இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்ட ஒப்பனை கூடிய கல்யாணப் பெண்ணாக நடுவே கோயில். சூழ நின்ற விருட்சங்களுடன் நிலாக்காலத்தில் இனி என்றைக்குமே பேசாது என்பது போல நின்றது அது, கோயிலை வளைத்துக் கடை வீதி, கரிமண் கிளறிக் கிளறி நடைபோடும் ஜனங்கள். ஒவ்வொரு கடையிலும் தேனடையை மொய்க்கும் ஈக்களாகிக் குழுமி நிற்கும் ஜனங்கள். எறும்புகளாகி முட்டியும், மோதியும் விலகிப் போகும் ஜனங்கள். ஜனங்கள். ஜனங்கள்.
எதிர்வெயிலை வாங்கி தம் முகம் நோக்கித் துப்பியெறிகின்றன அலுமினியப் பாத்திரங்கள். மெல்லிய கைகளைப் பற்றி வளையல் அணிவிப்பதில் காலத்தைக் கரைக்கிறார்கள் காப்புக்கடைப் பையன்கள். இந்த உச்சக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர் கச்சான் கொட்டை விற்பவர்களும், கடலை வண்டிக்காரர்களும். சப்த சங்கீதத்துடன் தேநீர்க்கடைகள். புல்லாங்குழல் ஊதியபடி கிருஷ;ணன். தியானத்தில் இருக்கிறார் புத்தர். கண்ணாடிகளில் கிழவனாகிக் கொண்டிருக்கும் நான். 'அம்மா எனக்கு வேணும்' என்று கைகால்களை உதறி அடம் பிடிக்கிறது பொம்மைக் கடைமுன்னே நிற்கும் குழந்தை. தலைகளில் 'பலூன் கொம்புகள்' முளைத்த வியாபாரிகள் வாய்களால் வினோத ஒலி எழுப்புகிறார்கள். புறா முக்கலுடன் ஐஸ்கிரீம் வண்டிகள், கிணற்றடி மூலையில் கணேசனின் அப்பா கரும்பு விற்கிறார்.
கோயிலின் பின்புறம் தீக்குழி. அடுக்கப்பட்ட விறகுகளை விழுங்கியபடி நெருப்பு மோகினி சுழன்று சுழன்று ஆட்டம் போடுகிறது. அதன் தாபமும் தகிப்பும் எங்கும் பரவும் தீக்குழியைச் சுற்றிச் சில மனிதர்கள் நிற்கிறனர். நெருப்பில் உதித்தவர் போன்றும் நெருப்புடன் வாழ்பவராயும் அவர்கள் தோற்றம் காட்டினர். விறகுகளை விழுங்கி செந்தழலாகி ஒளிர்கிறது நெருப்பு. மட்டையினால் அடித்தடித்து எரிதழலின் உயரத்தை மண்ணோக்கிச்சரிப்பார்கள் அந்த மனிதர்கள். கால் நடைகளை விழுங்கி அசைய இயலாமல் படுத்துக்கிடக்கும் மலைப்பாம்பை நினைவு சொல்லும் அந்தியிலே இந்தத் தீக்குழி. அந்தியில் ஊர் எல்லைக் கடலில் நீராடி, மஞ்சள் பூசி, சங்கு, உடுக்கை, பாறை மேளங்களுடன் வருவார்கள் தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி கொலுவினர். அவர்கள் நெருப்பில் நடப்பார்கள். மறுகரை அடைவார்கள்.
ஜனநெரிசலில் தள்ளுண்டு நான் நடந்தேன். மரங்களின் கண்ணீர்த்துளிகளென சருகுகள் பரவிக் கிடக்கின்றன. சருகுகள் நொறுங்க நொறுங்க மென்மேலும் முன்னேறுகின்றன என் பாதங்கள். செக்குமாட்டுத் தனத்துடன் இலக்கற்ற ஒரு பயணம்.
ஆயிரமாயிரம் அண்டங்காகங்கள் ஒலிபெருக்கியில் கூடியிருந்தன. அவை பாரதம் பாடி வில்லிபுத்தூராழ்வார் மீது எச்சங்கள் இட்டன. 'இன்னும் சொற்ப நேரத்தில்' என்று அடிக்கடி ஒலித்தன. குழந்தைகளைத் தொலைத்தவர்களை வந்து கையேற்கும்படி வேண்டின. முடிச்சு மாறிகள் பற்றி எச்சரித்தன. பெண்களின் பாகங்களுக்கு யாதொரு சேதமும் விளைவிக்க வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டன.
