Search This Blog

Tuesday, June 14, 2011

யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்

யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்

இப்போது சினிமாத்துறை வட்டாரத்தில் ஹிட்டாகும் திரைப்படங்களை விட யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்கள் அதிகம்.
கைய‌டக்க கமெராவில் எடுக்கப்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்கள் பார்வைக்காக யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் அவற்றில் உள்ள ஏதோ ஒரு வித்தியாசமான அம்சத்திற்காக அவர்களை கவர்ந்து அப்படியே பகிர்ந்து கொள்ளப்பட்டு மிக விரைவிலேயே இணையம் முழுவதும் பரவி எல்லோரும் பார்த்து ரசிக்கும் வீடியோவாக ஆகிவிடுவதுண்டு.
யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் இப்படி வெற்றி பெறும் வீடியோக்களின் எண்ணிக்கை குறைவானது தான் என்றாலும் கூட இந்த எண்ணிக்கை கணிசமானதே.
யூடியூப் மொழியில் வைரல் தன்மை(வைரஸ் கிருமி பரவுவது போல பலரால் பரிந்துரைக்கப்பட்டு இணையம் முழுவதும் உலா வந்து லட்சக்கணக்கானோரால் பார்க்கப்படும் தன்மை) பெற்றதாக வர்ணிக்கப்படும் இத்தகைய வீடியோக்களை இணையம் எங்கும் பார்க்க முடியும்.
உங்கள் இன்பாக்சையும் தேடி வரலாம். பல தளங்களில் டாப் டென் யூடியூப் வீடியோக்களாக பட்டியலிடப்பலாம். ஆனால் அதி தீவிர யூடியூப் ரசிகர்கள் இப்படி இணையம் முழுவதும் உலா வரும் வீடியோக்களை பார்ப்பதில் மட்டும் திருப்தி அடையாமல் சுவாரஸ்யமான புதிய வீடியோக்களை தேடிப்பிடித்து ரசிக்கின்றனர். இதற்கு பல வழிகளும் இருக்கவே செய்கின்றன. யூடியூப் முகப்பு பக்கத்தில் தேடிப்பார்க்கலாம்.
பிரப‌லமான யூடியூப் வீடியோக்களை பட்டியலிடும் பிரத்யேக தளங்களும் இருக்கவே செய்கின்றன. இவற்றை தவிரவும் இன்னும் சுவாரஸ்யமான வழிகள் இருக்கின்றன. நெட்பிளேய்டு இணைய‌தளத்தை போல.
நெட்பிளேய்டு அடிப்படையில் மிகவும் எளிமையான தளம். யூடியூப் வீடியோக்களின் பட்டியல்கள் அல்லது பட்டியல்களின் தொகுப்பு அது தான் இந்த தளம். அதாவ‌து ப‌லரும் பார்த்து ரசித்த யூடியூப் வீடியோக்களின் பட்டியல். நீங்கள் நினைத்தாலும் இதே போன்ற பட்டியலை உருவாக்கி கொள்ளலாம். வீடியோ பட்டியலை உருவாக்கி கொள்வது மிகவும் சுல‌பம்.
தளத்தின் முகப்பு பக்கத்திலேயே கூகுல்/யாஹூ சுட்டிக்காட்டும் பிரபலமான வீடியோவை தேர்வு செய்து பார்த்து ரசித்து அதை அப்படியே குறித்து வைத்து நாம் பார்த்த வீடியோக்களுக்கான பட்டியலை உருவாக்கி கொள்ளலாம் அல்லது கைவசம் யூடியூப் வீடியோக்கள் இருந்தால் அந்த முகவரியை டைப் செய்தும் பட்டியலை தயார் செய்து கொள்ளலாம்.
பிடித்தமான வீடியோக்களை பட்டியலிட முடிவது அல்ல இந்த தளத்தின் சிறப்பம்சம். இவ்வாறு சக யூடியூப் பிரியர்கள் பகிர்ந்து கொண்ட வீடியோ பட்டியலை பர்ப்பதன் மூலம் புதிய சுவாரஸ்யமான வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான ரச‌னை என்பதால் இந்த பட்டியல்கள் பலவிதமான சுவைகளில் அமைந்திருக்கும். அவற்றில் உள்ள வீடியோக்களும் பல விதமானதாக இருக்கும்.
மற்ற சேவைகள் மூலம் யூடியூப் வீடியோக்களை அணுகுவதை விட யூடியூப் பயனாளிகளின் விருப்ப வீடியோ பட்டியல்கள் மூலம் புதிய வீடியோகளை உயிர்ப்புடன் தேடி பெற முடியும்.
யூடியூப் பிரியர்கள் உருவாக்கி வைத்துள்ள பட்டியல் தனித்தனி தலைப்புகளின் கீழ் அதனை உருவாக்கியவரின் பெயருடன் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பட்டியலிலும் நான்கு வீடியோக்கள் இடம்பெறுகின்ற‌ன. கிளிக் செய்தால் மேலும் வீடியோக்கள் தொடர்கின்றன.
தலைப்புகள் வீடியோவின் வகையை குறிப்பதால் எந்த வகையான வீடியோ தேவையோ அதனை பார்த்து ரசிப்பது எளிது. இசை+விளையாட்டு, சினிமா, செய்தி, கல்வி என பல தலைப்புகளில் வீடியோக்களை பார்க்கலாம்.
நீங்கள் பகிரும் வீடியோக்களையும் இப்படி வகைபடுத்தி கொள்ளலாம். பேஸ்புக் ம‌ற்றும் டிவிட்டரில் செய்வது போல எநத பட்டியல் பிடித்திருக்கிறதோ அதனை உருவாக்கிய வரை பின்தொடரவும் செய்யலாம். நீங்களும் பின்தொடரப்படுவீர்கள். அடிக்கடி விஜயம் செய்தால் புதுப்புது வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம். அதன் மூலம் புதிய வீடியோ நண்பர்களையும் பெறலாம்.

No comments:

Post a Comment