Search This Blog

Wednesday, September 1, 2021

ஆபிரகாம் பண்டிதர்

 


Kutti Revathi

சில நாட்களுக்கு முன் அயல்நாட்டிலிருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். இசைத்துறையில் கோலோச்சுபவர். கர்நாடக இசையில் வல்லவர். அவர் குரலில் பணிவும் கனிவும் முதிர்ச்சியும் கலந்திருந்தன. ‘நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த இசைத்துறையில் இயங்கிவருகிறேன். ஆனால், ஒரு போதும் ஆபிரகாம் பண்டிதர் பெயரையோ, கருணாமிர்தசாகரம் என்ற நூலையோ கேள்விப்பட்டதே இல்லை. ஏன் என்ற கேள்வி என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது’, என்றார். ஏன் என்ற இந்தக் கேள்வி நாமெல்லோரும் நம்மிடமும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷனின் இணையத்தளத்தில், karunamirthasagaram.org என்ற இணையத்தளம் தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் நூற்றாண்டை (1917 - 2017) ஒட்டித் தொடங்கப்பட்டுத் தீவிரமாக இயங்கிவருகிறது. தொடங்கிய ஓராண்டிற்குக் கிணற்றில் போட்ட கல் போல இருந்தது. தமிழிசைச் செயல்பாடுகள் ஓரளவில் சமூகத்தில் அந்நியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதை மீண்டும் மீண்டும் ஏஆர் ரஹ்மான் முடுக்கிவிடுவதற்கான எல்லா பணிகளையும் செய்துகொண்டே இருந்தார். சர்க்கார் திரைப்பட இசைவெளியீட்டில் ஷோபா சந்திரசேகர் அவர்களால் இந்த இணையத்தளம் பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டது.
இன்று இதன் பின்னணியில் தம் அடையாளம் பகிர விரும்பாதோர், ஆனால் தமிழிசை பால் பெருத்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டோர் கூட்டாக உழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். தமிழிசையின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அறியாத நம்முடைய “அறியாமை” தான் எல்லா ‘ஏன்’, என்ற கேள்விகளுக்கும் ஒரே பதில் என்பேன்.
நாம் செய்யவேண்டியவை நிறைய:
1. மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட ஆபிரகாம் பண்டிதரை மீள் உருவாக்கம் செய்து உலக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே நம் தலையாய நோக்கம்.
2. மூவாயிரம் ஆண்டு தமிழிசை வரலாற்றையும் அகழ்ந்தெடுத்து உலக இசை ஆய்வாளர்களுக்கு வழங்குவதே இதன் உள்நோக்கம்.
3. ஆபிரகாம் பண்டிதர் பெயரில் தமிழிசைக்கான ஒரு பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும்.
4. ஆபிரகாம் பண்டிதர் பெயரில் தமிழிசைக்கான ஆய்வு நூலகம் தொடங்க வேண்டும்.
5. ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கை குறித்தும் தமிழிசைக்கான தமிழிசைக்கருவிகள் மற்றும் தமிழிசையின் வரலாறு குறித்தும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
6. சென்னை, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆபிரகாம் பண்டிதரின் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் நிறுவ வேண்டும்.
7. பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒன்று கூடும் ஆகஸ்ட் மாதத்தை தமிழிசை மாதமாகஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். தமிழிசைக் கச்சேரிகளுடன் உலகளாவிய இசைக்கச்சேரிகளும் இம்மாதத்திலே நடத்த வேண்டும்.
8. உயிர்காக்கும் அவருடைய சித்தமருந்துகளை மக்களுக்குச் சேரும் வகையில் மீண்டும் தயாரித்து வழங்க வேண்டும்.
9. ஆபிரகாம் பண்டிதர் மற்றும் அவரது தமிழிசை ஆய்வுகள் குறித்த ஆய்வு நோக்கில் உயரிய ஆவணப்படம் ஒன்றையும் எடுக்க வேண்டும்.
இவை எல்லாம் தனி மனிதரின் பணிகள் அல்ல. நாம் எல்லோரும் இணைந்து இயக்கவேண்டிய சமூகச் செயல்பாடுகள். இவற்றைச் செய்வதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சமூக அரசியலிடையே பெருத்த பண்பாட்டு மாற்றத்தை நம்மால் உருவாக்கமுடியும். உலக அளவில் தமிழரின் முத்திரை முனைப்பாக இருக்கும்.
தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் நினைவு நாளான இன்று உங்களையும் இந்த தமிழிசை இயக்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி!

No comments:

Post a Comment