அம்பாக்குழலை சிறுவர்கள் போட்டிக்கு ஊதுகிறார்கள். சர்பத் கடைகளின் பலவர்ணப் போத்தல்களிலும் கரண்டிகள் ஓடியோடி ஒலி எழுப்புகின்றன. குழந்தைகள் வீரிட்டழுகின்றன. அம்மாக்கள் அடிக்கப் போவதாகப் பாசாங்கு செய்கிறார்கள். கையிலும் இடுப்பிலும் குழந்தைகள் தொங்கப் புருஷமரங்கள் முழிக்கின்றன. எங்கும் நாரசம். மரம் விட்டு நீங்கி என் செவிகளில் இறங்குகின்றன மரங்கொத்திப் பறவையின் அலகுகள். ஒரு தொகைப் பாதங்கள் எற்றிக் கிளம்பும் புழுதியிலும், குளோரின் நெடியிலும் மீறிய மூத்திரவாடையிலும் மூச்சுத் தினறுகிறது.
திடீரெனப் பரபரப்புடன் ஜனங்கள் விலகி நின்று வழிவிடுகின்றார்கள். எனக்கல்ல. துப்பாக்கிகள் ஏந்திய கூட்டம் ஒன்று பின்னால் வருகின்றது. பத்துக் கட்டளைகளில் வரும் மோசேயிற்கும், கூட்டத்திற்கும் கிடைத்ததைப் போல ஜனக்கடலில் இவர்களுக்கும் தனிப்பாதை தோன்றித் திறந்திருந்தது. முட்டல் மோதல் எதுவுமின்றி அவர்கள் முன்னேறலாம். ஆயுதந்தாங்கிகளின் முன்னால் எப்போதும் திறபட்டுக் கிடக்கின்றன வழிகள். கோயிலின் மூலஸ்தானம் வரை, கடலின் தொங்கல் தொடுவானம் வரை, ஏன் தாயின் கருவறை வரை கூட அவர்களால் சென்றுவர முடிகிறது.
என் தோளைப் பற்றிப் பிடிக்கிறது ஒரு கரம். திரும்பிப் பார்த்தேன். துப்பாக்கியுடன் ஒருவன் நின்றான். ஏதாவதொரு கானகத்தில் தொலைந்து போயிருக்கும் அவனது முகத்தின் புன்சிரிப்பு.
'என்னை அடையாளம் தெரிகிறதா?' என்று கேட்டான் அவன். மண்புழுவாகி வேர்களின் நுனிகளைக் கண்டறியும் குழப்பத்தில் தவிக்கின்ற என் முகம் அவனுக்கு வியப்பூட்டவில்லை. நான் இருட்குகையில் ஓவியங்ளைக் கண்டறியத் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
என்னைக் கரையேற்றி விடும் பரிவுடன் சாந்தமான குரலில் அவன் சொன்னான். 'நான் உன்னுடைய நண்பன்;.'
'அப்படியா?' என்றேன்.
வௌ;வேறு பராயங்களில் வௌ;வேறு நண்பர்கள் என் வாழ்வின் சாலையில். வண்ணத்துப் பூச்சியாய் ஞாபகம் அலைக்கழிக்கின்றது. என் அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டித் துரத்திக் கொண்டிருக்கிறேன்.
'நீ குழம்பிப் போயிருக்கிறாய்....வா! பேசிக்கொண்டே போகலாம்' என அவன் அழைத்தான். நீட்டிய அவன் கைகளை உதறமுடியாமல், மிட்டாய் தந்த சந்நியாசி பின்னால் இழுபடும் சிறுவனாகப் போய்க் கொண்டிருந்தேன். யானை இழுத்துச் செல்லும் மரக்குற்றி போல் என் உடல் தோன்றிற்று.
என்பக்கமாக முகத்தைத் திருப்பி அவன் 'இன்னமும் என்னைக் கண்டு பிடிக்கவில்லை போல?' என்றான் கிண்டலாக.
