Search This Blog

Tuesday, June 28, 2011

Intruduction of “Law of Thesawalamai” தேசவழமைச் சட்டம்


Intruduction of “Law of Thesawalamai”
           
  Mr. P. Sivananthan,
              
அறிமுகம்

இலங்கை மக்களாகிய நாங்கள் பல்வேறு வகையான சட்டங்களால் ஆளப்பட்டுவருகிறோம். அவற்றுள் தேசவழமைச் சட்டமும் முக்கியமானதாகும். தேசவழமைச் சட்டமானது ஆதனங்கள் தொடர்பிலும் ஆட்கள் தொடர்பிலும் இன்னும் வடமாகாணத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு வலிமையான சட்டமாகும்.

டச்சுக்காரர்கள் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த போது 1704ம் ஆண்டிலே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வழக்காறுகள் பற்றி விசாரணைசெய்து அவற்றைத் தொகுக்கும்படி டச்சுக் கவர்னர் சைமன்ஸ் அவர்கள் யாழ்ப்பாண பட்டினத்தின் திசாவையாக இருந்த கிளாஸ் ஐசக்) என்பவரைப் பணித்திருந்தார். அவரால் டச்சு மொழியில் தொகுக்கப்பட்ட இந்த ஆவணம் பின்னர் ஒன்றுதிரட்டப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இது 1814 ஆம் ஆண்டில் பிரதம நீதியரசரான சேர் அலக்சாண்டர் ஜோன்சன் அவர்களால்; ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அக்காலத்திலிருந்து தேசவழமைச்சட்ம்; சட்ட நூலில் இருந்து வருகிறது.

தேசவழமைச்சட்டம் யாருக்கு ஏற்புடையதாகும்.

1806 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க ஒழுங்கு விதி யாழ்ப்பாண மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இடையேயான எல்லாப் பிரச்சனைகளும் அல்லது தமிழ் மக்கள் வழக்கில் எதிராளியாக இருக்குமிடத்து அவை தேசவழமை வழக்காறுகளுக்கு இணங்க முடிவுசெய்யப்படல் வேண்டும் எனக்கூறுகிறது. மேலும், தொடர்ந்து நோக்கினால் தேசவழமைச் சட்டமானது இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று 'ஆள்சார்' சட்டமாகும், மற்றயது 'இடம்சார்' சட்டமாகும்.

வழக்குத் தீhப்புக்களை நோக்கினால் ஆள்சார் சட்டம் எனும்போது 'யாழ்ப்பாணவாசி'  என்ற பதத்திற்கு உட்படும் ஒருவர் அதாவது தற்போதைய யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் நிரந்தர வதிவிட உரிமையையும் வதிவிட எண்ணத்தையும் கொண்ட தமிழர் ஒருவர் தேசவழமைச் சட்டத்தால் ஆளத்தகுதியுடையவராவார். அடுத்து தேசவழமைச் சட்டமானது இடம்சார் சட்டம் என்ற கருத்தில் மேலே குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள அசையா ஆதனங்கள் அவை எவருக்கு (தமிழர், சிங்களவர், முஸ்லிம், மற்றையோர்) சொந்தமாக இருப்பினும் தேசவழமைச் சட்டததாலேயே ஆளப்படும்.

வாழ்க்கைத்துணையைப் பொறுத்தவரை 1911 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க கட்டளைச்சட்டத்தின்(யாழ்ப்பாண திருமண உரிமைகளும் வழியுரிமைகளும் கட்டளைச் சட்டத்தின்) 3ஆம் பரிவு பின்வருமாறு கூறுகிறது.
·         தேசவழமைச் சட்டம் ஏற்புடையதான பெண் தேசவழமைச் சட்டம் ஏற்புடையதாகாத ஆண் ஒருவரை திருமணம் செய்கின்றவிடத்து, அத்திருமணம் நிலைத்திருக்கின்ற காலத்தின்போது அவள் தேசவழமைச் சட்டத்திற்கு அமைந்தவள் ஆகமாட்டாள்.
·         தேசவழமைச் சட்டம் ஏற்புடையதாகாத பெண் தேசவழமைச் சட்டம் ஏற்புடையதாகின்ற ஒரு ஆணைத் திருமணம் செய்கின்றபோது அத் திருமணம் நிலைத்திருக்கின்ற காலத்தின் போது, அவள் தேசவழமைச் சட்டத்திற்கு அமைந்தவள் ஆவாள்.  

