருவம் உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, கையில் திரிசூலம், கபாலம், ஒரு கையில் வாள், அபய ஹஸ்தம் காட்டிய நிலையில் இருக்கும். தலைக்கு மேலே அக்கினி பிழம்பு தீ போல சிவந்த தலைமுடி, விரிந்து சிவந்த அகன்ற கண்கள் இவை மாரியம்மன் தோற்றம்.

சில சிலா உருவங்கள் அமைதியாகவும், சில உக்கிரமாகவும் இருக்கும். உக்கிரகாளியம்மன் என்றே ஒரு ஆலயம் தஞ்சாவூரில் உண்டு. வடக்கே இவளை சீதளா தேவி என்று வழிபடுகின்றனர்.

மாரியம்மனுக்கு பூசாரிகள் பூஜைகளைச் செய்கிறார்கள். பொதுவாக மாரியம்மன் ஆலயங்களில் பாம்பு புற்று இருக்கும். மாரியம்மன் என்றதும் நமதி சினிமாக்காரர்கள் பாம்பை அவள் உருவமாக வைத்து படம் எடுப்பார்கள். அதனால்தான் மாரியம்மனுக்கு முட்டை, பால் இவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

தஞ்சையில் இருக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் மராத்திய மன்னன் வெங்கோஜி எனும் ஏகோஜி ராஜா 1676 முதல் 1688 வரை கனவில் வந்து கோயில் அமைக்கச் சொன்னதாக வரலாறு.

தஞ்சை துளஜேந்திர ராஜாவின் மகளுக்குக் கண்பார்வை போய், பின் மாரியம்மன் அருளால் பார்வை கிடைத்ததாக வரலாறு உண்டு. 1729 முதல் 1735.

இந்தியாவுக்கு வெளியிலும் மொரீஷஸ், ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிஜி, கயானா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் மாரியம்மன் வழிபாடு உண்டு.

இந்து புராணங்களின்படி மாரியம்மன் என்பவள் மகாவிஷ்ணுவின் சகோதரியாகச் சொல்லப்படுகிறாள். அவளுக்கு மஹாமாயா என்று பெயர். கிருஷ்ணாவதாரம் எட்டாவது, ஏழாவதாக வந்தள் ஒரு பெண், அவளே மஹாமாயா.

ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள் வைகாசி மாதத்தில் சமயபுரத்தாளை மஹாமாயா என்று விழா எடுத்து இப்போதும் வழிபடுகிறார்கள்.
கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இடங்களில் இவளை செளடேஷ்வரி என கொண்டாடுகிறார்கள். மாரியம்மன் பற்றி பொதுவான கருத்துக்களை பார்த்தோம், இனி சில முக்கிய தலங்கள்:

தமிழகத்தில் சக்தி உபாசகர்களில் சிறந்தவரான அபிராமி பட்டர் .

1. சமயபுரம்: இது திருச்சியை அடுத்து உள்ளது. இங்குள்ள அம்மன் சிலை களிமண், மணல் இவற்றல் உருவாக்கப்பட்டது. புற்றாகவும், மண்ணாகவும் உள்ள மாரிக்கு இங்கும் அபிஷேகம் இல்லை.உத்சவ விக்கிரகங்களுக்குத்தான் அபிஷேகம்.

சமயபுரத்தில் பக்தர்கள் மாவிளக்கு இட்டு, காவடி எடுத்து வழிபடுகிறார்கள். வேப்பிலை இங்கு பயன்படுத்தப்படுகிறது. அம்மை போட்டினாலும் வேப்பிலை உபயோகம் செய்வது வழக்கம்.

சமயபுரம் கோயில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அம்மன் பழமையானது என்றாலும் எப்போது உருவானது தெரியவில்லை. கோயில் மட்டும் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.சமயபுரத்தில் சித்திரைத் தேர் பிரபலமான திருவிழா.

2. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்.

1680இல் ஏகோஜி கட்டியது இந்தக் கோயில். இவன் சமயபுரம் போனபோது ஒரு மரத்தடியில் உறக்கம். மாரியம்மன் கனவில் தோன்றி தான் புன்னை மரக்காட்டில் இருப்பதாக சொன்னது. அரசன் தேடிச்சென்றது. ஒரு சிறுபெண் தோன்றி ஒரு புற்றைக் காட்டி மறைந்தது. சதாசிவ பிரம்மேந்திரர்
புற்றை அம்மனாக வடிவமைத்தது. அதுதான் புன்னைநல்லூர் மாரியம்மன்.

துளஜா மகாராஜாவின் பெண்ணுக்குக் கண் தெரியாமல் போய் அது குணமானது. ஒரு வெள்ளைக்கார கலெக்டர் அம்மனைப் பற்றி அவதூறு பேச அவன் கண் பார்வை போய் பின்னர் வந்தது.

3. திருவேற்காடு கருமாரியம்மன்.

சென்னைக்கு அருகில் உள்ளது திருவேற்காடு சில வருஷங்களுக்கு முன்புதான் அது பிரசித்தம் ஆயிற்று. இது மிகச் சிறிய கோயில்தான். இது பிரபலமாகத் தொடங்கிய பின்னர் இது வியாபாரத்துக்கு ஏற்ற தலமாக ஆகிவிட்டது. சென்னை நகரத்து மக்கள் கருமாரியைத் தொழ அதிக அளவில் வருகின்றனர். மாலைகள் விற்போர், தேங்காய் பழம் விற்போர், குறி சொல்லுவோர் என்று இது இருக்கும்.