நான் மௌனங் கொண்டிருந்த போதிலும் என் முழு முயற்சியும் அதிலேயே இருந்தது. கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிகிறது. அந்த கண்கள், இடது கோடித் தெற்றுப்பல், நெற்றித் தழும்பு....பனிப்புகார் மெல்ல மெல்ல விலகுகிறது. ஒட்டடை தட்டியாயிற்று. அவன் யாரென்று தெரிந்து விட்டது. இடியுண்ட கட்டிடத்தின் கற்குவியல்களுக்குள் இருந்து தலை நீட்டி மேலெழுந்து வருகிறது ஒரு சர்ப்பம். 'கொல் கொதாவில் சிலுவையில் அறைபட்டவன் மூன்றாம் நாள் முழித்தெழுகிறான். சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிறது இதோ ஃபீனிக்ஸ் பறவை.... தீம்தரிகிட....தீம்தரிகிட....
செத்துப் போனவன் ஜனசமுத்திரத்தின் நடுவே என்னைக் கூட்டிச்செல்கிறான். மரணம் ஒரு புத்தகத்தின் கடைசிப்பக்கமா? இல்லையேல் இன்னொரு புத்தகத்தின் முதற்பக்கமா? கடலில் முடிந்ததாக சொல்லப்பட்டவன் தரையில் நடக்கிறான். சப்பாத்துக்கால்களால் சருகுகளை நொறுக்கிக் செல்கிறான். பயமும் பரவசமும் என்;னைச் சூழ்ந்து கொண்டன. அவன் தோளை உரிமையுடன் பற்றினேன்.
'நீ செத்துப் போனதாகச் சொன்னார்கள் படுபாவிகள்.....' அவன் தீட்சண்யமான கண்களால் என்னைப் பார்த்தான்.
'எனக்கு சாவில்லை' என்றான்.
மலை அருவியின் மூர்க்கத்தனத்துடன் எனக்குள் வார்த்தைகள் இருந்தன. வெகு வாஞ்சையுடன் அவனை உற்று நோக்கினேன். அப்போது அது நிகழ்ந்தது. துப்பாக்கி வேட்டுச் சத்தம் ஒன்று. தொடர்ந்து பல வேட்டுகள். நிலமும், காதுகளும் பிளப்பது போல ஒரு வெடியோசை. அதிர்வுடன் ஒரு முறை குலுங்கிற்று பூமி. எங்கும் புகை. ஒரே இரைச்சல். கூக்குரலிட்டு ஜனங்கள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தனர். என் பக்கத்pல் நின்ற துப்பாக்கி நண்பன் 'ஏதோ சிக்கல்' என்று சொன்னான். அவன் முகம் கொடூரமாக மாறியிருந்தது.
கடல் கொந்தளித்து ஊர் நோக்கி வருகின்ற இரைச்சல். ஆளை ஆள் முண்டித்தள்ளி ஏறிமிதித்து ஓடுகின்றனர். நண்பன் துப்பாக்கியுடன் உஷhர் நிலையில் நின்றான். மழையில் நனைந்து கொடுகும் ஆட்டைப் போல மரமொன்றின் மறைவில் நான் நின்றுகொண்டேன். பயத்தில் என் உதடுகள் உலர்ந்திருந்தன. கை கால்களின் நடுக்கத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
'பயம் வேண்டாம்' என்றான் துப்பாக்கி நண்பன்.
ஒவ்வொரு வகையான துப்பாக்கிக்கும் ஒவ்வொரு வகையான குரல் இருந்தது. துப்பாக்கிகளின் உரையாடல் முடிவற்று நீண்டு கொண்டே சென்றது. ஓய்கிறது என எண்ணும் போது மறுபடியும் எங்கிருந்தோ குண்டொன்று வெடிக்கிறது.
'இப்போது மண்ணில் நீங்கள் குப்புறப்படுத்துக் கொள்வது பாதுகாப்பானது' என்றான் துப்பாக்கி நண்பன்.
ஆபத்து நம்மிலிருந்து நகர்கிறத, அல்லது ஆபத்தை நோக்கி நாம் நகர்கின்றோமா என்ற புரியாமையின் தத்தளிப்புடன் நான் மண்ணில் கிடந்தேன். ஒரு சடலம் எந்தவொரு ஆட்சேபணையையும் எழுப்பாது என்ற நம்பிக்கையுடனும், உயிர் தப்பவேண்டுமென்ற வெறியுடனும் என்னை மிதித்தபடி ஆட்கள் ஓடிக்கொண்டிருந்தனர்.