தேசவழமைச் சட்டத்தில் திருமணம் தொடர்பான விடயங்கள்.

தேசவழமைச் சட்டத்தால் ஆளப்படுவோருக்கு திருமண உரிமைகளும் வழியுரிமைகளும் கட்டளைச்சட்டம், மணப்பெண்டிர் ஆதனச்சட்டம் ஆகிய சட்டங்கள் ஏற்புடையனவாகாது. இவர்களை யாழ்ப்பாண திருமண உரிமைகளும் வழியுரிமைகளும் கட்டளைச்சட்டம்(1911), 1947 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க திருத்தக் கட்டளைச்; சட்டம் ஆகியன ஆளுகின்றன. செல்லுபடியாகக் கூடிய ஒரு திருமணத்திற்கு தேசவழமைச் சட்டத்தின்படி பின்வரும் ஆறு முக்கிய விடயங்கள் தேவையாகவுள்ளன.
1.   திருமணம் செய்யப்போகும் ஆணினதும் பெண்ணினதும் சம்மதம்.
2.   பெற்றோரின் சம்மதம்.
3.   தடுக்கப்பட்ட உறவுமுறைக்குள் திருமணம் செய்யலாகாது.
4.   இருவரும் திருமண வயதை அடைந்திருக்க வேண்டும்.
5.   ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் அத்திருமணம் வலுவில் இருக்கும் போது இன்னுமொரு திருமணம் செய்யலாகாது.
6.   தேவையான சடங்குகள் நிகழ்த்தப்பட வேண்டும்.

பதிவு செய்யப்பட்டாலொழிய எந்தத் திருமணமும் செல்லுபடியாகாது என்று 1895 இன் 2 ஆம் இலக்க கட்டளைச்சட்டம் வெளிப்படுத்தியது, ஆனால் இக்கட்டளைச்சட்டம் அடுத்த ஆண்டில் 1896 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தால் நீக்கப்பட்டது.

செல்லுபடியாகும் திருமணமொன்று செய்யப்பட்டதும் அதனால் ஏற்படும் புதிய அந்தஸ்த்தினால் சட்ட விளைவுகள் சில எழுகின்றன. தேசவழமைச் சட்டத்திற்குட்பட்ட திருமணமான பெண் அசையா ஆதனம் தொடர்பாக எந்த உறுதியையும் தனது கணவனுடன் சேர்ந்தே(கணவரின் சம்மதத்துடன்) எழுத வேண்டும் என்பது கட்டாய விதியாகும். அது அவளது தனிப்பட்ட சொத்தாக இருந்தாலும் சரி, தேடிய தேட்டப்பங்கு அல்லது சீதனம், நன்கொடை யாவற்றுக்கும் இது பொருந்தும். எனினும் 1911 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின்படி சில காரணங்களை நிரூபித்து மாவட்ட நீதிமன்றின் அனுமதியைப் பெற்றபின்னர் கணவரின் சம்மதமின்றி அவளது அசையா ஆதனத்தையும் கைமாற்றமுடியும.

திருமணமான ஆண் தான் திருமணம் செய்வதற்கு முன்னர் வாங்கிய அறுதி ஆதனத்தையும் அவனுக்கு நன்கொடை, முதுசொம், உரிமைவழி வந்தடைந்த ஆதனத்தையும் கைமாற்றம் செய்ய முழு உரிமையுடையவன். அதே போல் திருமணத்தின் பின் வாங்கிய தேடிய தேட்டத்தில் சரி அரைப்பங்கை தன் விருப்பப்படி எதுவும் செய்யலாம்.

