இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
பாத்ரா கிராமத்தில் போலாநாத் என்பவர் தனது மகன் மூல்ஜியிடம் “என் அருமை மகனே... நீ சிறுவன். இது ஓடியாடி விளையாடும் பருவம். கடவுளைக் கும்பிடும் வயது இல்லை கண்ணே...” என்று கூறினார்.
மூல்ஜி அவரிடம் “அப்படியென்றால், இறைவனை வணங்கத் தகுந்த வயது எது?” என்று கேட்டார்.
போலாநாத் “வயது முதிர்ந்த பின் இறைவனை வணங்குவது தகும்” என்று பதிலளித்தார்.
அதைக் கேட்ட மூல்ஜி, மறுவார்த்தை எதுவும் கூறாது வீட்டை விட்டு வெளியே போனார். போலாநாத்திற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. மூல்ஜி தன் வயது நண்பர்களுடன் விளையாடப் போயிருக்கிறார் என்று அவர் நினைத்தார். ஆனால் நடந்ததோ வேறு மூல்ஜி அந்தக் கிராமத்தில் உள்ள வயதானவர்கள் உண்மையில் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கப் போனார்.
அங்கே கிராமத் திடலில் வயதானவர்கள் ஒன்றாகக்கூடி அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ஒருவர் கூட தெய்வ வழிபாடு செய்து கொண்டிருப்பதைக் காண இயலவில்லை.
மாலையில் வீட்டிற்கு திரும்பிய மூல்ஜி, தன் தகப்பனாரிடம், “அப்பா கிராமத்திலிருக்கும் வயதானவர்களில் ஒருவர் கூட இறை வழிபாடு செய்யவில்லை. அவர்கள் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டு காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே சின்ன வயதிலிருந்தே இறை வழிபாடு செய்வதுதான் சரியென்று எனக்குத் தோன்றுகிறது.” என்று விவரமாகக் கூறினார்.
அந்த மூல்ஜி யார் தெரியுமா? வேறு யாருமில்லை நமது குணாதீதானந்த் ஸ்வாமி. மூல்ஜி அனைவரிடமும் “பலமில்லாத கால்களால் நான் எப்படி ஆலயத்திற்கு நடந்து வருவேன்? என் பார்வை குறைந்த கண்களால் இறைவனைத் தரிசிக்கக் கூட இயலாது. வலுவிழந்த கைகளில் எதுவும் செய்ய இயலாது, நான் எவ்வாறு மாலை ஜபிப்பேன்? எவ்விதம் மற்றவர்க்குத் தொண்டு செய்வேன்? என்று வயதானபின் கூறுவதில் பயனில்லை. எனவே, இளமைப் பருவமே இறைவனை வழிபாடு செய்யத் தகுந்த வயது” என்று விளக்கமாகக் கூறினார்.
- திரு துளசிதாஸ் எஸ் ராஜகோபாலின் அருள்வாழ்வு மணிமாலையிலிருந்து
தொகுத்து வழங்கியவர்: சந்தியா கிரிதர்.
தொகுத்து வழங்கியவர்: சந்தியா கிரிதர்.
No comments:
Post a Comment