'என்ன நடக்கிறது' என்று ஈனஸ்வரமான குரலில் என் நண்பனைக் கேட்டேன். தோட்டாக்கள் தீர்ந்து போயிருக்கலாம். அவனுடைய முகம் கலவரமடைந்திருந்தது.
'பின் வாங்க வேண்டிய தருணம் இது' என்றான் என் நண்பன். மரணம் நாலுகால் பாய்ச்சலில் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பது உறைக்க சட்டென்று எழுந்தேன். நண்பன் முதலிலும் நான் அவனைப் பின் தொடர்ந்தும் ஓடினோம்.
விஷப்பூண்டை விழுங்கி ஆற்றங்கரையில் ஆங்காங்கே சரிந்த மாடுகளின் பிணங்களைப் போல அநாதை சைக்கிள்கள், பாத்திரங்கள், பனையோலைப் பெட்டிகள், ரப்பர் பொம்மைகள்.... தடை தாண்டி ஓட்டக்காரன் ஆகியிருந்தேன். மலைப்பாம்பு படுப்பது போல் எதிரே ஆலமரவேர். இடறிக் குப்புற விழுந்தேன். மண் தட்டக் கூட நேரமற்று நோவுடன் மறுபடியும் ஓடினேன். என் நண்பனின் முதுகுபுப்புறம் வெகு தொலைவில் தெரிந்தது. மலைகளின் வாய்க்குள் போகும் இறுதிக் கணத்துச் சூரியன் போல அது மெல்ல மெல்ல நழுவிச் சென்றது. வலிகளையெல்லாம் மூட்டை கட்டியெறிந்து வட்டு சக மனிதர்களை முந்தும் வெறியுடன் ஓடிக் கொண்டிருந்தேன். ஏதேனும் ஒரு குண்டு தாக்கிவிடலாம் என்ற முதுகுப்புறத்தின் குறுகுறுப்புடன் ஓடினேன்.
நகரத்துப் பேய்களாக ஜீப்வண்டிகள் ஊளையிட்டு அலைகின்றன. தாறுமாறாய் ஓடும் வாகனங்களின் ஹோர்ன் ஒலி மதங்கொண்ட யானைகளாய்ப் பிளிறுகின்றன. என் முன்னால் ஓடிக்கொண்டிருந்த கன்றுக் குட்டி கால் பிசகி, தெருவில் 'அம்பா' என்ற சத்தத்துடன் விழுகிறது. தாய்ப்பசுக்கள் பதில் குரலுடன் அலைகின்றன. ஒவ்வொரு மரத்திற்கும் காகங்கள் கரைந்து கரைந்து சேதிகள் சொல்கின்றன. ரத்தச் சொட்டுகளைத் தெருவில் சிந்தியபடி, சிவப்பொளி சுழன்றடிக்க, ஒலியெழுப்பியவாறு வாகனம் ஒன்று விரைந்து செல்கிறது. நீட்டிய பல சோடிக்கால்கள் வாகனத்தின் வெளியே தெரிகின்றன. மரணத்தின் கொடூரப்பற்களும், விஷநகங்;களும் என்னைக் குறி வைக்கின்றன. நான் தப்பித்தாக வேண்டும். கால்களில் உயிரை இறக்கி, பாய்ந்து பாய்ந்து ஓடினேன்.
வெறிச்சோடிய தெரு அச்சமூட்டியது. தொலைவில் கரும்புகை பூதமாய் எழுகிறது. கிரஹணம் கவிந்தது என் கிராமத்தின் மீது. குருNஷத்திரத்தின் பதினான்காம் நாளில். நான் வந்து நிற்கிறேன். ஜயத்ரதனின் தலை கொய்யப்படுவதற்காகப் பகலை இருளாக்கி நாடகமாடுகிறான் கிருஷ;ணபகவான். 'என் தலை எனக்கு வேண்டும்'. குருட்டு நம்பிக்கையுடன் ஓடுகிறேன். தெருவின் வீடுகள் எல்லாம் சப்தமிழந்து பேதலித்துப் போயிருந்தன. மௌனிகளாய், செவிடுகளாய், குருடுகளாய் நின்றன வீடுகள் எல்லாம். வானில் இராட்சதப் பறவை கெக்கலிப்புடன் சிறகடிக்கிறது. திக்கொன்றாய் அலையும் குஞ்சுகளைக் கர்வத்துடன் அது வேவு பார்க்கிறது.