குடியியல் வழக்கு ஒன்றில் தேசவழமைக்குட்பட்ட திருமணமானபெண் ஒருவர் அவளது கணவனுடன் இணைந்தே வழக்காளியாகவோ எதிராளியாகவோ தோன்ற முடியும்;. மேலும், குற்றவியல் வழக்கிற்கு இது பொருந்தாது. விதிவிலக்காக திருமண நீக்க வழக்குகளிலும் தனது தனிப்பட்ட ஆதனத்தையும் மீட்பதற்காக கணவனுக்கெதிராக வழக்குத் தொடுக்கும் உரிமை மனைவிக்குண்டு.

ஆதனங்கள் தொடர்பான தேசவழமைச் சட்ட ஏற்பாடுகள்;.

தேசவழமைச் சட்டத்தின் கீழ் ஆதனங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதுசொம்
சீதனம்
தேடிய தேட்டம்.
உரிமை

ஒருவரது பெற்றோர் இறப்பதால் அல்லது பெற்றோர் வழி மூதாதையர் இறப்பதால் வழிவழியாக ஒருவரை வந்தடையும் ஆதனமே 'முதுசொம்' எனப்படும். கணவனுடைய முதுச ஆதனத்தில் மனைவிக்கோ அல்லது மனைவியினுயை முதுச ஆதனத்தில் கணவனுக்கோ எவ்வித உரிமையும் கிடையாது. இறந்த ஒருவரின் முதுச ஆதனம் அவரது பிள்ளைகளையே சென்றடையும். அவரது வாழ்க்கைத்துணை அவ் ஆதனத்தில் உரிமைகோரமுடியாது. முதுச ஆதனத்தை விற்று வரும் பணத்தில் வாங்கும் ஆதனமும் முதுசம் ஆதனமேயாகும்.

முறையான திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு திருமணத்தை முன்னிட்டு கொடுக்கப்படும் ஆதனமே சீதனமாகும். திருமணத்திற்கு முன்னரோ திருமணத்தன்றோ அல்லது திருமணத்தின் பின்னரோ சீதனம் கொடுக்கப்படலாம். சீதன ஆதனமானது சீதன உறுதி மூலமே கொடுக்கப்படும். சீதன ஆதனம் மனைவிக்கு மட்டுமே உரிய தனிச்சொத்தாகும். சீதனம் கொடுக்கப்பட்டால் அதன்பின் எக்காரணம் கொண்டும் அதனை கைமீட்க முடியாது. சீதனத்தைப் பெற்றுக்கொண்ட பெண் அந்த ஆதனத்தை கைமாற்றம் செய்யாமல் இறந்தால் மட்டுமே அவளது பிள்ளைகளை அது சென்றடையும். பிள்ளைகள் இன்றி இறப்பாராயின் சீதனத்தை யார் கொடுத்தார்களோ அவர்களை அவ் ஆதனம் மீளச்சென்றடையும். அவர்களும் இறந்திருப்பின் அவளது சகோதரங்களுக்கு சமபங்காக சென்றடையும். அசையா ஆதனத்தை சீதனமாக பெற்றுக்கொண்ட பெண் அதன்பின் அவளது பெற்றோர் இறந்தபின் அவர்களது மேலதிக சொத்தில் பங்கு கோரமுடியாது. ஆனால் அசையா ஆதனத்தை சீதனமாகப் பெறாது நன்கொடையாக பெற்றுக் கொண்ட பெண் பெற்றோர் இறந்த பின் அவர்களது சொத்தில் பங்கு கோரமுடியும். மேலும் சீதன உறுதி எழுதப்படும்போதும் நன்கொடை உறுதி எழுதப்படும் போதும் அசையா ஆதனத்தைக் கொடுப்பவர் தங்களுக்கு சீவிய உரித்தை வைத்துக்கொண்டு அதனை உறுதியில் தெளிவாகக் காட்டி எழுதமுடியும்.

