The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….
Initial release: January 22, 2004 (Puerto Rico)
Directors: Eric Bress, J. Mackye Gruber
Running time: 1h 53m
Executive producers: Ashton Kutcher, Jason Goldberg, more
Screenplay: Eric Bress, J. Mackye Gruber
எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான்.
உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்?
இவான், பற்பல நிழல் நினைவுகளுக்கு சொந்தக்காரன். ஏதேனும் மன அழுத்தம் தரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தால், அந்த சம்பவம் நடந்து முடிந்தபின் அவனால் அந்த சம்பவத்தை நினைவுகூற முடியாது. இவானது தாய் அவனை மருத்துவரிடம் சென்று காண்பித்தாலும், அவனது மூளையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் ஒருவேளை தந்தை இல்லாமல் வாழுவதன் அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறிவிடுகிறார். இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது எவ்வளவு நினைவுக்கு வருகிறதோ அவ்வளவையும் உடனே குறித்து வைக்குமாறும், பின்னாட்களில் என்றாவது ஒரு நாள் அதன் உதவியுடன் அவனுக்கு நினைவு திரும்பலாம் என்று கூறுகிறார்.
வருடங்கள் செல்கிறது. இவான் வளர்ந்து பெரியவனாகிறான். கல்லூரியில் படிக்கும் இவானுக்கு இப்போது நினைவு தப்பும் பிரச்சனைகள் இல்லை. ஒரு நாள் தற்செயலாக தன்னுடைய குறிப்புகளை படிக்க ஆரம்பிக்கும் இவானுக்கு, மறந்துபோன சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆனால், அது முழுதாக நினைவுக்கு வராமல் போக, அதனைப் பற்றி தெரிந்துகொள்ள தான் சிறுவயதில் வாழ்ந்த இடம் நோக்கி செல்லும் இவான், தனது சிறுவயது காதலி கேலேய்யை(Kayleigh) சந்திக்கிறான்.
சிறுவயதில் இவானை உயிருக்குயிராக நேசித்த கேலேய்,அவன் பிரியும்போது “உனக்காக திரும்பி வருவேன்” என்று சொன்னதை நம்பி இன்னமும் அவனை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பவள். ஆனால் நேரில் வந்த இவான் தனது மறந்துபோன நினைவைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுப் பேசிக் கொண்டிருப்பதை காணும் அவள் மனம் உடைந்து போகிறாள். இவானின் மனதில் தனக்கு இடமில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். குற்ற உணர்ச்சியில் வாடும் இவான், சிறிது காலத்தில், தனக்கு தன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மறுபடி வாழ்ந்து அதை மாற்றக் கூடிய சக்தி இருப்பதைக் கண்டுகொள்கிறான். தன்னுடைய வாழ்க்கையில் பின்னோக்கி சென்று கேலேய்யை காப்பாற்ற சென்று, அவளை காப்பாற்றவும் செய்கிறான். ஆனால், இந்த சிறுசம்பவம் அவனது வாழ்க்கையோட்டத்தையே மாற்றி விடுகிறது. நிகழ்ந்த தவறுகளை சரி செய்ய திரும்பவும் பின்னோக்கிப் போகிறான். பின்னர் திரும்பவும், திரும்பவும்...
ஆனால் ஒவ்வொரு முறை சென்று எதையேனும் திருத்தும் போதும், வேறு ஒரு பிரச்சனை நேருகிறது. யாரோ இறக்கிறார்கள். யாரோ பாதிக்கப்படுகிறார்கள். இவானுக்கும் இத்தகைய பயணங்களின் காரணமாக மூளையின் ரத்த நாளங்களில் பலத்த சேதங்கள் ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி, அவன் ஆசைப்பட்ட வாழ்கையை அடைய அவனால் முடிந்ததா என்பதே கதை.
Chaos Theory இல் சொல்லப்பட்டிருக்கும் Butterfly Effect தான் படத்தின் ஒன் லைன் என்றே சொல்லலாம். ஏதாவது ஒரு சிறு சம்பவம் கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதே அதன் சாராம்சம். அதற்கேற்ப, கதை முழுவதும் இவான் செய்யும் சிறு தவறுகளும், சின்னச் சின்ன முடிவுகளும் பெரும் விளைவுகளையே ஏற்படுத்தி அவனை பின்னோக்கி இழுக்கிறது. படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம், இழந்ததை திரும்பப் பெறத் துடிக்கும் மனிதன் செய்த தவறை திருத்த, புதிய தவறுகளை செய்வான் என்பதை அழகாக காண்பித்த விதம். ஒருவகையில் சொல்லப் போனால், கதையே அது தான். இதைப் போன்றே இவ்விசயத்தை மிக அழகாக சொன்ன கதை, ஸ்டீபன் கிங் எழுதிய Pet Sematary. ஆனால், பெட் கதையில் அழகோடு சேர்ந்து திகிலும் கலந்திருக்கும்.
