Search This Blog

Friday, July 25, 2014

மாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ?







இவரை அறியாத தமிழர்கள் இருக்கவே முடியாது. முக்கியமாகப் பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கட்டாயம் அறிந்திருப்பார்கள் . நான் பிறக்கும் வரை பத்திரிக்கைகளும், புத்தகங்களுமாய்ப் படித்துக் குவித்துக் கொண்டிருந்த என் தாயார், நான் பிறந்ததும், நிறைவே அடையாத திகில் தொடராகிய என்னைப் படிப்பதில் மும்முரமாகிவிட்டார். அதனால், எங்கள் வீட்டில் பத்திரிக்கைகள் வாங்கும் வழக்கம் முற்றிலுமாக நின்றுப்போயிற்று. அண்டை வீட்டு அக்காக்கள், அம்மாக்கள் பலரும் குமுதம், ஆனந்தவிகடன், கண்மணி, ராணி முத்து என்று விதவிதமாகப் படிப்பார்கள். விளையாடப் போகும் போது, குவியலாய்க் கிடக்கும் இப்பத்திரிகைகளின் அட்டைப் படங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. குறிப்பாக, மிளிரும் கண்களும் அழகிய புன்னகையும் அலங்கரித்த பெண்டீரின் வண்ணமயமான ஓவியங்கள்! உள்ளே திறந்தால் கதைகளுக்கு ஏற்ப இன்னும் பல.

சில ஓவியங்களில் இருக்கும் முகங்களை நான் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அவை அவ்வளவு உயிரோட்டம் மிக்கனவாய் இருந்தன. கருவண்டுக் கண்கள் உயிர்பெற்று உருளாதோ என்று ஏங்கும் அளவுக்கு உண்மையாய்த் தோன்றும். வனப்பான கன்னங்களும் இதழ்களும்...ரம்பையும் திலோத்தமையும் இப்படித்தான் இருப்பார்கள் போலும் என்றே எண்ண வைக்கும். இப்படி ஈர்த்த பெரும்பாலான ஓவியங்களில் பொதுவாக ஒன்று காணப்பட்டது. அது அவ்வோவியங்களின் அழகோடு போட்டியிடும், முத்துமுத்தான எழுத்துக்களில் அமைந்த ‘மாருதி’ என்னும் கையொப்பம்! 



சரி, நானே இப்படியெல்லாம் ரசித்தேன் என்றால்,பருவ வயதில் இருந்த ஆண்பிள்ளைகள் பாவம் எப்படியெல்லாம் அந்த முகங்களைக் காதலியாகக் கற்பனைச் செய்து தவித்தனரோ! ஹி ஹி! 

எனது கல்லூரிக் காலத்தில், நடிகை ஸ்ரீதேவியின் சாயலில் அமைந்த ஓவியம் ஒன்றை பழையப் பேப்பர் கடையில் கிடந்த ஒரு பத்திரிக்கையில் கண்டேன். அவள் இரட்டைப் பின்னல் இட்டு, சுருளும் கற்றை மயிர் காதருகில் கொஞ்ச, பச்சைத் தாவணியில் இருந்தாள். கண்கள் அவள் மேலிருந்து கொஞ்சமும் அகல மறுத்தன. கடைக்காரரிடம், அட்டையை மட்டும் கிழித்துக்கொள்ளட்டும்மா என்று கேட்டேன். அவரோ, அதை ஒரு முறைப் பார்த்துவிட்டு, ‘அநியாயத்துக்கு அழகா இருக்குல்லமா?’ என்று சொல்லி பத்திரிகையோடு எடுத்துக்கொள்ளும்படி நீட்டினார். எத்துனையோ வருடங்கள் அது என்னுடன் இருந்தது. இன்றும் வீட்டில் எங்கோ இருக்கத்தான் வேண்டும். அதிலும் ‘மாருதி’ என்னும் கையெழுத்து இருந்தது. 

மாருதி ஆணா, பெண்ணா, வயதென்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. Nanda Kumarஎன்னும் ‘பேஸ்புக்’ நண்பர் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த முகத்தைக் கண்டதுமே அது மாருதியின் கைவண்ணம் என்று மனம் சொல்லிற்று. அதே கையொப்பம் அதிலும் அலங்காரமாக! ‘ஓவியர் மாருதி’ என்று கூகிளில் தேடினேன். அவருடைய இணையத்தளம் கிடைத்தது. அங்கே போன எனக்கு அழகான ஆச்சரியங்கள் பல காத்திருந்தன...வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் அவரது ஓவியங்கள் பலவற்றைக் கண்டத்தில் பெரு மகிழ்ச்சி. அவற்றுள் சில வெறும் ஓவியங்கள் தான், புகைப்படங்கள் அல்ல என்று ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருக்கின்றன. அத்தகைய சிலவற்றை இங்கே ஏற்றியுள்ளேன். மேலும் பல அவரது தளத்தில் உள்ளன. வாழ்க அவரது தூரிகையும் கைகளும்!

thanks

Eeranila Dakshinamurthy

No comments:

Post a Comment