கருமாரியின் கரங்களில் சூலம், கபாலம், வாள், உடுக்கை இவைகாணப்படும். இங்கு எலுமிச்சை பிரசாதமாகத் தரப்படுகிறது. மாரியம்மன் கோயில்களில் எலுமிச்சைக்கும் வேப்பிலைக்கும் வேலை அதிகம்.

4. பன்னாரி மாரியம்மன்.

ஈரோடு, சத்தியமங்கலம் அருகில் உள்ளது பன்னாரி மாரியம்மன் கோயில். இங்கு சொல்லப்படும் கதை இங்குள்ள ஆற்றங்கரையில் புலியும் பசுக்களும் ஒரே துறையில் தண்ணீர் அருந்தினவாம். வயல்களில் மாடுகளை மேய்ப்பதற்காக புலிகளை விரட்டிவிட்டு மாடுகளை மேய்ப்பார்களாம்.

300 வருஷங்களுக்கு முன்பு தன நாயக்கன் என்பார் பெயரில் பன்னாரி இருந்தது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று வேங்கை மரத்தடியில் தன் மடியிலிருந்து தினமும் பாலைச் சொரிந்ததாம். இதைக் கண்டுபிடித்து அந்த இடத்தைத் தோண்டினால் அங்கு ஒரு சிவலிங்கம். அதைத் தோண்டி எடுத்ததும் ஒருவருக்கு சாமி வந்து ஆட குறி சொல்லத் தொடங்கினாராம். கேரள வியாபாரிகளைக் காடு கடந்து வரும்போது பன்னாரி அம்மன் காப்பாற்றுவதாக நம்பிக்கை.

5. திருச்சி உறையூர் வெக்காளி அம்மன்.

திருச்சி உறையூரில் இருக்கிறது வெக்காளி அம்மன் கோயில். காளி அவதாரம். திரிசூலம், உடுக்கை, பாசம், அட்சய பாத்திரம் என்று கைகளில் வைத்திருக்கும் கோலம். இந்த கோயிலுக்கு விமானம் கிடையாது. மேற் கூரையும் இல்லாமல் வெட்ட வெளியில் தரிசனம் தருகிறாள்.

உறையூரை ஆண்ட பராந்தக சோழன் அவையில் சாரமா முனிவர் என்பர் இருந்தார். இவர் சிவனடியார். மலைக்கோட்டை தாயுமானவருக்கு பூஜை செய்து வந்தார். மன்னன் தன் ராணிக்காக அவருடைய நந்தவனத்தில் பூபறித்துச் சென்றான். தினமும் ஆட்கள் வந்து பறித்தனர். முனிவர் மன்னரிடம் சென்று முறையிட்டார் அவர் கவலைப்படவில்லை. என் ராணிக்கு மிஞ்சினதுதான் உன் கடவுளுக்கு என்றானாம். முனிவன் இறைவனிடம் முறையிட்டார். சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். உறையூரில் நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டனர். கோட்டை சிதைந்தது. ஊர் புதையுண்டது. வருந்திய மக்கள் வெக்காளி அம்மனிடம் சென்று முறையிட பிரார்த்தனை செய்தனர்.

அம்மன் சிவனது கோபத்தைத் தனிக்க முழு நிலவாக மாறி அவர் முன் தோன்றினாள். அன்னையின் குளிருந்த பார்வை பட்டு இறைவன் அமைதி அடைந்தான். தீ மழையும் நின்றது. தீயில் அரசி புவனமாதேவி சிக்கிக் கொண்டாள். அவள் நிறைமாத கர்ப்பிணி. தீயின் உஷ்ணம் தாங்காமல் அவள் காவிரியில் சென்று வீழ்ந்தாள். வெள்ளம் அவளை உத்தமச்சேரி எனும் இடத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு அந்தணர் காப்பாற்றினார்.

அந்த அந்தணர் வீட்டில் ராணிக்கு ஆண் குழந்தை கரிகால் பெருவளத்தான் பிறந்தான். ராணி வெக்காளி அம்மனின் பக்தை. அன்னையின் பக்தியால் ராணி பிழைத்தாள், குழந்தையும் பிறந்தது. சோழர் தலைநகர் உறையூரில் மக்கள் இந்த அம்மனை பக்தியுடன் வழிபடுகின்றனர்.

கண்ணகிக்குக் கோயில்

சிலப்பதிகாரக் கதை நமக்குத் தெரியும். கோவலன் கண்ணகி கதை. கண்ணகி மதுரையை எரித்த கதை. கேரளத்தில் கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலைத்தான் கண்ணகியின் கோயில் என்கிறார்கள். இது கேரளத்தில் திரிசூர் மாவட்டத்தில் இருக்கிறது. சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கோயில் இது. இங்கு கொடுங்களூர் அம்மா என்கிறார்கள். சேர நாட்டு மகோதயபுரம் தான் இப்போதைய கொடுங்களூர்.

No comments:

Post a Comment