இப்படம் வெளிவந்த போது, சரியாக புரிந்து கொள்ளப்படமால், பட விமர்சகர்களால் தீவிரமான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது. ஆனால், மக்களின் ரசனை விமர்சகர்களின் ‘மேலான’ விருப்பத்திற்கு ஆட்பட்டதில்லையே! நல்ல கதையும் திறமையான கதை சொல்லலும் இருந்தால், எத்தகைய எதிர்ப்பையும் மீறி ஒரு நல்ல படம் ஜெயிக்கும் என்பதற்கு இப்படம் ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு theotrical, director cut என்று இரண்டு versions, நாலைந்து முடிவுகள் (உண்மை தான்) என்று இருந்தாலும், எனக்கு மிகப் பிடித்த முடிவு, theotrical version இன் ஒரிஜினல் முடிவு தான். சில நேரங்களில் கிடைப்பதை வைத்து மகிழ்ச்சி கொண்டு, இருப்பதை கெடுக்காமல் இருப்பதே சிறப்பானது. சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அருமையான படங்களில் ஒன்று இந்தப் படம்.
சில படங்களைப் பார்த்தபின், எத்தனை வருடமானாலும் அதை மறக்க முடியாது. அத்தகைய படங்களில் ஒன்று The Butterfly Effect. ஒரு நல்ல psychological thriller படம், படம் முடிவதற்குள் பல்வேறு அடுக்குகளில்(different layers) விரிவது எப்போதும் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும், குழப்பமான கதையை தெளிவான திரைக்கதையின் மூலம் புரியவைப்பது இன்னும் அபூர்வம். நிகழ்காலம், கடந்தகாலம், மாற்றப் பட்ட நிகழ்காலம், மறுபடி கடந்தகாலம் என்று விரியும் இப்படம் Inception படத்திற்கு ஒரு முன்னோடி என்று சொன்னால் அதில் எந்த விதமான மிகையும் கிடையாது.
The Butterfly Effect – Takes your breath away...
**********************************************************************
ஏற்கனவே மேல உள்ளத எல்லாம் படிச்சு மண்ட காஞ்சு போயிருக்குறவங்க அப்படியே போறது நலம். ஏன்னா, இதுல இன்னும் குழப்ப போறேன். யாருக்காவது கொலை வெறி வந்தா, என்னையும் நம்பி, Butterfly Effect and Time Travel பத்தி எழுத சொன்ன குழந்த மற்றும் கீனுவ கவனிங்க. ;)
Butterfly Effect இன் கோட்பாடு என்ன என்றால், ஏதாவது ஒரு சிறு சம்பவம் கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமா சொல்லப்படுவதே இந்த Butterfly example.
Something as small as a flutter of the butterfly’s wings can ultimately cause a typhoon halfway around the world.
அதாவது, சிம்பிளா சொல்லணும்னா, இப்போ நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பின்னாளில் ஏதோ ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு, ஒரு நாள் நீங்கள் வண்டியில் போகும்போது பெரிய ஆக்ஸிடன்ட் நடந்து உங்களுக்கு கை, கால் போய் விடுகிறது. அன்றைக்கு நீங்கள் போகாமல் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்க கூடுமா? நீங்களோ வேறு யாரோ டைம் ட்ராவல் செய்து அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினால், அந்த நிகழ்ச்சி நடக்காமலே போகுமா? முடியலாம்.
காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்வது குறித்து இதுவரை எல்லாமே தியரி ரீதியில் தான் இருக்கிறது.
1.காலப் பயணத்தில் முன்னே செல்வது கூட சாத்தியம், பின்னே செல்ல முடியாது என்று ஒரு தியரி.
2.காலப் பயணத்தில் பின்னே செல்லலாம், முன்னே செல்வது கஷ்டம் என்று இன்னொரு தியரி.
3.காலப் பயணத்தில் முன்னேயும், பின்னேயும் செல்லலாம் என்று இன்னொரு தியரி.
4.ஆட்டைய கலைக்கவே வேணாம். நீங்கள் காலத்தில் பயணமே செய்ய முடியாது என்று இன்னொரு தியரி.