தெருவில் தனியாக ஓடும் அபாயத்தை உணர்ந்தேன். பக்கத்து வளவொன்றினுள் நுழைவதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. உறைந்து போன மெழுகைப் போன்ற வீடொன்று உள்ளே இருந்தது. மதில்களினாலும், தாறுமாறாக வளர்ந்த செடிகொடி மரங்களாலும் அடக்கியாளப்பட்ட வீடாக அது இருந்தது. சிறை மீட்டெடுக்க வரும் ராஜகுமாரனை எதிர் நோக்கியதான மௌனமான துயரத்துடனும் நீர்த்தடங்கள் மறையாத, பாசி படிந்த சுவர்களுடனும் அது காத்திருந்தது.
முற்றத்தில் ஒன்றையொன்று துரத்தியபடி ஓடுகின்றன கீரிப் பிள்ளைகள், கூரை முகட்டின் புறாக்கள் முக்குகின்றன. சிள்வண்டுகள் விட்டு விட்டொலிக்கின்றன. சுழிநிறைந்த ஆறு பற்றிய அச்சம் எடுத்துவைக்கின்ற என் ஒவ்வொரு காலடியிலும். அங்கிருந்த விருட்சங்களின் நீண்ட கிளைகள் என்னை வளைத்துப் பிடித்து, முறுக்கி, எலும்புகளை நொறுக்கிவிடுமோ என்ற அச்சத்திலும், பெயர் தெரியாத ஏதேனும் பறவை ஒன்று விருட்டெனப் பறந்து வந்து தன் கூரிய அலகினால் என் கண்ணைக் கொத்தித் தட்டிச் சென்று விடுமோ என்ற பயத்தினூடும் நான் தயங்கித் தயங்கி நடந்தேன். சங்கிலிக் கட்டுகளில் பின்புறம் கிடக்கின்ற நாய்களுக்குத்தான் எத்தனை ஆவேசம். என் சதைகளைப் பிய்த்தெறியும் குரூரம் கண்களிலே மின்ன, முன்னங்கால்களால் மண்ணை விறாண்டி விறாண்டி மூர்க்கத்தனத்துடன் குரைக்கின்றன அவை. 'கடவுளே, சங்கிலிக் கண்கள் தெறித்துவிடக்கூடாது'
பலநூறு வருடங்களுக்கு முன்னால் சாத்தப்பட்ட ஜன்னலொன்று பெருமுயற்சியுடன் திறபடுவதைப் போன்ற சத்தம். நான் அண்ணாந்து பார்த்தேன். இருட்குகையில் ஒளிரும் மெழுகுவர்த்தி ஏந்தித் தோன்றுகிறாள் ஒருத்தி. முகலாய காலத்து மூடுபல்லக்கின் திரை விலகத் தெரியும் ஒரு பெண்ணின் சோகம் கவிந்த முகம். நாய்களை அவள் அதட்டுகிறாள். இஷ;டமற்று முனகல்களுடன் அடங்குகின்றன நாய்கள். என் பக்கம் அவள் பார்வை திரும்புகிறது.
'நான்.... நான்...' என்னைப் பற்றித் தட்டுத் தடுமாறலுடன் சொல்ல ஆரம்பித்தேன்..........
'தெரியும்..... தெரியும்.....' என்று இடைமறித்த அந்த சாளரத்து முகம் மறைந்து போனது. வாசற்கதவின் தாள்பாள் உட்புறமாக அகற்றப்படும் ஓசை சிறிது நேரத்தில் கேட்டது. வாசல் நிலையில் தலைதட்டும் உயரத்துடன் அவள் நின்றிருந்தாள். முதுமையின் படிகளில் அவள் கால் வைத்திருந்தாள். வீட்டின் மௌன ஓலம் அவள் முகத்திலும் இருந்தது. வாவென்று கூடச் சொல்லாமல் சாவி கொடுத்த பொம்மை போல் மறுபடியும் வீட்டுப்படிகளில் அவள் ஏறத் தொடங்கினாள். மேகங்களைக் கையால் பிடிக்கப் போவது போல் அவள் போய்க் கொண்டேயிருந்தாள். நான் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். முடிவிடம் தென்படாமல் படிகள்..........படிகள்.....படிகள்........
