எதற்கும் இருக்கலாம்... என்பதா?
ஒரு ஏழையான சீனக் குடியானவன், ஒரு அழகான கறுப்புக் குதிரை வைத்திருந்தான்.
ஊராருக்கு அந்தக் குதிரையின் மீது வியப்பு. அந்த ஊர் மன்னர் அந்தக் குதிரையைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தக் குதிரைக்காக நிறையப் பணம் தருவதாகவும், அந்தக் குதிரையை தனக்கு விற்று விடுமாறும் அவனிடம் கேட்டார்.
அனால் அவன் சம்மதிக்கவில்லை.
ஊர்க்காரர்கள், “மன்னர் பெருந்தொகை கொடுக்க முன் வந்து நீ ஏற்கவில்லையே, நீ ஒரு முட்டாள்'' என்று விமரிசித்தனர்.
அதற்கு அவன், “இருக்கலாம்” என்று சுருக்கமாகப் பதில் சொன்னான். சில நாளில் அக்குதிரை காணவில்லை.
ஊர்க்காரர்களில் சிலர் அவனிடம், ''நீ பெருந்தொகையை இழந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போதாவது உணர்கிறாயா?'' என்று கேட்டனர்.
அப்போதும் அவன், “இருக்கலாம்” என்றே பதில் கூறினான்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் குதிரை மேலும் இருபது அழகிய கறுப்புக் குதிரைகளைக் காட்டிலிருந்து அழைத்து வந்தது. மக்கள், ''உன் குதிரையை விற்காதது உன் புத்திசாலித்தனம்,'' என்று பாராட்டினர்.
இதற்கும் குடியானவன், “இருக்கலாம்”என்று கூறினான்.
அவனுடைய பையன் குதிரைகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது குதிரையிலிருந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.
மக்கள், ''உன் பையனுக்கு அவ்வளவு விபரம் போதாது'' என்றனர்.
குடியானவன் வழக்கம் போலவே, “இருக்கலாம்” என்றான்.
அப்போது சீனாவில் போர் வந்தது அதற்கு இளைஞர்களை ராணுவத்தில் சேரச் சொல்லிக் கட்டாயப் படுத்தினர். குடியானவன் மகன் மட்டும் கால் ஒடிந்திருந்தால் போருக்கு ஏற்றவனல்ல என்று விடப்பட்டான். மக்கள் குடியானவனிடம் சொல்லினர், ''நீ மிகவும் அதிர்ஷ்டசாலி. உன் பிள்ளை ராணுவத்தில் சேராமல் தப்பி விட்டான்.'' என்றனர்.
இப்போதும் அவன் சொன்னான், “இருக்கலாம்.”
எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பக்குவம் அவனுக்கு இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு...?
No comments:
Post a Comment