காலப் பயணம் செய்வது குறித்த விவாதங்கள் நிறைய. போகவே முடியாது, கொஞ்சூண்டு போகலாம், இஷ்டத்துக்கு போகலாம் என்று. போகவே முடியாது என்று சொல்பவர்கள் சொல்வது என்னவென்றால், கடந்த காலம் என்பது ஏற்கனவே முடிந்து போன ஒரு விஷயம். அதில் நுழைவது சாத்தியமில்லை,உங்களுக்கு அங்கே இடமும் இல்லை என்பது. அதே மாதிரி, எதிர்காலம் என்பது இன்னும் முடிவே எடுக்கப்படாத காலம். அதில் நுழையவே முடியாது என்பது இவர்கள் வாதம்.
சரி, அது என்ன கொஞ்சூண்டு போகலாம்? அதாவது இந்த தியரிபடி நீங்கள் ஒரு டைம் மிசின் கண்டுபிடித்து விடுகிறீர்கள். உங்களால் அதை உபயோகப்படுத்தி கடந்த காலத்தில் போக முடியும்.ஆனால் எதுவரை கடந்த காலத்தில் என்றால், அந்த மிசின் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அது வரை மட்டுமே! அதற்கு முன்னால் போக முடியாது.ஏனென்றால், அதற்கு முன் அப்படி ஒரு மிசினே கிடையாதே!
அதே மாதிரி, எதிர் காலத்தில் கொஞ்சூண்டு போகலாம் என்பதற்கு துணையாக, பிரபலமான Twin Paradox தியரியை சொல்கிறார்கள். அதாவது, ஒரே விதமான ரெட்டயர்கள் இருவர். ஒரே வயது. ஒருவரை பூமியிலும், மற்றொருவரை ஒளியை விட வேகமாக போகும் ஏதோ ஒரு கலத்திலும் வைத்து விடுகிறீர்கள். ஒளியை விட வேகமாக போகும் கலத்தில் உள்ள நேரமும், பூமியின் நேரமும் வேறுபடும். Different time perceptions. பத்து வருடம் கழித்து அந்த ஆளை பூமியில் இறக்கினால், அவருக்கு பத்து வயது கூடியிருக்காது. ஏன் என்றால், அவர் டைம் வேற. பூமியில் இருந்த ரெட்டயரை compare செய்தால்,அவரை விட இவர் சற்றே இளமையாக இருப்பார். சரி, அதை ஏன் கொஞ்சம் செல்ல முடியும் என்று சொல்கிறீர்கள்? எந்த விதமான நேர வித்தியாசமாக இருந்தாலும், மரணம் நிகழத் தானே செய்யும்.
சரி, அப்படியே என்றாலும்,நீங்கள் போகும் எதிர்காலம் multi-universe சிந்தாந்தப்படி வேறொரு universe இன் பூமியாக இருக்கும் என்று ஒரு தியரி உள்ளது.
அதாவது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஏற்ற மாதிரி ஒரு காலம் பிரியும். அதுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விதமான எதிர்காலம். அந்த ஒவ்வொரு எதிர்காலமும் நடப்பது வெவ்வேறு universe இல் என்பது தியரி. அப்படி பார்த்தா, நீங்க எந்த எதிர்காலத்திற்கு போவீங்கன்னு உங்களாலேயே சொல்ல முடியாது. ஏன்னா,நீங்க எடுக்கும் முடிவு என்ன விதமான விசயங்களுக்கு வித்திடும்னு உங்களுக்கே தெரியாது. :)
அதுவும்போக, நீங்கள் கடந்த காலத்திற்கு சென்று வந்தால், உங்கள் உலகம் உங்களுக்கு தெரிந்த மாதிரி அப்படியே இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி. அதாவது, காலத்தை கடந்து முன்னும் பின்னும் நீங்கள் போனால், உங்களுக்கு தெரிந்த உங்கள் உலகம் கண்டிப்பாக அப்படியே இருக்காது. நிச்சயம் மாறிவிடும். அப்படி மாறிய உலகத்தில் ஒருவேளை நீங்களே இல்லாமல் போனால், எப்படி பின்னாலோ,முன்னாலோ செல்வீர்கள்? இது ஒரு paradox.
அதே போல, பின்னே செல்லும் நீங்கள் உங்கள் தந்தையை கொன்றால் என்ன ஆகும்? இது இன்னொரு paradox.
சரி, இத்தனைக்கும் பதில் கிடைப்பது எப்போது? The key is in finding a machine or a particle which can travel faster than light and employing it in time travel. அதுவரை, அனுமானம் தான்.
No comments:
Post a Comment