திருமணம் நிலைத்திருக்கும் காலத்தில் கணவனால் அல்லது மனைவியால் அல்லது இருவரும் சேர்ந்து விலை கொடுத்து வாங்கும் ஆதனம் தேடிய தேட்டம் என அழைக்கப்படும். தேடிய தேட்டத்தில் அரைவாசிப்பங்கு கணவனுக்கும் மிகுதி அரைவாசி மனைவிக்கும் சொந்தமாகும். கணவன் தன் தேடிய தேட்டப் பங்கை தன் விருப்பப்படி கைமாற்றமுடியும். ஆனால் மனைவி தேசவழமைச் சட்டத்திற்குட்பட்ட திருமணமானபெண் என்பதால் கணவனுடன் சேர்ந்தே தன் தேடிய தேட்டப் பங்கை கைமாற்றமுடியும். தேடிய தேட்டமுடைய குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி ஓருவர் இறந்தால் இறந்தவருக்குரிய பங்கில் அரைப்பங்கு அதாவது முழு ஆதனத்தின் கால் பங்கு வாழ்க்கைத்துணைக்கும் மீதி அதாவது முழு ஆதனத்தின் கால் பங்கு இறந்தவரின் பிள்ளைகளுக்கு சமபங்காக சென்றடையும். பிள்ளைகள் இல்லாவிடின் இறந்தவரின் பெற்றோர் சகோதரங்களுக்கு உரிமை வழியாக சென்றடையும். எனவே உயிருடனிருக்கும் வாழ்க்கைத்துணைக்கு முக்கால்(3ஃ4) பங்கு சொந்தமாகிவிடும். பிள்ளைகளுக்கு கால்(1ஃ4) பங்கு சொந்தமாகும். தேடிய தேட்டம் பிள்ளைகளை சென்றடையும் போது அது முதுசொம் என்ற பெயரைப் பெறும் சீதனம் வாங்கித் திருமணம் செய்த பெண் பிள்ளைகளுக்கு இந்த பங்கைப்பெற தகுதியில்லை.

பெற்றோர் அல்லது மூதாதையர் தவிர்ந்த உறவினர் ஒருவர் இறக்கும் போது வழிவழியாக ஒருவரை வந்தடையும் ஆதனம் உரிமை(அடிநிலை) ஆதனம் அல்லது மலட்டுச்சொத்து எனப்படும். உரிமை வழியாக ஒரு ஆதனத்தைப் பெறுபவருக்கு அது அவரது தனிப்பட்ட ஆதனமாக அமையும் என்பதோடு அவர் அதனை தன் விருப்பப்படி கைமாற்றம் செய்யமுடியும். இது பெரும்பாலும் சொரியல் பங்காகவே இருக்கும்.

எமது நாட்டில் பொதுச்சட்டமே இலங்கை முழுவதற்கும் வலுவுடையதாக இருப்பினும் தேசவழமைச்சட்டம் , கண்டியர் சட்டம், முஸ்லிம் சட்டம் என்பவையும் நடைமுறையிலுள்ளன. இவற்றுள் தேசவழமைச் சட்டமானது இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களை அடையாளப்படுத்திக் காட்டும் ஒரு சட்டமாக இருப்பதுடன் தமிழ் மக்களின் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்காறுகளை மிகத் தெளிவாக கையாளுவதை உறுதிப்படுத்தும் சட்டமாகவுமுள்ளது. மேலும் இது பெண்களின் பொருளாதார உரிமைகளை சட்டரீதியாகப் பாதுகாக்கும் ஒரு சட்டமாகவுமுள்ளது. குறிப்பாக நிலஅளவையாளர்களுக்கு நாட்டிலுள்ள சட்டங்கள் பற்றிய தெளிவான அறிவு அத்தியாவசியமாகிறது. மேலும் வடபகுதியில் நிலஅளவையில் ஈடுபடும் நிலஅளவையாளர்கள் தங்கள் கடமைகளை சரியாக மேற்கொள்வதற்கு தேசவழமைச் சட்டம் பற்றிய ஆழ்ந்த அறிவுடையவர்களாயிருக்க வேண்டும். இக்கட்டுரையில் தேசவழமைச் சட்டம் பற்றி முழுமையாக ஆராயவிட்டாலும் முக்கிய விடயங்கள் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ளேன். 
உசாத்துணை
(i)                   Law of Thesawalamai by Saba Raveendran, Attorney at Law
(ii)               The Laws and Customs of the Tamil of Jaffna by Dr. H.W. Tambiah.       

No comments:

Post a Comment