பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத்தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.
அதிமுக முன்னாள் அவைத்தலைவராக இருந்த கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புலமைப்பித்தனின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86.
கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி. நுாற்பாலையில் பணிபுரிந்தபடியே தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார். 1964-இல் திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, 'நான் யார்' என்ற பாடல் வழியாக திரையுலகில் நுழைந்தார். அடிமைப் பெண் படத்தில் எழுதிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் மூலம், அனைவரின் கவனத்தையும் பெற்றார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய வரலாற்றுப் பின்னணிப் படங்களுக்கு இவர்தான் பாடல்களை எழுதினார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.
அவர் எழுதிய
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என்ற பாடல் ரொம்பப் பிடித்தது. என்னவோ பாதுகாப்பான உறவுகளும்,உலகமும் ஒரு காலத்தில் இருந்ததைச் சொல்வது போல் இருக்கும்.
அமுதே,தமிழே,அழகிய மொழியே ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல்.அந்தப் பாடலுக்கு வயதாகாது எனத் தோன்றும்.Relevant forever.
எஸ்.வரலஷ்மியின் கம்பீரமான குரலும்,உச்சரிப்பும்,இசை அறிவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அதனாலேயே இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் பாடல் பிடிக்கும்.அந்த வரிகளும் ரொம்பப்பிடித்தவை.
சேலம் பக்கத்தில் ஒரு மலைக் கிராமம்.பல்வேறு கட்டுப்பாடுள்ள ஒரு கிராமத்திற்கு ரவிக்கை அணிந்து நவீனமாய் ஒரு பெண் மணமாகி வருகிறாள்.கிராமத்துக் கணவனோடு அவளால் ஒன்ற முடியவில்லை.அவளுக்கு இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு வருகிறது.இந்தத் தகவல் கணவன் காதுக்கு வந்த பின் அதை ஏற்க மனமில்லாமல் குமைந்து கொண்டு அவலச் சுவையோடு பாடும் உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி. தமிழில் இந்தச் சுவையில் பாடல்கள் இல்லைதான்.
ஒரு பன்னாட்டு மாநாடு. அவ்வப் போது ஒரு மாறுதலுக்கு இடை வேளையில் அவரவர் மொழியில் பாட்டுப் பாடுவோம்.நான் தமிழில் நான்கு வரி.பாடி விட்டு நிறுத்திக் கொண்டேன்.அங்கிருந்த பெண் நீங்கள் தமிழா என ஆங்கிலத்தில் கேட்டார். அவர் தமிழ் வம்சாவளி தென்னாப்பிரிக்கர்.தமிழ் நாட்டிற்கு வந்ததில்லை.தமிழ் பேசவும் தெரியவில்லை.ஆனால் சில பழைய தமிழ் பாடல்களை ஓரளவு பாடிக் காட்டினார்.அதில் ஒன்று இனியவளே என்று பாடி வந்தேன்.இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்.அதுவும் புலமைப் பித்தன் அவர்களின் பாடல். அப்பாடல் வரிகளை ஆங்கிலத்த்தில் மொழிபெயர்த்துச் சொன்னேன்.
கண்மணியே பேசு எல்லோரையும் போல் எனக்கும் பிடித்த பாடல்.அதில் வரும் அஞ்சுகம் என்ற சொல்லைக் கேட்டு விட்டு அதன் பொருள் கிளி என விளங்கிக் கொண்டேன்.
எல்லாராலும் கொண்டாடப் பட்ட ஆயிரம் நிலவே வா பாடலில் வரும் என் உயிரினிலே உன்னை எழுத பொன் மேனி தாராயோ வரியெல்லாம் ரொம்பவே நகாசு வேலை எனத் தோன்றும்.
எப்படி டி.எம்.எஸ்- சுசீலா,எஸ்.பி.பி - ஜானகிக்கென ஒரு தனி இடம் இருக்கிறதோ அதே போல் வாணி ஜெயராம்-யேசுதாசுக்கும் உண்டு.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எம் ஜி ஆரின் கடைசிப் படம்.அதில் வரும் தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்,அமுதத் தமிழில் எழுதும் பாடல்களைக் கேளுங்கள்.இரண்டும் புலமைப் பித்தன் அவர்களின் வரிகள்.
சமீபத்தில் வெளி வந்த தெறி திரைப்படத்தின் தாய்மை வாழ்கென வரை பல பாடல்கள் பிடிக்கும்.
இன்னுமே நிறைய பாடல்கள் நினைவுக்கு வருகிறது.பதிவின் நீளம் கருதி நீளம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment