Rajarednam Neminathan
ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால்; ஆட்களைக் கொன்றுதான் அழிக்கவேண்டும் என்றில்லை. அந்த இனத்திற்கான மொழியை அழித்துவிட்டால் சரி.
அப்படியாயின் மொழியை அழிக்கவேண்டும் என்றால் என்னசெய்யலாம்?
அந்த மொழியின் இலக்கியம், இலக்கணங்களை அழித்துவிடவேண்டும்.
ஒரு மொழியின் இலக்கணம், இலக்கியம் என்பவற்றை எப்படி அழிக்கலாம்?
ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் சொற்களை, வாக்கியங்களை எழுத்துக்களை எழுத்தின் உறுப்புக்களை எப்படிப் பாவித்தாலும் சரி, விளங்கினால் சரிதான், தொடர்பாடல்தான் முக்கியம், மொழி என்பதே தொடர்பாடலின் கருவிதான் என்று சுருக்கிவிட்டால் சரி.
இப்படியான ஒரு தோற்றமாயையை ஏற்படுத்தினால் ஒரு விடயத்தை பலரும் பல விதமாகப் பயன்படுத்த இடமளிக்கும். இதனால் சொற்களில், இலக்கணத்தில், எழுத்தமைப்பில் ஒரு குழப்பம் தோன்றும் அந்தக் குழப்பத்தை மூலதனமாக்கி கிளைமொழிகள் உருவாகும். கிளைமொழிகள் உருவாகினால் மூலமொழி அழியும்.
மொழி என்பது இயற்கையின் அங்கமாகும். மனித மனத்தின் செயலாற்றலாகவும் உள்ளுணர்வாகவும் சக்தியாகவும், ஒருவரின் மனச்சாட்சியாகவும் மொழி இருக்கிறது. அப்படியென்றால், மொழி மனித மனத்தின் ஒட்டுமொத்த அறிதல் என்றாகிறது. அறிதல் வளரவளர, மொழியும் வளருகிறது. மொழி தொடர்பாடும் ஊடகம் மட்டுமே என்பது வீட்டில் மாட்டிவைத்திருக்கும் சுவாமி படங்கள்தான் கடவுள் என்று சொல்வதற்கு ஒப்பானது.
மொழியின் செயற்பாடு வெறுமனே தொடர்பாடல் மாத்திரந்தான் என்று நினைப்பது மொழியறிவின் முதற்கட்டமான குழந்தைநிலை. உதாரணமாக நான் உங்கள் ஊரைக்குறிப்பிட்டு திட்டுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் புவியியல் ரீதியான ஒரு இடமாக மட்டும் உங்கள் ஊரை வைத்திருந்தால் பேசாமல் போய்விடுவீர்கள். ஆனால் உங்களது ஊர், உங்களது ஆழ்மனதுடன், நினைவுகளுடன், நம்பிக்கைகளுடன், உணர்வுகளுடன், அறிவு, மனப்பாங்கு போன்ற பல விடயங்களுடன் தொடர்பட்டிருப்பதால் உங்களுக்கு ஊரைத் திட்டியதும் கோபம் வருகிறது. மொழியின் பங்களிப்பு தொடர்பாடல் மட்டும்தான் என்று சொல்வது. ஒரு தட்டையான கருத்தாகும். ஊர் என்பது உங்கள் வசிப்பிடம் அமைந்திருக்கும் ஒரு இடந்தானே அதைத் திட்டினால் உங்களுக்கேன் கோபம் வரவேண்டும். மொழி என்பதும் அதைப்போலத்தான் அதன் நோக்கம் தொடர்பாடல் மட்டுந்தான் என்றால்; நீங்கள் உலக வரலாறு அறியாதவர்தான். மொழியினால் எத்தனை போர்கள் நடந்திருக்கின்றன.
பிரித்தானியா என்றால் ஆங்கிலேயர்களின் நாடு என்றுதான் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் ஆனால் அங்கு வேல்ஸ் மொழி, ஐரிஸ் மொழி என்று பிறமொழிகள் உள்ளன என்பதை அறிவீர்களா? அவர்களிடமிருந்து மொழி என்பது தொடர்பாடல் செய்யும் கருவி மட்டுல்ல என்பதை அவர்களுடன் நீண்டகாலமாகப் பழகி நிதானமாக அறிந்துகொண்டேன். மொழி வெறுமனே தொடர்பாடற் கருவிதான் என்போரைப் பார்க்கும்போது எனது வேல்ஸ் நண்பர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள்.
Say the Colour with "U" ஆங்கிலேய நண்பர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது அமெரிக்க ஆங்கிலத்திடம் இருந்து பிரிட்டிஷாரின் ஆங்கிலத்தை பாதுகாக்க அவர்கள் திடமாக இருப்பதைத்தான் இந்த சொல்லாடல் உணர்த்தும். பிரித்தானியர் வர்ணத்தை colour என்று எழுதுவர். அமெரிக்கர்கள் color என்று எழுதுவார்கள்.
உச்சரிக்கும் போது இருவரும் ஒரேவிதமாகத்தான் உச்சரிப்பர். ஆனால் "U" சேர்த்து உச்சரிக்கவேண்டும் என்று பிரித்தானியர்கள் சொல்வது அமெரிக்க ஊடுருவலில் இருந்து பிரித்தானிய ஆங்கிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். உண்மையில் உச்சரிக்கும்போது "U" இனை உச்சரிக்கமுடியாது ஆனால் அவர்கள் அப்படிச்சொல்வது அமெரிக்க ஆங்கிலத்தில் இருந்து பிரித்தானிய ஆங்கிலத்தைப் பாதுகாக்கத்தான்.
இரண்டும் ஆங்கிலந்தானே பிறகு ஏன் பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இரண்டும் ஆங்கிலந்தான் ஆனால் ஒரே மொழியில் தங்களது தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இணையத்தையும் சமூக ஊடகங்களையும் நேற்றுக்கண்ட நாமே எழுதுவது மற்றவருக்கு விளங்கினால் சரி தொடர்பாடல்தானே? என்று குறிப்பிட்டால் மொழியை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தொடர்பாடல் மட்டுந்தான் மொழியின் நோக்கம் என்றால் உலகின் எல்லோரும் விளங்கிக்கொள்ளக்கூடிய சைகை மொழியை நாம் பொதுமொழியாக்கிவிடலாமே?
பேச்சுமொழி உரையாடலில், பேசாமல் முக அறிகுறிகளாலும், சைகைகளாலும் கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமும், வழிகளும் உண்டு. அத்துடன் உடனுக்குடன், விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் இந்தவசதி, எழுதும் மொழியில் பொதுவாக் கிடைப்பதில்லை. இதன் காரணமாகச் எழுத்துவடிவத்தில் சில கூடுதல் குறியீடுகளைப் பயன்படுத்திக் கடுமையான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
அதிலும் மொழிகளின் தனித்துவம் காரணமாக ஒவ்வொரு மொழியின் அடிப்படையில் வெவ்வேறு சைகைமொழிகள் உள்ளன. உதாரணமாக ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டமைந்த சைகைமொழி கற்றவருக்கு, தமிழ் சைகை மொழி விளங்காது.
உலகின் எந்த மூலையிலும் தமிழ்மொழிக்கென்று ஒரு நாடு இல்லை. அரசியல் அதிகாரத்தில் இல்லாத ஒரு மொழி எவ்வாறு அழியாமல் நிலைத்திருக்கிறது என்றால் அதற்குரிய காரணம் தமிழர் இலக்கியங்களும் இலக்கண நூல்களுந்தான்.
பொருள்பொதிந்த மொழியை உருவாக்கச் சொற்கள் விதிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சொல்லின் அமைப்பு ஒரு குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி பொருத்தமான பொருளை உருவாக்குவதாகும். இந்த விதிகளும் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்டதாகும். இருப்பினும், அந்த விதிகள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிரந்தரத் தன்மை கொண்டவை. ஆகையால், ஒலிக்குறியீட்டின் அடிப்படையில் எழுந்த விதிகளால் உருவான மொழியின் மூலமாகத்தான் மனிதர்கள் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இந்த விதித்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப் பட்டதாகும்.
உதாரணமாக எனது அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ஆலயத்தில் ஓரு சிவனடியார் கொஞ்சம் நகைச்சுவையாப் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரது பக்கத்தில் போய் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எனது கையில் இருந்த கற்பூரப் பெட்டியை அவர் கவனித்துவிட்டார். "இது என்ன" என்று கேட்டார். நானும் "கற்பூரம்" என்றேன். அது தவறு என்றார். கருப்பூரந்தான் சரி என்றார். "அப்படியானால் இந்தப் பெட்டியில் எழுதியிருப்பது தவறு என்கிறீர்களா?" என்று நான் கேட்டேன்.
"நீ நாச்சியாரைப் பிழை சொல்கிறாயா? என்றார்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
என்னும் பாடலிலே கருப்பூரம் என்றுதான் சொல்லியிருக்கிறாள்." என்றார் பிறகெப்படி கருப்பூரம் கற்பூரமாக மாறும் என்றார்.
இனிமேல் கருப்பூரம் என்றுதான் பாவிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு சொல்லுக்கே இலக்கியத்தில் ஆதாரம் இருக்கும்போது உரைநடை ஐரோப்பியர் காலத்தின் பின்னர்தான் தோன்றியது எனினும் அதையும் கடந்து நிற்பதாகவே எமது மொழியின் இலக்கணம் உள்ளது சிறப்பு.
எல்லாக் காலத்திற்கும் ஏற்றவகையில் இலக்கணம் எழுத இந்த நன்னூலார், தொல்காப்பியர் போன்றவர்களுக்கு எவ்வாறு முடிந்தது? எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களுக்கு எல்லாம் வழிவிட்டு அதற்கு தீர்வும் வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள்.
இன்றைய காலத்தின் நவீன தொடர்பாடல் முறைகளும் சாதனங்களும் எமது மொழிக்கு சவாலான விடயந்தான் எனினும் நாம் புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. நமது எழுத்துக்களை- எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதினாலே போதும்.
முடிந்தவரை பிழையின்றி எழுதுவதற்கு முயற்சியுங்கள், சரியாக எழுதமுடியாவிட்டால் கற்றுக்கொள்வோம்.
No comments:
Post a Comment