படிகளில் ஏறி ஏறி என் மூச்சு வாங்கியது. என் உடலை எங்கேனும் சாய்க்கா விட்டால் தாங்காது போலிருந்தது. களைப்பினால் தளர்ந்து போயிருந்தேன். ஒவ்வொரு படிகளிலும் என் முன்னால் அவள் ஏறிச் செல்கையில் அவளுடைய கூந்தலை நான் மிதித்து விடக்கூடாதேயென அஞ்சினேன். முடியப்படாத கூந்தலின் பின்னால் ஒளிந்திருக்கலாம் ஏதேனும் சபதம். ரோமர் இலக்கங்கள் கொண்ட, என்றோ நின்று போன சுவர் மணிக்கூடு ஒட்டடையுடன் தொங்குகிறது. என்னைத் திரும்பிப் பாராமல், பேசிய படி சென்றாள் அவள்.
'இது பாதுகாப்பான இடம் என்றா இங்கு நுழைந்தாய்?'
'....................................'
'என்னை உனக்குத் தெரியாதல்லவா?'
'தெரியாது'
'தெரியாது'
'நான்தான் ரோசலீன் '
'உன் அம்மாவின் பள்ளிக்கூடத்து சினேகிதி'
'உன் அம்மாவின் பள்ளிக்கூடத்து சினேகிதி'
அம்மா எதுவும் தானாகச் சொன்னதில்லை. அம்மாவின் பால்யகால நினைவுகள் கறையான் தின்ற ஒரு புத்தகம். அங்கிருந்து எனக்குக் கிடைத்ததெல்லாம் ஓரிருவரிகள். தெருவில் சிந்திய தானியமணிகளை அவசர அவசரமாகக் கைப்பற்றிய காகம் போல அவளுடைய சம்பாஷணைகளில் நான் பொறுக்கியவை சொற்பம். ஆனால் ரோசலீன் பற்றி அங்கு எதுவுமிருந்ததில்லை.
'வீட்டில் வேறு யாருமில்லையா?' என்று நான் கேட்டேன்.
'இதோ.... இந்த சுவர்களில் இருக்கிறார்கள்' கருகிப்போன மலர் மாலைகளுடன் தொங்கும் புகைப்படங்கள். அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
'போனார்கள்..... ஒன்றன் பின் ஒன்றாகப் போனார்கள். திரும்பி வரவில்லை.'
'இங்கே தனியாகவா இருக்கிறீர்கள்? உங்களுக்கு அப்படி இருப்பது பயமாயில்லையா?'
அவள் நடை நின்றது. திரும்பி என்னைப் பார்த்தாள். 'பயமா? எலும்புகளால் கட்டப்பட்ட வீடு இது. ரத்தத்தினால் வர்ணம் பூசப்பட்டது இந்த வீடு. இன்னும் என்ன நடக்க வேண்டும் பயப்பட?'
நாய்கள் மறுபடியும் குரைக்கின்ற ஓசை. வெளியே தத்தம் வல்லமை கூறி வானத்தையும் எச்சரிக்கின்ற துப்பாக்கிகள். அவள் பரபரப்படைந்தாள். ஒரு படி கீழே இறங்கி என் கைகளை ஆதரவுடன் அவள் பற்றினாள். நெருக்கத்தில் மதுவாடை வீசியது. கண்களில் நீர் தேங்கியிருந்தது.
'சிறகடியில் வைத்திருந்து வைத்திருந்து என் குஞ்சுகளை ஒவ்வொன்றாய்ப் பறிகொடுத்தேன். எனக்கு வந்த கதி உன் அம்மாவுக்கும் வேண்டாம்...... ஓடித்தப்பு........'
அவன் படிகளின் வழியாய் இறங்கி மறுபடியும் ஓடத் தொடங்கினான்.
வீரகேசரி
16.05.1993இந்தியா டுடேஏப்ரல் 1993
No comments:
Post a Comment